மொழி, 10 இலக்கணம்

ஜெ
வணக்கம் ஜெ.

நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.
உங்கள் எழுத்துகளுக்கு நன்றி. அதன் வீரியம் ஒரு தொற்றுநோய் போல வந்து ஆட்டிப்படைக்கிறது.
தமிழ் இலக்கணத்தை கற்க ஆவலாக உள்ளது. கடைசியாக பள்ளியில் படித்தது [6 வருடம் முன்னர்].
ஒரு நல்ல புத்தகத்தை பரிந்துரைக்கவும்.

நன்றி.
அசோக் குமார்

அன்புள்ள அசோக்,

எதற்காக நீங்கள் தமிழிலக்கணத்தை வாசிக்க விரும்புகிறீர்கள்?

நவீன உரைநடைக்காகவா? செய்யுள் எழுதுவதற்காகவா?

தமிழில் மரபான இலக்கணம் முழுக்க செய்யுளை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டது. நமக்கு உரைநடைக்கான இலக்கணம் இல்லை.

உரைநடைக்கான இலக்கணம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆறுமுகநாவலர், பின்னத்தூர் நாராயணசாமி அய்யர், வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார் போன்றவர்களால் உருவாக்கப்பட்டது. அதிகமும் ஆங்கில இலக்கணத்தை முன்னுதாரணமாகக் கொண்டது.

உரைநடை இலக்கணம் என்பது உரைநடை வளர்ந்து மாறும்போது தானும் மாறியாகவேண்டியது. தமிழாசிரியர்கள் அந்த மாற்றத்தை உணராமல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் உரைநடை இலக்கணத்தை ஏதோ புனித விதிபோல கடைப்பிடிப்பதனால் இலக்கணத்தைக் கற்பதென்பதே நவீன உரைநடைக்கு எதிரான செயலாக ஆகிவிட்டிருக்கிறது.

ஆகவே இலக்கணத்தை கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் அதை மொழி தன் படைப்பியக்கத்தில் அர்த்தபூர்வமாக மீறிச்செல்லும் சாத்தியங்களையும் புரிந்துகொள்ளுங்கள். ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என நம் மரபு அதை திட்டவட்டமாக வகுத்தும் வைத்துள்ளது.

இன்றைய தமிழ் உரைநடைக்கும் நெருக்கமான இலக்கணம் என்பது அ.கி.பரந்தாமனார் எழுதிய நூல்களில் உள்ளதுதான். கொஞ்சம் பழையதாக இருந்தாலும் அவரது ‘நல்லதமிழ் எழுதவேண்டுமா?’ ஒரு முக்கியமான வழிகாட்டி நூல்.

கண்டிப்பாகப் படிக்கக்கூடாத பல நூல்கள் இவ்வகையில் உள்ளன. நவீன உரைநடையை எவ்விதத்திலும் அறியாத அசட்டுப் பேராசிரியர்கள் அவர்கள் சின்னப்பிள்ளையாக இருக்கும்போது கற்ற மொழியிலக்கணத்தை மூர்க்கமான விதிகளாக வலியுறுத்தும் நூல்கள் அவை. பேராசிரியர் தமிழண்ணல், பேராசிரியர் நன்னன் ஆகியோர் ஒவ்வாமை நோயை உருவாக்கும் சிலவகை செடிகளைப்போன்றவர்கள்.

நவீன உரைநடை மேலேயே ஒரு வெறுப்பை உருவாக்கி, நம்மையும் அவர்களின் செத்த நடைக்குக் கொண்டுசெல்ல முயல்பவை இவை. உரைநடை என்பது சிந்தனையேதான். நல்ல உரைநடை என்பதற்கு நல்ல சிந்தனை என்றே பொருள். பழைய உரைநடை என்பது பழைய சிந்தனைதான்.

ஜெ

முந்தைய கட்டுரைஉடையார்-கடிதம்
அடுத்த கட்டுரையட்சி [சிறுகதை]