சொல்வனம் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,
 
சொல்வனம் முகம் கட்டுரை படித்தேன். என்னையும் அக்கட்டுரை மிகவும் பாதித்தது. மிகவும் உணர்ச்சிபூர்வமாக எழுதப்பட்டிருந்தது. என் வீட்டில் என் தாத்தா-பாட்டியின் சிறுவயதுப் புகைப்படம் (அவர்கள் திருமணத்துக்குப்பின் எடுக்கப்பட்டது) மாட்டியிருக்கும். அதைப் பார்க்கும்போதெல்லாம் அவர்களும் ஏதோ சடாரென்று வயதாகி ஓய்ந்து மூலைக்குப் போய்விடவில்லை, என்னைப் போலவே அவர்களும் ஒரு காலத்தில் இளமையுடனும், அது தந்த உற்சாகத்துடனும் இருந்திருக்கிறார்கள் என நினைக்கும்போது ஏதோ ஒரு ஆழ்ந்த புரிதல் கிடைத்தது போலிருக்கும். அந்தப் புரிதலை வார்த்தையாக்கித் தந்திருக்கிறார் சேதுபதி அருணாச்சலம். அறிமுகப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி.
 
பொதுவாகவே சொல்வனம் சிறப்பாக இருக்கிறது. பழைய இதழ்களைப் புரட்டிப்பார்த்துக்கொண்டிருந்தேன். திலீப்குமார், ஆனந்த், ஆர்.ராஜகோபாலன், எஸ்.வி.ராமகிருஷ்ணன் போன்ற இலக்கியப் பரப்பின் கவனிப்பிலிருந்து வெளியே இருக்கும் தேர்ந்த எழுத்தாளர்களை மிக மரியாதையோடு இணையத்துக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.
 
சொல்வனம் நிரம்பவே நம்பிக்கை தருகிறது.
 
நன்றி,
சண்முகசுந்தரம்

 

அன்புள்ள சண்முக சுந்தரம்

சொல்வனம் நல்ல இதழாகவே உள்ளது என்று நான் நினைக்கிறேன். இன்றைய வலைப்பூ காலகட்டத்தில் ஒரு இணைய இதழை நடத்துவது கஷ்டம். எல்லாருக்குமே வலைப்பூ உள்ளது. ஒரு நண்பர்குழு பொதுவான நோக்கங்களுடன் நடத்தினால் உண்டு. அந்தக்குழுவினுள் சண்டை வராது தடுப்பது தமிழ் பண்பாட்டுச் சூழலில் மிக கழ்ஷ்டம்– நண்பர் கெவின்கேர் பால மொழியில் நெம்பக் கஷ்டம்.

அதே போல இணைய இதழிலும் அச்சிதழ் போல ஆசிரியர் கொள்கை தேவை. எல்லாவற்றையும் வெளியிடுவது வசைகளுக்கும் அவதூறுகளுக்கும் இடமளிப்பது என ஆரம்பித்தால் மெல்லமெல்ல  இதழின் முக்கியத்துவம் போய்விடும்

இரண்டையும் சொல்வனம் கவனிக்கும் என நம்புவோம்

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
 
நீங்கள் குறிப்பிட்டிருந்த அந்தக் கட்டுரை எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. மருண்ட கண்களைக் குறித்து நீங்களும் சரி, கட்டுரையிலும் சரி மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
 
மற்றபடி, சொல்வனம்  குறித்து நானே உங்களுக்குக் கடிதம் எழுதவேண்டும்ன்று நினைத்தேன். அந்த இதழை நான் விரும்பிப் படிக்கிறேன். அதில் வரும் இசை குறித்த கட்டுரைகள் நன்றாக இருக்கின்றன. சென்ற இதழில் இளையராஜாவைக் குறித்த கட்டுரை அதற்கு சாட்சி. ஒவ்வொரு கட்டுரைக்குமே மிகவும் உழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். வார இதழாக வந்தால் நன்றாக இருக்கும். யாரோ புண்ணியவான் இணைய விஷயங்களைப் போல் மேலோட்டமாக இல்லாமல் உண்மையாலுமே நல்ல இதழாக நடத்திக் கொண்டிருக்கிறார். இது நீடித்து வரவேண்டும்.
 
முத்துக்குமார்,
குமாரபாளையம்.

அன்புள்ள முத்துகுமார்

சொல்வனம் இதழை அச்சில் கொண்டுவரவேண்டுமென்றால் மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் இழப்புடன் மூன்றுவருடம் நடத்தும் மன வல்லமை தேவை. சென்னையில் உழலும் நண்பர்களும் தேவை. அது சாத்தியமான நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என நான் நினைக்கவில்லை. வந்தால் ந் லதேதாமதமான பதிலுக்கு மன்ணிக்கவும் ஜெயமோகன்.
 
நம் தமிழ் வார இதழ்கள் 90% சினிமாவைக் கொண்டவை. அதுவும் அபத்தமான தமிழ்ச்சினிமா, கோடம்பாக்கம் கிசு, கிசு, சிண்டு முடிதல்களால் நிரம்பியது. ஏதாவது அபத்தமானதொரு அரசியல் நிலைப்பாட்டை எடுத்துவிட்டு பொதுமக்களின் எண்னப்போக்கைப் பிரதிபலிக்கிறோம் என்று வேறு சொல்வார்கள்.
 
சிற்றிதழ்கள் தங்களுக்கிடையேயான சண்டையில் மூழ்கிக் கிடக்கின்றன. அதை மீண்டு வந்தால் ஈழம் பற்றிய போலிக்கண்ணீர், தமிழின் பிரபலமான திரைப்படங்களை தென்னமரிக்கத் திரைப்படங்களோடு ஒப்பிடும் விமர்சனங்கள், மூன்று சிறுகதைகள், பத்து படிமக் கவிதைகள், ஒரு கவிஞரின் நேர்காணலோடு தங்கள் பாட்டையை முடித்துக் கொள்கிறார்கள்.
 
இந்தச் சூழலில்தான் சொல்வனம் ஆச்சரியங்களை உள்ளடக்கி வருகிறது.
 
ஒரு புகைப்படக்கார இளைஞரின் பேட்டி, அந்த இளைஞர் பதிவு செய்த நம் பாரம்பரியக் கலை, க்ளோபல் வர்மிங் உண்மையாலுமே ஒரு பிரச்சனையா என்று அலசிய விரிவான கட்டுரைத் தொடர், பல எளிமையான அறிவியல் கட்டுரைகள், இசை குறித்த உண்மையாலுமே விஷயத்துடன் கூடிய கட்டுரைகள், இப்போது நீங்கள் குறிப்பிட்ட முகம் கட்டுரை… இத்தனையோடு சேர்த்து இலக்கியமும்… உண்மையைச் சொல்லுங்கள். நம் சிற்றிதழ்களிலோ, பேரிதழ்களிலோ இவற்றை நாம் எதிர்பார்க்க முடியுமா?
 
இந்த ஒரு ஆயாசத்தில்தான் சொல்வனம் வார இதழாக வந்தால் நல்லது என்றேன். ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஒரு வார இதழை நடத்துவது இத்தனை செலவு பிடிக்கும் வேலை என்று தெரியாது… ஏதோ இந்த மட்டில் இணையத்தில் படிப்பதற்காகவாவது தொடர்ந்து சொல்வனம் வெளிவன்ஹ்டால் போதும் என்று இப்போது தோன்றுகிறது.
 
நம்பிக்கை தந்த பல சிற்றிதழ்கள் நான்கு இதழ்களோடு நின்று போனவைதானே?
 
அன்புடன்,
முத்துக்குமார்
ஜெ

http://www.solvanam.com/

முந்தைய கட்டுரைநா.கணேசன்
அடுத்த கட்டுரைஊடக இல்லம்,அறிவிப்பு