மீண்டும் புதியவர்களின் கதைகள்

புதியவர்களின் கதைகளைத் தொடராக வெளியிட்டபின் என் மின்னஞ்சலுக்குக் கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. தினம் பத்துக்கதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

இக்கதைகளில் மிகப்பெரும்பாலானவை மிக ஆரம்பகட்டக் கதைகள். அதாவது தமிழின் இலக்கியப்படைப்புகளை வாசிக்காமல் வணிக இதழ்கள் வெளியிடும் கதைகளை மட்டுமே வாசித்து எழுதப்பட்ட முயற்சிகள். மிக எளிதாக அவற்றை எழுதியவர்கள் எவற்றையும் வாசிப்பதில்லை என்பதைக் கண்டுகொள்ளமுடியும்.

தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகள் இப்பட்டியலில் உள்ளன. அவற்றில் பெரும்பகுதி அழியாச்சுடர்கள், தமிழ்த்தொகுப்புகள் என்னும் இந்தத் தளங்களில் உள்ளன.

அக்கதைகளில் குறிப்பிட்ட அளவையேனும் வாசிக்காதவர்கள், அக்கதைகளின் தளத்தைச்சேர்ந்த கதைகளை எழுத முயலாதவர்கள் தயவுசெய்து எனக்குக் கதைகளை அனுப்பவேண்டாம். இதுவரை எழுதிய அனைவருக்கும் பதிலிட்டிருக்கிறேன். இனிமேல் அத்தகைய கதைகள் அனுப்பப்படுமென்றால் பதிலளிக்க இயலாது, மன்னிக்கவும்.

ஏற்கனவே இணையதளங்களில், வலைப்பூக்களில் பிரசுரமான கதைகளின் இணைப்புகளை தயவுசெய்து அனுப்பவேண்டாம். அக்கதைகளில் உண்மையிலேயே முக்கியமானவை என் கவனத்துக்கு வந்திருக்கும். நான் அவற்றை குறிப்பிட்டிருப்பேன்.

மேலும் ஓர் இளம் எழுத்தாளர் இரண்டுவருடம் முன்பு எழுதி வெளியான ஒரு கதையை அனுப்புகிறார் என்றாலே அவரை பொருட்படுத்தத் தேவையில்லை என நினைக்கிறேன். இளம் எழுத்தாளர்கள் அகம் நிறையக் கதைகளுடன் இருக்கவேண்டும். ஒவ்வொருமுறையும் புதிய கதைகளை உருவாக்கவேண்டும். வருடத்துக்கொரு கதைதான் எழுதமுடியுமெனால் அவர்கள் எழுத்தாளர்கள் அல்ல.இது எழுத்தாளர்களுக்கான ஒரு தேடல்.

உண்மையிலேயே முக்கியமானது என நீங்கள் நினைக்கும் கதைகளை மட்டுமே அனுப்புங்கள். எழுதிய எல்லா கதைகளையும் அனுப்பவேண்டாம். ஒருவர் நாலைந்து கதைகளை அனுப்பினால் அதில் ஒன்றை மட்டுமே வாசிக்கிறேன். அது அடிப்படைத் தரமற்ற ஆக்கம் என்றால் மீதிக்கதைகளைத் தவிர்த்துவிடுவேன்

சிறுகதைகளுக்கு ஒரு வடிவ இலக்கணம் இருக்கிறது. அதுதான் அதன் குறைந்த தரம். படைப்பூக்கத்தால் மேலே செல்வது தனிப்பட்ட சுதந்திரம். அந்த இலக்கணத்தை கூர்ந்து கற்று அதை அடையாதவர்கள் தயவுசெய்து ‘சும்மா’ அனுப்பி வைப்போம் என்று அனுப்பவேண்டாம். [வாசிக்க சிறுகதை சமையற்குறிப்பு]

ஏனென்றால் இன்றைய சூழலில் அறிமுகமாகும் எழுத்தாளன் சந்திக்கும் அபாயங்கள் ஒன்றில் மாட்டிக்கொள்ள நேரிடும். ஒரு மோசமான கதையை வாசித்ததுமே ஏற்படும் மனப்பிம்பம் அந்த ஆசிரியருக்கு மேற்கொண்டு எந்தக் கவனமும் கிடைக்காமல் செய்துவிடும் . எனவே பொதுவாசிப்புக்கு வரும் கதை குறைந்தபட்ச தகுதி கொண்டதாகவே இருக்க ஆசிரியர் கவனம் கொள்ளவேண்டும்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகளில் இரு கதைகள் எனக்குப்பிடித்திருந்தன. மேலும் கதைகள் வருமென்றால் இன்னொருவரிசை கதைகளை வெளியிடலாமென நினைக்கிறேன். உண்மையிலேயே ஆர்வத்துடன் கதை எழுதுபவர்கள், எழுத்தை தொடர்ந்து பயிற்சி செய்பவர்கள், எழுத்தை தொடர்ந்து மேற்கொள்ள நினைப்பவர்கள் தங்கள் கதைகளை அனுப்பலாம்

அக்கதைகள் எங்கும் பிரசுரமானவையாக இருக்கலாகாது. வலைப்பூவில்கூட.

ஜெ

முந்தைய கட்டுரைகதைகள் கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிருப்பூரில்…