அன்புள்ள ஜெ,
விதவிதமான கதைகள் தொடர்ந்து வருவது ஆச்சரியமாக இருக்கிறது. கெ.ஜெ.அசோக்குமாரின் வாசலில் நின்ற உருவமும் என்னை மிகவும் கவர்ந்தது. புகைமூட்டமான ஒரு விஷயத்தை அதற்கேற்ற தங்குதடையில்லாத சொற்கள் வழியாகச் சொல்லியிருக்கிறார். இவரது சில கதைகளைச் சொல்வனத்தில் வாசித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். மரணத்தருவாய் என்பது எப்போதுமே எல்லாருக்கும் முக்கியமானதாக இருந்திருக்கிறது. நம்முடைய குடும்பங்களிலே மரணத்தருவாயில் சொன்ன பல விஷயங்களைச் சுட்டிக்காட்டிப் பேசிக்கொண்டிருப்பர்கள். மரணத்தின்போது நோயெல்லாம் விட்டுமாறிவிடும் என்றும் இறந்தவர்கள் கண்ணுக்குத்தெரிவார்கள் என்றும் சொலலப்படுவது உண்டு. அந்த மர்மத்தை எல்லாரும் எழுதியிருக்கிறார்கள். டால்ஸ்டாய் எழுதியிருக்கிறார். புதுமைப்பித்தன் எழுதியிருக்கிறார். அதை மீண்டும் புதிய ஒருவிஷயத்துடன் எழுதுவதும் வெற்றிபெறுவதும் பெரிய விஷயங்கள். விதவிதமாக விளக்கம் கொடுக்கலாம். அப்படிப்பட்ட ஒரு விதமாக எழுதப்பட்டிருப்பது சிறந்த அனுபவத்தை அளிக்கிறது. நான் வாசலில் நின்ற உருவம் எது என்று விளக்கிக்கொள்ள விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும் சரி அது மரணம், அவ்வளவுதான்.
சிவம்
ஜெ,
அசோக்குமாரின் வாசலில் நின்ற உருவம் சிறப்பான கதையாக அமைந்திருந்தது. பாராட்டுக்கள். அந்த உருவம் இறந்துகொண்டிருப்பவரின் மகனாகவும் செத்துப்போன மூதாதைகளாகவும் மாறிமாறி விதவிதமாகத் தோற்றம்கொடுக்கிறது.
‘எனக்காகவா இவ்வளவும் பண்ற..’ என்றார்.
‘எது’
என்னை கவனிக்கிறது.. இந்த வேலையெல்லாம்.
‘இல்ல’
ஆங்…
‘இல்ல, எம் மவனுக்காக பண்றேன்’ என்றான் தீர்க்கமாக
இந்த உரையாடல் வழியாக மரணத்துக்கு முன்னால் அந்த தலைமுறைத்தொடர்ச்சி தென்படுவதை அற்புதமாக ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால் அது வேறு யாரும் இல்லை, மரணம் மட்டுமேதான், எந்த விளக்கமும் கிடையாது என்று கதையில் முடிவு வருவது கவித்துவமானது. ‘மெல்ல தலைதூக்கி முன்பே அறிந்த பதற்றத்தோடு வாசலை நோக்குகையில் வீட்டுகட்டு வாசலில் நின்றிருந்த அந்த கரிய உருவம் தடைகளற்று கடகடவென நடந்து தன்னை நோக்கி வருவதை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.’ என்ற வரி கதையை அழகாக முடித்துவைக்கிறது
செந்தில்
அன்புள்ள ஜெ,
’அசோக்குமாரின் கதை எனக்கு பர்க்மானின் செவெந்த் சீல் படத்தை நினைவூட்டியது. அதிலே மரணம் வந்து வாசலில் நிற்கும் ஒரு காட்சி உண்டு.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய். எதற்காக இந்த உலகத்தில் தனியனாக வந்தேன். நானா இந்த உலகத்தில் அனைத்து வளங்களையும் நுகர்ந்து வாழ்கிறேன். மருவாய் மலராய் மணியாய் ஒளியாய். எனக்கு மட்டுமானதா இந்த வளங்கள். என்னுடலா இந்த இன்பதுன்பங்களை அறிந்துகொள்கிறது? கருவாய் உயிராய் கதியாய் விதியாய். என் புலன்கள் எதை இதுவரை அறிந்திருக்கின்றன, எதை விட்டிருக்கின்றன. என் புலன்கள் அழியும் காலத்தில் நான் எதைத்தான் பெறுகிறேன். எதற்காக இவ்வளவு தூரம் ஓடிவந்தேன். அறிவு என்ற ஒன்று அழியும் நிலையில், அறிவில் பிறிது என்ற ஒன்றே அழியும்படியாக. என்ன சொன்னான் அவன். எனக்காக இல்லையா தன் மகனுக்கா என்றா சொன்னான்’
என்ற இடத்தில் ஒரு தேர்ந்த கதைசொல்லி தெரிகிறார். மரணத்தின்முன் மனம் சொற்களாகச் சிதறிவிடுவதை, அர்த்தமில்லாமல் பரந்து பரந்து விரிவதை மொழியிலே பிடித்துவிடமுடிந்திருக்கிறது
சண்முகம்
மதுரை .