அன்புள்ள ஜெ
சுநீல் கிருஷ்ணனின் வாசுதேவன் மனதை நெகிழ்வித்த கதை. ஏன் இப்படி உயிர்வாழவேண்டும் என்று நோயுற்ற பலரையும் நோக்கி நோயில்லாதவர்கள் கேட்பதைக் கண்டிருக்கிறேன். அந்தக்கேள்வியை எவரைப்பற்றியும் கேட்கலாம். எவருடைய கேள்விக்கும் அர்த்தம் கிடையாது என்பதை அந்தக்கதை உணரச்செய்தது. கதையிலே என்ன இருக்கிறதோ இல்லையோ மனித வாழ்க்கையின் அர்த்தமில்லாத கடும் துக்கம் பதிவாகி இருக்கிறது. வைத்தியனும் வேசியும் காணக்கூடிய மனிதர்களே வேறு என்று ஒரு பேச்சுவழக்கு உண்டு. வேசி மனிதனின் இச்சையை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறாள். வைத்தியன் வலியை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறான். இரண்டும் சேர்ந்தால் மொத்த மனிதவாழ்க்கையை சொல்லிவிடுவது மாதிரி. வேசியான வைத்தியரைப்பற்றி ஒரு கதை எழுதவேண்டும் என்று நானே நினைத்திருக்கிறேன். ஆனால் கதை எல்லாம் என்னால் எழுதமுடியாது என்பதை கொஞ்சம் கழித்துத்தான் உணர்ந்துகொண்டேன். இந்தக்கதை எனக்குள் இருக்கக்கூடிய கதைகளை நினைவுபடுத்தியது. வாழ்த்துக்கள்
சரன்
அன்புள்ள ஜெ
வாசுதேவன் கதை வாசித்தேன். வாசுதேவன் என்று பெயர். ஆனால் அனந்தபத்மனாபனைப்போல கிடக்கிற உருவம். கரைந்து அழிந்துபோகிற உடலின் கடைசி. பல இடங்களில் கதை மெய்சிலிர்க்க வைத்தது. அதாவது வாசுதேவன் ஏதோ சொல்ல வருவதுபோலவோ அல்லது கையைப்பிடிக்க முயல்வதுபோலவோ தோன்றக்கூடிய இடங்களை வாசித்தபோது. இந்தமாதிரி உடலின் புலன்கள் எல்லாம் சிதிலமான பிறகு உள்ளே இருக்ககூடிய உயிர் என்ன நினைக்கும்? எப்படி உணர்ச்சிகளை வெளிக்காட்டும்? நினைக்கவே பயமாக இருக்கிறது.
ஒரு வைத்தியர் மட்டுமே எழுதக்கூடிய கதை. ஆகவே மறக்கமுடியாத கதை. ஆனால் அந்த அனுபவத்திலே இருக்கக்கூடிய உக்கிரமான நிலையை கதையில் இன்னும் அதிகமாக விரித்து எடுத்திருக்கலாமென்று தோன்றியது. சுருக்கமாகவே முடித்துக்கொண்டதுபோல நினைத்தேன். அந்த அனுபவத்தை மட்டுமே சொல்லிவிட்டது மாதிரியும் இருந்தது. அதிலிருந்து நிறைய இடங்களுக்கு போயிருக்கலாம்.
ஓர் இளம் எழுத்தாளரின் கதை என்ற அளவிலே முக்கியமான கதை. அழுத்தமாக எழுதப்பட்டிருந்தது. வாழ்த்துக்கள்
சிவராமன்
அன்புள்ள ஜெ
சுனீல்கிருஷ்ணனின் கதையில் கடைசியில் வரக்கூடிய தெலுங்கு வரி புரியவில்லை. அதற்கு என்ன அர்த்தம்? அது கதைக்கு ஏதாவது மேலதிக அர்த்ததை அளிக்கிறதா ? அப்படி அளிக்கவில்லை என்றால் அதை அப்படி அழுத்தி முத்தாய்ப்பாக கொடுத்தது தவறு. அளிக்கிறது என்றால் தெலுங்கு தெரிந்தால்தான் ஒரு கதையை வாசிக்கமுடியும் என்ற நிலையில் எழுதியது அதைவிடப்பெரிய தவறு
சாமிநாதன்
அன்புள்ள ஜெமோ
சுனீல்கிருஷ்ணனின் வாசுதேவன் ஒரு நல்ல முயற்சி. நேரடியான அனுபவம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதை வாசகர்கள் அனுபவிக்கும்படி மொழியிலே பதிவும் செய்திருக்கிறார். ஆனால் கதையில் இன்னும் சில விஷயங்கள் நடக்கவேண்டியிருந்தது. அது நடக்கவில்லை. கதையிலே அந்த வாசுதேவன் என்ற தொன்மப்பகுதி இணைக்கப்பட்டதுபோல இருந்தது. இயல்பாக அது வரவில்லை. வாசுதேவனைப்பற்றிய வர்ணனைகளில் எங்கும் அது இடம்பெறவில்லை. அதேபோல வாசுதேவனின் வாழ்க்கைநிலையும் அவனுடைய துக்கமும் என்ன வகையில் இந்தக்கதையில் அர்த்தம் அளிக்கிறது என்று சொல்லப்படவில்லை. அதுவும் பெரிய பிரச்சினைதான்.
அதாவது வாசுதேவன் பிணமாக வாழ்கிறான், சாகிறான். அவனுடைய பெற்றோருக்கு அவனைப்பற்றிய துக்கமும் ஏக்கமும் இருக்கிறது. அதை மருத்துவர்கள் உணர்கிறார்கள். அவன் இறந்ததும் அவனிருந்த இடம் அப்படியே காலியாகிறது. ஆனால் இதை சொல்வது வழியாக ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார்? ஒரு அனுபவம் கதை அல்ல. அந்த அனுபவத்திலிருந்து ஆசிரியர் பெற்ற தரிசனம்தான் கதை. அந்தத்தரிசனத்தைப்பார்த்து செல்லக்கூடியமுறையில் கதை அமையும்போதுதான் கதைக்கு வடிவம் உருவாகிறது. யூனிட்டி என்று சொல்லப்படுவது அதுதான். அதாவது பர்ப்பஸும் யூனிட்டியும் ஒன்றுதான். அது இந்தக்கதையில் அமையவில்லை. ஆகவே ஒரு வலுவான அனுபவமாக மட்டும்தான் இந்தக்கதை நின்று விடுகிறது.
சுனீல் கிருஷ்ணன் வாழ்க்கையைப்பற்றி அவர் என்ன அறிந்தார் என்பதைச் சொல்ல கதைகளில் முயலவேண்டும். கதையை எழுதும்போதே அந்த விஸ்டம் கதைக்குள் திரண்டு வந்தால்தான் அது இலக்கியம். தொடர்ந்து எழுதுவார் என்றும் அந்த ரகசியம் பிடிகிடைக்கும் என்றும் நம்புகிறேன் வாழ்த்துக்கள்.
சண்முகம்
மதுரை
கதைகள்
12. பயணம் . சிவேந்திரன் [email protected]
11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]
10. வேஷம் பிரகாஷ் சங்கரன்
9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]
8. சோபானம் ராம்
7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்
6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]
5. பீத்தோவனின் ஆவி வேதா
4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]
3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]
2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]
1. உறவு தனசேகர் [email protected]