அன்புள்ள ஜெமோ
இன்று வெளிவந்த ராஜகோபாலனின் வாயுக்கோளாறு கதை வாசித்தேன். ஒரு வழக்கமான விகடன் கதை போலத் தோன்றியது. ஒரு ஜோக்கை கதையாக ஆக்கியதுபோல இருந்தது. ஆனால் பிறகுதான் அந்தக்கதை தொடர்ந்து ஞாபகத்தில் இருந்துகொண்டே இருப்பதை உணர்ந்தேன். அது மிகமுக்கியமான விஷயமாக இருந்தது. அதாவது நாம் வழக்கமாக ஒரு விஷயத்தை கவனிப்போமே அதை இந்தக்கதையிலே கவனிக்கிறோம். அதன்பின்னர் அப்படியே விட்டுவிடுகிறோம். கொஞ்சம் கழித்து யோசிக்கும்போதுதான் இந்தக்கதையிலே நாம் புதியதாகச் சிலவிஷயங்களைக் கவனித்திருக்கிறோம் என்பது நமக்குத் தெரிகிறது
ஒருவர் தனக்கு வாயுக்கோளாறில் மரணம் வரும் என நினைக்கிறார், வேறுவிதமாக அது வருகிறது- இந்த அளவில் ஒரு வேடிக்கைக் கதையாக இதை வாசிக்கலாம். ஆனால் இன்னும் கூர்ந்து வாசிக்கையிலே ஆழமான ஒரு தளம் தெரிகிறது. அது ஒரு மனிதரின் மரணபயம். வாழ்க்கை முழுக்க ஒருமனிதர் வாய்வை அஞ்சுகிறார். வாயு என்பது அவருக்கு மரணம்தான். தன்னுடைய ருசியையும் சிந்தனையையும் முழுக்க அந்த பயத்தைக்கொண்டே தீர்மானித்துக்கொண்டிருக்கிறார். அந்த பரிதாபம்தான் இந்தக்கதையில் உள்ள உண்மையான கதை. அதைப்புரிந்துகொண்டால் கதைபிடிகிடைக்கும்.
இந்தமாதிரி தனக்கு இன்ன விஷயத்திலே கண்டம் என்று நினைப்பவர்களை நாம் நிறையவே பார்த்திருக்கிறோம். அவர்கள் மரணத்தைத்தான் பயப்படுகிறார்கள். மரணம் எப்படியும் தேடிவந்துவிடும் என்ற எளிமையான உண்மையை அவர்கள் அறிவதே கிடையாது. மரணம் அரங்க உணர்ச்சி இல்லாத கோமாளி என்று ஷேக்ஸ்பியர் சொன்னதைத்தான் விதவிதமாக எழுதிப்பார்த்துக்கொள்கிறோம்
[நான் கெத்தேல்சாகிபை படித்துவிட்டு ஒரு கடிதம் எழுதினேன். இது இரண்டாவது கடிதம். நடுவே நிறைய பணிமாறுதல்கள். ஓய்வாக இலக்கியம் வாசிக்கக்கூடிய வாழ்க்கையே இப்போது இல்லாமல் ஆகிவருகிறது ஜெயமோகன். இதைக்கூட பஸ்சிலே போகும்போது செல்போனில்தான் வாசித்தேன்]
சங்கரவேல்
***
அன்புள்ள ஜெ
ராஜகோபாலனின் கதை நீங்கள் இந்த வரிசையில் வெளியிட்டுவரும் கதைகளின் தரத்தில் இல்லை. வாசித்துமுடிக்கும்போது ஒரு சின்ன சிரிப்பு வருகிறது. அதோடு கதை முடிந்துவிடுகிறது. கதையின் தாத்பரியம் என நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரியவில்லை
சங்கரன் எம்
***
அன்புள்ள ஜெ
ராஜகோபாலனின் ’வாயுக்கோளாறு’ கதை சிறப்பான படைப்பு. இப்படி எளிமையான கட்டமைப்புடன் எழுத தன்மீதும் வாசகர்கள் மீதும் நம்பிக்கை தேவை. அது அவரிடம் இருக்கிறது.
ராஜா
***
அன்புள்ள ஜெயமோகன்
வாயுக்கோளாறு நல்ல கதை. இரண்டு விஷயங்கள் நினைவிலே எழுந்தன. ஒன்று பரீட்சித் மகாராஜாவை சர்ப்பம் பழத்தில் புழுவாக ஒளிந்து சென்று தீண்டுவது. எந்தக்கோட்டையிலும் மரணம் நுழைந்துவிடும்.
இரண்டு ந.முத்துசாமி எழுதிய ஒருகதை. மரணபயமே அன்றாடவாழ்க்கையாகக் கொண்ட ஒரு மனிதரைப்பற்றிய கதை. நினைவுக்கு வரவில்லை.
இதுவரை பல கதைகள் பல எழுத்தாளர்களின் பாணிகளிலே இருப்பதாக சொல்லியிருந்தேன். இந்தக்கதை கு.அழகிரிசாமியின் பாணியிலே இருக்கிறது
ராகவன் எம்
***