இந்தக் கதைகள்- பாவண்ணன் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். பன்னிரண்டு சிறுகதைகளையும் படித்துவிட்டேன். பன்னிரண்டுமே பன்னிரண்டு முத்துகள். எல்லாமே ஏதோ ஒருவகையில் என்னைக் கவர்ந்தன. கதைகள் முன்வைக்கப்பட்டிருக்கும் கோணங்களும் களங்களில் உள்ள புதுமையும் நல்ல வாசிப்பனுபவத்தை வழங்கின. படித்து சில நாட்கள் உருண்டோடிவிட்டன என்றாலும் ஏழெட்டு சிறுகதைகள் மனத்துக்குள்ளேயே வளையவந்தபடி உள்ளன. சில ஆண்டுகளுக்குப் பிறகு, இவற்றில் சில மறந்துபோனாலும் மூன்று கதைகளாவது நினைவிலேயே தங்கியிருக்கும். வெளிவரும் காலத்திலேயே இவற்றை நான் வாசித்தவன் என்கிற மகிழ்ச்சி எனக்குள் எப்போதும் இருக்கும்.

”உறவு” பலவகைகளிலும் முக்கியமான கதை. ஒரு வைரக்கல்லைப்போல இந்தக் கருவைக் கண்டடையும் பேறு ஒரு தொடக்கநிலை படைப்பாளிக்குக் கிடைத்திருப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம். மிகை என்பதே எங்கும் இல்லை. இரண்டு வெவ்வேறு புள்ளிகளிலிருந்து இயக்கப்படும் இக்கதையில் உள்ள சமநிலையை எண்ணிஎண்ணி மனத்துக்குள் மகிழ்கிறேன். சந்தானம் ஒரு புள்ளி. முருகண்ணன் ஒரு புள்ளி. இருவருமே முன்னும்பின்னுமாக மேகமலைக்குப் பிழைக்க வந்தவர்கள். இருவரும் மேகமலையைப் பார்க்கும் பார்வை வேறுவேறு விதமானவை. வாழ்க்கையைப் பார்க்கும் விதமும் வேறுவேறுவிதமானவை. விலைமகளாக இருந்தாலும் மனைவியாக ஏற்றுக்கொண்டு உள்ளார்ந்த நிறைவோடு வாழ்பவன் ஒருவன். மனைவியை சந்தேகக்கண்ணோடு பார்த்துப்பார்த்து விலைமகளாகிவிடுவாளோ என வாழ்க்கையை ரணமாக்கிக்கொள்கிறவன் இன்னொருவன். காட்டுக்குள் எல்லா மரங்களும் நின்றிருப்பதைப்போல வாழ்க்கை எல்லாப் பார்வைகளுக்கும் களமாக விரிந்துசெல்கிறது.

வாழ்க்கை எல்லாவற்றையும் தொகுத்தபடியே செல்கிறது. சரி, தப்பு என எதையும் அது வலியுறுத்தவில்லை. பகுத்துக்கொண்டு பகையை உருவாக்கிக்கொள்வதெல்லாம் நம் மனம் நிகழ்த்தும் ஆட்டம். அக்கறை, அன்பு, உரிமையோடு காட்டும் ஈடுபாடு மட்டும் முருகண்ணனுக்குப் போதும். அவற்றோடு நிறைவுகாணமுடியாதபடி சந்தானத்தை சந்தேகம் பிடித்தாட்டுகிறது. டெஸ்டிமோனாவைக் கொல்லத் தூண்டிய அதே சந்தேகம் மீனாட்சியை விரட்டியடிக்க சந்தானத்தைத் தூண்டுகிறது. கஞ்சியைக் குடித்தாலும் அமுதம் பருகிய ஆனந்தத்தோடு ஒருவன் இருக்கிறான். கையில் கிடைத்த இனிப்பையே விஷமாக இருக்கக்கூடுமோ என்கிற சந்தேகத்தோடு இன்னொருவன் தூக்கி வீசுகிறான். எதோ ஒரு புதையுண்ட நகரத்தை அகழ்ந்தெடுத்ததுபோல தனசேகரின் மனம் இக்கதையைக் கண்டடைந்திருக்கிறது.

மானுட மனத்தில் படிந்திருக்கும் கசட்டை அடையாளம் காட்டும் கதை சிவா கிருஷ்ணமூர்த்தியின் ‘யாவரும் கேளிர்’. நாடுவிட்டு நாடு போனாலும் விடாது பின்தொடர்கிற சாதிவிருப்பத்தை வெளிச்சம்போட்டுக் காட்டும் கதை. தடுமாறி கீழே விழுகிற தருணத்தில் மிக இயல்பாக அம்மா என்று அலறுவதைப்போல சாதிவிருப்பமும் மிக இயல்பாக ஒட்டிக்கொண்டே மனிதனைப் பின்தொடர்கிறது.

கதை நிகழும் பின்னணி, கதைக்கு ஒரு கூடுதலான வலிமை. இது ஓர் அழகான முரண். சாதி அரும்பி பூத்து குலுங்கும் நம் மண் அல்ல, கதையின் களம். வேறொரு கலாச்சாரம் நிலவும் மண்ணான லண்டன் இக்கதையின் களம். மணவாழ்க்கையைப் பற்றிய வரையறைகள் அங்கே வேறு விதமானவை. ஆண்பெண் பழகுதலுக்கு எவ்விதமான தடையுமில்லாத சமூகம் அது. தேர்வுகள் சுதந்திரமானவை. திருமணம் செய்துகொள்கிற ஆணும் பெண்ணும் மட்டுமே, தம் வாழ்க்கையைத் தீர்மானித்துக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட சுதந்திர நாட்டம் மிகுந்த ஒரு கலாச்சாரச்சூழலில் வாழ்கிற ஒரு ஆணும் பெண்ணும் அந்தக் கலாச்சாரத்தின் சாரமான எந்த அம்சத்தையும் உள்வாங்கிக்கொள்வதில்லை. லண்டன்வாசம் என்பதே பணம் சம்பாதிப்பதற்கான ஓரிடம். அவ்வளவுதான். யாவரும் கேளிர் என்ற பண்பாட்டின் சாரம் நகைப்புக்கிடமாகிவிடுகிறது. லண்டன் வேலை வேண்டும். லண்டன் பணம் வேண்டும். லண்டன் வாசம் வேண்டும். லண்டன் பயணம் வேண்டும். லண்டன் பண்பாடுமட்டும் வேண்டாம் என்றால் அது வேடிக்கை அல்லாமல் வேறென்ன? ஒரு பெரிய பயணம், நீண்ட உரையாடல்கள், இறுதியில் மகனுக்காக பெண்பார்க்கும் படலம் எல்லாவற்றையும் நிகழ்த்தும் கதையில் இரண்டு தளங்கள் உள்ளன. மனத்தில் அட்டைபோல ஒட்டிக்கிடக்கும் சாதிவிருப்பம் ஒரு தளம். சூழலிலிருந்து எதையும் கற்க விரும்பாத அறியாமை இன்னொரு தளம்.

”காகிதக்கப்பல்” அளவில் மிகச்சிறியதென்றாலும் அழுத்தம் மிகுந்த கதை. தினையின் தலையில் தேங்கியிருக்கும் பனித்துளியில் தொலைவிலிருக்கும் பனையைக் காட்டும் வள்ளுவர் காலத்து உவமை நினைவுக்கு வருகிறது. இது கதையல்ல. ஒரு காட்சி. காட்சி கூட அல்ல. ஒரு குரல். நம் நெஞ்சில் அது மோதி, பிறகு வரலாற்றில் மோதி உடைத்து வீழ்த்தும் நினைவுத்துண்டுகள்தான் உண்மையான கதை. எனக்கு ஒரு துண்டு நினைவுக்கு வரும். இன்னொருவருக்கு இன்னொரு துண்டு நினைவுக்கு வரும். இப்படி ஆளாளுக்கு ஒரு துண்டு. இந்த எல்லாத் துண்டுகளையும் இணைத்தாலும் இன்னும் நீண்டுகொண்டே செல்லக்கூடிய நீண்ட கதை. இப்படியும் ஒரு கதை இருக்கட்டும். நம் காலத்து வரலாற்றுக்குற்ற உணர்வை எதிர்காலத்துக்கு உணர்த்த, இப்படி கதைகளைத்தான் விட்டுச் செல்லவேண்டும்.

‘தொலைதல்’ ஹரன் பிரசன்னாவின் கதைகளில் முக்கியமான ஒன்று. ஏற்கனவே இவர் எழுதிய பல கதைகளைப் படித்திருக்கிறேன். கதைமொழியும் உரையாடலும் லயத்தோடு கூடிவரும் படைப்புகளைக் கொடுப்பவர்களில் முக்கியமானவர். ஒருவன் வீட்டைவிட்டு தொலைந்துபோகிறான். பதின்மூன்று ஆண்டுகள் கழித்துத் திரும்பி வருகிறான். அவனை வீடு எப்படி எதிர்கொள்கிறது என்பதை விவரிக்கிறது கதை. அவன் ஏன் ஓடிப் போனான் என்பதில் ஒருமித்த கருத்து யாரிடமும் இல்லை. ஒவ்வொருவரிடமும் ஒரு கதையும் கருத்தும் இருக்கின்றன. அவன் காதலித்த பெண்ணை மணக்க அவன் தாயாரும் அண்ணனும் ஏற்கவில்லை. திடீரென ஒரு கட்டத்தில் அந்தக் காதலியே அவனை ஏற்கவில்லை. இன்னொருவனை மணந்துகொண்டுவிட்டாள். இந்த ஏமாற்றமும் அதிர்ச்சியும் அவனை ஊரைவிட்டு வெளியேற்றிவிட்டன. ஒரு நினைவை அழிக்கவோ அல்லது மறக்கவோதான் ஒருவன் ஊரைவிட்டு ஓடுகிறான். தராசில் ஒரு தட்டில் இருக்கிற எடைக்கு நிகராக இன்னொரு தட்டில் எடையை வைக்கும்போது சமமாகி, பிறகு கூடுதல் எடை ஏறியதும் அழுந்தி தரையோடு தரையாக படிந்து அசைவில்லாமல் இருப்பதுபோல, மனத்தையும் அசைவில்லாமல் வைத்திருக்க ஒரு வழிதேடி அவன் தொலைந்துபோகிறான். மேலும் மேலும் விசித்திரமான அனுபவங்களால் புதிய புதிய நினைவுகள் அவனை வந்தடைகின்றன. புதிய நினைவுகளின் பாரம் பழைய நினைவை அகற்றிவிட்டதாக அவன் நினைத்துக்கொள்கிறான். இனி, இந்த மனத்துக்கு அசைவில்லை என்ற எண்ணம் கொடுத்த தூண்டுதல் காரணமாகவோ அல்லது வேறு காரணம்பற்றியோ அவன் வீட்டுக்கு மீண்டும் திரும்பி வருகிறான். அம்மா, அண்ணன், அக்கா என இருந்த குடும்பத்தில் மேலும்மேலும் புதிய உறுப்பினர்கள் வந்து நிறைந்திருக்கிறார்கள். இரவு உணவுக்குப் பிறகு, உரையாடலின் உற்சாகத்தில் அவன் தன் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறான். “வாஹினியை ஒருதடவையாவது நினைச்சியா இல்லயா?” என்ற அக்காவின் கேள்வி அவனை நிலைகுலைய வைத்துவிட்டது. தராசின் மறுதட்டில் அவன் சேகரித்துவைத்திருந்த எடை எல்லாம் சரிந்து, மீண்டும் பழைய தட்டு உயர்ந்துவிடுகிறது. அவன் மீண்டும் தொலைந்துவிடுகிறான். மனிதர்களிடமிருந்து நாம் தொலைந்துபோகலாம். ஆனால் நம் நினைவுகளிலிருந்து நாம் தொலைந்துபோகமுடியுமா? கதையின் இறுதிப்பகுதியில் தொலைந்துபோனவனைப்பற்றி நான்கு பெண்கள் நான்குவிதமாக யோசிக்கும் அல்லது பேசிக்கொள்ளும் பகுதி முக்கியமான இடம். நான்கு தரப்புகளிலும் உண்மையும் இருக்கலாம். ஊதிப் பெருக்கிய கருத்தும் இருக்கலாம். வாழ்க்கை எல்லாவற்றுக்கும் களமாக இருக்கிறது.

வேதா எழுதிய ”பீத்தோவன் ஆவி” உரையாடல் வழியாகவே ஒரு புதிரை விடுவிக்க முயற்சி செய்யும் கதை. மினியாப்பொளிஸ் விமான நிலையத்தில் காத்திருக்கும் இந்தியனுக்கும் அங்கே வரும் இன்னொரு பெண்ணுக்கும் இடையே நிகழும் சந்திப்பு இயற்கையாக உள்ளது. இசைபற்றிய உரையாடல் மெல்ல மெல்ல மேற்கத்திய இசைக்கும் இந்துஸ்தானி இசைக்கும் இடையிலான வேறுபாடுகளை அலசும் உரையாடலாகவும் விளக்கம் தேடலாகவும் மாறுகிறது. இசை வளர்ந்து வளர்ந்து ஓர் உச்சத்தை அடைவதுபோல உரையாடலும் வளர்ந்துவளர்ந்து ஓர் உச்சத்தை அடைகிறது. அதுவே கதையின் உச்சம். மனசை நிரப்பும் ஆற்றல் இசையின் மிகப்பெரிய சக்தி. இதில் பிறர் இயற்றிய இசை என்றும் அல்லது நாம் இயற்றிய சொந்த இசை என்றும் அகங்காரம் கொள்ள அல்லது ஆதங்கப்பட ஒன்றுமில்லை. பீத்தோவன் இசையை இசைக்கும்போது, சில மணித்துளிகளாவது பீத்தோனாக மாறுவதும் பீத்தோனாகவே வாழ முடிவதும் மிகப்பெரிய பேறு. இசையை முன்வைத்து இந்தக் கதை விரிந்துசென்றாலும், இசையைத் தாண்டிய தளமும் இதற்கு உள்ளது. இது கலையைப்பற்றிய கதை. வாழ்க்கையையே கலையாக மாற்றி வாழ முயற்சி செய்பவர்களைப்பற்றிய கதை. ஒவ்வொருவர் மனத்திலும் ஓர் ஆதர்சம். இன்னொன்றாக மாறும் ஆதர்சம். அது இல்லாதவர்கள் உலகத்தில் இருக்கிறார்களா என்ன?

எடுத்துரைப்புமுறையால் படிப்பவர்களைக் கட்டிப்போடவல்ல சிறுகதை “வாயுக்கோளாறு”. ஞானமும் ஞானமற்ற பித்தும் ஒரே மனத்தில்தான் அக்கம்பக்கத்தில் குடியிருக்கின்றன. ஆனால் ஞானத்தை அடையாளம் காண்பவன் பித்தை அடையாளம் காண்பதில்லை. பித்தை அடையாளம் காண்பவன் ஞானத்தை அடையாளம் காண்பதில்லை. இது புதிர்தான். வாழ்க்கை இப்படிப்பட்ட ஆயிரமாயிரம் புதிர்களால் நிறைந்தது. உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன், உயிர்வளர்த்தேனே என்னும் திருமூலரின் வரிக்கு, ஏராளமான புதிரான விளக்கங்கள் உண்டு. உபாயங்கள் ஏராளமானவை. நாம் அறிந்த உபாயம் நம்மைக் காப்பாற்றும்போது நாம் அறியாத உபாயம் நம்மைக் கைவிட்டுவிடுகிறது. வாயுத்தொல்லையிலிருந்து நம்மை மீட்டு உயிர்த்திருக்கும் உபாயத்தை சதாகாலமும் உபதேசிக்கும் கணபதி சார் அறிந்திராத ஓர் உபாயத்தின் காரணமாக உயிர் துறக்க நேர்கிறது. முன்வாசல் வழியாக மரணம் வந்து விடக்கூடாது என்று எச்சரிக்கையாக இருக்கும்போது சந்தடியில்லாமல் பின்வாசல் வழியாக வந்து நிற்கிறது மரணம். ஞானம் ஓர் ஊன்றுகோல்தானே தவிர, உயிரைக் காப்பாற்றித் தரும் மந்திரக்கோலல்ல. இந்த உண்மையை காலம் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருவர் வழியாக உணர்த்தியபடியே இருந்தாலும் மனிதமனம் அதைப் பொருட்படுத்தாது கடந்துசென்றபடியே இருக்கிறது. மீண்டும்மீண்டும் ஞானத்தின் அபத்தத்தை அடையாளப்படுத்தும் இத்தகு கதைகள் எழுதப்படுவதற்கான அவசியமும் உருவானபடியே இருக்கிறது. ஜானகிராமன் காலத்தில் ஓர் அக்பர் சாஸ்திரி என்றால், நம் காலத்தில் ஒரு கணபதி சார்.

”வாசலில் நின்ற உருவம்” மரணத்துக்கு வெகு அருகில் உள்ள ஒருவருடைய எண்ணப்போக்கில் அமைந்த கதை. சத்தங்களால்மட்டுமே உணரப்படும் உலகமாக வீடும் வெளியும் மாறிவிடும் நோய்ப்படுக்கையின் தீவிரத்தை நுட்பமாக உணர்த்துகிறது. தனது தாத்தாவின் மரணத்தையும் தந்தையின் மரணத்தையும் அவருக்கு இயல்பாகவே நினைவுக்கு வருகிறது. உயிரோடு இருப்பவர்களின் புறக்கணிப்புகளுக்கு இடையில் நிகழ்ந்த அந்த மரணம் தனக்கும் நேரக்கூடுமோ என்கிற அச்சம் அவரை வாட்டுகிறது. ஆனால் அவர் அச்சத்துக்கு நேர்மாறாக அவருடைய மகன் கவனித்துக்கொள்கிறான். தலைமுறைகளாக தொடர்ந்துவந்த புறக்கணிப்புத்தன்மையை அவன் அணுகுமுறை தடுத்து நிறுத்துகிறது. அந்த அணுகுமுறை தனக்கான ஒன்றல்ல, அடுத்த தலைமுறைக்காக என்கிற தெளிவை அக்கணம் அவருக்கு உணர்த்துகிறது. அந்த ஞானத்தை அவர் அடையவேண்டும் என்பதற்காகவே காத்திருந்ததுபோல, அதுவரை வாசலிலேயே நின்றிருந்த உருவம் அவரை நெருங்கிவருகிறது.

”சோபானம்” இசையுலக மாந்தர்களைப் பின்னணியாகக் கொண்ட ஒரு சிறுகதை. கரீம்கான் கான்சாகிபாக வளர்ந்து, வெற்றிபெற்ற கலைஞனாக வலம்வந்து, சங்கீதம் என்பது திறமையாகப் பாடுவதல்ல, பாட்டின் அடியாழங்களில் நீந்தி அடையத்தக்க வேறொன்று என்ற ஞானோதயம் பெற்று, அந்த ஞானம் சித்தியடைந்த கணத்தில் உயிர்துறக்கும் மாபெரும் கலைஞனின் சித்திரத்தை சிறுகதை முன்வைக்கிறது. மிக அழகாகவும்ம் கச்சிதமாகவும் நெய்யப்பட்ட துணியைப்போல காட்சிகள் நெய்யப்பட்டுள்ளன. கான்சாகிப், அலங்கோலமாகிப்போன அவர் சீடன் என ஒருபக்கத்தையும், ராஜமையர், உற்சாகம் ததும்பும் அவர் சீடன் இன்னொரு பக்கத்தையும் தொட்டுக்காட்டி, அரவிந்தரின் அழைப்பையேற்று ரயில் பயணம் மேற்கொள்ளும் கான்சாகிப் வழியிலேயே சிங்கப்பெருமாள் ஸ்டேஷனில் இறங்கி, ஆளற்ற அண்டவெளியை நோக்கி இசைத்துவிட்டு உயிர்துறப்பதைக் காட்டி முடிவெய்துகிறது. முழுமை அடையாத இசையை உயிரைக் கொடுத்து முழுமை செய்கிறார் அல்லது இசையின் உதவியோடு ஓரிடத்தைக் கடந்துகடந்து, அதன் கடைசிப்புள்ளியை தன் உயிரைக் கொடுத்து கடந்துவிடுகிறார். கலைஞனின் உயிர் கலையை முழுமை செய்கிறது.

ராஜகோபாலனின் “கன்னிப்படையல்” எளிய மனிதர்களின் கையறு நிலையையும் இடையறாத நம்பிக்கையையும் ஒருசேர முன்வைக்கும் சிறுகதை. மகளுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்துக்காக நீதி கேட்டு நீதிமன்றத்தின் படிகளில் காத்திருக்கும் தந்தையின் ஆதங்கத்தை தழுதழுக்கப் பகிர்ந்துகொள்கிறது. பணமும் செல்வாக்கும் உள்ள பக்கம் சாய்கிற அதிகாரம் அந்தத் தந்தையை தள்ளிவிடுவதிலேயே குறியாக இருக்கிறது. நம்பகமான உரையாடல்களும் காட்சியமைப்பும் பாத்திரங்களும் கதைக்கு பக்கபலமாக உள்ளன. திருமணமாகாமல் இறந்துபோகும் இளம்பெண்களின் சவ அடக்கத்தின்போது செய்யப்படும் ஒரு சடங்கு கன்னிப்படையல். அதைச் செய்யமுடியாமல் தவிக்கும் தந்தையின் மனக்குமுறல் நெகிழ்ச்சியோடு பதிவாகியுள்ளது. கன்னிப்படையல் சடங்குபற்றிய குறிப்பு கதையை உயிரோட்டம் மிகுந்த ஒன்றாக மாற்றிவிடுகிறது.

பிரகாஷ் சங்கரனின் ”வேஷம்” புலிக்களி ஆடும் கலைஞன் ஒருவனைப்பற்றிய கதை. முதல்காட்சியில் தாளவேகத்துக்கு இணையாக சுழன்றும் பாய்ந்தும் வளைந்தும் சுழன்றுசுழன்று மிரட்டும்வகையில் ஆடி கூட்டத்தினரின் கவனத்தை ஈர்க்கும் கலைஞன் இறுதிக் காட்சியில் நம் கழிவிரக்கத்தைத் தூண்டும்வகையில் தற்கொலை செய்துகொள்கிறார். கான்சாகிப் உயிர்துறப்பதையும் புலிக்கலைஞன் உயிர்துறப்பதையும் ஒருகணம் இணைத்துப் பார்த்துக்கொள்கிறேன். இன்னொரு உலகத்துக்கு நம்மை அழைத்துச்செல்லும் அருந்துணை இசை. அந்த இசையின் துணையோடு அந்த உலகின் வாசல் தெரியாமல் எங்கெங்கோ அலைந்துவிட்டு ஒவ்வொரு நாளும் திரும்பிவிடுகிறான் இசைக்கலைஞன். புகைமயமான அப்பயணத்தின் ஏதோ ஓர் அபூர்வமான கணத்தில் அவன் பிரக்ஞை அந்த வாசலைக் கண்டடைகிறது. அதைத் தொட்டு நுழைய அது அவன் உயிரையே விலையாகக் கேட்கிறது. லயம்கூடிய உச்சத்தில் அவன் சட்டென உயிரையே கொடுத்து அந்த உலகத்துக்குள் நுழைந்துவிடுகிறான். அந்த இன்னொரு உலகத்துக்குள் செல்வதற்கு வழியில்லாமல் தடுமாறுகிறான் புலிக்கலைஞன். அவனை பார்வையாளர்கள் புறக்கணிக்கத் தொடங்கும் கணத்திலேயே அவன் இயற்கைமரணம் நெருங்கிவிட்டது. அடுத்து நிகழ்வதெல்லாம் அவன் உடல்மரணம்தான்.

மரணத்தைப்பற்றிய இன்னொரு முக்கியமான சிறுகதை ”வாசுதேவன்”. சுய உணர்வே இல்லாமல் பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருப்பவன் வாசுதேவன். அவன் சேர்த்துவைத்திருந்த பணம் அவனுடைய மருத்துவத்துக்கு உதவியாக இருக்கிறது. பணம் கரைந்துபோன தருணத்தில் மாற்று மருத்துவத்தில் நாட்டம் வந்து ஆயுர்வேதத்தை நாடுகிறார் வாசுதேவனின் தந்தை. மருத்துவம் செய்ய வந்த இரு பயிற்சி மருத்துவர்கள் முதலில் அருவருப்படைந்தாலும் நாட்கள் கழியக்கழிய ஈடுபாட்டோடு மருத்துவம் செய்கிறார்கள். அவர்களில் ஒருவன் முதல்கட்ட மருத்துவத்தின் இறுதியின் வாசுதேவன் பிரச்சினைக்கு எந்த மருத்துவமும் சரியாக வராது என தன் மனத்தில் தோன்றும் எண்ணத்தை வாசுவின் தாயிடம் பகிர்ந்துகொள்கிறான். அப்படி உண்மையைப் போட்டு உடைத்தது பெரிய பிழை என மற்றொருவன் அவனிடம் அலுத்துக்கொள்கிறான். நாலைந்து நாள் இடைவெளிக்குப் பிறகு வாசுவின் மரணச்செய்தி அவர்களுக்குக் கிடைக்கிறது. நிகழ்ந்தது கருணைக்கொலையா அல்லது இயற்கைமரணமா என்பது புதிரான அம்சமாக முன்வைக்கப்படுகிறது. பொம்மைகளின் கழுத்தைத் திருகி விளையாடும் குழந்தையின் நடவடிக்கையைப்பற்றிய குறிப்பொன்று கடைசிப்பகுதியில் உள்ளது. அது கதைக்கு இரண்டு திறப்புகளைக் கொடுக்கிறது. நிகழ்ந்தது கருணைக்கொலை என்பது ஒரு திறப்பு. பிறப்பு, இறப்பு, வாழ்க்கை எல்லாமே குழந்தைவிளையாட்டுபோல. மாபெரும் ஒரு விளையாட்டின் ஒரு பகுதியே எல்லாம். நம்மை பொம்மைகளாக்கி கடவுள் ஆடும் விளையாட்டு என்பது இன்னொரு திறப்பு.

மனிதன் செய்யும் பயணத்தைவிட மனிதமனம் செய்யும் பயணம் இன்னும் நீண்டது. இன்னும் விரிவானது. இன்னும் சிக்கலானது. இன்னும் ஆழமானது. மனத்துக்கு ஒரு வடிவம் என்பதில்லை. ஒருகணத்தில் அது கிளைக்குக்கிளை தாவும் குரங்குபோல. மறுகணத்தில் அது சுதந்திரமாக வட்டமடித்துப் பறக்கும் பறவைபோல. இன்னொரு கணத்தில் மண்ணைத் துளைத்துச் செல்லும் புழுப்போல. அதன் பயணம் எந்த அளவுக்குப் புதிரானதோ, அதே அளவு புதிரானது அது மேற்கொள்ளும் வடிவம். நாகநாதர் அந்தோனிப்பிள்ளை ஒரு பேருந்தில் பயணம் செய்கிறார். அவர் மனம் இறந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையில் பயணம் செய்கிறது. இரண்டு பயணங்களையும் ஒரு புள்ளியில் இணைக்க முயற்சி செய்கிறது சிவேந்திரனின் ”பயணம்” சிறுகதை.

மிளகாய், வெங்காயம், புகையிலை நடக்கூடிய தோட்டத்தில் பனையை நடமுடியாது என்ற கொள்கையை உடையவர் பிள்ளை. அது ஒரு முக்கியமான சொல். அவரை அடையாளப்படுத்தும் சொல். மதத்தை மாற்றுப்பயிராக எண்ணுகிறார் அவர். வீடு பார்க்க என்று நாயக கந்தையில் தேவாலயத்துக்குப் பக்கத்தில் சென்றவர் புரோக்கர் சொன்ன அடையாளங்களை மனத்தில் வைத்துக்கொண்டு தேடல்வேட்டையில் இருந்தவர் தற்செயலாகச் சந்தித்த பழைய காலத்து நண்பன் பீற்றரைப் பார்த்துவிட்டு வேறு எதற்காகவோ வந்ததாகச் சொல்லிவிட்டு திரும்பிவிடுகிறார். இந்தக் கோணல் பயணம் அவர் மனக்கோணலை அம்பலப்படுத்திவிட்டு முற்றுப் பெறுகிறது. வெட்டினாலும் சுட்டாலும் சிங்களவண்ட அடிமனதில் பயமும் மரியாதையும் இருக்கும் என்று நம்புகிற பிள்ளை, பீற்றரின் நெருக்கத்தை நிராகரிப்பதற்கான காரணம் புரியாத புதிராக இருக்கிறது.

பன்னிரண்டு சிறுகதைகள் எனக்களித்த வாசிப்பனுபவத்தைத் தொகுத்துப் பார்த்துக்கொள்ளும் முயற்சியே இந்த நீண்ட கடிதம். குறைகள் இல்லாமலில்லை. அவற்றைக் களைந்து உயரும் திறமையை இவர்கள் மிகவிரைவாகவே பெறவேண்டும் என்று விரும்புகிறேன். கண்டிப்பாகப் பெறுவார்கள். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. பிற படைப்புகளின் வாசிப்புப்பயிற்சியோடு தன் சொந்தப் படைப்புகளை அணுகும் கணத்தில் பலவீனமான புள்ளிகள் கண்ணில் பட்டுவிடும். அக்கணத்தில் அவர்கள் தம்மைத் திருத்திக்கொள்வார்கள்.
உறவு, காகிதக்கப்பல், தொலைதல், வாசலில் நின்ற உருவம், சோபானம், கன்னிப்படையல், வாசுதேவன் ஆகிய சிறுகதைகளை என் மனம் மீண்டும்மீண்டும் அசைபோட்டபடியே இருக்கிறது.

எல்லோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்
பாவண்ணன்

அன்புள்ள பாவண்ணன்,

புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்த நீங்கள் என் படுகை கதையை வாசித்துவிட்டு அறியப்படாத இளம் எழுத்தாளனாக இருந்த எனக்கு எழுதிய நீண்ட கடிதத்தைப்பற்றி நேற்று அஜிதனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தக்கடிதம் அக்காலகட்டத்தில் காதல்கடிதங்களை விட இனிமை கொண்டதாக இருந்தது. இருபத்தைந்தாண்டுகள் சென்று விட்டன. கால்நூற்றாண்டு!

உங்கள் கவனம் இந்த எழுத்தாளர்களுக்கு ஊக்கமூட்டும் நினைவாக இன்னொரு கால்நூற்றாண்டுக்காலம் நீடிக்குமென நினைக்கிறேன். குறிப்பாக உங்கள் தீவிர வாசகரான கெ.ஜெ.அசோக் குமாருக்கு

ஜெ

முந்தைய கட்டுரைகைக்குட்டைகள்- அரவிந்த்குமார் சச்சிதானந்தம் [மறுவடிவம்]
அடுத்த கட்டுரைகாகிதக்கப்பல் பற்றி..