பிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

நேற்று தங்கள் தளத்தில் வெளியான பிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ ஒரு நல்ல சிறுகதை. இச்சிறுகதையின் மையமான புதிர் மிக ஆழமானது அதை ஆசிரியர் நுட்பமாக முன்வைத்திருக்கிறார். உலகை நாம் தர்க்கரீதியாகவும், அனுபவரீதியாகவும் விட அதிகமாக படிமங்களாகத்தான் உள்வாங்கி கொள்கிறோம். நமது செய்கைகளிலும் நாம் எடுக்கும் முடிவுகளிலும் கூட தர்க்கத்தையும் அனுபவத்தையும் விட படிமங்களே அதிகம் பங்கு வகிக்கின்றன. சமீபத்தில் கணவன் உறங்கும்போது தலையில் அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு கொன்ற மனைவியை பற்றி படித்தது ஞாபகத்திற்கு வருகிறது. ஏன் அம்மிக்கல்லை பயன்படுத்தவேண்டும் என்று சிந்தித்த போது ஒரு வகை மிரட்சி ஏற்பட்டது. கொலையில் அந்த பெண்ணுக்கும், அவளது உணச்சிகளுக்கும் என்ன பங்கு இருக்கிறதோ அதேயளவு அல்லது அதற்கும் மேல் அந்த படிமத்திற்கு பங்கிருப்பதாக தோன்றியது. ‘சமையல் செய்கிறவளின் கொல்லும் முகம்’ என்பதுதானே அந்த படிமம்.

கலை என்பது இயற்கை தரும் படிமங்களை வைத்து நிகழ்த்தப்படும் ஒரு விளையாட்டே(களி). கலைகளால் படிமங்களை இணைத்தும், மெறுகேற்றியும் நாம் மனிதகுலத்தை உருவாக்கி முன்னெடுத்து வந்திருக்கிறோம், சென்றுகொண்டிருக்கிறோம். ஆசான் புலிக்களியில் புலி என்னும் படிமத்தை வைத்து தன் கலையை நிகழ்த்துகிறார். தன் கலையால் அவர் புலி எனும் படிமத்தைதான் மெருகேற்றி உச்சம் தொட முயல்கிறார் புலி என்னும் மிருகத்தையல்ல. ஆசானா புலியா என்று தெரியாமல் புலியின் படிமம் மட்டுமே வெளிப்படும் அந்த மழைக்கால இரவுகள் தான் அந்த கிராமத்திற்கு கலையின் உச்சம். புலியை பார்ப்பதே கூட அப்படிமத்திற்கு வீழ்ச்சிதான். கதையின் முடிவில் புலி எனும் மிருகம் தன் மீது ஏற்றி வைத்துள்ள படிமத்தை காப்பாற்றிக்கொள்ள முடியாமல் பரிதாபமாக இறக்கிறது. புலியே வெற்றிகரமற்ற ஒரு புலிக்களியைத்தான் நிகழ்த்தி வந்துள்ளது. புலியே நெருங்க முடியாத அப்படிமத்தை கலைஞன் தொடமுடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இல்லை. கலை இரக்கமில்லாமல் ஒரு கோமாளி வித்தையாக பார்க்கப்படுகிறது.

கதையில் நுனுக்கமான சித்தரிப்புகள் உள்ளன. ‘பிளந்த வாயும், அதன் கண்களின் உக்கிரமும் புலி இன்னும் உயிரோடு தான் இருக்கிறது, சட்டென்று கத்திகளைக் உதறிக் கொண்டு எழுந்து விடும் என்று தோன்றவைத்தது. மக்கள் அச்சத்துடன் ஜாக்கிரதையாக தள்ளியே நின்றிருந்தனர்’ என்ற வரிகளில் புலி இறந்தபிறகும் அதன் உடலில் சிறிது நேரம் தங்கி இருக்கும் படிமத்தை சொல்லியிருப்பது தேர்ந்த எழுத்தை அடையாளம் காட்டுகிறது.

நாம் கலை என்கிற பெயரில் உண்மையில் எதனுடன் உரையாடுகிறோம்? கலையை ரசிக்கும் நாம் அதன் skill மேலுள்ள admirationஐ தாண்டி உண்மையில் எதை ரசிக்கிறோம்? அந்த skill மேலுள்ள நம்பிக்கையை இழக்கும்போது எப்படி அந்த கலை பார்க்கப்படும்? போன்ற ஆழமான தளங்களுக்கு வாசகனை அழைத்து செல்கிறது இக்கதை. கதையின் முடிவு வேறொரு possibilityஐயும் விட்டு செல்கிறது. ஆசான் புலி படிமத்தை தொட முடியாதவராக போகலாம் அனால் கதையின் முடிவில் தன்னையே ஒரு படிமமாக விட்டுச்செல்கிறார். கலைப்பித்துக்கும், obsessionக்குமான புதிய படிமம்.அடுத்த வருட சாஸ்தா காவு திருவிழாவுக்கு ஆசான் களி என ஒன்றிருந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பிரகாஷ் சங்கரனுக்கு என் பாராட்டுக்கள்.

அன்புடன்
R.முகேஷ்
திண்டுக்கல்

கதைகள்

12. பயணம் . சிவேந்திரன் [email protected]

11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]

10. வேஷம் பிரகாஷ் சங்கரன்

9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]

8. சோபானம் ராம்

7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்

6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]

5. பீத்தோவனின் ஆவி வேதா

4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]

3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]

2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]

1. உறவு தனசேகர் [email protected]

முந்தைய கட்டுரைசிவேந்திரனின் ’பயணம்’ -கடிதங்கள்
அடுத்த கட்டுரைசுனில் கிருஷ்ணனின் ‘வாசுதேவன்’ -கடிதங்கள்