ஜெயமோகன்,
எப்படி இருக்கீங்க? தங்கள் பயணம் எவ்வாறு இருக்கிறது?
தொடர்புகொண்டு சில மதங்கள் ஆகிவிட்டன. மீண்டும் பணி காரணமாக திருவனந்தபுரத்தில் இருக்கின்றேன். இப்பொழுது தாங்கள் திருவாங்கூர் பற்றி எழுதியவற்றை படித்த பின்னர் மீண்டும் வந்திருப்பது மிக நல்ல அனுபவம் என்றுதான் கூற வேண்டும்.
அவற்றை பற்றி கூற இந்த கடிதம் போதாது. சிலவற்றை மட்டும் குறிப்பிடுகின்றேன்.
1. ஓணம் சத்யா சாப்பிடும் வைப்பு கிடைத்தது. பலவிதமான கறிவகைகள் பரிமாற பட்டன. அவியல் தவிர மற்றவற்றின் பெயர் தெரியவில்லை.ஒளன், காளன் என்று தங்கள் குறிப்பிட்ட பெயர்கள் ஞாபகம் வந்தது. ஆனால் எது ஒளன் எது காளன் என்று தெரிந்து கொள்ள முடியவில்லை.
2. தமிழனாகிய எனக்கு மலையாளம் கேட்கும் பொழுது ஒரு விதமான இசை போன்று மிகவும் இனிமையாக ஒலிப்பதாக தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக தமிழுக்கும் மலையாளத்துக்கும் பொதுவாக இருக்கும் சில சொற்கள். “ழ’ வினை உச்சரிக்கும் விதம்.
மலையாளிகளுக்கு தமிழை கேட்கும் பொழுது எவ்வாறு இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு மிகுந்த ஆவல்?
3. ரயிலில் திருவனந்தபுரத்தில் இருந்து பயணம் செய்து நாஞ்சில் நாடு கடந்து திருநெல்வேலி மாவட்டத்தில் நுழையும் பொது, இயற்கையின் விசித்திர தன்மையின் விந்தை புரிகிறது. நெல்லை மாவட்டத்தைப் பற்றி தாங்கள் குறிப்பிட்டது போல எங்கள் மாவட்டமும் வெம்மை மிகுந்த பிரதேசம் தான். மழை மறைவுப் பகுதியில் அமைந்தது, இருப்பினும் அதற்கும் ஒரு அழகு இருப்பதாகவே படுகிறது. எங்கள் ஊரில் மழை மூன்று மாதம் தான். செப்டம்பர் தொடங்கி நவம்பர் வரையான மழைக்காலமும் அதைத் தொடர்ந்து ஜனவரி வரை நீடிக்கும் பனிக்காலமும் மிகவும் அழகானவையே.
4. கிளி சொன்ன கதை படித்தேன் மிகவும் பிடித்தது. இன்றும் இதே போன்று வாய் இருந்தும் பேச முடியாத ஊமைகளாக பெண்கள் நமது சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். கதையை மனித குலத்தின் நிலைபாடுகளை முழுவதும் அறிந்திராத ஆனந்தனின் மனம் வழியாகவே படம் பிடிதுக்கு காட்டியமை அருமை. எந்த விதமான சூழலில் ஒரு மனிதன் வளர்கிறானோ அது அந்த மனிதன் ஆளுமையை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனந்தனுக்கு கிடைத்த அனுபவங்கள் அவனை எந்த விதமான ஆளுமையாக உருவாக்கும் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. அவன் தந்தையை போன்ற ஆளுமையையா இல்லை எதிர்விதமான ஒன்றாக இருக்குமா?
5. கன்னி நிலம் படிக்கத் தொடங்கினேன். முடிக்கவில்லை.
நன்றி,
சுந்தரவடிவேலன்.
அன்புள்ள சுந்தர வடிவேல்
ஓணம் கொண்டாடியதற்கு மகிழ்ச்சி. நீங்கள் ஒரு அதிபுராதனமான தமிழ் பண்டிகையை கொண்டாடியிருக்கிறீர்கள். நான் பல்லாயிரம் கிலோமீட்டர் தள்ளி இங்கே அமெரிக்காவில் இருக்கிறேன்.
காளன் பால்போல புளிப்பில்லாமல் இருக்கும். தேங்காய் பாலில் செய்தது. ஓலன் பார்க்க அதேபோல இருக்கும்– புளிக்கும். தயிர் சேர்ப்பார்கள்
ஜெ
நன்றி ஜெயமோகன் சார் .
மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு போன வாரம் சென்ற போதும் கூட ஊர்த்துவதாண்டவரின் சிற்பத்தை கவனித்தேன், நினைவில் தங்கிய உங்களுடைய கட்டுரை ஒன்று சாந்தமான அவர் முகத்தில் என்னை குவித்தது. தென்னமெரிக்க கார்னிவல், அதன் பின்பு நிலவும் சாந்தம், அதனால் வளரும், சமூகத்தை முன்னெடுத்து செல்லும் கலாச்சாரம் எல்லாம் தோன்றியது நொடிப்பொழுதில்.
உங்கள் எழுத்துக்கு ஆக்கிரமிக்கும் குணம் உள்ளது ஜெயமோகன் சார்
தொடர்ந்து பத்திரிக்கைகளில் எழுதுங்கள். வெப்சைட்டில் எல்லா நேரமும் படிக்கமுடியவில்லை .
கண்ணன்
madurai
அன்புள்ள கண்ணன்
மதுரை புத்தகக் கண்காட்சி சிறப்பாக இருந்தது என்று கேள்விப்பட்டேன்
மீனாட்சி அம்மை கோயில் ஒரு நீண்ட காலகட்டத்தின் கல் வடிவம். கலை கல் வழியாக காலமாக ஓடிக்கொன்டிருக்கிறது. வீரபத்ரரை அடிக்கடி சென்று பார்க்க பார்க்கத்தான் நம் மனதில் அச்சிற்பம் வளரும். அப்போதுதான் நம்மிடம் சிலை பேசும்
பிரமிளின் ‘தெற்குவாசல்’ அப்படி விரபத்ரனின் விஸ்வரூபத்தைக் காட்டும் ஒரு மகத்தான கவிதை
ஜெ