ஆடும் ஊஞ்சலும் அந்தரத்தில் நிற்கும் கணங்களும் – ஏ.வி.மணிகண்டன்

அனிதா தம்பி எழுதிய இரு கவிதைகளை ஒப்பிட்டு ஏ.வி.மணிகண்டன் எழுதி ஏற்காட்டில் வாசித்த கட்டுரை.

ee

ஓவியம் இலக்கியம் உள்ளிட்ட இந்தக் கலைகள் அனைத்தின் நோக்கமும் தேவையும் என்ன என்று கேட்டால் மீளுதல் மற்றும் மீட்டுதல் என்று சொல்லலாம். எங்கிருந்து மீளுவது? எதற்கு மீளுவது? எதை மீட்டுவது?

இங்கிருந்து அங்கே, அங்கிருந்து இங்கே. இந்த இரண்டு இடம் இங்கே என்பதும் அங்கே என்பதும் ஒருபோதும் மாறுவதே இல்லை. அங்கே என்ன இருக்கின்றது இங்கே என்ன இருகின்றது என்பது எப்போதும் மாறிக் கொண்டே இருக்கின்றது. மாறாத இரண்டு புள்ளிகளுக்கும் நடுவே அலைவுறுவது வாழ்க்கை மட்டுமே. ஒரு ஊஞ்சலைப் போல. அதுதான் உயிரின் இச்சையாக இயங்குகின்றது போல.

குறுந்தொகையில் ஒரு பாடல் வருகின்றது.

அவனது குன்றைக் காண வசதியாக
கரிய அடிமரமுள்ள
வேங்கை மரத்தின்
சிவந்த பூக்கள் நிரம்பிய கிளையில்
தடம் பதியும்படி
கட்டப்பட்ட
அலங்கார ஊஞ்சலில்
உன்னை அமரச் செய்து
இடைக் கச்சையில் பற்றி
மெல்ல ஆட்டிவிடடுமா ?
விண்ணில் ஆடும் மயில் போல
வானில் நின்று பார்த்துக் கொள்.

அது ஏன் ஊஞ்சலில் நின்று பார்த்துக் கொள்ள வேண்டும்? மரத்தின் கிளை மீதே நின்று பார்த்தால் என்ன? அதீத சந்தோஷத்தையும் அதீத துக்கத்தையும் இந்த எளிய உடலென்னும், குறுகிய வாழ்வென்னும் ஓட்டால் தாங்கிக் கொள்ளவே முடியாது. இந்த எளிய ஓட்டில் எவ்வளவு தாங்குமோ அவ்வளவே நம்மால் ஏந்திக் கொள்ளமுடியும்.

நமது மனத்தைத் தன் பிரியத்தால் நடுங்கச் செய்பவர்களை, மனதுக்கு மிகவும் அந்தரங்கமானவர்களை நம்மால் நெடுநேரம் நேருக்கு நேர் எதிர் கொள்ளவே முடியாது. ஆனால் பார்க்கும் அந்தக் கண நேரம் போதவும் போதாது. அந்தரத்தில் நிற்கும் கணங்கள் நமக்குப் போதாதபோது, நாம் செய்வதெல்லாம் கண நேரத்தில் நிகழ்வதை மீண்டும் மீண்டும் மனதுக்குள் நிகழ்த்திக் கொள்வதுதான். இந்த மனமெனும் ஓடு எவ்வளவு கற்பனையையும் தாங்கும், அது ஒரு போதும் நிறைவதே இல்லை, உடலென்னும்ஓட்டைப் போல. அதைத்தான் அந்தக் கணத்திற்கு மீள்வது அல்லது அதை மீண்டும் மீண்டும் மீட்டிக் கொள்வது என்கின்றேன்.

இந்தக் கவிதைகளில் இரண்டாவது கவிதையில் உறவின் இறுக்கத்தை, நிழல்களை வற்றிக் குறுகச் செய்யும் சூரியனாக பார்க்கும் போது, அதே சூரியன் எப்படி சிறுவர்கள் கை விரித்து விழாமல் ஓடும் வரப்புகள் மீது ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது என்ற, தன் இருப்பை இயற்கை முன் வைத்து, இதே வாழ்க்கை வேறொரு நிலப் பரப்பில் எவ்வாறு இருகின்றது என்ற மற்றொரு முனைக்கு நகர்கின்றது.

நெருக்கடியான வாழ்வில் இருந்து அடித்துப்பிடித்து இறங்கி ஓடிச் சென்று மழையில் நிற்கையில், இவ்வளவு சலிப்பாக இருக்கும் இந்த வாழ்க்கையிலிருந்து உனக்கு விடுதலை தருகின்றேன், என்னோடு வந்து விடு என்கின்றது மழை. வாழ்வின் நெருக்கடிகளிலிருந்து விடுதலை கிடைக்கும் தருணத்தில் ஊஞ்சல் மறு முனைக்குப் போகின்றது. என்னால் இந்த வீட்டை, நண்பனை, குழந்தைகளை விட்டு விட்டு எப்படி வருவேன் என்று.

இந்த இரண்டு முனைகளுக்கும் நடுவேதான் ஆடிக் கொண்டே இருக்கின்றது இருப்பு, ஊஞ்சலைப் போலவே. உறவுக்கும் விடுதலைக்கும் நடுவே ஆடிகொண்டிருக்கும் இந்த ஊஞ்சலும் ஓய்வதே இல்லை ஒருபோதும்.

இரசிப்பதற்கு கவிதையும் கலைகளும் இருக்கும் வரை வாழ்வென்பது வேறு என்ன, ஆடும் ஊஞ்சலும் அந்தரத்தில் நிற்கும் சில கணங்களும் தவிர.

முந்தைய கட்டுரைஆபிரகாம் பண்டிதரும் பிராமணர்களும்
அடுத்த கட்டுரைகம்பனும் அம்பிகாபதியும்