//
முதல்நாள் கூட்டத்தின் ஆரம்பத்தில் மைக் வேலை செய்ய மறுத்தது. அதை சரிசெய்ய முயற்சியும் நடந்தது. ஆனால் அது சரியாகிவிடக்கூடாதே என்று நினைத்தபடி இருந்தேன். அதன் படியே கடைசிவரை அது ஒத்துழைத்தது. விவாதங்களையும் வாசிப்புகளையும் நேரடிக்குரலில் கேட்பது ஒரு privileged experience. உரையாடல்களுக்கு இன்னும் ஒரு நெருக்கமான உணர்வை அது தந்தது. மாலையில் நடந்த இசை நிகழ்ச்சிகளும் அப்படியே. நேரடியாகப் பாடும் குரலை மைக் இல்லாமல் நேரடியாகப் கேட்பது ஒரு வரம். இளையராஜாவே பாடினாலும், நமது அனுபவம் நமது ஸ்பீக்கரின் தரத்தை பொறுத்ததுதான் இல்லையா, மனிதக் குரலை விட சிறப்பான ஸ்பீக்கர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றுதான் நம்புகிறேன். அந்தக் குளிர் இரவில் நெருப்பு வெளிச்சத்தில் சில உன்னதக் குரல்கள் தரும் உணர்வில் இருந்த நேரத்துக்கு நன்றி சொல்லி முடியாது.
இந்த முறை சென்ற கூட்டங்களைவிட அதிகமான வாசகர்கள் பங்கேற்றனர். கூட்டம் மிக நேர்த்தியாக நடந்தது. அருமையான சூழல், உணவு மற்றும் மிக நட்புணர்வோடு நண்பர்கள் என மூன்று நாட்களும் மிக அருமையாக நடந்தன. ஈரோட்டில் நடந்த அறம் வெளியீட்டு விழாவில் விஜயராகவன் சாரைச் சந்தித்தேன். ஒவ்வொரு முறையும் அவர் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு வெற்றிகரமான நிகழ்ச்சிகளுக்குப் பின்னாலும் அவரது நல்லெண்ணம் கொண்ட உழைப்பு இருக்கிறது. ஆரம்பம் முதல் நிறைவுவரை அவரே தொகுத்து வழங்கினார், கூடவே ஒரு சிறப்பான திறனாய்வையும். இம்முறை நண்பர் சேலம் பிரசாத் எடுத்துக்கொண்ட பொறுப்புகளும் குறிப்பிடத்தக்கது.
விஷ்ணுபுரம் குழுவின் ஒரு முக்கிய அம்சம் அதன் diversity. புதிய நட்புகளும் உருவாகவும், வெவேறு துறைகளிலிருந்து வந்திருந்த பலரின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள இடைவெளிகளும் நடைகளும் மிக உதவியாக இருந்தன.
//