அன்புள்ள ஜெமோ
இதுவரை பிரசுரமான மூன்று கதைகளுமே மூன்று வகைகளில் முக்கியமானவை. முதல்கதையான தனசேகரின் உறவு உணர்ச்சிகரமான யதார்த்தவாதக் கதை. இரண்டாம்கதையான சிவாகிருஷ்ணமூர்த்தியின் யாவரும் கேளிர் நவீன சட்டயர். சுரேந்திரகுமாரின் கதை நவீனக் கவித்துவம் கொண்டது. இளைஞர்கள் விதவிதமாக எழுதிப்பார்ப்பதும் ஒற்றைப்போக்கு என்று எதுவும் கண்ணிலே படாமலிருப்பதும் நிறைவளிக்கிறது. அதோடு இவர்கள் எல்லாருமே வாழ்க்கையை தாங்கள் பார்த்தவகையிலே எழுத முயன்றிருக்கிறார்கள். ஆகவே மூன்றுவகையான வாழ்க்கைகள் இவற்றிலே உள்ளன. தமிழ் வாழ்க்கையிலே இன்று முக்கியமாக உள்ள புலம்பெயர்ந்த அனுபவம் ஒருகதையில். ஈழத்தில் போருக்குப்பிறகுள்ள அனுபவம் இன்னொரு கதையில். கிராமத்து வாழ்க்கையில் அலைக்கழிப்பு இன்னொருகதையில். எல்லா கதைகளும் இப்படி நேரடியாக வாழ்க்கையைச் சார்ந்து இருப்பதும் பாசாங்கில்லாமல் இருப்பதும் மகிழ்ச்சியான விஷயங்கள். தொடரட்டும்
சாமிநாதன்
அன்புள்ள ஜெ
கதைகள் நான்குமே நன்றாக இருக்கின்றன. ஒன்றுடன் ஒன்று ஒப்பிட விரும்பவில்லை. இக்கதைகளில் இருந்து இளைஞர்களின் பிரச்சினைகள் என்ன என்று பார்க்க விரும்புகிறேன். ஆச்சரியமென்னவென்றால் எல்லாக் கதைகளும் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவை. எப்படி வாழ்க்கை மாறினாலும் பழைமைவாதம் அப்படியே இருப்பதை சிவாகிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். என்ன நடந்தாலும் அன்பு வாழ்க்கையை நிறைவடையச்செய்வதை தனசேகர் சொல்கிறார். ஹரன்பிரசன்னா இன்னொருவகையில் குடும்பத்தின் அன்பையும் அது சிலரை வெளியேறச்செய்வதையும் சொல்கிறார்.
வரட்டும்
செம்மணி அருணாச்சலம்
ஜெ,
சுரேந்திரகுமார் எழுதியகதையும் சிவாகிருஷ்ணமூர்த்தியின் கதையும் என்னை அதிர்ச்சி அடையச்செய்தன. இரண்டுவகையில். சுரேந்திரகுமாரின் கதை இன்றைய இலங்கையில் ஒரு சராசரி மனிதனின் மனநிலை எப்படி இருக்கும் என்றுதான் சொல்கிறது. அதற்கு அரசியல்கோட்பாடுகள், ஆவேசங்கள் எதிலும் நம்பிக்கை கிடையாது. நல்லவேளை ‘மழை’ விட்டுவிட்டது என்று மட்டும்தான் அது நினைக்கிறது.
அதேதான் சிவாவின் கதையிலும் உள்ளது. என்ன எப்படி மாறினாலும் காந்த ஊசி வந்து நிற்பதுபோல பழகிய வாழ்க்கையில் வந்து அசையாமல் இருக்கத்தான் நம்முடைய நடுத்தரவர்க்க மனம் நினைக்கிறது
இன்னும் ஒரு சில வருடங்களிலே ஈழத்தில் பிரபாகரனா யார் என்று கேட்பார்கள். 1970 ல் என்ன சமூகமனநிலை இருந்ததோ அதுதான் அபப்டியே நீடிக்கும் என்ற எண்ணம் வந்தது
தனசேகரின் கதை தனிப்பட்ட முறையில் எனக்கு பிடித்திருந்தது. அந்தக்கதையில் உள்ள வாழ்க்கை ஒரு விதி அல்ல. விதிவிலக்குதான். இருந்தாலும் அதை நம்ப ஆசைப்படுகிறோம்
சிவராம்