சிறியவிஷயங்களின் கதைசொல்லி

ஜெ சார்,

 

 யுவன் சந்திரசேகரின் சிறுகதை தொகுப்புகள் ‘ஏற்கனவே’ மற்றும் ‘ஒளிவிலகல்’ படித்தேன். இலக்கிய மும்மூர்த்திகள் அது இதுவென்று பேசிப்பேசியே இது போன்ற நல்ல படைப்புகளைத் தவறவிடுகிறோம் என்று  நீங்கள் அன்று விசனப்பட்டது  புரிந்தது. ”உனக்கு அழுகையே வல்லையாடா?” என்று அத்தைப் பெண்ணின் கேள்விக்கு, “வல்லேடி” என்று பதில் சொல்லிவிட்டு நாவல் பழம் பொறுக்கப் போகும் கிருஷ்ணன்… பின்னர் பழைய ஞாபகத்தில் காலை தூக்கி மாமாவின் வயிற்றில் போட்டு “ஒழுங்காப் படுறா” என்று அதட்டப்பட்டு, நினைவுகள் நெஞ்சில் அடைத்து, வெடித்து அழும் போது சில நிமிடங்கள் நானும் நிலைகுலைந்தேன்.  உலகமனைத்துக்கும் சாரமான ஏதோ ஒன்று இலக்கியத்தில் உண்டு என்பது வாய் சொல்லாக இல்லாமல் அனுபவப்பூர்வமாக மீண்டும் மீண்டும் உணரும் தருணங்களில் இதுவும் ஒன்று.

இது போன்ற  தளங்களைத் தொடும் பல கதைகள்.  ”யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை..” என்று பாட்டு சொல்லித் தரும் கிருஷ்ணனின் அப்பாவுக்கும் கிருஷ்ணனுக்கும் உள்ள நுட்பமான உறவு.  ‘கிருஷ்ணப் படவா’ என்று செல்லமாக அழைத்து, அருகில் அமர்த்தி  அவர் சொல்லு கதைகள்.. பின்னர் தொடைவாளை நோய் முற்றி, சைக்கிளை பின்னுருக்கையில் இருந்து அவர் ஓட்டும் போது, கிருஷ்ணன் முன்னிருக்கையில்  அமர்ந்து, அவரின் கழுத்தை கட்டியணைத்துக் கொண்டு செல்வது. அந்தக் காட்சி தான் எத்தனை உள்விரிவுகள் கொண்டது.”’ஒவ்வொருவனின் மரணமும் அவனின் தந்தையின் மரணத்தில் இருந்தே தொடங்குகிறது” என்று ஒர்ஹான் பமுக்க்கின் கதை ஒன்றில் வரும். கழுத்தைத் துடைத்துக் கொண்டு,‘சர்வேஸ்வரா..’ என்று கூறியெபடியே அமர்ந்து, மௌனத்துள் ஒடுங்கியபடி செல்லும் தந்தைகளின் கடைசி தினங்களைக் கண்டு, பின்னர் காணப் பிடிக்காது ஓடும் புதல்வர்கள் தான் எத்தனை!

ஆனால் எனக்கு மிகவும் பிடித்த கதை அப்பா சொன்ன கதையல்ல. சாம் மானெக்‌ஷாவின் சீனியரான பட்டா மாமா சொன்னக் கதை. பொடிமட்டையை நீட்டியபடி ‘ஆச்சே..இருபத்தி சொச்ச வருஷம் ஆச்சே..இத்தன வருஷத்துல என்ன்னனவோ மாறிப்போச்சு. கேவவம் ஒரு கதை மாறக்கூடாதா” என்று கேட்கும் பட்டா மாமாவை நானே நேரில் பார்த்திருக்கிறேன். நெசமாலுமே சாம் மானெக்‌ஷா போலவே இருப்பார்.

அந்தக் கதைக்கப்புறம் எனக்குப் பிடித்த கதை முத்துச் சித்தப்பா சொல்லும் ’வேட்டுவெச்சி’ கதை.பனங்கிழங்கு வாசனையடிக்கும் உடம்போடு, நாக்கு குழறியபடி கதை சொல்லும் அவர், தண்ணீர்ச் சொம்பை வாங்கி மளக் மளக் என்று ஒரே மூச்சில் குடித்து முடிக்கும் போது, ஒரு உருவம் என் முன்னே வந்து ”ஆங்..எங்க விட்டேன்” என்று  கேட்டு கதை சொல்வது போன்ற பிரமிப்பு வந்துவிடுகிறது. யுவன் சந்திரசேகருக்கு பாம்புக் காதுகள் போலும்!

ஆனால் இக்கதைகளையெல்லாம் விட எனக்கு பிடித்தது, சிங்கக் கதை கேட்டு அடம் பிடிக்கும் விச்சுவுக்கு தாய்ம்மா பாட்டி சொல்லும் கதைகள். அக்கதைகளி்ல் எழும் ஓசைகள் ..(”தூரத்துல ஒரு கர்ஜனை…கர்ர் க்ர்ர் க்ர்ர். கூட்டம் அமைதியாகிவிட்டது.   விச்சு சிரிப்பை அடக்க முடியாமல் வாசலுக்கு எழுந்து ஓடுவதும் உள்ளே வருவதுமாய் இருந்தான் கொஞ்ச நேரம்”).

இக்கதைகளில் உள்ள சரளத்துக்கு மறுபுறம் போல் “கிருஷ்ணன்-இஸ்மாயில்-சுகவனம்’ கதைகள். அயன்அலி கான் வரும் கதைகள். இன்னும் நிறைய, விரிவாக இக்கதைகளைப் பற்றி எழுத வேண்டும்.

 டிசம்பரில் சென்னை வரும் போது எப்படியாவது யுவன் சந்திரசேகரை சந்திக்க வேண்டும்.

அர்விந்த் 

 

அன்புள்ள அர்விந்த்,

நலமா? இன்னமும் கலிஃபோர்னியாதான். நேற்று யானை சீல்களை பார்த்துவிட்டு வந்தேன். டயட் பற்றியெல்லாம் கவலையே இல்லாமல் குண்டாக புஅரண்டு புரண்டு வெயில் காய்ந்தன. நடுவே காட்டுக்கத்தல் சண்டை.

பொதுவாக நம் நாட்டில் எவரேனும் ஒருவர் ஒரு சொற்றொடரை உருவாக்கினால் அதை பிறரும் அப்படியே சொல்வார்கள். அவர்களுக்கு எந்த சொந்தக் கவனிப்பும் இருக்காது. இலக்கிய மும்மூர்த்திகள் போன்ற சொல்லாட்சிகள் அப்படிப்பட்டவையே. இவை பலசமயம் நல்ல வாசிப்புக்கு தடையாக அமைந்துவிடுகின்றன. அதை நான் எழுதியிருக்கிறேன், சொகிறேன்.

அதைப்போல ஒரு எழுத்தாளரைப்பற்றி வாய்மொழியாக பரவும் கருத்துக்கள். அதை எவரும் வாசித்து சொல்லவேண்டியதில்லை. ஓர் எழுத்தாளரின் பெயரை தெரிந்து வைத்திருப்பவர்களில் தொண்ணூறு சதம் பேர் அவரை வாசித்தவர்கள் அல்ல, பெயரை மட்டுமே தெரிந்து வைத்திருப்பவர்களே. அந்தப்பெயருடன் ஒரு மதிப்பீட்டையும் சேர்த்து வைத்திருப்பார்கள். அந்த கருத்து எப்போதுமே பிறரால் அளிக்கப்பட்டதாக இருக்கும். அதை சொந்தக்கருத்து போல சகஜமாக சொல்வார்கள். ”ஜெயமோகனா, அவரு இந்துத்துவா ரைட்டர்ல?” ”நாஞ்சில்நாடனா அவரு வெள்ளாம்புள்ளையளைப்பத்தி எளுதறவருதானே?”

இந்தக் கருத்துக்களை இந்த ஆசாமிகள் அதுவரை எதுவும் வாசிக்காத, ஆனால் வாசித்தால் நல்ல வாசகர்களாக ஆகும் தகுதி கொண்ட இளம் வாசகர்களுக்கு சொல்வதன் வழியாக அவர்களை இலக்கியத்துக்குள் நுழைய முடியாமல் ஆக்கி விடுகிறார்கள். முன்பு திண்ணை வெட்டிப்பேச்சாக இருத இந்த வழக்கம் இப்போது இணையர்களால் பரவி வருகிறது. இது உருவாக்கும் இழப்புகள் அந்த எழுத்தாளர்களுக்கு அல்ல. ஓர் எழுத்தாளனைப்பற்றி ஒருவர் கருத்து சொன்னால் உடனடியாக அவரிடம் அதைப்பற்றி மேலும் கேளுங்கள் என்பேன். என்னென்ன நூல்களைப்  படித்தாய், ஏன் அபப்டிச் சொல்கிறாய் என்று கேட்க ஆரம்பித்தாலே மழுப்ப ஆரம்பித்து விடுவார்கள்

அதேபோலத்தான் இணையத்தில் பரவும் கருத்துக்கள். வெங்கட் சாமிநாதனா அவரு இப்டி சொன்னாருல்ல என்பார் ஒருத்தர். எங்கே எப்போது சொன்னார் சொல்லு பார்க்கலாம் என்றால் விழிக்க ஆரம்பிப்பார். இணையத்தில் என்றால் வசை ஆரம்பமாகிவிடும்.

எழுத்தாளர்களை அவர்களை வாசிப்பதன் மூலமே மதிப்பிட முடியும். விவாதித்தே புரிந்துகொள்ள முடியும். ஒரு நூலையும் அட்டைக்கு அப்பால் வாசிக்காத , வாசித்தாலும் ஒரு மண்ணும் புரிந்துகொள்ள திராணி இல்லாத சாரு நிவேதிதா போன்ற அக்கப்போர் எழுத்தாளர்களை நம்பி கலைஞர்களைப் பற்றிய கருத்துக்களை உருவாக்கிக் கொள்பவர்கள் தங்கள் இலக்கிய அனுபவத்தையே இழக்கிறார்கள்.

நான் அமெரிக்கா வந்தபின் கண்டது இது. நான் பொதுவாகவே நான் வாசித்த நல்ல எழுத்துக்களைப் பற்றி தொடர்ச்சியாக பேசி அறிமுகம் செய்யும் வழக்கம் கொண்டவன். ஆகவே எஸ்.ராமகிருஷ்னன், யுவன் சந்திரசேகர், சு.வேணுகோபால், கண்மணி குணசேகரன் என எழுத்தாளர்களைப் பற்றி பேசுகிறேன். பலருக்கு எழுத்தாளர்களை பற்றிய பெயர் அறிமுகமும் ஆதாரமில்லாத ஒரு தவறான கருத்தும் மட்டுமே இருக்கிறது என்று கண்டு கொண்டேன். குறிப்பாக யுவன் குறித்து

அதில் முக்கியமானது யுவன் ஒரு ‘தயிர்வடை’ தன்மை கொண்ட எழுத்தாளன் என்பது. அதாவது மிகவும் கட்டுப்பெட்டித்தனமான ஒழுக்க மதிப்பீடுகளையும் பழைய கருத்துக்களையும் முன்வைக்கும் ஒருவகை ‘கலைமகள்’ எழுத்தாளர் என்பது போல.  உண்மையில் தமிழில் முற்றாக மதிப்பீடுகளை மறுக்கக் கூடிய ஒரு ‘அமாரல்’ உலகை முன்வைத்த கலைஞர்களில் ஒருவன் அவன். மீண்டும் மீண்டும் அவன் மனித ஆழ்மனங்களில் உள்ள ஒழுக்கமில்லா பகுதிகளை நோக்கிச் செல்கிறான்

இன்னொன்று அவன் பிராமணர்களை பற்றி , அவர்களின் அக்கிரகார வாழ்க்கை பற்றி ஏதோ ஏழுதுகிறான் என்பது. பிராமண சாதிய வழக்கில் எழுதுகிறான் என்பது. ஒரு நல்ல வாசகர் சொன்னார் ”ஒரே அய்யர் பாஷையா எழுதறார் சார்” ”ஏன் எழுதக்கூடாது? அதுவும் ஒரு வழக்கு தானே?” என்றேன். ”எழுதலாம். ஆனா எனக்கு ஆது ரொம்ப சலிச்சுப்போச்சு” ஆனால் உண்மையில் தமிழ்நாட்டின் பல்வேறு சாதிய– வட்டார வழக்குகளை மிகத்திறமையாக நுட்பமாக எழுதும் ஒரு எழுத்தாளன் யுவன். உண்மையில் அவன் அளவுக்கு ஒரு ரெட்டியாரும் செட்டியாரும் பேசுவதற்கான நுண்ணிய வேறுபாடை இன்று எவருமே எழுத முடியாது

மூன்று யுவன் ஏதோ ‘அம்பித்தனமாக’ கதை எழுதுகிறார் என்பது. ”எனக்கு கொஞ்சம் நகைச்சுவை இருக்கணும் சார். அதனாலே நான் யுவன் படிக்கிறதில்லை…” நான் அதிர்ச்சியுடன் ”அப்ப நீங்க முதலிலே வாசிக்க வேன்டியதே யுவனைத்தானே…அவன் அளவுக்கு இப்ப நகைச்சுவை எழுதறவங்காளே கம்மி ‘ . ”அப்டியா?” என்றார் நண்பர். நுண்மையாக மனித வேடிக்கைகளை தொட்டுக்காட்டக்கூடிய கலைஞன் அவன்.

இப்படித்தான் நாம் அவதூறு மூலமே ஒரு கலைஞனை ஒழித்துவிடலாம் என்பதை நம் சூழலில் நிறுவிக் கொண்டிருக்கிறோம். எழுத வேண்டாம் சும்மா சத்தம் போட்டாலே போதும் என்பதையும் நிறுவிக்கொன்டிருக்கிறோம். சிலராவது இதில் இருந்து வெளிவரவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

யுவன் தமிழில் எழுதும் முக்கியமான ஒரு கலைஞன் என்பதில் எனக்கு எந்தவிதமான ஐயமும் இல்லை. அவனுக்கு இணையான ஆக்கங்களை நாம் இன்று உலகில் மிகச் சிலரே எழுதுகிறார்கள். உங்களுக்கு மிலன் குந்தேராவை ரசிக்க முடியும் என்றால்  யுவன் உங்களுக்குரிய எழுத்தாளன். மிலன் குந்தேரா எந்த அளவுக்கு நவீனமானவரோ அதே அளவுக்கு யுவனும் நவீனமானவன். யுவன் உருவாக்கும் உலகின் அபத்தமும் வேடிக்கையும் உங்களுக்குப் புரியவில்லை என்றால் உங்களுக்கு கண்டிப்பாக மிலன் குந்தேராவும் வெறும் பெயர்தான்.

*

யுவன் சந்திரசேகரின் எழுத்தை நான் எப்படி வரையறைசெய்வேன்? அது சிறியவிஷயங்களின் கலை. அவன் பார்வையில் வாழ்க்கை என்பது மாபெரும் விஷயங்கள் நடக்கும் ஒரு பெருவெளி அல்ல. சின்னச்சின்ன விஷயங்கள் வழியாக சின்னச் சின்ன மனிதர்கள் சின்னச் சின்ன வரலாறுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதே பார்வையின் இன்னொரு தளத்தை நீங்கள் மிலன் குந்தேராவில் பார்க்கலாம். குறிப்பாக ‘தி புக் ஆஃப் லாஃப்டர் ஆன்ட் ஃபர்கெட்டிங்’ போன்ற நாவல்களில் பெரும் அரசியல் கொந்தளிப்புகளும் மாற்றங்களும் சின்னச் சின்ன அன்றாட விஷயங்கள் மட்டுமாக மாறுவதன் விந்தையை காணலாம். யுவனுடைய உலகமும் அத்தகையதே

அதற்காக அவன் வாழ்க்கையை மிக நுட்பமாக நெருங்கிச் சென்று கவனிக்கிறான். பேருந்தில் ஏறுவது இறங்குவது இடம்பிடிப்பது எதிரே வரும் பிச்சைக்காரன் ரயில் பாடகன் அலுவலகத்திற்கு வரும் வாடிக்கையாளர் என ஒரு உலகம். திடீரென அன்றாட உலகை அபத்தமாக ஆக்கும் மாயமந்திர நிகழ்ச்சிகளும் அபூர்வமான நிகழ்ச்சிகளும். எல்லாமே ஒரே சாதாரணத்தன்மையுடன் சொல்லபப்டுகின்றன. ‘ ஒண்ணுமில்லை சும்மா போறப்ப ஒருத்தனைப் பாத்தேன், அவனுக்கு தலை இல்லை’ என்றது போல ஒரு பாவனை. எல்லாமே வெறும் ஜாலியான அரட்டைதான் என்னும் தோரணை. இது தான் அவன் கலையின் பொதுவான வழிமுறை

இந்த மனநிலையும் சரி, இந்த எழுத்து முறையும் சரி, மிக முக்கியமான பின் நவீனத்துவ இயல்பு. பின் நவீனத்துவம் என்றால் வடிவபோதம் இல்லாமல் கிசுகிசுக்களை கலந்து வைப்பது என்பதற்கு அப்பால் அதைப்பற்றி ஏதேனும் தெரியும் என்றால் இதை புரிந்துகொள்ள முடியும். நவீனத்துவம் ‘பெரிய’ விஷயயங்களைச் சொல்கிறது. சிறிய விஷயங்களைக்கூட பெரிய விஷயங்காள் ஆக்கிவிடுகிறது. அனைத்திலும் பெரும் தரிசனங்களை தத்துவக்கோட்பாடுகாளை உள்ளுறையாக நிறுட்த முயல்கிறது. உதாரணம், காஃப்காவின் கதைகள். அதற்கு நேர் எதிரானது இந்த முறை. இது பெரிய விஷயங்யங்களைக்கூட சிறிதாக ஆக்குகிறது. எல்லாமே சல்லிசான விஷய்ங்கள். எல்லாமே சிரித்துவிட்டு போகவேண்டியவை.  நாளைக்கு என சுமந்துசெல்லக்கூடிய அளவுக்கு முக்கியத்துவம் இல்லாத வாழ்க்கை என்னும் பாவனை. யுவன் கதைகளின் சிரிப்பு அங்கிருந்து கிளம்புகிறது

அதன் அடுத்த நிலையே, அவன் ஒருபோதும்  ஒத்திசைவுள்ள பெரும் கட்டுமானங்களை உருவாக்குவதில்லை என்பது. அவனுக்கு வாழ்க்கை துண்டு துண்டு நிகழ்ச்சிகளே. அவை சேர்ந்து ஒன்றையும் உருவாக்குவதில்லை. துண்டுகள் நடுவே ஓர் இணைப்பு இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அதை வாசகர்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதை அவன் உருவாக்க முயல்வதில்லை. ஆகவே அவன் சிறுகதைகள் கூட பல வகையான சிறிய ‘கூறல்களின்’ தொகையாக உள்ளன. அவை கதைகள் கூட இல்லை. பலசமயம் அவை நிகழ்ச்சிகள். சிலசமயம் அவை வெறும் கூற்றுகள்.

இந்த வகை எழுத்தை உலகம் முழுக்க பின் நவீனத்துவச் சாயல் கொண்ட எழுத்தாளர்கள் முயன்றிருக்கிறார்கள் என்பதைக் காணலாம். உதிரிகளின் தொகையாக உள்ள கலைவடிவங்கள். முரண்பட்ட கூற்றுகள் மூலம் உருவாக்கப்படும் சிக்கலான வாடிவங்கள்.

இன்று ஒரு வாசகன் யுவன் சந்திராசேகரை வாசிக்கும்போது இந்த விஷயங்களை கவனத்தில் கொண்டாக வேண்டும் என நினைக்கிறேன். ஒன்று நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பது நவீனத்துவத்தின் பெருங்கட்டுமானங்கள் மேலும் மரபின் அமைப்புகள் மீதும் ஆழமான ஐயம் கொன்ட ஒரு முக்கியமான பின் நவீனத்துவக் காலகட்டத்துக் கலைஞனை. அவன் சிறு விஷயங்களை மட்டுமே சொல்ல முயல்கிறான், ஏனென்றால் அவன் அவை மட்டுமே வாழ்க்கை என நினைக்கிறான். அதற்குமேல் வாழ்க்கை ஒன்றுமில்லை என்கிறான். ராத்திரி சிரிகரெட் பிடித்துக் கொன்டிருக்கும்போது ஒரு நட்சத்திரம் உதிர்வதில் பிரபஞ்சத்தைக் கண்டு நடுங்குகிறான். குறுக்கே போகும் நாயில் ஒரு அலகிலா ஆட்டத்தின் ஒரு தருணம் இருப்பதைக் கண்டுகொள்கிறான். அந்தத் துளிகளை துளிகளாகவே திரட்டி நம் முன் வைக்கிறான். அதுவே அவன் கலை

அந்தத் துளிகளை நாம் தனித்தனியாகவே கூர்ந்து வாசிக்க வேண்டும். அந்த துளிகள் நடுவே ஓடும் மரபான கதை என்ன என்பதை ஒருபோதும் ஊகிக்க முயலக்கூடாது. அப்பாடி முயன்றோம் என்றால் நாம் அவன் கதை சொல்ல தெரியாமல் ஏதோ துண்டுத் துன்டாகச் சொல்கிறான் என்ற எண்ணத்துக்கே வந்து சேர்வோம். அந்த துளிகளை இணைக்க அவன் என்னா செய்கிறான் என்பது முக்கியமில்லை– நாம் என்ன செய்ய வேண்டும் என்பதே முக்கியம். அதன் வழியாக நாம் என்ன அர்த்ததை உற்பத்தி செய்துகொள்கிறோம் என்பதே முக்கியம். அதன் மூலமே நாம் நமது யுவன் சந்திர சேகரை உருவாக்கிக் கொள்ள முடியும்

அன்புடன்

ஜெ

 

பிகு:

 

1. இங்கே பின்நவீனத்துவம் என்ற சொல்லை பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இணையத்தில் அரைவேக்காடுகளால் காய்ச்சி தாளித்துக் கொட்டப்பட்டிருக்கும் இச்சொல் அளவுக்கு குழப்பமாக இன்னொரு சொல் இல்லை. பின் நவீனத்துவம் என்றால் இவர்கள்  ஒரு குறிப்பிட்ட வகை எழுத்துமுறை என்று எண்ணிக்கொணிருக்கிறார்கள். தங்களை பின் நவீனத்துவன் என்று அறிவித்து இதோ  ஒரு பின் நவீனத்துவக் கதை எழுதுகிறேன் என்று சொல்லி எழுதுகிறார்கள்.  இந்தவகை அபத்தம் உலகின் எந்த மூலையிலாவது நடக்கிரதா என்பதே சந்தேகம்தான்.

பின் நவீனத்துவம் என்பது ஒரு குறிப்பிட்டவகை எழுத்தோ ஒரு வடிவமோ அல்ல. ஒரு நிலைபாடோ ஒரு கோட்பாடோ ஒரு தர்க்கமுறையோ அல்ல. அது ஒரு பொதுப்போக்கு – டிரென்ட். அதை நாம் நவீனத்துவத்துக்கு மாற்றாக அதன்பின்னால் வந்த பல்வேறு பொக்குகளின் ஒட்டுமொத்த தொகை என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். நவீனத்துவம் பெரும்மொழிபுகளை உருவாக்கியது. பின் நவீனத்துவம் அதை சிறிய மொழிபுகளின் தொகையாக ஆக்கலாம் .

 
 அதை தையே யுவன் செய்கிறான் .. அதே பெருமொழிபுகளை இன்னமும் பெரிதாகத் திருப்பிச் சொல்வதும் ஒரு பின் நவீனத்துவ அம்சமே. எதெல்லாம் நவீனத்துவக் கூறுகளை மீறிச்செல்கிறதோ, முன்னகர்கிகிறதோ அதெல்லாமே பின் நவீனத்துவக் கூறுதான். மேலும் மேலும் புதிய பின் நவீனத்துவ சாத்தியக்கூறுகள் கன்டடையபபடலாம். இப்போது நாம் யோசிக்காத ஒரு பின் நவீனத்துவ வகைமை நாளைக்கே உருவாகலாம்

 

 பின்நவீனத்துவ ஆக்கம் என்று ஒன்று இல்லை . அது ஒரு அழகியல் வடிவம் அல்ல. பின் நவீனத்துவக் கூறுகள் கொண்ட ஆக்கங்களே உள்ளன. ஆகவே எது பின் நவீனத்துவம், இது சுத்தமான பின் நவீனத்துவமா இல்லையா என்றெல்லாம் பேசுவது போன்ற முட்டாள்தனம் வேறு ஏதும் இல்லை.

 

2. பொதுவாக நம் சமகால வாசகரக்ளிடம் பேசும்போது அவர்கள் வாசித்த இலக்கியங்களையே எந்த அளவுக்கு வாசித்தார்கள் என்ர எண்ணம் எனக்கு ஏற்பட்டது. குறிப்பாக எஸ்.ராமகிருஷ்ணன். அவர் பெயர் தெரியாதவர்களே இல்லை. ஆனால் அவரது முக்கியமான நாவல்களை கூர்ந்து வாசித்து ஒரு நல்ல அவதானிப்பை சிலரே உருவாக்கியிருக்கிறார்கள். நான் சமகால எழுத்தாளர்களைப் பற்றி அதிகமாக பேசவேண்டாம் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். ஆனால் பல நண்பர்கள் நான் எழுதவேண்டும் என்றார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் படிமங்கள் மூலம் தன் ஆக்கங்களில் ஒரு அக உலகை உருவாக்குகிறார். அதை தொடாமல் அவர் கதைகளை  ஓர் இழப்புதான்.

 

3. கென் வில்பருக்கும் யுவன் சந்திரசேகருக்கும், அமெரிக்க பல்கலைகழகத்துக்கும் சென்னை இலக்கிய அரசியலுக்கும் நடுவே நீங்கள் ஒரு சமநிலையை கண்டடைந்துவிட்டீர்கள் என தோன்றுகிறது, வாழ்த்துக்கள்

முந்தைய கட்டுரைநகைச்சுவை கடிதங்கள்
அடுத்த கட்டுரைகன்னிநிலம் கடிதங்கள்