பாலைவனங்களில் உள்ள மக்கள்தான் அதிகமாகச் சூதாடுகிறார்கள் என்பார்கள். பாலைவன வாழ்க்கையின் முடிவில்லாத சலிப்பை வெல்ல அவர்கள் சூதாட்டத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். சூதாட்டம் என்பது ஒரு களத்தில் ஒருசில நிகழ்வுகளுக்குள் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கைவிளையாட்டுதான். அங்கே நின்று சிரிப்பது பிரபஞ்சலீலையாகிய நிலையின்மைதான். விரித்த பாயில் குண்டுநிறைத்த துப்பாக்கியை வைத்துக்கொண்டு நான்குபேர் சீட்டாடுகிறார்கள். தோற்பவன் தன்னைத்தானே சுட்டுக்கொள்ளவேண்டும் என்று பந்தயம். அந்த ஆட்டத்தின் ஒவ்வொரு கணமும் பல்லாயிரம் மடங்கு எடைகொண்டுவிடுகிறது. வாழ்க்கை பல்லாயிரம் மடங்கு பெரிய வாழ்க்கையாக ஆகிவிடுகிறது
இலக்கியம் வாழ்க்கை என்னும் சூதாட்டத்தின் பக்கத்தில் குண்டுநிறைத்த துப்பாக்கியை வைக்கும் செயல் என்று சொல்லலாம். எல்லாவற்றையும் அது அடர்த்தியுள்ளதாக ஆக்கிவிடுகிறது. அதற்கு வாழ்க்கை தேவையில்லை செறிவுபடுத்தப்பட்ட வாழ்க்கை தேவை. உண்மை போதுமானதல்ல. அதி உண்மை தேவை.
’இலக்கியவாதி சலிப்பை எழுதலாம் அல்லது வேறு எல்லாவற்றைப்பற்றியும் எழுதலாம்’ என்று ஒருமுறை ஆற்றூர் ரவிவர்மா சொன்னார். அவரது கவிதைகளின் முக்கியமான பேசுபொருளாக என்றும் அன்றாடவாழ்க்கையின் சலிப்பு இருந்துள்ளது. அதை இருத்தலின் சலிப்பு என்றோ கடந்துசெல்லலின் சலிப்பு என்றோ சொல்லலாம். இங்கே இதை இப்படித்தான் செய்யமுடியும் இப்படித்தான் இது முடியும் என்றிருக்கையில் மனிதனின் சாரமான செயலூக்கம் அடையும் ஏமாற்றத்தையே சலிப்பு என்கிறோம்.
வேட்டைக்காரனாக இருந்த மனிதன் சலிப்பை உணர்ந்திருக்க மாட்டான். ஒவ்வொரு கணமும் அவன் பிரபஞ்ச சாத்தியங்களின் முடிவின்மையுடன் மோதிக்கொண்டிருப்பான். பொறுமையாக நாளெல்லாம் காத்திருக்கும்போதும் அவனுடைய வாழ்க்கையில் சலிப்பில்லை, காரணம் அவன் முன் பிரபஞ்சம் பகடையாடும்பொருட்டு வந்து அமர்ந்திருக்கிறது. அங்கிருந்து விவசாயியாகி வணிகனாகி குமாஸ்தாவாகி அவன் அந்த வாழ்க்கையின் செறிவை இழக்கிறான். மானுட நாகரீகம் என்பதே சலிப்பைத் தொடர்ந்து பெருக்கிக்கொள்ளும் ஒரு பெரும்பயணம்தான். அந்தச்சலிப்புதான் மனப்பிறழ்வுகளை, அதிகாரவெறியை, நுகர்வுப்போதையை உருவாக்குகிறது.கலையிலக்கியங்களை, தத்துவங்களை, உருவாக்குகிறது.
சலிப்பின் மறுபக்கமாகவே என்றும் கலை இருந்துள்ளது. அது ஒவ்வொரு கணமும் அடிக்கோடிடப்பட்ட ஒரு வாழ்க்கை வெளி. ஆனால் மிக அபூர்வமாக சில கலைஞர்கள் சலிப்பின் பக்கம் நின்றே எழுத்தை உருவாக்குகிறார்கள். தமிழில் சலிப்பின் கலைஞன் என்று சொல்லத்தக்கவர்கள் இருவர், சம்பத், கோபிகிருஷ்ணன்.
எண்பதுகளில் கோபிகிருஷ்ணன் க்ரியாவில் எளிய ஊழியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். ஒவ்வாத உணர்வுகள் என்ற அவரது தொகுதி மிகமிக எளியமுறையில் வேறொரு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. கிரியாவில் தன்னை ஓர் எழுத்தாளனாகவே கோபிகிருஷ்ணன் காட்டிக்கொண்டதில்லை. கோபிகிருஷ்ணனைக் கடை உதவியாளராக நன்கறிந்திருந்த சுந்தர ராமசாமி அத்தொகுதியைத் தற்செயலாக வாசித்து ஆச்சரியப்பட்டு கோபிகிருஷ்ணனுக்கு ஒரு தந்தி கொடுத்துப் பாராட்டினார். அப்போதுகூட கோபிக்கு அவர் எழுதியது தமிழின் ஒரு முக்கியமான இலக்கியவகை என்று தெரியவில்லை.
என்னிடம் சுந்தர ராமசாமி கோபிகிருஷ்ணனின் தொகுதியை அளித்து வாசிக்கச்சொன்னார். நான் கோபியை சம்பத்தில் இருந்து மேலே எழுந்தவர் என்று மதிப்பிட்டேன். சம்பத் சலிப்பை எழுதினாலும் அது இருத்தலியத்தால் நிறமூட்டப்பட்ட சலிப்பு. அதை அன்று உலகமெங்கும் பலர் எழுதிக்கொண்டிருந்தார்கள். கோபி எந்தத் தத்துவத்தாலும் தீண்டப்படாமல் சிந்தாதிரிப்பேட்டை சந்துக்குள் இருந்துகொண்டிருந்தார். அந்தத் தத்துவமின்மை அடுத்தகட்ட எழுத்தின் முக்கியமான அம்சமாக எனக்குப்பட்டது. நான் கோபிக்கு ஒரு கடிதம் எழுதினேன்.அன்றுமுதல் இன்றுவரை கோபிகிருஷ்ணனின் கதைகளின் முக்கியமான வாசகனாகவே என்னை நினைக்கிறேன்.
கோபிகிருஷ்ணனின் உலகம் சலிப்பை மெல்லிய எள்ளலாக மாற்றிக்கொண்டது. ஒரு சிகரெட்டைப்பிடித்துக்கொண்டு மனிதர்களை வேடிக்கைபார்க்கும் விலகிய நோயுற்ற மனிதனின் குரல் கதைகளில் ஒலிக்கிறது முதற்கதையான ’காணிநிலம்வேண்டும்’ சென்னையில் குறைந்த வருமானத்தில் ஓர் ஒண்டுக்குடித்தன வீட்டில் புதுமனைவியுடன் குடியேறும் ஒருவனின் அல்லல்களை சாதாரணமாகச் சொல்லிச்செல்லும் கதைக்கு எந்த வடிவமும் இல்லை. அதைக் கதை என்பதைவிட ஒரு வகை விவரணை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
கோபிகிருஷ்ணனின் கதைகளைச் சொல்பவர் உண்மையில் சொல்லவில்லை, சிந்திக்கிறார். சொல்லும் தைரியம் அவருக்கில்லை. சொல்பவருக்குக் கேட்பவரின் கவனம் மூலமே உருவாகும் ஒழுங்கும் ஓட்டமும் இந்தச்சிந்தனைகளில் இல்லை. ஒண்டுக்குடித்தனத்தை சித்தரிக்கும் கதை சட்டென்று பரோனியா பற்றிப் பேச ஆரம்பிக்கிறது. அதைப் பேசுவதற்கான காரணம் பேசுபவர் உளவியலில் முதுகலை படித்திருப்பதுதான் என அடுத்து அவரே சொல்கிறார். உளவியல் படிப்பது ஒரு பெரிய சாபக்கேடு. எதையும் உளவியலுக்குள் கொண்டு மாட்டிக்கொண்டு எளிய இன்பங்களைக்கூட அனுபவிக்க முடியாமலாகிறது என்கிறார்
கோபிகிருஷ்ணனின் நடை சரளமானது, அந்தச் சரளத்தை கூர்ந்து கவனிக்கும் வாசகன் அதில் இயல்பாக ஏறியிருக்கும் கசப்பு நிறைந்த புன்னகையைக் கண்டுகொள்ள முடியும் ‘எனக்குப் பெற்றோர் உண்டு, ஒட்டுதல் இல்லை’ என்ற சொல்லாட்சி ஓர் உதாரணம். பெற்றோரிடம் ஒட்டுதல் இல்லை என்று சொல்வதை விட மேலதிகமாக ஒரு புன்னகை அதில் உள்ளது. கதைகளின் தலைப்பிலேயே அந்தப்புன்னகை தொடங்கிவிடுகிறது. ‘மயிரே துணை’ ‘ தொடர்ந்து அவருக்கே உரிய கோணலான பார்வை. ‘எல்லோர் தலையிலும் மயிர் இருக்கிறது. ஆனால் மயிரை இப்படி ஒருமையில் சொல்வது சரியல்ல. ஏனென்றால் ஒருவர் தலையில் இருப்பது ஒற்றை மயிர் அல்ல. அப்படி ஒற்றை மயிர் மட்டும் இருந்தால் அதைப்பேணிப்பாதுகாப்பது பெரும்பாடாகப் போய்விடும்’
கோபிகிருஷ்ணன் கதைகள் பலவகையானவை. சில கதைகளில் ஒருபோதும் நாம் அன்றாடவாழ்க்கையில் காணமுடியாத கதைமாந்தர் வருகிறார்கள். விசித்திரமான நாடகப்பாணியில் பேசுகிறார்கள். உதாரணம் ஊனம் கதையின் தேவாரம். ஓர் உளவியலாளராக அவர்களை நாம் திறக்காத கோணத்தில் கோபி திறப்பதனால்தான் அந்த தோற்றம் சாத்தியமாகிறது. பெரும்பாலான கதைகள் சர்வசாதாரணமான மனிதர்கள் வந்து சர்வதாசாதாரணமாக எதையாவது செய்துவிட்டு செல்கிறரகள். கோபி எல்லாம் சமம்தான் என்னும் பாவனையில் கதையை சொல்லிச்செல்கிறார்
அசோகமித்திரனின் கதையுலகுக்கும் கோபிகிருஷ்ணனின் கதையுலகுக்கும் உள்ள ஒற்றுமையும் கவனிக்கத்தக்கது. அசோகமித்திரன் சித்தரிக்கும் அதே கீழ்நடுத்தர சென்னைவாழ்க்கையைத்தான் கோபிகிருஷ்ணனும் காட்டுகிறார். அசோகமித்திரன் காட்டும் அழுத்தமான கையறுநிலைகளுக்கு கோபிகிருஷ்ணன் செல்வதில்லை. அசோகமித்திரன் கதைகள் அவற்றின் குறியீட்டுத்தளம் மூலம் சென்று தொடும் கவித்துவமும் கோபிக்கு அன்னியமானது. ஆகவேதான் அசோகமித்திரனின் காலடியில் அமர்ந்திருக்கும் ஒருவராக மட்டும் கோபியைப் பார்க்கமுடிகிறது.
அதேசமயம் கோபியின் பல கதைமாந்தர் அசோகமித்திரனின் உலகுக்குள்ளும் சென்றுவிடக்கூடும் என தோன்றுகிறது. உண்மைவேட்கை என்னும் அசோகமித்திரனின் அரிய சிறுகதையில் வரும் அதே கதாபாத்திரம் தூயோன் என்னும் கோபியின் கதையில் இன்னொருவகையில் வெளிப்படுவதை ஓர் உதாரணமாகச் சொல்லமுடியும்.
சலிப்பும் சலிப்பைவெல்லும் அங்கதமும் ஊடும்பாவுமாக ஓடி நெய்யப்பட்ட கோபியின் புனைவுலகம் மிக உற்சாகமான ஆரம்ப வாசிப்பை அளிப்பது. சட்டென்று சலிப்பூட்டுவது. மீண்டும் எப்போதோ வாசிக்கையில் உள்ளே இழுத்துக்கொள்வது. நினைவில் திரும்ப வருகையில் புன்னகைக்க வைப்பது. அவர் ஒரு கதையின்முடிவில் சொல்வதுபோல ‘எல்லாவற்றுக்கும் மேலாக உலகை ஆளும் நீதிபதிகளின் போக்கு விந்தையானது’ என்று மட்டும் சொல்லி நிற்கிறது அவரது புனைவுலகம்
[கோபிகிருஷ்ணன் படைப்புகள். நற்றிணை பதிப்பகம். சென்னை]