சிவேந்திரனின் ’பயணம்’ -கடிதங்கள்

சிவேந்திரன் எழுதிய இக்கதை முதல் வாசிப்பில் எனக்கு சிவாவின் கதையை நினைவு படுத்தியது. ஏறத்தாழ இரண்டுமே ஒரே விஷயத்தை தொட்டு செல்கிறது. ‘நிற்கும் நிலம் ஒன்று தான் கட்டிடங்கள் தான் வேறு ‘எனும் புரிதல் இல்லை என்பதையே சூட்டுகிறது. மதங்களுக்கும் சாதிக்குமான உறவை பற்றி பேசுகிறது. ஒரு மதத்தை சேர்ந்த பீட்டரின் மகளுடனான பழக்கம் அவரை தொந்திரவு செய்கிறது, ஆனால் சைவராக திகழும் மருமகனை மதத்திற்கு அப்பால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. மரணம் என்பதைக் காட்டிலும் மகன் வெற்று ஜாதியில் மணமுடித்ததாக எண்ணிக்கொள்ள முற்படுகிறார். இந்தக் கதையின் மிக முக்கியமான புள்ளி, பெரியவரின் டென்மார்க் அனுபவ குறிப்பில் இருப்பதாக தோன்றுகிறது. அடையாள மேட்டிமை உலகெங்கிலும் எப்படி கட்டமைக்கப் படுகிறது என்பதை சொல்லும் புள்ளி முக்கியமானது. இலங்கை தமிழில் எள்ளல் தொனி  அற்புதமாக வெளிப்படுகிறது. வளந்தப்புறமும் பிள்ளையா? என்று பேருந்தில் அன்ரனி கேட்பது, அது புகையிலையை சொல்லவில்லை என தந்தையை நக்கலடிக்கும் மகன், தன் மகனும் அவனுடைய நண்பனின் தங்கையும் வந்தியத்தேவனாகவும் குந்தவையாகவும் மாஸ்டருக்கு தெரிவது போன்ற இடங்களை சொல்லலாம். இந்த தொனி இக்கதைக்கு மிகப்பெரிய வலு என சொல்லலாம்.

சுனில் கிருஷ்ணன்

ஜெ

சிவேந்திரனின் பயணங்கள் எனக்கு பிடித்திருந்தது. காலந்தோறும் சிறுகதை சின்னவிஷயங்களின் கலையாக இருந்திருக்கிறது என்பதனால். அல்லது இப்படிச் சொல்லலாம். சிறுகதை சின்னவிஷயங்களில் தெரியும் பெரிய விஷயங்களின் கலை. சுந்தர ராமசாமி சொன்னார். ‘பனித்துளியில் பனையும் தெரியும் என்று சொல்வார்கள், தெரியும் ரொம்பச் சின்ன பனையாக’ அதேபோலத்தான் சிறுகதையும். சின்னவிஷயங்களை சொல்லவேண்டும். அதில் பெரியவிஷயங்கள் தெரியவேண்டும். அது இந்தக்கதையில் நிகழ்ந்திருக்கிறது. சாதிபேதங்கள் நிறைந்த, சின்னச்சின்னவிஷயங்களுக்கெல்லாம் பூசலிடுகிற ஓர் யாழ்ப்பாணம். போரில் அது சிதைகிறது. திரும்ப உலகின் வெவ்வேறு நாடுகளிலாக சிதறி முளைக்கிறது. மீண்டும் ஊர்திரும்பும்போது ஒரு புள்ளி கொஞ்சம் இடம் மாறியிருக்கிறது அவ்வளவுதான். ஆனால் அது எவ்வளவு பெரிய மாற்றம். எவ்வளவு பெரிய திருப்பம். ஈழப்போரின் இருபத்தைந்தாண்டுக்காலத்தை ஒரு கதாபாத்திரம் வழியாகச் சொல்லக்கூடிய கதை. ‘ஒண்ணுமில்லை சும்மாதான்’ என்று அது முடிவதேகூட பெரிய கலையமைதியை உருவாக்குகிறது. உலகமே இடிந்து சரிந்து திரும்ப கட்டி எழுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் என்ன ‘ஒண்ணுமில்லை’தான்

சண்முகம்
மதுரை

அன்புள்ள ஜெமோ

சிவேந்திரனின் பயணம் கதையும் நல்ல கதைதான். முத்தாய்ப்பாக அமையவேண்டிய கதைதான். ஈழ இலக்கியத்தை கடந்த 30 ஆண்டுகளாக கவனித்துவருபவன். அங்கே ஏற்பட்ட கொந்தளிப்பை வெளிபப்டுத்தும் இரண்டு வரிகளாகவே ஈழத்து இலக்கியம் எனக்கு நினைவுக்கு வருகிறது தளையசிங்கம் ஒரு தனிவீடு நாவலின் கடைசியில் எழுதினார். ’அவள் அழுத கண்ணீருடன் தனிமையில் நின்றாள்’ என்று தன் தேசத்தைப்பற்றி. அதன்பிறகு சேரன் எழுதினார் ‘சாம்பல்பூத்த தெருக்களில் இருந்து எழுந்து வருக’ என்று

அந்த இரண்டு வரிகளுக்கும் சம்பந்தமே இல்லாத கதை இது. இதில் உள்ள குரல் எழும்பாத அமைதியும் போகிறபோக்கிலே சொல்லப்படும் போக்கும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இலக்கியத்தைக் கணிக்கவே முடியாது என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. புதியதாக என்ன வரும் என்றே சொல்லமுடியாது. ஒட்டுமொத்த தேசியப்போராட்டத்தையும் அது சமூகமனத்தில் என்ன மாற்றத்தைக் கொண்டுவந்தது என்று பார்க்கும் பார்வை மிகவும்புதியதாக உள்ளது. ஒரு சின்ன சலனம் மட்டுமாக இத்தனைபெரிய அலையை காணும் போக்கு ஒரு பெரிய முதிர்ச்சி என்றும் படுகிறது

ஈழ இலக்கியம் வழக்கமான அரசியல்கூச்சல்களைத் தாண்டிச்செல்லும் என்பதற்கான ஆதாரம் இந்தக்கதை.

சிவம்

கதைகள்

12. பயணம் . சிவேந்திரன் [email protected]

11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]

10. வேஷம் பிரகாஷ் சங்கரன்

9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]

8. சோபானம் ராம்

7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்

6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]

5. பீத்தோவனின் ஆவி வேதா

4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]

3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]

2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]

1. உறவு தனசேகர் [email protected]

முந்தைய கட்டுரைவேஷம், சோபானம்- விமர்சனம் -அரவிந்த்
அடுத்த கட்டுரைபிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’- ஒரு கடிதம்