கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ ,

புதியவர்களின் ஆக்கங்கள் மற்றும் அதைப் பற்றிய விமரிசனங்கள் குறித்த தங்கள் கடிதம் படித்தேன்.ஒரு கதைக்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றுவது என்பது என் தலைமுறையின் வாசகர்களுக்கு ஏனோ அவ்வளவு உவப்பானதாக இல்லை. ஒரு படைப்பு நம்மில் ஏற்படுத்தும் பாதிப்பை புரிந்து கொள்ளவும் அதை உள்வாங்கிக்கொள்ளவும் ஒரு குறைந்த பட்ச கால அவகாசம் தேவை என்றே என் போன்ற பலர் நினைக்கிறோம். ஒன்றிரண்டைத் தவிர மீதி அனைத்துமே இன்றைய சிறுபத்திரிகைகளில் பிரசுரமாகும் சிறுகதைகளின் தரத்தைவிட சர்வசாதரணமாக மேலிருக்கிறது என்பது கண் கூடு. ஆனால் ஒரு படைப்பு வந்தவுடனேயே உடனடியாக அதற்கு எதிர்வினையாற்றுவது ஒரு வெகுஜன வாரப்பத்திரிக்கை வாசக மனோபாவம் என்ற எண்ணம் என் போன்ற நீண்ட கால இலக்கிய வாசகர்களுக்கு உண்டு. அது தவறாகக் கூட இருக்கலாம்.

இதில் குழும நண்பர்களுக்கு இன்னும் ஒரு சிக்கல் உண்டு. பெரும்பாலும் அறிமுகமாகிய படைப்பாளிகள் என்னும்போது தட்டிக்கொடுப்பதே சரியானது என்றும் கறாரான விமர்சனம் தேவையா என்றும் தோன்றுகிறது. விவாதம் விமர்சனம் என்ப தை விட நட்பு முக்கியம் இல்லையா? அதனால் படைப்புகளில் குறைதான் உண்டு என்பதல்ல, நிச்சயமாக அனைத்துமே ஒவ்வொரு வகையில் நல்ல படைப்புகள் தான். என்னைப்பொறுத்தவரையில் ஒவ்வொரு சிறுகதையையும் குறித்து என் மற்ற நண்பர்களிடம் விவாதித்தே வருகிறேன். அவற்றைக் குறித்து ஓரளவு விரிவாக எழுதவும் எண்ணம் உண்டு.படைப்புகள் குறித்து முக்கியமாக படைப்பாளிகளின் பின்னணி குறித்து பெரு மகிழ்ச்சி அடைய ஒன்று உண்டு. இவர்கள் பெரும்பாலும் மிக இளையவர்கள். உயர்தொழில்நுட்பத் திலும் அறிவுத்துறையிலும் பணியாற்றினாலும் தமிழில் படைப்பாளிகளாக இருப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பதே . மிக முக்கியமாக எனக்குப் படுகிறது. புதிய படைப்பாளிகளை அடையாளம் காட்டும் உங்கள் பணி முக்கியமானது. வாழ்த்துக்கள்.
அன்புடன்,

சுரேஷ் கோவை

அன்புள்ள சுரேஷ்,

உண்மை. ஆனால் சிற்றிதழ்ச்சூழலில்கூட உடனடி எதிர்வினை தொடர்ந்து இருந்துகொண்டுதான் இருந்தது. ஒரு கதை எழுதிவிட்டு அதற்கான எதிர்வினைக்காகக் காத்திருப்பதென்பது சோர்வூட்டுவது. மேலும் சிறுகதைகளைப்பொறுத்தவரை உடனடி எதிர்வினைக்கு ஒரு மதிப்புண்டு. அது கதை உருவாக்கும் தாக்கத்தைக் காட்டுகிறது. காலம் கழித்து வரும் மதிப்பீடு இன்னொருவகையானது. இரண்டுமே முக்கியம்தான்

ஜெ

ஒரு வாரமாக தோய்க்கவே இல்லை. இன்று காலையில் ஓரங்களில் பிரிந்து வந்த உள்ளாடைதான் அலுவல் அவசரத்திற்கு கைக்கு வந்தது. கல்யாணம் ஆன கையோடு திருப்பூர் இறக்குமதியாக தமிழகத்திலேயே யாரோ வாங்கிக் கொடுத்தது. அந்தக் கால உடை போல் இப்பொழுது ஆகுமா என தரக்குறைவாக நினைத்து, குளித்தபின் அதை உடுத்தும்போது கற்பனை எலியின் விபரீத சிந்தனையாக, ‘இன்று மட்டும் விபத்துக்குள்ளாகி, ஜட்டி தெரியுமாறு டவுசர் கிழிந்து போனால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்!? “இவனுக்கு இன்ஷூரன்ஸ் இருக்குமா… காப்பாற்றினால் நையா பைசா பிரயோசனமாகுமா…” என்று கணித்து என்னை அதோகதியாக விட்டுவிடுவார்களோ!’ என மூளையில் ஓடிக் கொண்டிருந்தது.

அப்படியே, சிவாவின் ‘யாவரும் கேளிர்’ ( http://www.jeyamohan.in/?p=36570 ) வாசித்தேன். அதில் வரும் நாயகரும் படாத இடத்தில் படாவிட்டாலும் கூட, தோற்றத்தை நினைத்து கவனக்கவலை கொள்கிறார்.

இன்று வெளியாகும் தமிழ்க்கதைகள் பெரும்பாலும் இரண்டு வகைப்படும்: தெரிந்த விஷயத்தை புதிய உத்திகளில் சுவாரசியமாகக் கொடுப்பது; அல்லது, தெரியாத விஷயங்களை புராதனமான நடையில் சொல்வது. இந்தக் கதை புதிய பிரதேசத்தில் தெரிந்த பிரச்சினையை சொல்கிறது.

இங்கிலாந்து இந்தியர்களின் முப்பதாண்டு கால சமூக மாற்றத்தை டக்கென்று படம் பிடித்துக் கொடுக்கும் கதை. ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, எடுத்துக் கொண்ட விஷயத்தில் துவங்கி, அதை நோக்கிப் பயணித்து, எதிர்பார்த்த மாதிரியே முடிகிறது. அயல்நாட்டில் நடக்கும் கதைகளைப் படிக்கும்போது மொழிபெயர்ப்பு வாசனை வந்துவிடும் அபாயம் உண்டு. பயணக்கட்டுரை போல் ஆகிவிடும் அபாயம் உண்டு. வெளிநாட்டு பழக்கவழக்கங்களை விளக்குவதிலேயே கதை மூழ்கிவிடும் அபாயம் உண்டு. அதெல்லாம் தடுக்காமல் கதையை எடுத்து சென்றிருக்கிறார். அந்த சூட்சுமம் பிடித்திருந்தது.

நான் கதைப் புத்தகங்களை வாசிப்பதற்கு மூன்று காரணங்களை வைத்திருக்கிறேன்.

நேரத்தை செலவழிப்பதற்கு: வீட்டில் சிங்கம்-2 ஓடிக் கொண்டிருக்கும். அதைப் பார்ப்பதற்கு எதையாவது படிக்கலாம்.
மாற்றுக்கருத்துகளை புரிந்து கொள்வதற்கு: இராணுவத்தின் பாதுகாப்பு எப்பொழுதுமே நல்லது என்று தட்டையாக புரிந்து கொள்ளாமல், புத்தி விசாலமடைவதற்காக படிக்கிறேன்.
நண்பர்களின் பரிந்துரை: அருந்ததி ராய்க்கு புக்கர் பரிசு கிடைத்திருக்கிறதே… அப்படி என்ன எழுதி இருக்கிறார்?

இந்தக் கதை மூன்றாம் பிரிவை சேர்ந்தது. முதல் வாசிப்பில் ஏமாற்றவில்லை. இரண்டாம் வாசிப்பைக் கோரவில்லை. சிவாவிற்கு உரையாடல் நன்றாக வந்திருக்கிறது. டேனியும் பழனியும் பேசும் பகுதிகள் சுவாரசியமானவை. ஆனால், சிந்தனையை வளமாக்குமாறு இல்லாமல் சம்பவங்களை சொல்ல மட்டுமே சம்பாஷணைகள் உதவியிருக்கின்றன.

தேவையில்லாத ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கலாம். ஸ்பீட் பிரேக்கர், backpack, IT எல்லாம் தமிழிலேயே புழங்கவிடலாம்.

பூடகமாக கதையை நிறுத்துவது நன்றாகத்தான் இருக்கும். ஆனால், என்னைப் போன்ற மேம்போக்கான வாசகனுக்கு வசதியாக இன்னும் கொஞ்சம் தெளிவாகவே சாதிப் பிரச்சினையை சொல்லலாம். கருப்பினத்தினருக்கும் வெள்ளைக்காரர்களுக்கும் இருக்கும் புகைச்சலை பேச்சிலே சம்பவத்திலோ வைத்திருக்கலாம்.

நான் இலக்கிய விமர்சனமெல்லாம் செய்வதில்லை. கதையை படித்தபின், அதை, இன்னொருவருக்கு வாசிக்க பரிந்துரை செய்ய முடியுமா அல்லது முடியாதா என்பதுதான் கேள்வி. இந்தக் கதைக்கு என்னுடைய மாமனார் அகப்பட்டார். அவர்தான் என்னுடைய கிழிந்த ஜட்டியின் உபயதாரராக இருந்திருக்க வேண்டும்.
-பாலாஜிபாஸ்டன்

அன்புள்ள பாலாஜி,

சமூகப்பிரச்சினைகளை கதைகளுக்குள் சொல்வது சிலசமயம் கைகொடுக்கும். பலசமயம் காலைவாரிவிடும். நேரடியான தீவிரமான பிரச்சினைகளைச் சொல்லலாம். வரலாற்றைச் சொல்லலாம். ஆனால் சமகாலப்பிரச்சினைகளைச் சொல்லும்போது கதையைவிட அப்பிரச்சினையைப்பற்றிய விவாதம் ஆரம்பிக்குமென்றால் அது அக்கதையின் வீழ்ச்சியே

ஜெ

கதைகள்

12. பயணம் . சிவேந்திரன் [email protected]

11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]

10. வேஷம் பிரகாஷ் சங்கரன்

9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]

8. சோபானம் ராம்

7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்

6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]

5. பீத்தோவனின் ஆவி வேதா

4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]

3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]

2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]

1. உறவு தனசேகர் [email protected]

முந்தைய கட்டுரைகங்கூலி பாரதம் தமிழில்
அடுத்த கட்டுரைமீண்டும் புதியவர்களின் கதைகள்