அன்புள்ள ஜெ,
எனக்கும் உரையாடலுக்கும் வெகு தூரம். அதுவும் ஒரு கதாசிரியனோடு உரையாடுதல் இன்னும் கடினம்.
ஓரளவுக்கு படிக்கும் பழக்கம் உள்ளவன். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர். அதற்கும் மேல், வாசகர்களுடன் நீங்கள் உரையாடுவது எனக்கு எந்த கடிதம் எழுத உந்துதலாக இருக்கிறது.
என்னால் படித்த கதைகளைப் பற்றி விவாதிக்கவோ, கருத்து கூறவோ முடியாது. GoodReads போன்ற வலைத்தளங்களில் நான் படித்த, படிக்கும் புத்தகங்கள் பற்றி பகிர்ந்தாலும், அவற்றை மதிப்பீடு செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதிலும் ஒன்று இரண்டு என்று நட்சத்திரம் இடுவது வன்முறை என்பது என் நம்பிக்கை.
என்னைப் பொறுத்தவரை படிப்பது ஒரு அனுபவம். படிக்கும் கதையை வாழ்ந்து விடுதல் ஒரு நல்ல கதைக்குக்கும், வாசகனுக்கும் அடையாளம். படித்தபின் கதாபாத்திரங்களாக வாழ்ந்த சில நிமிடங்கள் ஒரு அசதியைக் கொடுக்கும். இறந்து ஒய்வு எடுத்தபின், அடுத்த கதைக்கு செல்வது என் வழக்கம்.
என்னால் படித்த கதைகளை பெரும்பாலும் நினைவு வைத்துக்கொள்ள முடியாது. என்னைப்பொறுத்தவரை அது ஒரு வரம். படித்தேன் அனுபவித்தேன் என்பது தான் என் நினைவில் இருக்கும்.
அந்த வகையில், இந்த பனிரெண்டு கதைகளில் பலவற்றைப் படித்தேன், அனுபவித்தேன்.
நன்றி,
ஸ்ரீதர்
அன்புள்ள ஸ்ரீதர்,
கதைகளை மதிப்பிடுவதை அவசரப்பட்டோ , மேலோட்டமாகவோ செய்யக்கூடாது. அது அக்கதையின் நுட்பத்துக்கு அநீதி இழைப்பதாக இருந்துவிடக்கூடாது என்ற கவனம் நமக்கிருக்கவேண்டும். படைப்புகளுக்கு நட்சத்திர முத்திரைபோடுவதும் மதிப்பெண் கொடுப்பதும் பிழையான மனநிலைகள்
ஆனால் கதைகளை ஆராய்ந்த்கு மதிப்பிட்டு தரவரிசையை உருவாக்கிக் கொள்ளாமல் ரசனையை உருவாக்கிக்கொள்ளமுடியாது. பிடித்த கதை சற்று குறைவாகப்பிடித்த கதை என்ற தரவரிசையையாவது உருவாக்கிக்கொள்கிறார்கள் அனைவருமே.
ஜெ
அன்புள்ள அண்ணன் ஜெயமோகனுக்கு!
முதலில் எவ்விதத்திலும் புதியவர்களின் கதைக்கு எதிர்வினையாற்றாமல்
“நானும்” இருந்துவிட்டேன் என்பதால் உங்களிடமும் புதிய படைப்பாளிகளிடமும்
மன்னிப்பு கோருகிறேன். உங்கள் வார்த்தைகள் என்னை தொட்டது. ஆகவே இனியும்
தாமதம் வேண்டாம் என்றே உடனடியாக எழுதுகிறேன். உங்களது உயர்ந்த நோக்கமும்
முயற்சியும் வாசகர்கள் அனைவரும் அறிந்ததே. எனினும் நீங்கள் சொல்வதுபோல்
பெரிய மவுனம் காணப்படுமென்றால் அது வருந்தத்தக்க விஷயமே. அனைத்து
படைப்புகளும் என்னைப்பொறுத்தவரை உங்களால் “தேர்வு” செய்யப்பட்டது ஆகவே
அது “மேலானது”. ஆம் அனைத்தும் அவ்வாறே இருந்தன. எனினும் அதிகம்
வினையாற்றி பழக்கமில்லாததால் உடனடியாக ஏதும் சொல்ல முடியவில்லை.
எழுதாமல் இருப்பதும், எதிர்வினையாற்றாமல் இருப்பதும் இலக்கியத்தின் உள்ளே
வந்தபின் செய்யாமல் இருப்பது சரியில்லைதான். ஒன்று, நான் இக்கதைகளை
வாசித்துக்கொண்டிருக்கும்போது ஒரு கதை எழுதலாம் என்று துவங்கி பாதியிலேயே
விட்டுவிட்டேன். இன்னொன்று உங்களை ஆரம்பத்திலேயே அழைக்கலாம் என்று
நினைத்து அழைக்காமல் இருந்துவிட்டேன். அனைத்துமே எனது குறையே.
புதியவர்கள் அனைவரும் உங்கள் கையால் ஆசி பெற்றவர்கள். அதுவே மற்றெல்லா
அங்கீகாரத்தையும் விட சிறந்தது. அதுவே அவர்களுக்கு தங்களது கதை சொல்லும்
பொறுப்பினை தெளிவுபடுத்த போதுமானது – வேறு யாரும் எதிர்வினையாற்ற
தயங்குகின்ற பட்சத்தில்.
Rev. Godson