சிறுகதைகள் இரு விமர்சனக்குறிப்புகள்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

சற்று நீளமான கடிதத்திற்கு மன்னிக்கவும். நேற்று உங்கள் தளத்தில் வெளியான “கன்னிப்படையல்” கதை படித்துவிட்டு எழுதுகிறேன். ராஜகோபாலன் அவர்களின் நடையும் சித்தரிப்பும் ஒரு தேர்ந்த எழுத்தாளரின் தரத்தை ஒத்திருந்தாலும் அவரது கதைகள் மிகவும் எளிமையான, மீண்டும் மீண்டும் பேசப்பட்ட வாழ்கை தரிசனத்தோடு முடிவடைந்து விடுகிறது.

என்னைப் பொறுத்தவரை நல்ல சிறுகதைகள் –

1. மனித வாழ்கையின் புரிந்துகொள்ள முடியாத புதிர்களை அடையாளம் கண்டு அதை கதையின் சட்டகத்துக்குள் நுட்பமாக அளிப்பவை. இவ்வகை கதைகளுக்கு அவற்றின் open-endednessதான் பெரும் பலம். உதாரணமாக தங்களின் ‘பிழை’ கதை மனிதன் ஏன் மெல்ல மெல்ல மகத்தான கலைகளில் உள்ள சிறு குறைகளை நோக்கி ஈர்க்கப்படுகிறான் அந்தக் குறையே எப்படி மகத்தானதாக ஆகிறது எனும் பெரும் புதிரை முன்வைக்கிறது. இவ்வரிசையில் வந்த கதைகளில் தனசேகரின் ‘உறவு’ கதை அத்தகைய ஒரு புதிரை முன்வைக்கிறது.

2. ஒரு வலிமையான வாழ்கை தரிசனத்தையோ அல்லது தத்துவ தரிசனத்தையோ அடையாளம் காட்டக்கூடிய படைப்புகள். உங்களது அறம் வரிசைக் கதைகளை நான் இவ்வாறு வகைப்படுத்துவேன். முதல் வகை கதைகள் எந்த அளவுக்கு கூர்மையாகவும், open-endedஆகவும் இருப்பது அவசியமோ அதேயளவுக்கு இவ்வகை கதைகள் பரந்தும்(Broad), உறுதியாகவும்(closed) இருத்தல் அவசியம் காரணம் மானுடத்திற்கு எந்த தத்துவ தரிசனமும் புதிதல்ல. இவ்வகை கதைகள் செய்வது ஒரு வகை improvisation மட்டுமே, ஆக அவை எந்த அளவுக்கு பன்முகப்படுகின்றனவோ அந்த அளவுக்கு மேலே செல்கின்றன. எந்த அளவுக்கு closedஆக இருக்கின்றனவோ அந்த அளவுக்கு வலிமை பெறுகின்றன. வெறும் ஒரு அடையாளம்காணல் இக்கதைகளுக்கு போதாமல் ஆகிறது.

இவ்வகை கதைகளின் தத்துவ improvisations நம்மை புதிய புதிர்களுக்கு இட்டுச்செல்லும். உதாரணமாக தங்களது யானை டாக்டர் கதையை எடுத்துகொள்ளலாம். இக்கதை சொல்லும் தத்துவம் அத்வைதம்தான். மனிதன் பிரபஞ்சம், இயற்கை முன் தன் அகந்தையை இழப்பது பற்றிதான் இக்கதை பேசுகிறது. ஆனால் இக்கதையில் வரும் final statement என்பது, அவ்வாறு அகந்தையை இழந்து இயற்கையுடன் கலந்துவிட்ட ஒருவருக்கு மனிதர்களிடமிருந்து மட்டுமல்ல அந்த இயற்கையிடமிருந்து வரும் recognition கூட கண்ணுக்குபடுவதில்லை என்கிற grand improvisation இல் முடிவடைகிறது. கதை முழுவதும் improvise செய்யப்பட்ட இத்தகைய கேள்விகளும் புதிர்களும் விரவிக் கிடக்கின்றன. ஏன் சில மனிதர்கள் காட்டை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள்? ஏன் பிறர் violentஆக எதிர்வினை புரிகிறார்கள்? எப்படி ஆரம்ப ஈர்ப்பின் பிறகு காடு repel செய்கிறது? யானைகள் இறந்தழுகும் காட்டின் sheer intensity எப்படி ஒருவனை புரட்டிப்போடுகிறது? புழுவைக் குழந்தையாகக் கொள்ளும் ஒரு ideal romanticism எந்த எல்லை? என வாசக மனத்தை தூண்டுவதே இக்கதையை சிறந்த கதையாக மாற்றுகிறது. ஆக எனது அபிப்பிராயத்தில் வாசகன் தன் சிந்தனையால் மட்டுமே நிரப்பி கொள்ளக்கூடிய ஒரு இடைவெளியை விட்டுவைக்காத கதை ஒரு சராசரியான கதையே.

ராஜகோபாலானின் கதைகளில் குறையாக நான் காண்பது அவை மிகவும் பழக்கப்பட்ட தத்துவ தரிசனங்களை கூர்மையாக அல்லது ஒருமுகமாக சொல்லி முடிக்கிறது. அவரது முதல் கதை மனிதன் எப்படி தனது வாழ்நாள் முழுவதும் மரணத்திடமிருந்து தப்பிக்க விழைகிறான்? எப்படி மரணம் வந்து அவனது மொத்த வாழ்க்கை தேடலையும் அபத்தமாக்கி சென்றுவிடுகிறது? என்பதை குறித்து பேசுகிறது என்றால் இரண்டாம் கதை நியாயத்தின் பக்கத்தில் வந்துவிடுவதாக ‘கூறப்படும்’ இடையறாத போரட்டத்தை சொல்கிறது எனலாம். மரணத்தை பற்றியும் நீதியை பற்றியும் கூறப்பட்டவற்றில் மிகவும் cliched தத்துவ தரிசனங்கள் இவை. இத்தரிசனங்களை முன்வைக்கும் ராஜகோபாலன் அதை பல தளங்களுக்கு இட்டுச்செல்லாமல் ஒரு format conscious ஆன final statementஆக முடிக்கிறார். முதல் கதை ஒரு சின்ன நகைப்புடனும் இரண்டாம் கதை ஒரு ஓஹோவுடனும் கடந்து சென்றுவிடுகிறது. இக்கதைககள் தங்கள் வலிமையற்ற climax மீது அபரிமிதமான நம்பிக்கயுடனும் சொல்லும் தரிசனம் மிகவும் புதியது என்னும் பாவனையுடனும் அதை நோக்கியே அமைந்துள்ளன.

வேதாவின் கதை முதல்வகை கதையாக இருப்பினும் அது அடையாளப்படுத்தும் மையம் அதிகம் விவாதிக்கப்பட்ட கிழக்குக்கும் மேற்குக்குமான contrast என கொள்ளலாம். இந்த மைய புதிரை இக்கதை கூர்மையாகவோ அல்லது open-endedஆகவோ சொல்லாமல் ஒரு closedஆன poetic exchangeஆக கூறி முடிக்கிறது. இது ஒரு வினோதமான combination. ஒரு பெரிய புதிர் broadஆக படைக்கப்படும்போது அது இலக்கிய தன்மையை விடுத்து ஒரு விவாத தன்மையை பெற்றுவிடுகிறது. விளைவாக வாசகர்கள் அப்புதிரை குறித்த தங்கள் சுயக்கருத்துக்களுக்கு அக்கதையில் scope இருக்கிறதா என்று தேடி வெற்றிபெற்று அக்கதையை அங்கீரிப்பார்கள். உதாரணத்திற்கு ‘பீத்தோவனின் ஆவி’ கதையை ஒரு முதியவருக்கும் இளையவருக்கும் ஆன கதையாகவோ, ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் ஆன கதையாகவோ, கிழக்குக்கும் மேற்குக்குமான கதையாகவோ, இருவகை இசையை குறித்த கதையாகவோ, organization க்கும் individual questக்குமான கதையாகவோ, அல்லது வெறும் ஒரு விமான நிலைய காத்திருப்பரை நட்பை குறித்த கதையாகவோ பொருள் கொண்டு வாசகர்கள் தங்கள் சுயசிந்தனைகளை ஏற்றி கொள்ளலாம். ஆனால் இது நல்ல இலக்கியத்துக்கு எதிரான போக்கு.

முடிவாக ஒரு நல்ல கதையில் ஒரு கணிக்கப்பட்ட break out இருக்கவேண்டும் என்பேன். எழுத்தாளர் எழுதுகோலை கையில் எடுக்கும் போது மட்டுமே நிகழக்கூடிய ஒரு மேஜிக். உதாரணத்திற்க்கு உறவு கதையில் வரும் மேகமலை ஆட்கள் சந்தைக்கு போகும் விவரணைகள், முருகண்ணன் யானையை எதிர்கொள்ளும் விவரணை. இவையெல்லாம் தான் கடைசியில் ஒன்று திரண்டு கதையை வலிமையாக்குகிறது. உங்களது கதைகளில் இத்தகைய ஒரு break out இல்லாத கதை நான் இதுவரை படித்ததில்லை. ஆனால் ராஜகோபாலனின் கதைகளிலோ, வேதாவின் கதையிலோ இது நிகழவேயில்லை.

ஒரு சின்ன கருத்தை சொல்லவந்து ஒரு கோட்பாட்டையே சொல்லிவிட்டேன் போலிருக்கிறது. இவை என்னுடைய தாழ்மையான கருத்துக்கள் மட்டுமே.

அன்புடன்
R.முகேஷ்
திண்டுக்கல்

*

தனா மற்றும் ஜெ ,

மனித உறவுகள் இன்றும் மர்மங்கள் நிறைந்ததாகவே நீடிக்கின்றன. ஆண்டுக்கணக்கில் தொடர்ந்தாலும் மெல்லியது , சிறிது காலமே ஆனாலும் வலியது , தானாக உதிர்ந்து விழுவது , காலவதியாவது , முறிந்து முறிந்து நிரந்தர ஓட்டு முயற்சியில் இருப்பது என்பது போல உறவுகளின் நிறமும் வடிவமும் பல.

இன்றும் உறவுகளில் அடையாளப்படுத்தப்பட்டவை மிகச் சிறிதே. ரத்த உறவுகள் ,காதல், நட்பு என சில . நான் உணர்ந்த வரை அடையாளப்படுத்தப் படா உறவுகள் தான் மண்ணில் பல. தினமும் எதிர் சாரியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பார்க்கும் நபர் பேசாமலேயே நமக்குப் பல ஆண்டுகள் பழக்கமானவர் முதல் , பெரிதும் எல்லா ஆண் பெண் உறவுகளில் எப்போதும் ஊடாடும் மெல்லிய காதல் வரை இவைகள் அளக்கப் படவே இல்லை . ஒரு graph வைத்து கணக்கிட்டால் எந்த இரு நபர்களின் உறவிலும் ஏற்ற இறக்கம் இருக்கும் , சீரான நெருக்கம் அப்போதும் காணக் கிடைக்காது. சில காலம் நெருக்கம் பிறகு எதேச்சையான விலகல் இப்படி .

“உறவு” இந்த மர்மத்தை மிக லாகவமாகக் கையாண்டிருக்கிறது . நமது குழுமத்தில் இதைப் படிக்கவில்லை. சுய தேர்வின் அடிப்படையில் உள்ள உறவு மெல்லிய காரணத்தால் அல்லது காரணமின்றி பிரியக் கூடும் , சந்தர்ப்பத்தின் மூலமோ அல்லது சூழலின் கட்டாயத்திலோ ஒரு உறவு வலுவாக நீடிக்கவும் கூடும் , சூழலின் வலுவில், பழக்கத்தில், சந்தர்பத்தில் ஒட்டாத உறவும் பலப் படக்கூடும். இக்கதை ஒரு கட்டாயத்தில் நேரடிக் காரணம் இன்றி ஒரு உறவு தொடர்வதின் வாயிலில் சென்று முடிகிறது . அங்கும் இந்த மர்ம முடிச்சு அவிழாமல் அப்படியே நிற்கிறது , ஒரு கால் அது ஆயுசுக்கும் அப்படியே நீடிக்கக் கூடும், பழக்கத்தால் நெருக்கமாகவும் கூடும் .

எவ்வளவு தான் அவிழ்த்துப் பார்த்தாலும் நடுவில் ஒரு முடிச்சு மீதம் உள்ளது , அதன் இறுக்கமே உறவு. வேண்டிய அளவு மட்டும் சொல்லுதலில் இக்கதை வெற்றிபெற்றிருக்கிறது, அதன் கூறலிலும் தரிசனத்திலும் .

கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைபிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுதியவர்களின் கதைகள் 12, பயணம் -சிவேந்திரன்