ஆங்கில இந்தியச்சமூகமும் தமிழிலக்கியமும்

அன்பின் அண்ணன் ஜெயமோகன்,

கடந்த சில நாட்களாக ஆங்கிலோ இந்தியத் தமிழர்களைப் பற்றி நான் அறியும் விசயங்களே இந்தக் கடிதம் எழுதக் காரணம். (பெரும்பாலும் சென்னையை விட்டு வெளியேறிவிட்டார்கள். மற்றவர்களும் கூடிய விரைவில் வெளியேறிவிடுவார்கள். அவர்களின் உணவு மற்றும் ஒழுக்கம் குறித்த பார்வை, நம்மில் இருந்து வேறுபடுவது போலவே, ஆங்கிலேயப் பார்வையிலும் வேறுபடுகிறது. அது அடையாளச் சிக்கல், சமூகப் புறக்கணிப்பு என வேறொரு தளத்தில் இயங்குகிறது)

இதுவரை நான் வாசித்த தமிழ் இலக்கியங்களில் ஆங்கிலோ இந்திய மக்களைப் பற்றிய பதிவுகள் மிகக் குறைவு.

முக்கியமாக எஸ்.ராவின் யாமம் – ஒரு முழுமை அடையாத – ஆனால் முக்கியமான ஆங்கிலோ இந்தியப் பெண்ணைக் காட்டியிருக்கிறது. அதன் பின் சமீபத்தில் அவர் அந்தி மழையில் எழுதியிருக்கும் ஒரு கதையும் அப்படிப்பட்ட ஆங்கிலோ இந்தியப் பெண்ணைப் பற்றிப் பேசுகிறது.

ஊமைச்செந்நாய் கூட ஆங்கிலோ இந்தியன்தான். ஆனால் அது பேசிய தளமும், கருத்தும் வேறு.

முற்றிலுமாக தமிழ் – ஆங்கிலோ இந்தியச் சமூகத்தைத் தளமாகக் கொண்ட இலக்கியப் படைப்புகள் ஏதேனும் இருக்கிறதா? அப்படி இல்லை எனில், ஆங்கிலோ இந்திய எழுத்தாளர்கள் யாரேனும் தமிழில் எழுதி இருக்கிறார்களா?

ஆங்கிலோ இந்திய சமூகத்தின் கலாசார, கலை , வாழ்வியல் முரண்கள் பதிவு செய்யப் பட வேண்டும். இல்லை என்றால், நம் சமூகத்தின் இனக்குழு ஒன்றின் வரலாறே பதிவு செய்யப்படாமல் போய்விடும், இல்லையா?

நன்றி.

அன்பின்,
பா.சரவணன்

அன்புள்ள சரவணன்,

தமிழகத்தில் உள்ள ஆங்கில இந்தியர்களைப்பற்றி பெரிதாக ஏதும் எழுதப்படவில்லை என்பது உண்மை. பெரும்பாலும் புனைவுகளில் எதிர்மறைக்குறிப்புடன் – பலவீனமான ஒழுக்கவியல் கொண்டவர்கள் என்ற மதிப்பீட்டுடன் – அவர்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சென்னை, திருச்சி இரு ஊர்களிலும்தான் ஓரளவுக்கு பெரிய ஆங்கில இந்தியச் சமூகம் இருந்துள்ளது என்பதும் ஓர் உண்மை. அங்கு மட்டுமே ஒரு முழுமையான வாழ்க்கைச்சித்திரத்தை உருவாக்குமளவுக்கு ஆங்கில இந்தியச் சமூகத்துடன் எழுத்தாளர்கள் நெருங்கிப்பழக முடியும்.

ஆங்கில இந்தியச்சமூகம் தமிழ்ப்பொதுச்சமூகத்தில் இருந்து தன்னை ஒதுக்கி வைத்துக்கொண்டது. அத்துடன் தமிழை அது தன் மொழியாகக் கொள்ளவும் இல்லை. ஆகவே பிறர் எழுதவும் வழியில்லை. அவர்கள் எழுதவும் முடியவில்லை.

தமிழில் ஆங்கில இந்தியச் சமூகத்தின் சித்திரங்கள் அசோகமித்திரனின் லான்ஸர்பாரக் கதைகளில் அழகாக பதிவாகியிருக்கின்றன. ஆனால் அவர் நன்கறிந்த டெரன்ஸ் என்ற ஒரு நண்பனின் குடும்பத்தின் கதை மட்டும்தான் அது.

அதைத்தவிர எழுதியவர் என்றால் கி.ஆ.சச்சிதானந்தத்தைச் சொல்லலாம். சில நல்ல கதைகளில் ஆங்கில இந்தியச் சமூகம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஜெ

முந்தைய கட்டுரைசராசரிகள்
அடுத்த கட்டுரைவாடிவாசல் பற்றி