அன்புள்ள நண்பர்களே,
இப்போது உங்கள் முன் நிற்கும்போது பல ஆயிரம் கிலோமீட்டர் அப்பால் இருக்கும் என்னுடைய தேசத்தை நான் நினைத்துக்கொள்கிறேன். கைக்குழந்தைகள் தாயைப்பிரிந்து நிம்மதியிழந்திருக்கையில் தாயின் பழைய சேலை ஒன்றை அதனருகே போடுவார்கள். அந்த வாசனை அதை அமைதிப்படுத்தும். அந்த புடவை போல இப்போது நமது மொழி இருக்கிறது. அது நம் தாய் நாட்டின் வாசனையைப்போல் இருக்கிறது.
பலகோடி மக்கள் வாழும் ஒரு மாபெரும் தேசம். பல ஆயிரம் கிலோமீட்டர் விரிந்து கிடக்கும் மாபெரும் நிலப்பரப்பு. பலநூறு பண்பாடுகள். அந்த மண் முழுக்க நான் அலைந்து திரிந்திருக்கிறேன். அந்த நாட்டை நான் என் கண்களால் மீண்டும் மீண்டும் தரிசித்திருக்கிறேன். அந்த தரிசனமே என் எழுத்துக்கு அடிப்படை.
அதற்கிணையான ஒரு தரிசனத்தை நான் என் வாசிப்பின் வழியாகவும் அடைந்திருக்கிறேன். ஆகவேதான் வடக்கே இந்தியில் எழுதிய பிரேம்சந்தும் கிழக்கே வங்கத்தில் எழுதிய தாராசங்கர் பானர்ஜியும் மேற்கே குஜராத்தியில் எழுதிய பன்னலால் படேலும் தெற்கே தமிழில் எழுதிய தி ஜானகிராமனும் எனக்கான எழுத்தாளர்கள் ஆகிறார்கள். அவர்கள் எழுதுவது ஒன்றே என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது.
நண்பர்களே, நூற்றாண்டுகளாக பசியால் பீடிக்கப்பட்ட ஒரு பெரும் தேசம். பொருளத்தார ரீதியாகச் சுரண்டப்பட்டு காலியான ஒரு தேசம். அங்கே பசியைப்பற்றி மீண்டும் மீண்டும் இலக்கியங்கள் பேசுகின்றன. உணவு ஒரு மையக்கருவாக எப்போதுமே இருந்துள்ளது
பிரேம்சந்தின் ஒரு சிறுகதை. வீட்டில் தொண்ணூறு வயதான கிழவி இருக்கிறது. அதன் மகன் வயிற்று பேத்திக்கு திருமணம். திருமணப்பேச்சு ஆரம்பித்ததுமே கிழவி கேட்கிறது– அப்படியானால் நீ லட்டு செய்வாய் அல்லவா? எனக்கு லட்டு கொடுப்பாயா? கிழவிக்கு கண் சரியாகத் தெரியாது. தவழத்தான் முடியும். நாக்கில் மட்டுமே ஜீவன் மிஞ்சியிருக்கிறது
‘இந்த கிழவிக்கு வேறு நினைப்பே இல்லை. சாப்பாடு சாப்பாடு இதேதான்’ என்று மருமகள் சலித்துக் கொள்கிறாள். கிழவிக்கு மனம் லட்டாக மாறிவிட்டது. அல்லும் பகலும் லட்டு நினைப்பு. லட்டு செய்ய இன்னும் எத்தனை நாள்? லட்டு எப்படி செய்வாய்? எப்போது லட்டு செய்ய ஆரம்பிப்பாய்? ஏன் இன்னும் ஆரம்பிக்கவில்லை. ”சும்மா கிட கிழமே. இதே தொணதொணப்புதானா” என்று மருமகள் எரிந்து விழுகிறாள். வசையெல்லாம் கிழத்துக்கு ஒரு பொருட்டே அல்ல. லட்டு ஒரு வகை தெய்வம் அதற்கு
திருமண முதல் நாள். மருமகள் எண்ணைச்சட்டியை அடுப்பில் ஏற்றிவிட்டாள். கிழவி அடுப்பருகே அமர்ந்து ‘சீக்கிரம் லட்டு செய்… லட்டு செய்’ என்று பரபரக்கிறது. ”முதலில் இந்த கிழத்தை உக்கிராண அறையில் போட்டு பூட்டு…ஊரார் பார்த்தால் கேலிசெய்வார்கள்” என்கிறாள் மருமகள். மகன் அதை போட்டு பூட்டிவிடுகிறான்
அதன் பின் அத்தனைபேரும் மறந்து விடுகிறார்கள். மருமகள் ஆயிரக்கணக்கில் லட்டு செய்கிறாள். பந்தி பந்தியாக பரிமாறுகிறாள். திருமணம் முடிகிறது. எல்லாரும் கிளம்பிவிட்டார்கள். போர் முடிந்ந்த களம் போல வீடு. மருமகள் களைத்துப்போயிருக்கிறாள். சட்டென்று கிழவி நினைப்பு வருகிறது. ”டேய் அதை திறந்து விடுடா…சிறுநீர் கழித்து வைக்கப்போகிறது”
கதவு திறந்ததுமே கிழவி தவழ்ந்து வெளியே செல்கிறது. எங்கே கிழவியைக் காணவில்லையே என்று தேடுகிறாள் மருமகள். இன்னமும் சுத்தம் செய்யப்படாத உணவு அறையில் தரையில் சிந்திய லட்டுப்பொருக்குகளை துழாவி துழாவி பொறுக்கி வாயில் போடுகிறது கிழம். மருமகள் காலடி ஓசை கேட்டதும் நிமிர்ந்து ஒரு குழந்தை சிரிப்பு. ”லட்டு ரொம்ப ருசியாக இருக்கிறது”
மருமகள் அபப்டியே கதறி விடுகிறாள். ”என் தெய்வமே, மலைமலையாக லட்டு செய்து கொடுத்தேனே, உனக்கு ஒரு லட்டு கொடுக்கத்தோன்றவில்லையே” அவள் அந்த விடிகாலையில் லட்டு செய்வதற்காக மீண்டும் எண்ணைச்சட்டியை அடுப்பில் ஏற்றினாள்.
பிரேம்சந்தின் கதை உணவு அமுதமாக ஆகும் ஒரு தருணத்தைச் சொல்கிறது. அன்னம் தேவோ ·பவ என்கிறது மரபு. உணவு தெய்வமாகும் கணம். அதே கணத்தை அதீன் பந்த்யோபாத்யாய எழுதிய வங்க நாவலில் மீண்டும் கண்டேன்
வங்கப்பஞ்சம். பசியால் மக்கள் மடிகிறார்கள். இரவு பகலாக கிழங்குகளைத்தேடி அலைகிறார்கள். வாத்துகள் திருட்டு போகின்றன என்று புகார் வந்ததனால் ஊர்க்காவலனனான மன்சூர் ரோந்து வருகிறான். அப்போது ஊரில் ஒரு பெண் கழுத்தளவு நீரில் நிற்பதைப் பார்க்கிறான். ஏதோ கிழங்கு தேடுகிறாள் என்று கடந்து செல்கிறான்
ஆனால் பின்னர் அந்த முகத்தை நினைவில் மீட்டியபோது அவனுக்கு தெரிந்துவிடுகிறது, அந்தப்பெண் ஒரு வாத்தை பிடித்து கொன்று அவன் வருவதைக் கண்டதும் நீருக்குள் காலில் போட்டு மிதித்தபடி நின்றிருக்கிறாள். அந்த முகம் அத்தனை கொடூரமான வெறிப்புடன் ஒரு துர்தேவதை போல் இருக்கிறது
மன்சூர் அவளைத் தேடிச் செல்கிறான். அவளை பிடித்து பஞ்சாயத்தில் நிறுத்த எண்ணுகிறான். குடிசைக்குள் அவள் இருக்கிறாள். வாத்தை அவள் சமைத்ததற்கான ஆதாரத்துக்காக மன்சூர் குடிசை படல் வழியாகப் பார்க்கிறான். உள்ளே அவள் அந்த வாத்தை தின்று முடித்திருக்கிறாள். பலநாள் பசி நீங்கி அவள் முகம் தெய்வீகமான ஓர் எழிலுடன் இருக்கிறது. மன்சூர் கண்ணீர் விட்டபடி திரும்புகிறான்.
குஜராத்தில் கட்ச் பகுதியில் வந்த மாபெரும் பஞ்சத்தின் கதையைச் சொல்லும் நாவல் பன்னலால் படேலின் வாழ்க்கை ஒரு நாடகம். பசியால் ஊரைவிட்டகன்று நிலம் இழந்து நாடோடிகளாகச் செல்கிறார்கள் காகு படேலும் குடும்பமும். மழை பொய்த்த வானம் அவர்களை துரத்துகிறது. ஆனால் நிலத்தை விடாமுடியாமல் திரும்பி வருகிறார்கள்.நிலம் அவர்களை மீண்டும் அணைத்துக்கொள்கிறது. அதை சரண்டைகிறார்கள்.
அந்தக் கணத்தில் தாகம் கொண்டு மரணத்தை நெருங்கும் காகு தன் மனைவியின் வற்றி வரண்ட முலையில் நீரூற்றைக் காண்கிறான். அமுது போல. ஒரு விசித்திரமான கனவு போல. அதன் நீட்சியாக மழை கொட்ட ஆரம்பிக்கிறது.
பசி சினம் கொண்ட தெய்வமாக வருகிறது தி ஜானகிராமனின் பரதேசி வந்தான் என்னும் கதையில். ஞானம் செல்வம் புகழ் எல்லாம் மிக்கவரான வக்கீல் அண்ணா தன் ஒரே மகனின் திருமணத்தில் பந்தி விசாரிக்க வருகிறார். அவர் கற்காத சாஸ்திரம் இல்லை. அவர் செல்லாத சபைகள் இல்லை. வாழ்க்கையில் அவர் வெல்லாத களமே இல்லை. கம்பீரம்தான் அவர்.
அந்தப் பந்தியில் அவரது பெரிய மனிதர்களான நண்பர்கள் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். கூடவே ஓரமாக அமர்ந்து சாப்பிடப்போகிறான் ஒரு கிழப்பரதேசி. ஒட்டிய வயிறு. குளித்து ஈரம் போகாத உடம்பு. பலநாள் பசியால் விழித்த கண். சோற்றை பருப்புடன் பிசைந்து ஆவேசமாக அள்ளி வாய்க்குக் கொண்டுசெல்கிறான். உக்கிரமான கோபத்துடன் வக்கீல் அண்ணா பாய்ந்து வந்து அவன் கையை பிடிக்கிறான்.
”டேய் எந்திரிடா… வெளியே போடா நாயே”. பரதேசி அப்போதும் அந்த ஒரு பிடிச் சோற்றை வாயில் போடத்தான் முயல்கிறான். ”அள்ளிட்டேனே” என்று சொல்கிறான். ”போடா…” என்று அண்ணா அவனை தூக்கி வெளியே வீசுகிறார்.
குடுமி அவிழ அடிவயிற்று ஆவேசத்துடன் பரதேசி சொல்கிறான் ”போறேன்யா… போய்ட்டு வாறேன்.. இன்னைக்கு நாப்பத்தொண்ணாம் நாள். நீ அழுதிட்டே போடர சோத்தை திங்கறதுக்கு வாறேன்”. எல்லாரும் திகைக்கிறார்கள். ”பெரிய ரிஷி சாபம் போடரார்… போடா” என்று வக்கீல்அண்ணா அவனை அடிக்கப்பாய்கிறார்.
தற்செயலாக இருக்கலாம். திருமணம் நடந்த மறுநாளே வக்கீல்அண்ணாவின் ஒரே மகன் காவேரிக்குக் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி இறக்கிறான். அண்ணா உடைந்து போகிறார். அவரது ஞானம் கம்பீரம் எல்லாமே விலகி நடைபிணமாக ஆகிவிடுகிறார்.
நாற்பத்தோராம் நாள் சடங்கு. அன்றும் விருந்து. வக்கீல்அண்ணா வெளுத்த சடலம்போல தன் அறைவிட்டு வெளியே வந்து சொல்கிறார். “அந்தப்பரதேசிய கூட்டி வாங்க” பிறர் தயங்குகிறார்கள். ஆனால் அவனே காலி கப்பரையுடன் வந்து வாசலில் நிற்கிறான். சிலர் அவனை அடிக்க பாய்கிறார்கள். அண்ணா தடுக்கிறார்
அவன் சொல்கிறான் ”சாமி நான் போட்ட சாபத்தை நிறைவேத்த வரலை. அதில் எனக்கு சந்தோஷம் இல்லை. ஆனா சொல்லிட்டேன். நான் சொல்லலை.என் பசி சொல்லியது. நீ பெரிய மனுஷன். உனக்கு எல்லாமே இருக்கு. கூடவே கொஞ்சம் கருணையும் மனுஷனை மனுஷனா நெனைக்கிற மனசும் இருந்திருந்தா நீ எங்கியோ இருந்திருப்பியே சாமி. இப்டி கோட்டை விட்டுட்டியே… அந்தச் சோத்தை நீ போடணும் நான் சாப்பிடணும்… அதான் விதி… போடு”
”உள்ள வாரும் கால பைரவரே” என்று அண்ணா அழைக்கிறார்
ஜானகிராமனின் இந்த மகத்தான கதையில் பசி தர்மத்தின் உருவமாக வந்து நிற்கிறது. வேறு எந்த சக்தியும் சொல்லமுடியாத பேரறத்தை அது பேசுகிறது
கண்கூடான யதார்த்தமாக இருந்த பசியையே ஞானத்தின் வழிமுறையாக கொள்கின்றன இந்த இலக்கியங்கள். நான் இந்த இலக்கியம் வழியாகவே என் ஞானத்தை பெற்றுக்கொண்டேன். எந்த குருவின் காலடியிலும் அமர்ந்து பெறாத மெய்மையை இவை எனக்குக் காட்டின.
இலக்கியம் நமக்கு இன்னமும் கூட வருவதாக இருக்கிறது. எத்தனை தூரத்தில் இருந்தாலும் தாயின் புடவைபோல கூடவே இருக்கிறது.
இந்த அரங்கில் இத்தனை வகைவகையான உணவுகள் நடுவே உங்களை எல்லாம் பார்க்கும்போது இதைச் சொல்லத்தோன்றியது. நன்றி.
[22-8-2009 அன்று சிகாகோ தமிழ்ச்சங்கம் பூங்கா கூடுகை நிகழ்ச்சியில் ஆற்றிய உரை]
மறுபிரசுரம்./முதற்பிரசுரம் செப்டெம்பர் 2009