அன்புள்ள ஜெயமோகன்,
நேரமின்மை காரணத்தால் தங்கள் வலைத்தளத்தை சில வாரங்களாய் தொடர முடியாமல் இருந்தது. இன்று ஒவ்வொரு இடுகையாய் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். கன்னிநிலம் தொடர்கதையைக் கண்டதும் ஆர்வம் மேலிட படிக்க ஆரம்பித்தேன்.
பரபரப்பாய் ஆரம்பித்து பட்டாம்பூச்சியாய் சிறகடித்து படபடப்பாய் முடித்திருந்தீர்கள். படிக்கப்படிக்க கதையின் போக்கை கணக்கிட்டு எனக்குள்ளேயே நூறு கதைகள் உருவாகியிருக்கும். முழுமூச்சாய் படித்துமுடிக்கையில் என்னையுமறியாமல் அழுதிருந்தேன்.
ஒரு நல்ல படைப்பை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
இப்படிக்கு,
ஜெகதீசன்
அன்புள்ள ஜெகதீசன்
யதார்த்தங்களில் இருந்து கனவின் கன்னிநிலம் நோக்கி ஒரு தப்பி ஓட்டம்– அவ்வளவுதான் கன்னிநிலம். அதுவும் தேவையாகிரதே
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
ஒரு அழகிய கனவை கண்டு எழுதியிருக்கிறீர்கள். கனவை எப்படி விமர்சிப்பது. இன்னும் உங்களுக்குள் ஒரு காதலனை ஒளித்துவைத்திருக்கிறீகள். அந்த பதின்பருவ காதலன் எழுதிய கதையாகவே எனக்கு தெரிகிறது.
அன்புடன்
த.துரைவேல்
அன்புள்ள துரைவேல்
பின்னகரும் தோறும் மதிப்பு மிக்கதாக ஆகும் ஒரு விஷயம் இளமாஇ
ஜெ
அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு!
ஆன்மீக உணர்வு அல்லது எழுச்சி என்பது சுய அகந்தையை விட்டொழித்தல், தன்னையே அந்த உணர்வுக்கு காரணமான ஊக்கியிடம் முழுவதுமாக ஒப்படைத்தல் என உணர்கிறேன். காதல் எல்லா வகையிலும் உயர்ந்ததாக எனக்குப்படுகிறது. ஏனென்றால் மானுட வாழ்வின் ஒப்பற்ற சாராம்சம் காதல் என நான் நினைக்கிறேன். ஆன்மிக உணர்வுள்ள காதலில் அறிவு உணர்ச்சி இருப்பதில்லை. அது பித்த நிலை என்று தாங்களும் கூறியுள்ளீர்கள். அது என்றும் நம்மிடம் இருக்கும் என்று அறிந்தேன். அது சிலரை ஞானிகளாகவும் kudikaararkalakavum, கவிஞர்களாகவும் ஆக்குகின்றது. காதல் எந்த தருணத்தில் வருகிறது என்று யாராலும் சொல்ல முடிவதில்லை. ஆனால் காதலினால் ஆன்மிக உணர்வுக்கு உள்ளாகும் nilaiyin கால அளவு வேறுபடும் அல்லவா. நெல்லையப்பன் அத்தருணத்தை மதுக மலரை முகர்ந்தததுமா? அத்தகைய காதலுக்கு நெல்லையப்பனும் நீங்களும் காத்து இருந்தீர்களா? Neengalum உங்கள் மனைவியும் முதன் முதலில் பார்த்ததை நான் பொன்னியின் செல்வனில் வந்திய தேவனும் குந்தவையும் முதன் முதலில் சோதிடரின் வீட்டில் கண்கள் சந்தித்ததை போலிருக்கலாம் என கற்பனை கொள்கிறேன். காதல் ஏன் எப்பொழுதும் ஒரு aarpparikkum கடலை போலவும், ஓயாது அலைவுறும் காற்றை போலவும் இருக்கிறது? அதனால்தான் காதலில் அமைதி அடையும் போது பித்த நிலை அல்லது ஆன்மிக உணர்வு ஏற்படுகிறதா?
காதலில் ஆன்மிக உணர்வடைந்தர்களுக்கு குரு என்பவர் தேவை இல்லைதானே? ஆனால் நீங்கள் குருவுக்கு இரண்டாவது இடத்தை கொடுத்து உள்ளது எதனால்? எனக்கு காதல் மட்டும் போதும் என்று தோன்றுகிறது.
நன்றிகள்!
—
Best wishes!
Dhandapani
அன்புள்ள தண்டபாணி
நன்றி
எங்கே தன்னை இழந்து ஒரு நிலை கூடுகிறதோ அங்கே ஆன்மீகத்துக்கான ஒரு வாசல் இருக்கிரது– அதில் காதலும் ஒன்று. ஆகவேதான் பிரேமை என்பது நூற்றாண்டுகளாக நம் மரபில் ஒருவகை ஆன்மீகமாகவே கருதபப்டுகிறது. ஆண்டாள் முதல் ஜெயதேவர் வரை
ஜெ
அன்புள்ள ஜெ ,
என்ன எதுவும் பாரதி ராஜா படத்திற்கு கதை எழுத போகிறீர்களா ? கன்னி நிலம் படித்ததும் ஒரு பாரதி ராஜா படம் பார்த்த உணர்வே வந்தது .
குமரன்
அடாடா,, அவர்கள் ஓடும்போது வெள்ளுடை தேவதையர் ஓடும் காட்சியை நான் மட்டும்தான் பார்த்தேன் என்றல்லவா நினைத்துக்கொன்டிருந்தேன்
ஜெ