கதைககள் கடிதங்கள் [பின்னூட்டங்களுடன்]

அன்புள்ள ஜெ,

புதியவர்களின் கதைகளைப் பற்றி. காலம் தாழ்ந்த எதிர்வினை.மன்னிக்கவும்.செவிட்டில் அடிக்கிற மாதிரி சொன்னால் தான் உறைக்கும் போல, என்ன செய்ய.
இது கதைகளைப் படித்து என் மனதிற்கு தோன்றிய கருத்துக்கள் தான். என் புரிதலில் போதாமை இருக்கலாம். ஆனால் இப்போது என் மனதில் பட்டதை அப்பிடியே சொல்வதுதான் ஆசிரியருக்கு செய்யும் நியாயம் என நினைக்கிறேன்.

இதுவரை படித்த கதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது தனசேகரின் உறவு. சற்றும் பாசாங்கற்ற கதை. வாசகனை பின்னே மூச்சிரைக்க ஓடி வரச்செய்யும் கதை. ஒரு நல்ல கதையின் முக்கியக் கூறுகளில் ஒன்று அது கதை – ஒருவர் எழுதியது – என தெரியக்கூடாது என நான் எண்ணுவதுண்டு. இது அவ்வகையைச் சார்ந்தது. இரண்டாம் பத்தியிலேயே நம்மை மேகமலைக்கு கூட்டிச் சென்று நிறுத்துகிறார். முருகண்ணனைப் பற்றிய வர்ணனை, அவர் சொல்லும் சிறு சம்பவங்கள், மலையடி ஊரில் நடக்கும் சங்கதி அனைத்தும் authentic ஆகஉள்ளது. செறிவான கதை, மிகை என ஒரு வரி கூட இல்லை.
கதையில் விதிக்கப்பட்ட உறவுகள் (முருகண்ணன் – அவர் குடும்பம், சந்தானம் – முருகண்ணன் கட்டி வைத்த மீனாட்சி – மாமனார், இரவில் பேருந்து நிலைத்திரு அருகே தூங்கும் பெண்கள் – குடிக்கும் கணவர்கள்) அனைத்தும் தழை அறுந்து ஓடுவதும், தானாக, எதேச்சையாக அமைந்த உறவுகள்(முருகண்ணன் – சந்தானம், மலையடி உறவுகள், முருகண்ணன் – “காதலி”)கூடி வருவதும் ஒரு நல்ல முரண். இதை சற்றே விரிவு செய்து உறவு என்பது விதிக்கப் பட்டவை மட்டும் அல்ல; நம் சுற்றத்தின் ஆரம் என்பது நம் மனதின் விரிவு மற்றும் தற்செயல் (serendipity) சம்பத்தப்பட்டது என எனக்குத் தோன்றியது. ஆனால் இது இல்லாமலேயே கதை அற்புதமாக அமைந்துள்ளது.

வேதாவின் பீத்தோவனின் ஆவி எனக்கு அவ்வுளவாக ரசிக்கவில்லை. இரு காரணங்கள்; ஒன்று கதைக் கட்டுமானம் மற்றொன்று அதன் சேதி. சேராவிற்கும், சிவாவிற்குமான உரையாடல் சற்றே செயற்கைத் தனமாக இருக்கிறது. சேரா, சிவா தூங்கிக் கொண்டு இருக்கும் போது அவனை எழுப்பி பேசுகிறாள்.பின்னர் சில வரிகள் கழித்து “நீ தூங்கிக் கொண்டிருந்தாள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை, வேறு இடம் செல்கிறேன்” என்கிறாள்.
அதே போல் பின்னர் சேரா அவள் பிரச்சினையை சொன்ன பின்னரும், அதற்கு சிவாவின் பதிலுக்குமான இடைவெளியில் பல பீடிகைகள் இரு தரப்பிலும். நீ சொல்லத்தான் வேண்டும், நீங்கள் கோபப்படக் கூடாது என இருவரும் குறைந்தது தலா இரு முறையாவது கூறுகிறார்கள். இடையில் “மானுட இருப்பின் துயர்”, “கால வெளியின் தனிமையில் உறைந்து” போன்ற பழகிய சொல்லாடல்கள்.

இது கதையின் நம்பகத்தன்மையை அடித்துவிடுகிறது. வாசகன் கதையை வாசிக்கும் தோறும் தொடர்ந்து கதையை விட்டு விலகி, கதையாசிரியரின் மனதிற்குள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறான். புதிய எழுத்தாளர்கள் என்று சொன்னால் கேட்கவே வேண்டாம்.
அவனை அதட்டி கதையின் பால் கவனத்தைத் திரும்பச் செய்வது ஆசிரியரின் வேலை இல்லையா?
(நீங்கள் ஓரிடத்தில், ஆசிரியருக்கு அந்த சலுகையை அளித்து, வாசகன் கதையைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறியது நினைவுக்கு வருகிறது. இருந்தாலும் எழுத்தாளரின் பங்கும், குறிப்பாக புதிதாக எழுதுபவர்கள், இதில் இருக்க வேண்டும் என்று தான் எனக்கு தோன்றுகிறது)
இந்தக் கதையின் சேதி – இதனுடன் உடன்படுகிறேன் என்று சொல்ல முடியாது. கட்டாயம், கதையின் சேதியுடன் வாசகர் அனைவரும் உடன்பட வேண்டும் என்று இல்லை. இருந்தாலும் எனக்குத் தோன்றியது: சேரா ஒரு சர்க்கஸ் புலிதான் அவள் சொல்வது போல. தொழில்நுட்பம் தான் கற்றிருக்கிறாள். ஒரு அசல் இசையைக் கேட்கும் போது துன்பம் வரலாம்தான். ஆனால் இரு விஷயங்கள். ஒன்று இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் துன்பம் மட்டும் இல்லை பரவசமும் சேர்ந்துதான் வருகிறது. எந்த ஒரு கலைஞனுக்கும் இதுவரை தான் அனுபவித்திராத, தான் கற்பனை செய்திராத, தான் மேலானது என என்னும் படைப்பைக் காணும் பொழுது எழுவது ஒரு மிகப் பெரிய பரவசம் தான். இரண்டு சேராவின் கேள்விக்கான விடை. அவள் அவளுடையதை விட பல மடங்கு மேலானதொரு கலையைக் கண்டுவிட்டாள். அப்படிஎனில் அவள் இது வரை வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம் என்ன? அவள், அவளின் கலையின் பால் கொண்டிருந்த காதலும், அதில் அவள் அடைந்த இன்பமும். அது ஒன்றே போதும் அவளின் இது வரையிலான கலை வாழ்க்கையை நியாயப்படுத்த என்பதே எனக்குத் தோன்றுவது. அவள் புதிதாகக் கண்ட கலையின் மேன்மையை ஏற்றுக்கொள்வது தான் நியாயமான செயலாக இருக்கும். ஆசிரியர் “பிறர் இயற்றிய இசை என்றும், நாம் இயற்றிய இசை என்றும் அகங்காரம் கொள்ள என்ன தேவை இருக்கிறது” என சொல்வது எனக்கு சரியாகத் தோன்றவில்லை. அந்த தான், தன்னுடையது என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் கலை எழுமா எனத் தெரியவில்லை. கலை என்பது ஒருவன் அவனையும், அவன் கண்ட உண்மைகளையும் வெளிப்படுத்துவதுதானே? நீங்கள் இதைப்பற்றியும் நிறையக் கூறியிருக்கிறீர்கள்.

ராஜகோபாலனின் கதை பற்றி ஏற்கனவே சில வாசகர்கள் கூறிய கருத்து தான் எனக்கும். மறுபடியும், நீங்கள் சொன்னது போல் கற்பு என்பது இரண்டு கால்களுக்கு நடுவில் இல்லை.
சிவாவின் கதை பரவாயில்லை எனத் தோன்றியது.

சில கதைகளை மற்றொரு முறை வாசித்தால் தான் சொல்ல முடியும். வாசித்துவிட்டு எழுதுகிறேன்.

எதிர்வினைகள் குறித்து உங்களுக்கு ஆச்சரியம் என்பது தான் எனக்கு ஆச்சரியம். உங்களுக்கு கடிதம் எழுதியவர்களைக் குறிப்பிட்டீர்கள். அவர்கள் அனைவரும் எழுத்தாளர்கள். இங்கே எழுத்தாளர்களே எழுதி அவர்களுக்குள்ளேயே வாசித்துக் கொள்ள வேண்டியதுதான் போல. குழும நண்பர்கள் எழுதாமல் இருப்பதற்கு ஆரம்பத் தயக்கம் தான் முக்கியக் காரணமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
“மழைக்கால ஈசல்” என நீங்கள் வேறு, சில மக்களை விரட்டி அடித்திருக்கலாம் :-)

அன்புடன்
கார்த்தி
கதைகள்

12. பயணம் . சிவேந்திரன் [email protected]

11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]

10. வேஷம் பிரகாஷ் சங்கரன்

9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]

8. சோபானம் ராம்

7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்

6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]

5. பீத்தோவனின் ஆவி வேதா

4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]

3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]

2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]

1. உறவு தனசேகர் [email protected]

முந்தைய கட்டுரைகதைகள் விமர்சனங்கள் -ஆர்வி
அடுத்த கட்டுரைவேஷம், உறவு கடிதங்கள்