அன்புள்ள சிவேந்திரன்,
உணர்ச்சிக் கொந்தளிப்பான ஈழக்கதைகளை வாசித்துப்பழகிய மனதுக்கு இந்த கதையில் உள்ள எளிமையும் அடக்கமும் ஆச்சரியமளிக்கின்றன. நேரடியான ஒரு சித்தரிப்பு வழியாக ஒரு காலகட்ட மாற்றத்தையே சொல்லிவிட முடிந்திருக்கிறது உங்களால். பெரும் அரசியல் போராட்டம், துக்கங்கள், இடப்பெயர்தல்கள் ஆகியவை ஒட்டுமொத்தமாக சமூக ஆழ்மனதில் என்ன நகர்வை உருவாக்கியிருக்கின்றன என்று தேடிச்செல்லும் பார்வை முக்கியமானது. மிக மெல்லிய ஒரு திசைமாற்றம் மட்டும்தானா அது என்ற எண்ணத்தை உருவாக்கும் கதை மனிதவாழ்க்கையை, சமூகவாழ்க்கையைப்பற்றி பலகோணங்களில் சிந்திக்கச்செய்கிறது.
இளைஞர்களின் உலகைப்பற்றிய மெல்லிய தீற்றலாக வரும் சித்தரிப்பும் அழகானது. போருக்கு முன்னும் போருக்குப்பின்னும் இளைமை அதே நையாண்டியுடன் துள்ளலுடன் இருக்கும் சித்திரம் ஏதோ ஒரு வகை மனநெகிழ்வை, ஏக்கத்தை நிறைக்கிறது
ஜெ