கதைகள் மேலும் கடிதங்கள்

அன்பு ஜெயன்,

தனசேகர்சிவா கிருஷ்ணமூர்த்திசுரேந்திரகுமார்மற்றும்
ஹரன் பிரசன்னா
இவர்களின் சிறுகதைகள் தங்கள் தளத்தில்
பிரசுரமானதே அதன் உச்சபட்ச அங்கீகாரமென
நம்புகிறேன். நான்கு கதைகளும் அதனதன் அளவில் சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் சிவாகிருஷ்ணமூர்த்தியின்
’ யாவரும் கேளிர்” மனதுக்கு மிக நெருக்கமாய் இருக்கிறது.
மனதாழத்தில் படிந்திருக்கும் கசடை வெளியே
அள்ளிப் போட்டிருக்கிறது சிவாவின் கதை. இக்கதை உண்மையைச் சொன்னதாலேயே மனசுக்கு நெருங்கி வந்ததோ என்னவோ?
சுரேந்திரகுமாரின் காகிதக் கப்பலுடன் நிறைய விஷயங்களை தொடர்புபடுத்திக் கொள்ளலாம் என்பதே அதன் சிறப்பு.
தொடரட்டும் உங்கள் பணி. காத்திருக்கிறேன் புதியவர்களின் கதைகளுக்கு.

சந்தானகிருஷ்ணன்.

அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்கட்கு,

காகிதக்கப்பல் எனும் சுரேந்திரகுமார் அண்ணாவின் சிறுகதையை தங்கள் தளத்தில் வெளியிட்டது தங்களது பெருந்தன்மையை குறிக்கின்றது. ஒரு இலங்கைத்தமிழன் என்ற முறையில் எனது மனமார்ந்த நன்றிகள்.

லிங்கனேசன்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்கட்கு,

உங்களது இணையத்தளத்தில் எனது எழுத்திற்கு நீங்கள் அளித்த அங்கீகாரத்திற்கு நன்றிகள். நான் எழுதிய முதல் கதையும், எனக்குக் கிடைத்த அங்கீகாரமும் என் வாழ்நாள் முழுதும் என் நினைவுகளுடன் இருக்கும். இன்று காலை ஒரு நண்பன் மூலம்தான் விபரம் அறிந்தேன். முதலில் என்னால் நம்ப முடியவில்லை. பின்னர் நானே பாரத்து உறுதிப்படுத்திக் கொண்டேன். உற்சாகமாக இருக்கிறேன்.

இனி இன்னும் நம்பிக்கையுடன் எழுதுவேன்.

நன்றி

சுரேந்திரகுமார்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் இணையதளத்தில் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் புதியவர்களின் கதைகளை ஆர்வத்துடன் வாசித்து வருகிறேன். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையாக உள்ளன. கதைகளிலே இதற்கு முன்பே தமிழில் எழுதியவேறுவேறு எழுத்தாளர்களின் சாயல்களும் உள்ளன. அதை ஒரு சிறப்பாகவே சொல்கிறேன். ஏனென்றால் அது இந்த எழுத்தாளர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கும் பாதையைக் காட்டுகிறது.

உதாரணமாக ஹரன்பிரசன்னாவின் கதையான தொலைதல் அசோகமித்திரனைப்போல உள்ளது. சிவா கிருஷ்ணமூர்த்தி எழுதிய யாவரும் கேளிர் கதை இந்திரா பார்த்தசாரதி எழுதிய கதை போல உள்ளது. முதல்கதையான தனசேகர் எழுதிய உறவு வண்ணதாசன் கதைபோல உள்ளது ஈழ எழுத்தாளரான சுரேந்திரகுமார் பல எஸ்.பொ எழுதிய உருவகக்கதைகளின் பாணியிலே எழுதியிருக்கிறார்.இவ்வாறு பலவிதமான கதைப்பாணிகள் அழியாமல் தொடர்வது முக்கியமான விஷயமாக நினைக்கிறேன்

வாழ்த்துக்கள்

ராகவன் எம்

உறவு தனசேகர்
தொலைதல் ஹரன்பிரசன்னா

காகிதக்கப்பல்
சுரேந்திரகுமார்
யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி

முந்தைய கட்டுரைபுதியவர்களின் கதைகள் 5, வாயுக் கோளாறு – ராஜகோபாலன்
அடுத்த கட்டுரைராஜகோபாலன், வாயுக்கோளாறு- கடிதங்கள்