டாக்டர் அ.கா. பெருமாள் அவர்கள் எழுதிய விரிவான வரலாற்றாய்வு நூலான ‘ குமரியின் கதை: குமரிமாவட்ட வரலாறு ‘ தமிழினி வெளியீடாக வரவுள்ளது. இதுநாள்வரையிலான வரலாற்றாய்வுத்தரவுகளை சீரானமுறையில் அதில் தொகுத்துள்ளார். குமரிமாவட்ட ஆய்வுகளின் முன்னோடிகளான கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை, எஸ். வையாபுரிப்பிள்ளை கெ.கெ. பிள்ளை ஆகியோரின் ஆய்வுகளை மேலதிகமாக ஆய்வு செய்து நூல்களும் கட்டுரைகளும் எழுதியுள்ளார் பெருமாள் அவர்கள். சென்ற இருபதாண்டுகளில் உபரியான பல தகவல்களும் கிடைத்துள்ளன. பல ஏட்டுச்சுவடிகளை பெருமாள் அவர்களே அச்சேற்றியுள்ளார். இதற்கு உபரியாக பெருமாள் அவர்கள் நாட்டாரியல் சார்ந்த கோணத்தில் குமரிமாவட்ட வரலாற்றை தனியாக ஆய்வு செய்து புதிய தகவல்களை கண்டடைந்துள்ளார். அவ்வகையில் ஒரு முழுமையான ஆய்வு நூல் இது.
நூலின் உருவாக்கத்தில் ஆர்வலன் என்ற அளவில் ஒரு பங்கு எனக்கு உண்டு. பதிப்பாளரும் புகைப்படக்காரருமான வசந்தகுமார் குமரிமாவட்டத்தில் சுற்றி சில புகைப்படங்களை அந்நூலுக்காக எடுக்க விரும்பினார். நானும் வசந்தகுமாரும் புகைப்படக்காரரான மாரீஸும் பெருமாள் அவர்களும் கார் எடுத்துக்கொண்டு நான்குநாட்கள் குமரிமாவட்டத்தில் அலைந்து புகைப்படங்கள் எடுத்தோம். இருநாட்கள் என் குழந்தைகளையும் அழைத்துச் சென்றிருந்தோம். பல இடங்கள் நான் போனவை என்றாலும் இப்பயணம் நினைவுகளை புதுப்பித்துக் கொள்ளவும் புதிய நினைவுகளை உருவாக்கிக் கொள்ளவும் உதவக்கூடிய ஒன்றாக அமைந்தது. எம்.வேதசகாய குமார் உடல்நலக்குறைவால் கலந்துகொள்ளமுடியவில்லை.
முதலில் நாகர்கோவிலில் என் வீட்டிலிருந்து கிளம்பினோம். திருவனந்தபுரம் சாலையில் குமாரகோவில் திருப்பம் அருகே ஒரு குளாளர் வீடு உள்ளது. குமரிமாவட்டத்திலேயே இப்போது மிகச்சிலர்தான் சுடுமண் உருவங்கள் செய்துவருகிறார்கள் . முன்பு குமரிமாவட்டத்தில் பெரும்பாலும் எல்லா குயவர்களும் இவ்வுருவங்களைச் செய்துவந்தார்கள். தாய்வழிச் சொத்துரிமை நிலவிய இச்சமூகத்தில் பெண்தெய்வங்கள் மிக அதிகம். அனேகமாக எல்லா குடும்பங்களிலும் பல பெண்தெய்வங்கள் இருக்கும். மரபான தெய்வங்களுடன் அவமரணமான பெண்களும் கன்னியாக மரணமடைந்த பெண்களும் முழுக்கர்ப்பிணியாக மரணமடைந்த பெண்களும் தெய்வங்கள் பட்டியலில் சேர்ந்துகொண்டே இருப்பார்கள். இவர்கள் அனைவருமே ‘இசக்கி ‘ என்ற பொது தெய்வ அடையாளத்துக்குள் சென்று இணைவார்கள். குமரிமாவட்டத்தில் பல்லாயிரம் இசக்கிகள் உண்டு. ஆண்கள் மாடன் என்ற தெய்வ உருவத்தில் இணைகிறார்கள்.
இசக்கியர் இறந்தபிறகு கைலாயம் சென்று சிவனிடம் வரம் பெற்று மீண்டு பற்பல கொடுமைகளை இழைப்பார்கள். சூலிகளைக் கொல்ல வரம் சூல்பிள்ளையை தின்ன வரம் பயிர் கருகவைக்க வரம் என்று பல வரங்கள் அவர்களுக்கு உண்டு. அவர்களை அஞ்சி மக்கள் அவர்களுக்கு உரிய பலிகள் அளித்து குளிரச்செய்ய முயல்வார்கள். அது வழிபாடாக மாறுகிறது. பலிகள் கொடை எனப்படுகின்றன. இத்தெய்வங்கள் எல்லாமே பொதுவாக சைவமரபுடன்மட்டுமே அடையாளப்படுத்தப்படுகின்றன என்பது அ.கா. பெருமாள் அவர்களின் ஆய்வு முடிவாகும்.
‘கருங்கண்’ இயக்கி என்ற சொல்லாட்சி சிலப்பதிகாரத்தில் வருகிறது. யக்ஷி என்ற மோகினித்தெய்வம் கேரளத்தில் மிகப்பிரபலம். அதுவே இயக்கி ஆயிற்றா இல்லை இயக்கிதான் யக்ஷியாக சொல்லப்பட்டதா என்பது விவாதிக்கப்படவேண்டிய விஷயம். குமரிமாவட்டத்தின் தமிழ்நாட்டை ஒட்டிய பகுதிகளில் [தோவாளை அகஸ்தீஸ்வரம் தாலுக்கா] இசக்கியம்மன்கள் அதிகம். கேரளத்தை ஒட்டிய பகுதிகளில் [கல்குளம் விளவங்கோடு தாலுக்கா] யக்ஷிகள் அதிகம். ஆனால் பல இடங்களில் இரு தெய்வங்களுமே உள்ளன. இத்தெய்வங்கள் நாட்டார் மரபில் முளைத்தவை. பிறகு இப்பகுதியை அரவணைத்துக்கொண்ட சமணமரபுக்குள் இவை புகுந்தன. சமண மரபில் தமிழகத்தில் மட்டுமே பெண்தெய்வங்கள் இத்தனை அதிகமாக உள்ளன. வைதீக மதத்துக்கு மாற்றாக எழுந்ததும் எளிய மக்களின் மதமும் ஆகிய சமணம் எளிய மக்களின் தொல்சமயக் கூறுகளை உள்வாங்கிக் கொண்டது இயல்பே. சமணம் அழிந்தபிறகு சமணசமயக் கூறுகளுடன் யட்சிகளும் இயக்கிகளும் மேலும் நாட்டார் தெய்வங்களாகவே நீடித்தார்கள். சமணசமயக் காவியமான நீலகேசியின் கதைதான் பஞ்சவன்காட்டு நீலியின் கதை. பஞ்சவன்காடு இன்று குடியிருப்புப்பகுதி. நான் அங்கேதான் வசிக்கிறேன். இட்டகவேலி நீலகேசி அம்மன்தான் என் குலதெய்வம்.
இசக்கிகளுக்கு நிலையான பெரிய கற்கோவில்கள் இல்லை. பெரும்பாலும் தனியான வனப்பிராந்தியங்களில் உள்ள மரத்தடிகளே இவர்களுடைய ஆலயங்கள். பெரிய ஆலமரங்களின் அடியிலும் அரச மரங்களின் அடியிலும் யட்சிகள் சிறு கற்களாக நாட்டப்பட்டிருக்கிறார்கள். சில சமயம் இரும்பு சூலாயுதம். அபூர்வமாக அம்மரத்தில் அறையப்பட்ட முகம். பிற்பாடு மூங்கில் ஓலை ஆகியவற்றால் சிறு வீடுகள் போன்ற கோயில்கள் கட்டப்பட்டன. ஐம்பதுவருடம் முன்பு இவை ஓடுபோட்ட கோவில்களாயின. இப்போது கான்கிரீட்டில், சிற்பசாஸ்திரத்தை முழுக்க ஏற்காவிட்டாலும். காட்சிக்கு சம்பிரதாயமான கோவில்கள் என்று தோற்றமளிக்கும் வகையில் சிறு கோவில்கள் கட்டப்படுகின்றன. செல்வாக்கான சாதிப்பின்புலம் உள்ள கோவில்கள் விரிவாக திண்ணை மண்டபங்களுடன் எழுப்பப்படுகின்றன. இசக்கிகள் எல்லா சாதியினருக்கும் உண்டு. வேளாளர், நாடார், நாயர் சாதியினரே அதிகமும் வழிபடுகிறார்கள். நிலையான உருவம் இல்லாமையினால் பண்டைக்காலத்தில் இசக்கிக்கு ‘கொடை’ நடத்தும்போது சுடுமண் உருவங்களை செய்துவைத்து பூசைசெய்வது வழக்கம். பிறகு வேண்டுதல்களுக்காக அவற்றை செய்துவைக்கும் வழக்கம் வந்தது. இப்போது முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட கருங்கல் சிலைகள் கோவில்களில் அமர்ந்து விட்டன. கொடைகளுக்கு பதிலாக மந்திரங்களின் அடிப்படையிலான பூசைகள் வந்துவிட்டன. ஆகவே பொதுவாக இப்போது சுடுமண் உருவங்கள் செய்யப்படுவது இல்லை.
சுடுமண் உருவங்களை சிலை என்றோ சிற்பம் என்றோ சொல்லலாகாது என்றார் பெருமாள். சிலை, சில்பம் என்ற சொற்கள் கல்லைக் குறிப்பவை. இவை உருவங்கள் மட்டுமே. இவற்றின் செய்முறை, அழகியல் எல்லாமே வேறு. ஆனால் இதேபாணியில் செய்யப்பட்ட கற்சிலை ஒன்று பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ளது. இங்கே இவை ஒரு கலையாக செய்யப்படுவது இல்லை. தனித்திறனுக்கு இடம் இல்லை. ஒரேமாதிரியான வடிவங்கள்தான் , தெய்வங்களுக்கு ஏற்ப சில அடையாளங்கள் வேறுபடும். உதாரணம் மேலாங்கோட்டு அம்மன் என்றால் குழந்தையை வாயில் கடித்துக்கொண்டிருக்கும்.
குளாளர்வீடு சிறு ஓட்டுவீடு. சமீபகாலமாக உருவம்செய்வது குறைந்துவிட்டது . செய்தாலும் சிறிய உருவங்கள்தான். ஒரு உருவம் வேலைமுடியாமல் இருந்தது. ஒரு உருவம் சரியாக வராமல் உடைந்துவிட்டிருந்தது. பெண்கள் இப்போது அதிகமும் பூந்தொட்டிகளின் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள் .நிலையான வேலை கிடைப்பது அதிலிருந்துதான். நாங்கள் சென்றதுமே குழந்தைகள் பெண்கள் எல்லாரும் கூடிவிட்டார்கள். உடைந்த உருவம் ஒன்றை புகைப்படம் எடுத்தோம். மேலாங்கோட்டு அம்மனின் உருவம். சுடுமண் உருவங்களுக்கு முன்பெல்லாம் வண்ணம் பூசப்படுவது இல்லை. பிறகு வண்ணம் வந்தது. இப்போது ஏஷியன் பெயிண்ட் அடித்து பிளாஸ்டிக் பொம்மைபோல ஆக்கிவிடுகிறார்கள். நீண்டகால கைப்பழக்கம் உருவங்களில் உக்கிரத்தையும் உயிர்க்களையையும் உருவாக்கிவிட்டிருக்கிறது.
ஒருசிலை செய்ய குறைந்தது இரண்டாயிரம் ரூபாய்முதல் ஐந்தாயிரம் ரூபாய்வரை ஆகும் என்றார் குயவர் சுப்ரமணியம். ஆனால் அதிகமாக ஆர்டர்கள் வருவது இல்லை. களிமண்னை மணலுடன் சேர்த்து அரைத்து செய்யவேண்டும். மணல் அதிகமானால் பசை குறைந்துவிடும். குறைந்தால் சுடும்போதுவெடித்துவிடும். மண்கலம் செய்வதுபோலவே சக்கரத்திலிட்டு சுழற்றி செய்து அதன்மீது தனித்தனியாக உறுப்புகளைப்பொருத்தி இவ்வுருவங்களை எழுப்புகிறார்கள். நுட்பமான அணிவேலைகளை பெண்கள் நெடுநேர உழைப்பின் விளவாக உருவாக்குகிறார்கள்.
உருவங்களை புகைப்படம் எடுத்தோம். குழந்தைகள் கூடிநின்று காமிரா என்ற விந்தையை கவனித்தன. சுடுமண் உருவங்கள் செய்யும் கலையை பாதுகாக்க பலவகையான முயற்சிகள் செய்யப்படுகின்றன. ஆனால் நடைமுறையில் அதனால் ஆய்வாளர்கள், சில அமைப்புகள் ஆகியவையே லாபம் அடைகின்றன. அக்கலைக்குத் தேவையான சமூகஅடிப்படை இல்லமலாகும்போது அவை இயல்பாகவே அழிவை நோக்கிச் செல்கின்றன.
‘மேலாங்கோட்டு அம்மனையே பார்க்கலாம் ‘ என்றேன். குமாரகோவில் போகும் வழியில்தான் அம்மனின் கோவில். என்னுடைய ‘அன்னை’ என்ற கதையில் மேலாங்கோட்டு அம்மனின் ஐதீகம் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. ‘பிள்ளையைத் தின்னும் அம்மன் ஒரு பயங்கரமான கவர்ச்சி கொண்ட படிமம்தான் ‘ என்றார் வசந்தகுமார் .
[தொடரும்]
[2003-இல் சென்ற பயணம்]
நன்றி திண்ணை இணைய இதழ்
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20309046&format=html&edition_id=20030904