இலக்கிய மொழியாக்கம் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? தமிழின் சில படைப்புகள் எந்த அளவு ஆங்கில மொழியாக்கத்தில் வெற்றி கண்டுள்ளன? ஆங்கிலப் படைப்புகளுக்குத் தமிழில் வரவேற்பிருக்கிறதா? உங்கள் கருத்து? நல்ல மொழியாக்கத்திற்கு எது மிக முக்கியம்?
— ஷக்தி ப்ரபா.
இலக்கியம் என்பது இன்று உலக இலக்கியம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. உலக இலக்கியம் என்ற கருத்தே மொழிபெயர்ப்பு மூலம் உருவாக்கப்பட்டது. ஜெர்மனியக் கவிஞர் கதே அச்சொல்லை முதலில் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
தமிழில் பிறமொழிகளில் இருந்து மொழிபெயர்ப்புகள் நிறையவே வெளிவருகின்றன. அவையே இங்கே இன்று வாசிப்பின் தேவையைப் பெருமளவுக்கு நிறைவேற்றுகின்றன. இம்மொழிபெயர்ப்புகளில் மிகப்பெரும்பாலானவை எவ்வித ஊதியமும் பெறாமல் சுய ஆர்வம் காரணமாக மொழிபெயர்ப்பாளர்களால் செய்யப்படுபவை.
குமுதம் தீராநதி இணைய இதழில் நான் தமிழில் மொழிபெயர்ப்பு நாவல்கள் என்ற பெயரில் ஒரு தொடர் எழுதினேன். பல முக்கியமான நாவல்களை அதில் குறிப்பிட்டுப் பேசியுள்ளேன். நூலாக இவ்வருடம் வரலாம்.
தமிழில் இலக்கிய மறுமலர்ச்சியின் அடித்தளமாக மொழியாக்கம் எப்போதுமே இருந்துள்ளது. பழங்காலத்தில் அது மறு ஆக்கமாக இருந்தது. உதாரணம் தண்டியலங்காரம்.
நவீன இலக்கியம் தமிழில் வங்கப் படைப்புகளின் வரவுடன் தொடங்கியது எனலாம். தமிழ்ச் சிறுகதையின் முன்னோடியான வ.வெ.சு.அய்யர் தாகூரின் கதைகளை மொழிபெயர்த்தார். தாகூரின் கதையைத் தழுவி தமிழில் அவர் எழுதியதே முதல் சிறுகதை எனப்படுகிறது. [குளத்தங்கரை அரசமரம்] த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, ஆர்.ஷண்முக சுந்தரம் ஆகியோர் ஏராளமான வங்க நூல்களை தமிழுக்குக் கொண்டுவந்து பரவலான இலக்கிய ஆர்வத்தை உருவாக்கினார்கள். ஆரோக்கிய நிக்கேதனம் [தாரசங்கர் பானர்ஜி], வனவாசி [மாணிக் பந்தோபாத்யாய], பாதேர் பாஞ்சாலி [பிபூதிபூஷன் பந்தோபாத்யாய] ஆகிய வங்க நாவல்கள் த.நா.குமாரசாமியின் மொழிபெயர்ப்பில் சிறப்பாக வந்தவை. வி.ஸ.காண்டேகரின் மராத்தி நாவல்களை மொழிபெயர்த்த காஸ்ரீஸ்ரீ முக்கியமான மொழிபெயர்ப்பாளர். ‘யயாதி’, காண்டேகரின் முக்கிய நாவல்.
டி.எஸ். சொக்கலிங்கம் மொழிபெயர்த்த தல்ஸ்தோயின் ‘போரும் அமைதியும்’ தமிழ் மொழிபெயர்ப்பு முயற்சிகளின் சிகரம். [இப்போது வாங்கக் கிடைக்கிறது] க.சந்தானம், எஸ்.ராமகிருஷ்ணன், தொ.மு.சி.ரகுநாதன் ஆகியோர் ருஷ்ய இலக்கியங்களைச் சிறப்பாக மொழிபெயர்த்தவர்கள். சுத்தானந்த பாரதியார் விக்டர் யூகோ, கதே, தாந்தே போன்ற செவ்விலக்கியவாதிகளின் படைப்புகளைச் சுருக்கமாக மொழியாக்கம் செய்துள்ளார்.
தேசியப் புத்தக நிறுவனமும், சாகித்ய அக்காதமியும் ஏராளமான இந்திய நாவல்களைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளன. குர் அதுல் ஐன் ஹைதர் எழுதிய உருது நாவலான அக்னிநதி [சௌரி], மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் எழுதிய கன்னட நாவலான ‘சிக்க வீர ராஜேந்திரன் [ஹேமா ஆனந்த தீர்த்தன்], அதீன் பந்தோபாத்யாய எழுதிய வங்க நாவலான ‘நீலகண்டபறவையைத்தேடி’ [சு கிருஷ்ணமூர்த்தி], சிவராமகாரந்த் எழுதிய கன்னட நாவலான ‘மண்ணும் மனிதரும்’ [சித்தலிங்கையா] ஆகியவை முக்கியமான படைப்புகள். இந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு மிகவும் கடன்பட்டுள்ளோம்.
சோவியத் ருஷ்யாவின் ராதுகா பதிப்பகம், முன்னேற்றப் பதிப்பகம் ஆகியவை பல முக்கியமான நூல்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளன. ரா. கிருஷ்ணையா, நா. தர்மராஜன், பூ.சோமசுந்தரம் ஆகியோர் பல நூல்களை மொழிபெயர்த்துள்ளனர். சி.ஏ.பாலன் தகழி சிவசங்கரப்பிள்ளையின் பெரும் நாவல்களைத் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார்.
சிற்றிதழ்கள் சார்ந்து தொடர்ந்து மொழிபெயர்ப்புகள் வந்தபடியே உள்ளன. வெ.ஸ்ரீராம் ஃப்ரெஞ்சிலிருந்து காஃப்காவின் விசாரனை, காம்யூவின் அந்நியன், சார்த்ரின் மீளமுடியுமா போன்ற பல நூல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். குறிஞ்சிவேலன், நிர்மால்யா, சுரா போன்றவர்கள் மலையாளத்திலிருந்தும், தி.சு.சதாசிவம், பாவண்ணன் போன்றவர்கள் கன்னடத்தில் இருந்தும் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புச் செய்து வருகிறார்கள். அமரந்தா [முக்கியமாக சிலுவையில் தொங்கும் சாத்தான்- கூகி வா தியாங்கோ], எஸ்.பாலசந்திரன் [முக்கியமாக சே குவேரா வாழ்வு. கார்லோஸ் கஸ்டநாடா] ஆகியோர் கடுமையான உழைப்பைச் செலுத்தி இடதுசாரி இலக்கியங்களைத் தமிழாக்கம் செய்துள்ளார்கள். ஈழ மொழிபெயர்ப்பாளரான கெ.என்.மகாலிங்கம் சினுவா ஆச்சிபியின் சிதைவுகள் நாவலையும் மேலைச்சிறுகதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். எம்.எஸ், ஆர்.சிவகுமார், ராஜ்ஜா.பிரம்மராஜன், சா.தேவதாஸ், கோபாலகிருஷ்ணன், [சூத்ரதாரி] அசதா ஆகியோர் கவனமாக மேலைச்சிறுகதைகளையும் நாவல்களையும் மொழிபெயர்த்து வருகிறார்கள்.
தமிழ்ச்சமூகம் இவர்களைப் பொருட்படுத்துவது இல்லை. வாசகர்களுக்குக் கூட இவர்கள் பெயர்கள் நினைவில் இருப்பது இல்லை. பணமும் இவர்கள் பெறுவது இல்லை. ஆத்மதிருப்தி என்போமே அது மட்டுமே மிச்சம். நவீன இலக்கியத்தில் இவர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. இந்நூல்களுக்குப் பரவலான வரவேற்பு உள்ளது.
தமிழிலிருந்து அதிகமாகப் படைப்புகள் வெளியே போவது இல்லை. போகின்றவை பலசமயம் நல்ல படைப்புகள் அல்ல. பலவகையான ஆள்பிடிப்பு வேலைகள் தேவை என்கிறார்கள். நகரம் சார்ந்து பலவகைத் தொடர்புகளுடன் செயல்படுவது முக்கியமான தேவை. இமையம், சுந்தர ராமசாமி ஆகியோரின் எல்லாப் படைப்புகளும் ஆங்கிலத்தில் வரவுள்ளன. பாமா, ந.முத்துசாமி, அம்பை, அசோகமித்திரன், காவேரி லட்சுமிகண்ணன், சிவசங்கரி, வாசந்தி, தோப்பில் முகமது மீரான் போன்றோரின் ஆக்கங்கள் ஆங்கிலத்தில் வந்துள்ளன. ஆங்கிலப் பதிப்பகங்களின் ஆசிரியர் பொறுப்பில் இருப்பவர்கள் ஒரு சிறு குழுவுக்குள் செயல்படுவதனால் தமிழ்நூல்களில் மிகச்சிலவே ஆங்கிலத்துக்குச் செல்கின்றன.
தமிழ் நூல்கள் ஆங்கிலத்தில் நன்றாக மொழிபெயர்க்கப்படுவது இல்லை என்பதும் இன்றுவரை ஒரு தமிழ் நூலும் ஆங்கிலம் வழியாக இந்திய அளவில்கூடச் சிறு கவனம் பெற்றது இல்லை என்பதும்தான் உண்மை. சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை ஆங்கிலத்தில் சி.கிருஷ்ணன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு பெங்குவின் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அம்மன் கொடை என்பது அம்மன்ஸ் அம்ப்ரல்லா என்று மொழி ‘பெயர்க்க’ப்பட்டிருந்தது. லட்சுமி ஆம்ஸ்டம் நல்ல மொழிபெயர்ப்பாளார் என்கிறார்கள். நம் மொழிபெயர்ப்பாளர்கள் பலர் ஆங்கிலம் ‘படித்தவர்கள்’. பிழையின்றி எழுதுவார்கள். ஆனால் உயிருள்ள மொழிபெயர்ப்புக்குச் சமகால புனைவுநடையில் பயிற்சிதேவை. அது அவர்களுக்கு இல்லை. ஆகவே மொழிபெயர்ப்பு சம்பிரதாயமாக உள்ளது. நம் நூல்களை மொழிபெயர்த்த பிறகு மேலைநாட்டு வல்லுநர்கள் அவற்றை மேம்படுத்தினால் நம் மொழிபெயர்ப்புகள் கவனம் பெறக்கூடும்.
யூதர்கள் தங்கள் இலக்கியத்தை உலக அளவில் முன்னிறுத்தினார்கள். அதன் விளைவாக அவர்களின் கௌரவம் அதிகரித்தது. செல்வாக்குப் பெற்றுவரும் தமிழ்ச் சமூகம் அப்படிச் செய்யலாம்.
ஆனால் அது நிகழும் என நான் நினைக்கவில்லை. நம்மில் இருவகைப்போக்குகளே உள்ளன. ஒன்று, தமிழிலக்கியத்தை முற்றாகப் புறக்கணிப்பது, எழுத்தாளர்களை வசைபாடச் சிறு வாய்ப்பிருந்தால்கூட அதைமட்டும் கடமையாகச் செய்வது. இரண்டு, இங்கே படிப்பவற்றை தங்கள் சொந்தப் படைப்பாக மறுசமையல் செய்வது. இப்போது ஆங்கிலப் பிரசுர உலகில் நன்றாக செல்லுபடியாகின்றவை இத்தகைய இட்லி உப்புமாக்கள்தான். அவை பெருகவே வாய்ப்பு அதிகம். இந்தியாவில் உயர்குடி தாழ்குடி வேறுபாடு மிக அதிகம். உயர்குடிகளின் மொழி ஆங்கிலம். ஆகவே உயர்குடிகளுக்குப் பிடித்தது, அவர்களுக்கு உரியது மட்டுமே ஆங்கிலத்துக்கு வரும். மொழிபெயர்ப்பாளர் தன்னை எஜமான் ஆகவும் எழுத்தாளனை வாசலில் வந்து நிற்கும் கூலியாளாகவும் பார்ப்பதே இங்குள்ள நிலைமை. காரணம் ஆங்கிலத்தின் எஜமானத்தன்மை.
என் கணிப்பில் தன்னை முன்வைக்க பணபலம், சாதிபலம், தொடர்புபலம் மூலம் முயல்பவர்களின் நூல்களே வருங்காலத்திலும் அதிகமும் ஆங்கிலத்தில் வரும். பயிற்சியற்ற, ஆத்மார்த்தம் மட்டுமே தகுதியாகக் கொண்ட முயற்சிகள் சிலவும் நிகழலாம். இருவகையிலும் நூல்கள் கவனம் பெறச் சாத்தியங்கள் இல்லை. ஆகவே குறைந்தது அடுத்த 25 வருடங்களுக்குத் தமிழிலக்கியம் மொழிபெயர்ப்பு மூலம் கவனம் பெற வாய்ப்பே இல்லை.