இவ்வளவு வெளிப்படையாக இதை எதிர்பார்க்கவில்லை.:)
நீங்கள் குறிப்பிடும் வரலாற்றாசிரியர்களால் ராமாயணமும் மகாபாரதமும் திருத்தி எழுதக்கூடிய நிலை வரலாம்.
நட்புடன்
கிறிஸ்
கிறிஸ்,
இவ்வளவு வெளிப்படையாக இதை எதிர்பார்க்கவில்லை என்று லேசான கிண்டலுடன் நீங்கள் ஜடாயு எழுதியதைச்சொன்னாலும் அவர் எழுதியதுதான் உண்மை. அதை வெளிப்படையாகச்சொல்லாமல் என்ன செய்வது? அப்படி இல்லை என்றால் அதற்கான உங்கள் தரப்பு வாதங்களை வைக்க வேண்டுகிறேன்.
பல ஸ்ம்ருதிகள் இருந்திருக்கின்றன. மனு ஸ்ம்ருதியும் அதில் ஒன்று. அவை இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் வழக்கத்தில் இருந்ததாக எந்த ஆய்விலும் இல்லை. மனு ஸ்ம்ருதி எப்போது எழுதப்பட்டது என்பதையும் யாராலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இந்து மரபெங்கிலும் ஆளுமை செலுத்தியதாக எந்த ஒரு ஸ்ம்ருதியையும் எந்த காலகட்டத்திலும் குறிப்பிட்டு சொல்லவும் முடியாது. மனு ஸ்ம்ருதி இந்து சமூகத்தை வரையறுத்ததாக முன்னிறுத்தப்பட்டது பிரிட்டிஷார் வந்த பிறகுதான்.
18-ஆம் நூற்றாண்டில் இந்தியாவை வெல்லத்தொடங்கிய பிரிட்டிஷார் இந்திய சமூகங்களை நிர்வகிக்க அவசியம் வந்த போது இந்திய சமூகத்துக்கான ஒட்டு மொத்த சட்டம் தேடி மனு ஸ்ம்ருதியை (சில பண்டிட்டுகளின் உதவியுடன்) மொழிபெயர்த்ததில் தொடங்கியதே இந்த மனு ஸ்ம்ருதி மையப்படுத்தல்.
இந்திய மரபில் சமூக ஒழுக்கவிதிகள் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப மாறும் என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. அதன் நெகிழ்வுத்தன்மைக்கும் தொகுக்கும் தன்மைக்கும் இது அடிப்படையானது. ஆனால் அதுவே இந்திய சமூகங்களை ஒரே பொது சட்டத்தின் கீழ் நீதி நிர்வாகம் செய்வதை பிரிட்டிஷார் பார்வையில் சிக்கலானதாகவும் ஆக்கியது. அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு அவசரமாய் வேண்டியிருந்தது இந்தியாவிற்கானதொரு மத அடிப்படை சட்ட நூல். இதற்கு அவர்களது வரலாற்றுப்பின்னணியும் காரணாக இருந்தது.
ஒரே புனித மத நூல், அதன் அடிப்படையில் மதத்தலைமை வகுத்த சட்டம் என்கிற- இந்திய சமூகங்களுக்கு பொருந்தாததொரு அணுகுமுறையை அடிப்படையாக்கி அவர்கள் இந்தியாவைப் புரிந்துகொள்ள முயன்றனர். அது அவர்களது செமிட்டிக் மதப் பின்னணியிலிருந்து அவர்கள் கற்றுக்கொண்ட வழிமுறை. அவர்களால் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வழிமுறை. ஹிந்து சமூகத்திற்கான ஆரம்ப சட்டங்களை வகுக்கவும், அதில் பிரச்சனை என்று வந்தால் அதன் பழியை இந்து மதத்தின் மேலேயே போடவும் இது வசதியாக இருந்தது. அரசாங்கத்தை தன் கையிலும் அதன் அதிருப்திகளை இந்து சமூகத்தின் பிரிவுகளின் மீது திருப்பவும் என்று பிரித்தாளும் அணுகுமுறைக்கும் ஏதுவானது. இதை வைத்து இந்து மதத்தையே இறுகிய பிற்போக்கு மதமாகக்காட்டவும், இந்து சமூகத்தை அறமற்ற சமூகமாக பரப்புரைக்கவும் கிறித்துவத்துக்கான மதமாற்றப்பாதையை ஏற்படுத்தவும் முடிந்தது.
இதைச்சொல்வதால் பிரிட்டிஷாருக்கு முந்தைய இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகளே இல்லை, பிரிவுகளே இல்லை, அநீதிகளே இல்லை என்று நான் சொல்வதாக அர்த்தம் கொண்டு விட வேண்டாம். மனு ஸ்மிருதியே இந்து சமூகம் முழுவதையும் மொத்தமாகக் கட்டியாண்டது என்கிற வரலாற்றுக் கதையாடலின் ஆரம்ப விதையைச் சுட்டிக்காட்டவே இதை எழுதினேன்.
மேற்கு நமக்குக்காட்டிக்கொடுத்தைத் தாண்டிச்சென்று நமக்கான வரலாற்றை இந்தியப்பார்வையில் மீட்டு எழுத வேண்டிய அவசியத்தில் இன்று இருக்கிறோம். மனு ஸ்மிருதி என்று நம்மேல் சுமத்தப்பட்ட ஒன்றை எல்லா விதத்திலும் இனியாவது இறக்கி வைத்து விட்டு முன்னேற வேண்டும்.
அருணகிரி.
அன்புள்ள கிறிஸ்
உங்களுடைய ஒற்றைவரி பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. இது உங்கள் தரப்பு முன்முடிவை மட்டுமே காட்டுகிறது.
அத்துடன் நீங்கள் தொடர்ச்சியாக வாசிப்பதில்லை என்பதையும் அவ்வப்போது ஆங்காங்கே தொட்டுத்தொட்டு வாசிக்கிறீர்கள் என்பதையும் ஆதாரமாக்குகிறது. அதனடிப்படையில் உங்கள் உணர்ச்சி சார்ந்த முடிவுகள் அடிபடாமல் பேணிக்கொள்கிறீர்கள். வரலாற்றாய்வு என்பது சமரசமில்லாமல் முழுமையை நோக்கிச் செல்வதுதான்.
நான் மனுஸ்மிருதி உட்பட ஸ்மிருதிகளைப்பற்றி பல பக்கங்களுக்கு பலமுறை எழுதியிருக்கிறேன் . மீண்டும் தொகுத்துச் சொல்கிறேன்
1. இந்தியவரலாற்றில் மனுஸ்மிருதியின் இடம் பற்றிய நவீன ஆய்வுகளைச் செய்தவர்கள் மதவாதிகளோ அல்லது சாதியவாதிகளோ அல்ல. மாறாக அவர்கள் ஆளுக்கொரு ஸ்மிருதியைத்தான் சொன்னார்கள் .ஆங்கிலேயரும் அவர்களின் ஆதரவாளர்களும்தான் மனுஸ்மிருதியே இந்திய மரபின் சாரம் என்று வாதிட்டார்கள். அதற்கு மாற்றான கருத்துக்களைச் சொன்னவர் முதலில் விவேகானந்தர். பின்னர் இடதுசாரி வரலாற்றாசிரியர்கள்.
2. அவ்வாறு இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் சொல்வதற்கான காரணம் சமூகவியல் சார்ந்து அவர்கள் வரலாற்றை ஆராய்ந்ததுதான். இந்தியாவின் சமூகவியல் சித்திரத்தில் மனுஸ்மிருதியின் இடம் என்பது மிகமிகக் குறைவு. இந்திய சாதிகளில் மனுஸ்மிருதியால் கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் மிகக்குறைவானவர்கள் மட்டுமே என்பது நம்மைச்சுற்றி நோக்கினாலே தெரியவரக்கூடியதுதான்
3. இந்தியாவில் மனுஸ்மிருதிதவிர பல ஸ்மிருதிகள் இருந்துள்ளன. நாரத ஸ்மிருதி, யம ஸ்மிருதி, யாக்ஞவால்கிய ஸ்மிருதி முதலியவை. இவை தவிர சங்கரஸ்மிருதி உட்பட பல பிராந்திய ஸ்மிருதிகளும் உள்ளன. சாதி ,ஆசாரங்கள் உட்பட அனைத்திலும் இவை ஒன்றுக்கொன்று மாறுபட்ட கோணங்களை முன்வைக்கின்றன. இவை பல தளங்களில் ஒரேசமயம் நடைமுறையில் இருந்தன.
3 பி.வி.காணே என்ற ஆய்வாளர் இந்திய தர்ம சாஸ்திரங்களை விரிவாக ஆராய்ந்து எழுதியபின்னர்தான் மனுஸ்மிருதி போன்றவற்றை ஒற்றைப்படையாக பார்க்கும் பார்வை இல்லாமலானது. ஸ்மிருதிகள் கீழிருப்பவர்களைச் சுரண்டும்பொருட்டு மேலிருந்து உருவாக்கி வன்முறை மூலம் திணிக்கப்பட்டவை என்ற பார்வை மாறியது. அவை சமூகத்தின் வளர்ச்சிப்போக்கில் சமூக அமைப்புகளை உறுதியாக நிறுவும்பொருட்டு உருவாக்கப்பட்ட ஏற்பாடுகள் மட்டுமே. தேவைக்கேற்ப அவை மாறிக்கொண்டே இருந்திருக்கின்றன. தர்மசாஸ்திரங்களை ஒரு பெரிய தொடர் இயக்கமாக, ஒரு பரிணாமமாக பார்க்கும் பார்வை உருவானது. மனுஸ்மிருதியை மட்டுமே மையமாக ஆக்கும்பார்வையும் மறைந்தது
4. பி.வி.காணே ஆய்வுக்கழகத்தில் ஆய்வுசெய்தவர் மார்க்ஸியநோக்குள்ள வரலாற்றாய்வாளரான டி.டி.கோசாம்பி. அவராலும் அவர் வழிவந்தவர்களாலும்தான் இந்திய வரலாறு புதியமுறையில் ஆராயப்பட்டது. இந்தியவின் சமூக அமைப்பு சிலரால் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது என்ற குறுகிய அசட்டுப்பார்வைக்குப் பதிலாக அது உற்பத்தி வினியோகசக்திகளின் பரிணாமம் மூலம் உருவாகி வந்தது என்ற கோணம் முன்வைக்கப்பட்டது. தர்மசாஸ்திரங்கள் அந்தப்பரிணாமத்தின் ஒரு பகுதிகளாக அணுகப்பட்டன
5.இந்திய வரலாற்றில் ஸ்மிருதிகள் ஆளும்வர்க்கத்தால் தங்கள் ஆதிக்கத்துக்காக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டன என்பது உண்மை. அவர்கள் சமூகத்தை கட்டமைத்து ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்த அவற்றை ஆயுதமாக்கினர். கூடவே ஆதிக்கம் மாறுபடும்போது ஸ்மிருதிகள் சர்வசாதாரணமாக மாற்றவும்பட்டன.
6.இந்திய வரலாற்றை ஒருபோதும் ஸ்மிருதிகள் சொல்லும் நால்வருண அடிப்படையைக்கொண்டு புரிந்துகொள்ளமுடியாது. அந்த முயற்சி ஆரம்பகால பிரிட்டிஷ்ஆதிக்கவாதிகளால் முயற்சிசெய்யப்பட்டது. அவர்கள் இந்தியாவின் பிரபுகுலமாக பிராமணர்களை எண்ணினர். அவர்களிடமிருந்து ஒரு நீதி-நிர்வாக முறையை உருவாக்க முயன்றனர். ஆதிக்கபிராமணர்களில் ஒருசாரார் மனுஸ்மிருதியை முதன்மையாக குறிப்பிட்டபோது அதை ஏற்றுக்கொண்டனர். அதை அடிப்படையாகக் கொண்டு இந்திய சமூகத்தையும் சாதிமுறையையும் புரிந்துகொள்ள முயன்றனர். அந்தமுறை இந்தியசமூகத்தை புரிந்துகொள்ள சற்றும் உதவாது என ஐயம்திரிபற நிரூபிக்கப்பட்டுவிட்டது
7.இந்திய நிலத்தில் எந்தக்காலத்திலும் மனுஸ்மிருதி அல்லது இன்னொரு ஸ்மிருதி முற்றாதிக்கத்துடன் விளங்கியதில்லை. நால்வருணமுறை இறுக்கமாக நிலவியதுமில்லை. ஸ்மிருதிகள் சொல்லும் நால்வருணத்தில் இரண்டாம்படிநிலையில் இருப்பது சத்ரிய வருணம். ஆனால் உண்மையில் அப்படி ஒரு வருணமே இந்தியாவில் இருந்ததில்லை. மகாபாரதகாலம் முதல் எந்தச் சாதி நிலத்தைக் கைப்பற்றி அதிகாரத்தை உருவாக்கிக் கொள்கிறதோ அது வைதிகச்சடங்குகள் செய்து தன்னை சத்ரிய சாதி என அறிவித்துக்கொள்கிறது. யாதவர்கள், மௌரியர்கள் , மராட்டியர்கள், நாயக்கர்கள் என எத்தனையோ சூத்திர சாதிகள் பின்னர் சத்ரியர்களாக ஆகியிருக்கிறார்கள்
8. வர்ணப்பாகுபாட்டின் உச்சத்தில் நிற்கும் சாதியான பிராமணர் கூட ஒரு தொகுப்புச்சாதியே. பலநூறாண்டுகளாக பூசாரித்தொழில் செய்பவர்கள் மெல்லமெல்ல பிராமணர்களாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள். இதை கோசாம்பி ஹிரண்யகர்ப்பம் என்ற சடங்கைக்கொண்டு விரிவாக நிரூபிக்கிறார்
9. இந்தியாவில் இன்றும் சாதிப்படிநிலைகளில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அரசியலதிகாரம் நிலத்தின்மீதான ஆதிக்கம் ஆகியவற்றைக் கொண்டே சாதிப்படிநிலை தீர்மானிக்கப்படுகிறது. இந்த பரிணாமத்தை பொருளியல்ரீதியாகவே விளக்கமுடியும். ஸ்மிருதிகளைக்கொண்டு அல்ல
10. நிலப்பிரபுத்துவ அமைப்பு என்பது எங்கும் இன, இனக்குழு, குல அடிப்படையில்தான் செயல்படும். அது பிறப்பு அடையாளம் சார்ந்தது. ஆகவெ உலகில் எங்கும் நிலப்பிரபுத்துவ சமூகம் பிறப்புசார்ந்த பேதங்களின் மீதே இயங்கமுடியும். உலகில் பிறப்புசார்ந்த பேதங்கள் இல்லாத சமூகமே இல்லை. தீண்டாமை உட்பட எல்லா வழக்கங்களும் ஐரோப்பா, சீனா உட்பட உலகமெங்கும் இருந்துள்ளன. பல இடங்களில் நீடிக்கின்றன. அதற்கான கொள்கைகள் ஆங்காங்கே உருவாகி வந்திருக்கும். இந்தியாவில் அது சாதிமுறையாக இருந்தது. இன்றும் ஆப்ரிக்கா போன்ற நாடுகளின் குலக்குழு அமைப்புகள் சாதிமுறைக்குச் சமானமானவையாக உள்ளன.
*
இதெல்லாம் எப்படியும் இருபதுமுறை என்னால் எழுதப்பட்டவை. மீண்டும் நீங்கள் உங்கள் ஒற்றைவரி நக்கலை கொண்டுவந்து போட்டுவிட்டு அலட்சியமாகச் செல்வதைக் காண்கையில் பெரும் ஏமாற்றம் ஏற்படுகிறது. அறிவார்ந்த ஒரு விவாதத்துக்குச் செல்ல நாம் இன்னும் எவ்வளவுதொலைவு செல்லவேண்டுமென்ற வியப்பு உருவாகிறது
பரவாயில்லை அதுவரை சொன்னவற்றையே திரும்பத்திரும்ப சொல்லவேண்டியதுதான்
ஜெ
மறுபிரசுரம்- முதற்பிரசுரம் Jul 19, 2013
நீதியும் நாட்டார் விவேகமும்
இந்துமதம் சம்ஸ்கிருதம் பிராமணர்