ஜெ,
சோபானம் கதையை வாசித்து வியந்தேன். தமிழில் இந்தத் தலைமுறையில் சங்கீதம் பற்றி நுட்பமாக எழுதப்பட்ட நல்ல கதைகள் வெளிவருவதில்லை. சிதம்பரசுப்ரமணியன், ஜானகிராமன் போன்றவர்கள் எழுதிய நல்ல கதைகளை பலமுறை வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். பிரபஞ்சன் சில கதைகள் எழுதியிருக்கிறார். ஆனால் அவற்றில் கொஞ்சம் பாசாங்கு இருக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. நீண்ட இடைவெளிக்குப்பிறகு இளைஞர் ஒருவர் எழுத்தில் இப்படி ஒரு அற்புதமான சங்கீதக்கதை வந்திருப்பது மிகுந்த மனமகிழ்ச்சியைகொடுக்கிறது.
உஸ்தாத் படேகுலாமலிகானை இசைமேதை ஜிஎன்பி வணங்கினார் என்றும் அதை செம்மங்குடி போன்றவர்கள் கண்டித்தார்கள் என்றும் செவிவழிச்செய்தி உண்டு. அந்த இடத்தில் இருந்து கதையை ஆரம்பித்திருக்கிறார் ராம். தி.ஜானகிராமன் இருந்து எழுதினால் எப்படி எழுதியிருப்பாரோ அப்படி எழுதியிருக்கிறார். கொஞ்சம்கூட மிகையான பாராட்டாக இதைச் சொல்லவில்லை, உண்மையாகத்தான் சொல்கிறேன். நடையில் உள்ள சொகுசும் சுகபாவமும் அப்படியே ஜானகிராமன்தான். அதோடு ஜானகிராமன் மனிதர்களின் முகபாவனைகளைச் சூட்சுமமாகச் சொல்லக்கூடியவர். உரையாடல்களில் நுட்பமான மனசை வெளிப்படுத்தக்கூடியவர். இரண்டு அம்சங்களும் இந்தக்கதையில் சிறப்பாக அமைந்து வந்திருக்கின்றன.
சங்கீதம் தன்னுடைய உள்ளுக்குள் இருந்து வரக்கூடியது அல்ல என்பதை நல்ல சங்கீதக்காரன் அறிந்திருப்பான். அதுக்குள் சென்றுவிடவேண்டும் என்ற ஆசையும் தவிப்பும் அவனுக்குள்ளே இருக்கும். நான் இருபது வருடங்களுக்கு முன்னால் பீம்சேன் ஜோஷி கச்சேரி ஒன்றைக் கேட்டேன். பாட்டு முடிந்ததும் கைதட்டல். ஜோஷி திடுக்கிட்டுப்போனார். அதை நான் ஞாபகத்திலே வைத்திருக்கிறேன்.ஜோஷிக்கு என்ன தோன்றியிருக்கும்? அடாடா இங்கே என்ன செய்கிறேன் என்றுதானே நினைத்திருப்பார். பெரிய இசைமேதைக்கு இருக்கக்கூடிய அந்தத் தவிப்பை அற்புதமாகச் சொல்லியிருக்கிறது இந்தக்கதை ’நெருப்பு ஓடையை தாவிக் குதித்து தாண்ட முயற்சிப்பவர் போல எப்போதும் ஒரு தவிப்பும் அவஸ்தையுமாகவே இருந்தார்’ என்ற வரியிலேயே எல்லாம் உள்ளது
”வெகுசிலர் மட்டும் தான் சங்கீதத்தின் தலையில் காலை வைத்து எம்பி மேலே பறக்கிறார்கள்..” கான்சாகிப் அப்படியே எம்பிக்குதித்து மேலே சென்று அவர் ஆசைப்பட்டதை தொட்டுவிட்டார் என்றும் சொல்லலாம். இல்லை அவர் முயற்சி செய்து அதிலேயே நிறைவை கண்டுமுடிந்துவிட்டார் என்றும் சொல்லலாம். சங்கீதம் அப்படியே அடித்துக்கொண்டு சென்றுவிடுகிறது என்பதுமட்டும்தான் உண்மை
சீனிவாசன்
அன்புள்ள சீனிவாசன்,
இப்போது எழுதுபவர்களில் யுவன் சந்திரசேகர் இசை பற்றி நிறைய எழுதியிருக்கிறார். கானல்நதி என்ற நாவலை நீங்கள் வாசித்துப்பார்க்கலாம்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
ஆமாம், மயில்கழுத்துக்குப்பிறகு எழுதவில்லை. கடிதம் எழுதுவது என்பது பெரிய வேலையாகத் தெரிகிறது. எழுதுவதைப்பற்றி நிறைய யோசிப்பேன். அனேகமாக நீங்கள் சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயத்துக்கும் நானும் பதில் சொல்லியாகவேண்டும். இசையும் பிராமணர்களும் கட்டுரைகளுக்கு நீளமாக ஒரு கடிதம் எழுத நினைத்தேன். ஆனால் எழுத உட்கார்ந்தபோது எதற்கு அதெல்லாம் என்று தோன்றிவிட்டது. எழுதுவது என்பது நம்மை சர்ச்சைகளுக்குள்தான் கொண்டுசெல்கிறது. நான் சர்ச்சைகளுக்கு லாயக்குப்படாதவன் ஜெ.
சரி, நான் எழுதவந்தது சோபானம் கதையைப்பற்றி. வேதாவின் பீத்தோவனின் ஆவி கதைக்குப்பிறகு எனக்கு மிகவும் பிடித்த கதை இது. [சொல்லவே வேண்டாம் என்று நினைக்கிறீர்கள்] இசையில் கரைந்து மறையும் ஒரு மேதையைப்பற்றிய கதை இது. அனேகமாக படே குலாம் அலி கான் என்று நினைக்கிரேன். அவரைப்பற்றி வேறு எவராவது தமிழில் எழுதியிருக்கிறார்களா? இன்னொருவர் யார் ஜி என் பியா? ராஜம் ராஜமேதானா? சரிதான், அதெல்லாம் தெரிந்து என்ன ஆகப்போகிறது?
ஆசிரியர் நிறைய விஷயம் தெரிந்தவர் என்பதில் சந்தேகமில்லை. பொதுவாக கர்நாடகசங்கீத வித்வான்கள் இந்துஸ்தானி சங்கீத வித்வான்களைக் கண்டால் இரண்டு விஷயங்களுக்காக பிரமிப்பார்கள். ஒன்று, அவர்களுடைய குரல்பயிற்சி. மற்றொன்று அவர்களின் விரிவான ராக ஆலாபனை. அந்த விஷயங்கள் நுட்பமாக கதையிலே சொல்லப்பட்டுள்ளன.
இசையை பலதிசைகளில் இருந்து இந்தக்கதை நெருங்குவதுபோல இருக்கிறது. இசை ஒரு தொழில்நுணுக்கமாகவும் இருக்கிறது.கூடவே அது ஒரு ஆன்மாவின் துக்கமாகவும் இருக்கிறது. இந்த இரண்டும் எப்போதுமே முட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. வெவ்வேறு மனிதர்களில் மட்டும் அல்ல. ஒரே மனிதருக்குள்ளேயேகூட. அதைத்தான் இந்தக்கதையிலே காண்கிறேன். இளம் எழுத்தாளருக்குப் பாராட்டுக்கள்
சுதாகர்
அன்புள்ள ஜெ, ராம் எழுதிய சோபானம் என்ற கதையை வாசித்தேன். சோபானம் என்ற பேரில் உள்ள சங்கீதபாணி கேரளத்தில் உள்ளது. அது இறைவனை துயிலெழுப்பவும் துயிலுறக்கவும் பாடப்படுகிறது. சோபான சங்கீதத்திலே இடைக்கா என்ற வாத்தியத்தை வாசிப்பார்கள். இந்தக்கதைக்கு ஏன் சோபானம் என்று பெயர் என்று நினைத்துக்கோண்டே இருந்தேன். கான்சாகிப் துயில்கொள்கிறாரா விழித்துக்கொள்கிறாரா என்று நினைத்தேன். ஒரு மிகச்சிறந்த அனுபவம். ஜானகிராமன் மாதிரி எழுதப்பட்ட கதைசொல்லி தஞ்சைக்காரர் என்பதனால் இருக்குமோ.
நன்றி
விஸ்வநாதன்
அன்புள்ள ஜெயமோகன் சோபானம் கதையில் இந்தப்பகுதியை பலமுறை வாசித்தேன்.
“நீ எதற்காக சங்கீதம் கற்றுக்கொள்கிறாய்?”
“நான்.. நான்.. நன்றாகப் பாடவேண்டும்.. அதுதான்”
“ஏன் பாட வேண்டும்..?”
“தெரியவில்லை.. பாட வேண்டுமென்று தோன்றுகிறது..”
— என்ற உரையாடலில் சங்கீதத்தின் சாராம்சம் உள்ளது. பாடவேண்டும், நன்றாகப்பாடவேண்டும் என்பதைத்தவிர சங்கீதத்துக்கு வேறு நோக்கம் இருக்கக்கூடாது. சங்கீதம் வழியாக ஆன்மீகத்துக்குப் போகமுயல்வதுகூட தப்பான விஷயம்தான்.
சிவம்
அன்புள்ள ஜெயமோகன்
சோபானம் வாசித்தேன். சிறப்பான கதை. என்னுடைய வாசிப்பில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை. ஆனாலும் இதுதான் நல்ல கதை என்று சொல்வேன். பொதுவாக இசை , ஓவியம் போன்றவற்றை விவரித்துக் கதை எழுதுவதற்கு பத்து மார்க் குறைக்கவேண்டும். ஏனென்றால் அந்தக்கதைகள் நமக்கு அந்தக் கலைகளை ஞாபகப்படுத்துவதனால்தான் பிடித்திருக்கின்றன. அப்படி ஒரு பத்துமார்க் குறைத்தபிறகும்கூட இந்தக்கதை நன்றாக இருக்கிறது.
கதைக்குள் இசையில் உள்ள எல்லா கிளாஸ்களைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். நாடகக்காரர் போல பொட்டுப்போட்டுக்கொண்டு வரக்கூடியவர் கீழ் மட்டத்தில் என்றால் இசையை தேடிச்சென்று வாழ்க்கையை அர்ப்பணிக்கும் இளைஞன் முதல்மட்டத்திலே இருக்கிறார்கள். கான்சாகிப் இந்த எல்லா நிலைகளிலும் இருந்து மேலே செல்லக்கூடியவராக இருக்கிறார் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது
பிரபாகர்