மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை

நான் நித்ய சைதன்ய யதியின் நூல்களில் பாதியையே வாசித்திருக்கிறேன்.கணிசமான பகுதி நான் அறியாத துறைகளைச் சார்ந்தவை. அவரது குருகுலத்திற்கு வருபவர்களில் மனநிபுணர்களும் மனநோயாளிகளுமே அதிகம் என்று சொல்வதுண்டு. இல்லை, மனநோய்க்கு வாய்ப்புள்ளவர்களே அதிகம் என்று நான் வேடிக்கையாகச் சொல்வேன். ஏராளமான அளவில் ஆயுர்வேத மருத்துவர்களும் மாற்று மருத்துவ நிபுணர்களும் வருவதுண்டு.

நித்யாவின் முதன்மை மாணவர்களில் ஒருவரும் இப்போது ஊட்டி நித்யாகுருகுலத்தின் பொறுப்பில் இருப்பவருமான ஸ்வாமி தன்மயா பூர்வாசிரமத்தில் ஓர் அலோபதி மருத்துவர் [டாக்டர் தம்பான்]. சென்ற இருபது வருடங்களாக அவரது ஆர்வம் இயற்கையோடு இயைந்த மருத்துவம் சார்ந்ததாக உள்ளது. அம்மருத்துவ நிபுணர்களை ஒருங்கிணைப்பதும், கருத்தரங்குகளை நடத்துவதும், கல்லூரியில் பயிற்சி வகுப்புகளை நடத்துவதும் ஸ்வாமி தன்மயாவின் முதன்மையான பணிகளாக உள்ளன.

சுவாமி தன்மயா

ஒருமுறை ஊட்டி நாராயண குருகுலத்து சமையலறையில் ஸ்வாமி தன்மயாவுக்கு சமையலில் உதவும்போது அவர் காய்கறிகளை நறுக்குவது பற்றிய சிலை முறைகளைச் சொன்ன்னார். அவை எனக்கு வியப்பளிப்பவையாக இருந்தன. காய்கறிகளில் உள்ள உயிர்ச்சத்துக்கள் வீணாகாமல் சமைப்பதற்கு உரிய வழி அது என்றார் ஸ்வாமி தன்மயா. அம்முறை மாக்ரோபயாட்டிக்ஸ் என்ற இயற்கைவாழ்வு- இயற்கை மருத்துவ முறையைச் சார்ந்தது என்றார். நித்ய சைதன்ய யதி அவரது ‘அபூர்வ வைத்தியர்கள்’ என்ற நூலில் அம்மருத்துவம் பற்றி சொல்லியிருக்கிறார் என்றார். அவ்வாறாக எனக்கு ‘முழுமைவாழ்க்கை’ என்று பொருள்வரும் அம்முறை அறிமுகமாயிற்று.

மாக்ரோ பயாட்டிகஸ் ஜப்பானில் பிறந்தது. 1913ல் ஜப்பானில் உள்ள கியோட்டோ என்ற நகரில் ஒரு பழைய புத்தகக் கடையில் ‘உணவுக் கட்டுப்பாடு மூலம் சிகிழ்ச்சை’ என்ற சிறுநூலை அன்று கடுமையான காசநோயால் மரணத்தருவாயில் இருந்த பதினெட்டுவயதான யூகிகாஸு சகுரோஸாவா [Yukikazu Sakurozawa] என்ற இளைஞன் கண்டெடுப்பதில் இருந்து அதன் வரலாறு தொடங்குகிறது என்பது வழக்கம். அதை எழுதியவர் ஸேகன் இஷிசுக்கா MD [Sagen IshiSuka MD] என்ற மருத்துவ நிபுணர். உடலின் நோய்கள் உணவுக்கட்டுப்பாடு மூலம் தீர்க்கப்படத்தக்கவை என்ற அவரது கருத்து சகுரோஸோவாவை ஆட்கொண்டது. அவர் அதை தீவிரமாக கடைப்பிடிக்க ஆரம்பித்து காசநோயில் இருந்து விடுபட்டார்.

Georges_Ohsawa_(02) [ஜார்ஜ் ஒஹ்ஸாவா]

அதன்பின்னர் தன்னுடைய அனுபவங்கள் மற்றும் மேலதிக ஆராய்ச்சி மூலம் அவர் உருவாக்கிய மருத்துவ-வாழ்க்கைக் கோட்பாடே முழுமைவாழ்க்கை.ஜார்ஜ் ஒஹ்ஸாவா [George Ohsawa] என்ற பேரில் அவர் ஏராளமான நூல்களை எழுதி அக்கோட்பாட்டை விரிவாக நிறுவினார். 1950களில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ‘ஜென் மாக்ரோபயாட்டிக்ஸ்’ என்ற பேரில் அதை பரப்பினார். முழுமைவாழ்க்கை பிரிக்கமுடியாதபடி ஜென் தத்துவங்களுடன் உறவுள்ளது என்பதுடன் அக்காலத்தில் ஜென் மேலைநாடுகளில் விரிவாக அறிமுகமாகியிருந்ததும் இதற்குக் காரணம்.

ஜார்ஜ் ஒஹ்ஸாவா இந்திய வாழ்க்கைமுறை மருத்துவம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். குறிப்பாக காந்திய சிந்தனைகளில். 1953ல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார். இந்தியச்சூழலில் முழுமைவாழ்க்கையை அதிகமாக பரப்பவேண்டிய தேவையில்லை என்ற எண்ணம் அவருக்கு அப்போது ஏற்பட்டிருந்தது. காந்தியைப்பற்றி ஒரு நூலையும் ஜார்ஜ் ஒஹ்ஸாவா எழுதியிருக்கிறார்.

மிஷியோ குஷி

ஜார்ஜ் ஒஹ்ஸாவாவின் இரு மேலைநாட்டு மாணவர்களான ‘மிச்சியோ குஷி’யும் ‘ஹெர்மான் ஐஹாரா’வும் முழுமைவாழ்க்கைக் கோட்பாடுகளை ஐரோப்பாவெங்கும் பரப்ப பாடுபட்டார்கள். முழுமை வாழ்க்கைக்கான ஆராய்ச்சிகளையும் பயிற்சிகளையும் நிகழ்த்தும் குஷி இன்ஸ்டிடியூட் போன்ற நிறுவனங்கள் அமெரிக்கா, கனடா, ருஷ்யா முதலிய நாடுகளில் நிறுவப்பட்டன. இன்று இவை பல கிளைகளுடனும் பல்வேறு உபதுறைகளுடனும் பெருகி மேலைஅவழ்க்கையின் ஒரு முக்கியமான பகுதியாக உள்ளன. இணையத்தில் ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன.

முழுமைவாழ்க்கைக் கோட்பாட்டுக்கு இந்திய அளவில் ஒரு கவனத்தை உருவாக்கியவர் என்று கேரள சிரியன் கத்தோலிக்க பிஷப்பாக இருந்த மறைந்த டாக்டர். பௌலோஸ் – மார்- கிரிகரியோஸ் குறிப்பிடப்படுகிறார். தன்னுடைய உடலநலச்சிக்கல்கள் வழியாகவே அவர் அதை வந்தடைந்தார். 1955ல்தனது தலைமையில் மாக்ரோபயாட்டிக்ஸ் சொசைட்டி ஆ·ப் இண்டியா என்ற அமைப்பை கோட்டயத்தில் உருவாக்கினார். அதன் முதல் இயக்குநராக டாக்டர் ஜார்ஜ் டேவிட் நியமிக்கப்பட்டார். டாக்டர்.பௌலோஸ் -மார்- கிரிகரியோஸ் நடராஜ குருவிடம் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். நித்ய சைதன்ய யதியிடமும் அவரது தொடர்பு நீடித்தது.

டாக்டர் ஜார்ஜ் டேவிட்டை முழுமைவாழ்க்கை முறையின் முதன்மையான பிரச்சாரகர் எனலாம். கனடாவின் நோவா இன்ஸ்டிடியூட் ஆ·ப் ஹீலிங் ஆர்ட்ஸ் நிறுவனத்திலிருந்து மாக்ரோபயாட்டிக்ஸில் பட்டம்பெற்றவர் ஜார்ஜ் டேவிட். நித்யா குருகுலத்துடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார். நானே அவரை இருமுறை கண்டிருக்கிறேன். அவர் யாரென தெரியாததனால் அறிமுகம்செய்துகொள்ளவில்லை.

ஜென் தத்துவத்தை ஒரேவரியில் சொல்வதென்றால் ‘இயல்பான நிலையே உன்னத நிலை’ என்று கூறலாம். முழுமைவாழ்க்கைக் கோட்பாடு சொல்வதும் இதுவே. குஷி சொல்கிறார், ”அது நோய்க்கூறுகளை கணக்கில் கொள்ளும்,ஆனால் செயற்கையான, தொழில்நுட்பம் சார்ந்த, சிகிழ்ச்சைமுறைகளைவிட எளிய, இயல்பான சிகிழ்ச்சைமுறைகளைக் கையாளும். சிகிழ்ச்சை என்பது செலவு குறைந்ததும், பெரும்பாலும் வீட்டிலேயே வாழ்க்கைமுறையின் ஒருபகுதியாக செய்துகொள்ளக் கூடியதுமாக இருக்க வேண்டும். நோய் அடையாளங்களை சிகிழ்ச்சைசெய்து அகற்றுதல் என்ற வழக்கமான நிலையைக் கைவிட்டு உணவு, வாழ்க்கைமுறை அனைத்திலும் ஒட்டுமொத்தமான மாற்றம் மூலம் நோயின் மூலகாரணத்தை இல்லாமல்செய்ய அது முயலும். இந்த பிரபஞ்ச இயற்கையுடன் முழுமையான ஒத்திசைவே இயல்பான நோயற்ற நிலை என்று அனைவருக்கும் கற்றுக்கொடுப்பது அது”

பௌலோஸ் மார் கிரிகோரியஸ்

இயற்கையுடன் கூடுமானவரை இயைந்து வாழ்தல் என்பதே முழுமைவாழ்க்கையின் அறைகூவல். இயற்கையின் அமைப்பு மற்றும் விதிகளை அறிதல், அதற்கு முரண்படாத வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல், அதனுடன் முரண்படுதல் மூலம் நாம் நோயுறும்போது அம்முரண்பாடுகளைக் களைதல் ஆகியவையே அதன் வழிமுறைகள். இயற்கையைக் கூர்ந்து அறிக என்பதே அது விடுக்கும் அறைகூவலாகும்.வாழ்க்கையிலும் மருத்துவத்திலும் அற்புதங்கள் ஏதும் சாத்தியமல்ல. நதியை மலைக்குத் திருப்பிக் கொண்டுசெல்லமுடியாது கணியன் பூங்குன்றன் சொல்வதுபோல ‘ நீர்வழிபடூம் புணைபோல’ செல்வதே வாழ்க்கை.

இயற்கை நேர்க்கூறு எதிர்கூறு ஆகிய இரண்டின் முரண்பாடுமூலம் செயல்படுகிறது. இதை யின்-யாங் என்று ஜென் சொல்கிறது. மனித உடல், மனித மனம் எல்லாமே இந்த முரணியக்கம் கொண்டவையே. இவற்றுக்கு இடையேயான சரியான சமநிலையையே இயல்பான நிலை என்று ஜென் சொல்கிறது. நோயற்ற நிலையும் அதுவே என்பது முழுமைவாழ்க்கை கோட்பாட்டின் கொள்கை.’ ஆரோக்கியம் என்பது நோயற்ற நிலை அல்ல’ என்று மிஷியோ குஷி சொல்கிறார்’ அது அதற்கும் மேர்பட்ட ஒரு தன்னிறைவு நிலை’ அது ஒரு சமநிலை. நோய் என்பது ஒரு சமநிலைக் குலைவு. நவீன மருத்துவம் மருந்துகள் மூலம் மேலும் சமநிலைக் குலைவையே உருவாக்குகிறது. நவீன மருத்துவம் மூலம் ஒருவரின் ஒரு குறிப்பிட்ட நோய் அடையாளங்கள் இல்லாமல் ஆகலாம். ஆனால் அவர் மேலும் பலவீனமானவராகவே ஆகிறார். அந்த சிகிழ்ச்சையே பெரும் நோயாக மாறி அவரை வதைக்கிறது. முழுமையான விடுதலையை இந்த முறைகளால் அளிக்கமுடிவதில்லை

வாழ்க்கையை முழுமையான ஒன்றாக ஆக்க முனையும் மாக்ரோபயாட்டிக்ஸ் உணவிலேயே அதிக கவனத்தைக் குவிக்கிறது. அதன் உணவுக் கொள்கையை உள்ளே செல்வதற்கும் வெளியே வருவதற்கும் இடையேயான சமநிலை என்று சுருக்கமாகச் சொல்லலாம். இதையே அது சிந்தனைகளைப் பற்றியும் சொல்கிறது. உணவாக ஆகும் ஒவ்வொரு பொருளிலும் யின் -யாங் சமநிலை உள்ளது. அது கெடாமலேயே அவற்றைச் சமைக்க வேண்டும். அதற்கான விரிவான வழிமுறைகளை அது சொகிறது. காய்கறிகளை வெட்டுவது முதல் சமைப்பது, மற்றும் பரிமாறுவது வரை.

அந்த நாள் இரவு வரை நான் ஸ்வாமி தன்மயாவிடமிருந்து மாக்ரோபயாட்டிக்ஸ் பற்றி கேட்டு தெரிந்துகொண்டேன். ஏராளமான நூல்கள், இணையதளங்கள் இன்று நமக்குக் கிடைக்கின்றன. [தமிழில் நூல் ஏதும் பார்த்ததாக நினைவு இல்லை] அதைப்பற்றி விரிவாக தெரிந்துகொள்ளும்தோறும் அது வாழ்க்கையின் எல்லா தளங்களையும் ஒன்றாக சேர்த்து சிந்திப்பதை புரிந்துகொள்ள முடியும். அது நம்மை இயல்பாகவே மாசானபு ·புகுவேகாவின் இயற்கை வேளாண்மை நோக்கி கொண்டு செல்லும். ஜென் கவிதைகளை நோக்கிக் கொண்டுசெல்லும். தியான முறை நோக்கிக் கொண்டு செல்லும்

மாக்ரோபயாட்டிக்ஸின் உணவுக்கோட்பாடுகளில் இருந்து நான் கற்றுக்கோண்டதை பொதுவாக இப்படிச் சொல்லலாம்.

1. ஒரு நிலப்பகுதியில் வாழ்பவர்கள் அந்நிலப்பகுதியில் அந்த பருவத்தில் உருவாகும் தாவரங்களையே இயல்பான உணவாக கொள்ள முடியும்.

2. சமைக்கப்படாத தாவரங்களே சிறந்த உணவு. சமைப்பதென்றால் குறைவாக, எளிமையாக வீரியம் கெடாமல் சமைத்தல் வேண்டும். அதற்கான விதிகள் சில–

அ. பரிணாமத்தில் பழமையானவை அதிகநேரம் சமைக்கப்பட வேண்டும். உதாரணம் கடற்தாவரங்கள். புதியவை சற்றுநேரம் சமைக்கபப்ட்டால்போதும்.

ஆ. சமைப்பதற்கு சற்றுமுன்னர் செடியிலிருந்து பறிக்கபப்ட்டவையே சிறந்தவை. சமைக்கும் முன்னர் எல்லா தாவரப்பொருட்களும் தனித்தனியாகவே வைக்கப்பட வேண்டும். கலக்கக் கூடாது

இ. யின் – யாங் கெடாமல் காய்கறிகளை வெட்டவேண்டும். ஒவ்வொரு துண்டிலும் யின் -யாங் இருக்க வேண்டும். உதாரணமாக காரட்டில் அதன் நடுவே யாங் நிறைந்துள்ளது. வெளியே யின். ஆகவே அதை வட்ட வட்டமான வில்லைகளாக வெட்டவேண்டும். நீளவாட்டில் வெட்டலாகாது. இபப்டி எல்லா காய்கறிக்கும் விதிகள் உள்ளன

ஈ. சமைக்கும்போது அதிகமாக கிண்டக் கூடாது.

உ. நீர்,எண்ணை,தீ,அழுத்தம் ஆகியவற்றை மிதமிஞ்சிப் பயன்படுத்தக் கூடாது.

3. உப்பு,இனிப்பு போன்றவை இயற்கையில் கிடைக்கும் விதத்தில் மிகக் குறைவாக பயன்படுத்தப்பட வேண்டும். ஒன்றை சமைக்கும்போது அதன் இயல்பான ருசியும் மணமும் ஒருபோதும் இன்னொன்றாக மாறலாகாது.

4. ஒரேவிதமான உணவையும் ஒரேவிதமான சமையலையும் தொடர்ந்து அதிகமாக கொள்ளலாகாது.

5. உணவு எப்போதும் கண்ணுக்கு அழகாகவே பரிமாறப்படவேண்டும். அதற்காக உணவு அலங்கார முறைகள் தேவை. அழகாக பரிமாறப்பட்ட உணவு மனதை நிறைவடையச்செய்கிறது. உணவில் அழகை அறிதலென்பது மனிதனின் அடிப்படையான ஒரு தேவை.

ஸ்வாமி தன்மயா என்னிடம் இரு விஷயங்களைச் சொன்னார். அவை மிக உடனடியாக கவனத்தில் கொள்ளத்தக்கவை என்று வலியுறுத்தினார்.

1. மூன்று வெள்ளைப்பிசாசுக்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அவை சீனி,உப்பு,பால். நவீன மனிதனின் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் அவையே.

சீனி நம் ரத்தத்தில் செயற்கையான ஒரு உபரி சக்தியாக, சுமையாக மாறுகிறது. உடலில் சீனி குறையும்போது உடனே சீனி தேவை என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. மறுகணமே குடிக்கிறோம். நம்மில் பலர் டீ-காபி அடிமைகள் என நினைக்கிறோம். உண்மையில் நாம் சீனி அடிமைகள். உலக மக்களில் பெரும்பாலானவர்கள் சீனி அடிமைகளே. மேலைநாட்டில் ஐஸ்கிரீம்,சாக்லேட் வடிவில் அதிகமாக உண்கிறார்கள். சீனி நம்மை களைப்படையச் செய்கிறது. ரத்த அழுத்தம், பதற்றம், மற்றும் நரம்புநோய்களுக்கும் காரணமாக அமைகிறது.

இனிப்புக்கு வெல்லம், பனைவெல்லம் ஆகியவையே ஏற்றவை. இவை வயிற்றில் மெல்ல மெல்ல செரிமானமாகின்றன. ஆனால் சீனி உடனடியாக குருதியில் கலக்கிறது.

வளர்ந்தபின்னும் பால் உண்ணும் ஒரே உயிரினம் மனிதனே. பசுவின் பால் எட்டுகிலோ எடையில் பிறக்கும் ஒரு கன்றுகுட்டியை ஒரே மாதத்தில் ஐம்பது கிலோவாக மாற்றத்தேவையான சத்துக்களும், வளர்ச்சித்தூண்டிகளும் அடங்கியது. அதை நாம் குடிக்கும்போது நமக்கு செயற்கையான முறையில் வளர்ச்சித்தூண்டிகள் வருகின்றன. அதிகபட்ச சத்துக்கள் உடலில் தேங்கி நோய் உருவாகிறது. புரதம் மற்றும் சுண்ணாம்புச் சத்தை பெரியவர்கள் கொட்டைகள் பருப்புகள் மூலமே பெற முடியும். சிறு குழந்தைகளுக்கு நீர்க்க வைத்த பால் கொடுக்கலாம். பெரியவர்கள் முழுமையாகவே தவிர்த்துவிட வேண்டும்.

பாலும் சீனியும் வயிற்றிற்குள் சென்றதுமே புளிக்கின்றன. அமிலமாக ஆகின்றன. அவை நம் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிப்பவை

உப்பு மிகக் குறைவாகவே உடலுக்குள் செல்ல வேண்டும். அதிகமாகச் செல்லும் உப்பு உடலின் திரவங்களை எடைமிக்கதாக ஆக்குகிறது. கழிவுறுப்புகளை அழிக்கிறது. ஊறுகாய்கள், நொறுக்குத்தீனிகள் வழியாகவே அதிக உப்பு உடலில் சேர்கிறது. அவற்றை தவிர்க்க வேண்டும்.

நான் ஸ்வாமி தன்மயா சொன்னவற்றை என்னால் முடிந்தவரை என் வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டேன். பாலை கடந்த நான்குவருடங்களாக முற்றிலும் தவிர்த்துள்ளேன். டீ, காபி,மோர், ஐஸ்கிரீம் எல்லாவகையிலும். கறுப்பு டீக்கு நாக்கு பழகி என்னால் பால்விட்ட டீ¨யைக் குடிக்க முடியாது. நான்குவருடங்களாகி விட்டதனால் பால்பொருட்கள் உண்டால் குமட்டுகிறது. செரிமானம் ஆவதுமில்லை. ஆனாலும் விருந்து சம்பிரதாயம் கருதி அவ்வப்போது சாப்பிடவும் வேண்டியிருக்கிறது.

உப்பை நிறுத்தவில்லை. ஆனால் ஊறுகாய்,சிப்ஸ் உண்பதில்லை. சீனியும் மிகக் குறைவு. கருப்பட்டி என் பிரியத்திற்குரிய இனிப்பு. ‘நான் கடவுள்’ படப்பிடிப்புக் குழுவிலும் இந்த மோகங்களை பரப்பி விட்டுவிட்டேன். எப்போதும் கருப்பு டீயும் கருப்பட்டி காபியும் கிடைக்கும்.அடிக்கடி எதையாவது குடிக்கும் பழக்கம் உள்ள படப்பிடிப்புப் பணிகளில் மிதமிஞ்சிய பால்டீ மூலம் உருவாகும் ஒவ்வாமைகள் ஏராளம். அதற்கு இது ஒரு நல்ல மாற்றாக அமைந்தது.

பாலை நிறுத்தினாலே எடை குறைவதைக் காணலாம். உடற்சோர்வை அளிக்கும் பிற உணவுக் கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ளலாம். பாலைக் குறைத்தால் பெரும்பாலான வயிற்றுச் சிக்கல்கள் உடனடியாக இல்லாமலாவதை எவருமே உணரலாம். பால் குடிககமலிருப்பதனால் நாம் எந்தவிதமான உடற்சிக்கலையும் அடைவதில்லை. எந்தவகையான களைப்பையும் உணர்வதில்லை. சொல்லப்போனால் நாற்பதுக்கு மேல் வயதுள்ளவர்களுக்கு வழக்கமாக வரும் குடலெரிச்சல் போன்ற பிரச்சினைகள் இல்லாமல் விடுதலை உணர்வே ஏற்படும்

உண்மையில் நாம் இப்போது குடிக்குமளவுக்கு பாலை எப்போதுமே, எவருமே குடித்தது இல்லை. என் சிறு வயதில் பால் அபூர்வமான பொருளாகவே இருந்தது. வளர்ந்த ஒருவர் ஒருநாளில் ஒரு அவுன்ஸ் பால் குடித்தாலே அதிகம். குழந்தைகளுக்கே பால் குறைவு. பசுக்கள் உள்ள வீடுகளில் இருந்து அதிகபட்சம் ஒரு டம்ளர் பால் வாங்குவார்கள். நம் சிறுவயதில்கூட இப்போது குடிக்குமளவுக்கு பாலை குடித்திருக்க மாட்டோம்.

என் சிறுவயதில் நான் பெரியவர்கள் பால் குடித்து பார்த்ததே இல்லை. என் அம்மா அவர்கள் சிறுவயதில் இருந்து கடைசிவரை பாலே குடித்தது இல்லை. டீயில்கூட. எங்களூரில் அக்காலத்தில் பெரும்பாலானவர்கள் பால் அல்லது பால்விட்ட டீ குடிப்பதில்லை. தலித்துக்களில் ஒருசாராருக்கு பால் குடிப்பதில் சாதிவிலக்கே இருந்தது. அவர்கள் எந்தவகையான நோயும் இல்லாமல் கருங்கற்சிற்பம் போல எண்பதுவயதிலும் பனை ஏறியும் வயல் உழுதும் வாழ்ந்தார்கள்.

இன்றைய பால் நுகர்வு தொழில்முறை பாலுற்பத்தி மற்றும் பதப்படுத்தி வினியோகிக்கும் வசதி ஆகியவற்றில் வந்த வளர்ச்சியின் விளைவு. ஒப்புநோக்க இப்போது பாலின் விலை மிக மலிவு. எழுபதுகளில் ஒரு லிட்டர் பால் ஒன்றரை ரூபாய். ஐந்து தேங்காயின் விலை. இன்றைய கணக்கில் ஒரு லிட்டர் பால் முப்பத்தைந்து ரூபாய் விற்க வேண்டும். உற்பத்தி அதிகமாக இருப்பதனால்தான் நாம் அதிகமாக பால் அருந்துகிறோம். தேவையாக இருப்பதனால் அல்ல. உண்மையில் அருந்த வைக்கப்படுகிறோம்.

மாக்ரோபயாட்டிக்ஸ் பற்றி நான் அறிந்தது குறைவு. அறிந்துகொண்டே இருக்கிறேன். நான் கடைப்பிடிக்காத ஒன்றை சும்மா அறிய முயல்வது என் வழக்கம் அல்ல. என் அனுபவ அறிவைப்பற்றியே நான் பிறரிடம் சொல்வது .ஓரு கோட்பாடாக மாக்ரோபயாட்டிக்ஸின் முக்கியத்துவம் என்பது நாம் மேலும் மேலும் பேரளவு உற்பத்தியின் பலியாடுகளாக , நுகர்வு இயந்திரங்களாக ஆகும் இன்றைய சூழலில் அதற்கு எதிரான ஒரு தடையாக, ஒரு தற்காப்பாக அது இருப்பதுதான்.

மறுபிரசுரம்/ முர்தற்பிரசுரம் 2004

பார்க்க

www.kushiinstitute.org
www.macrobiotics.org

இயற்கை உணவு முந்தைய கட்டுரைகள்

http://jeyamohan.in/?p=373
http://jeyamohan.in/?p=377

முந்தைய கட்டுரைபனிமனிதனும் அவதாரும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 51