மணி அய்யர் தி.ஜானகிராமனிடம் சொன்னதாக சுந்தர ராமசாமி என்னிடம் ஒருமுறை சொன்னது நினைவுக்கு வருகிறது. அவருக்கு மட்டும் பணம் போதுமான அளவுக்கு இருந்திருந்தால் ஒரே ஒரு ராகத்தை மட்டும்தான் பாடியிருப்பார் என்று. அது எந்த ராகம் என்று நினைவில் இல்லை, நான் சங்கீதத்தை எனக்கு அன்னியமான ஏதோ ஆக நினைக்கக்கூடியவன் அன்று. இன்றும்தான்.
ஆனால் அது கலை என்ற விஷயத்தின் ஆர்வமூட்டும் ஒரு மர்மத்தைக் காட்டுகிறதென இப்போது தோன்றுகிறது. கலைஞர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு சிறிய இடத்துக்குள்ளேயே மேலும் மேலும் நுட்பமாகச் சென்றுகொண்டிருப்பார்கள். சிலர் அந்த நுட்பமான இடத்தைப் புறவய உலகின் நிலைக்கண்ணாடிகளில் பிரதிபலித்து முடிவிலாதவடிவங்களாகக் காட்டிக்கொள்வார்கள். எளிய வாசகர்கள் அவற்றை விதவிதமாக வாசிப்பார்கள். தொடர் வாசகன் தன் வாசிப்பைக் கூர்மையாக்கும் தோறும் அந்த முனையைச் சென்று தொட்டுவிடுவான். அந்த முள்நுனியில்தான் கலைஞன் மாளிகைகளைக் கட்டிவைத்திருக்கிறான் என்பதை உணர்வான்
சில ஆசிரியர்கள் வெளிப்படையாகவே அந்த இடத்தை வைத்திருக்கிறார்கள். திரும்பத்திரும்ப ஒரே விஷயத்தையே அவர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஒரேவடிவில் ஒரே மொழியில் ஒரே கோணத்தில். சராசரி வாசகன் எளிதாகச் சலிக்கக் கூடிய விஷயம் இது. தமிழின் மிகச்சிறந்த உதாரணம் வண்ணதாசன். கைக்கடிகாரம் பழுதுபார்ப்பவன் காந்தஊசிக் கிடுக்கியால் கண்ணுக்கேதெரியாத திருகாணியைத் தொட்டு எடுப்பதுபோலத் தான் தேடும் ஒன்றை எடுக்க முயல்கிறார் வண்ணதாசன். சிலசமயம் நழுவிவிடுகிறது. சிலசமயம் எடுத்துவிடுகிறார். முப்பதாண்டுகளுக்கும் மேலாக. அவர் தொட்டு எடுக்கும் அந்த நுண்பொருளும் ஒன்றேதான். உறவுகளுக்கு நடுவே ஓடும் ஒரு மெல்லிழை.
இன்னொரு உதாரணம் கோபிகிருஷ்ணன். திரும்பத்திரும்ப கோபி சலிப்பைப்பற்றிப்பேசுகிறார். அலுப்பு என்பது சமநிலையில் இருந்து வருவது. நேர்கோட்டில் உருவாவது. கோபி அதை எதிர்கொள்ள தன்னைக்கிழித்துப்பகுத்துக்கொள்கிறார். கோணலாக்கிக் கொள்கிறார். அப்போது கொஞ்சம் சிரிக்கமுடிகிறது. அத்தனைகதைகளிலும் கோபியை ஒன்றைத் திரும்பத்திரும்பச் செய்பவராகவே காணமுடிகிறது. என் மன உருவகம் நான்குபக்கமும் சுவர்கள் மூடி அடைந்த தனியறைக்குள் சலிப்பு தாளாமல் சுற்றிவந்து உள்ளே இருக்கும் ஒரே கண்ணாடியில் தன் முகத்தை விதவிதமாகக் கோணலாக்கி ரசிக்கும் ஒரு தனியன்.
யுவன் சந்திரசேகர் கோபிக்கு ஒருவகையில் நெருக்கமானவர். நேர் எதிர்திசையில் வந்து சந்தித்துக்கொள்ளக்கூடியவர். யுவன் மீண்டும் மீண்டும் ஒரே வடிவில் ஒரே நடையில் கிட்டத்தட்ட ஒரே விஷயத்தை எழுதிக்கொண்டிருக்கிறார். கதைகளுக்குள் கதையாக விரியும் அவரது கதையுலகமும், உதிரிநிகழ்ச்சிகளை சொல்லிச்சொல்லி அவை ஒன்றோடொன்று கண்ணுக்குத்தெரியாமல் உறவாடிக்கொள்ளும் ஒரு ஆழத்து மாயக்கணத்தை அடையாளம் காட்டும் கூறுமுறையும், நெருக்கமான நண்பரிடம் அரட்டையடிப்பதுபோன்ற மொழியாட்சியும் அவரது வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்தவை.
ஏன் யுவன் இவற்றை எழுதுகிறார்? அவரை இயக்குவது எது? இக்கதைகளை வாசிக்கையில் அன்றாட வாழ்க்கையின் சலிப்புதானோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இக்கதைகளில் கதைசொல்லி நேரடியாகச் சம்பந்தப்பட்ட வாழக்கைச்சூழல் மிகமிகச் சாதாரணமானது என்பதைக் கவனிக்கலாம். வங்கியின் காசாளர் பணி, சிறிய எளிய குடும்பம், ரயில்பயணம், சிக்கலற்ற சில நட்புகள், சிகரெட் அவ்வளவுதான். கதை நின்றிருக்கும் புறவய யதார்த்தமென்பது இதுதான். சலிப்பூட்டும் சுழற்சி கொண்ட ஒரு அன்றாட உலகம்.
அங்கிருந்துகொண்டு கதைசொல்லியின் கற்பனை விரிகிறது. அந்தக் கற்பனையுலகமே யுவனின் கதைகளில் பல மடிப்புகளாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு நான்கு பேசுதளங்கள் உள்ளன என்று படுகிறது. ஒன்று கரட்டுப்பட்டி என்ற சிற்றூரில் கழித்த இளம்பருவம். இரண்டு ராமநாதபுரத்தில் கழித்த இளமைப்பருவம். மூன்று வெவ்வேறு பயணங்களில் கண்ட இடங்கள். நான்கு இசைக்கலைஞர்களைப்பற்றிய நினைவுகள். இந்த நான்கு உலகிலும் யுவன் கதைசொல்லிகளை உருவாக்கிக் கொள்கிறார். இளமைப்பருவத்தில் அவரது அப்பா மாபெரும் கதைசொல்லி. கிட்டத்தட்ட அவர் கதைசொல்லும் அதேபாணியில்தான் எல்லா கதைமாந்தர்களும் கதைசொல்கிறார்கள்.
இக்கதைகள் வழியாக இந்தநான்கு தளங்களும் மேலும் விரிகின்றன. அப்பாவழியாகவும் குடும்ப உறுப்பினர் வழியாகவும் ஒரு கீழ்நடுத்தரவர்க்க பிராமணக்குடும்பத்தின் உறவுச்சிக்கல்கள் சார்ந்த கதைகள் விரிகின்றன. பயணங்களில் விதவிதமான மர்ம மனிதர்கள் வந்து கதை சொல்கிறார்கல். அலுவலக நண்பர்களுடன் எப்போதும் ஒரு விசித்திரமான கதைசொல்லியும் வந்துசேர்கிறார். பயணங்களில் எதுவும் நிகழலாம்.
இந்தக்கதைகள் எல்லாவற்றிலும் உள்ள பொது அம்சம் என்பது இவை மிகப்பெரும்பாலும் யதார்த்தச்சட்டகத்துக்குள் அடங்குவன அல்ல என்பதுதான். யுவன் சொல்லும் வாழ்க்கைத்தருணங்கள் ஒன்று அபூர்வமானவை, மர்மமானவை. அல்லது குறைந்தபட்சம் அவை அப்படிச் சொல்லப்படுகின்றன. சலிப்பூட்டும் அன்றாட யதார்த்தம் அல்லது கறாரான புறவயவாழ்க்கைச்சித்தரிப்பு இவற்றில் இல்லை. இவையனைத்திலுமே உள்ள கூறுமுறையை ஓரு வங்கியில் மதிய உணவுக்குப்பிந்தைய சலிப்புக்கு மாற்றாக பேசிக்கொள்ளும் பாவனையுடன் நான் ஒப்பிடுவேன். பெரும்பாலான கதைகள் ஊர்வம்புகள், குடும்பவம்புகள் வடிவில் உள்ளன. கூடவே அன்றாட லௌகீக வாழ்க்கையைத் திகைக்கச்செய்யும் கணங்களின் விவரணைகள்.
ஆம், யதார்த்ததின் சலிப்பை வெல்லும்பொருட்டுத்தான் இக்கதைகள் சொல்லப்படுகின்றன. யதார்த்தம் ஒரு பெரிய மரப்பெட்டி. திறந்தால் உள்ளே அன்றாடவாழ்க்கைக்கான எளிய சாமான்கள் மட்டுமே இருக்கும். யுவனின் கற்பனையில் அந்தப்பெட்டிக்குள் இன்னொரு பெட்டி இருக்கிறது. அதற்குள் இன்னொரு பெட்டி. அதற்குள் அடுத்த பெட்டி. அவ்வாறுதான் கதைக்குள் கதை என்னும் அவரது வடிவம் உருவாகியிருக்கிறது. பெரும்பாலான கதைகள் அன்றாட லௌகீக தளத்தில் ஆரம்பிக்கின்றன. வங்கியில் பொரும்பாலும். விசித்திரமான வாழ்க்கைநிகழ்ச்சிகளைச் சொல்ல ஆரம்பிக்கின்றன. மேலும் விசித்திரமான செய்திகளுடன் அவற்றைப் பிணைக்கின்றன. அவற்றுக்கும் அடியில் மேலும் விசித்திரமான ஓரு தளத்தைக் கண்டடைகின்றன.
கோபிகிருஷ்ணனின் கதைகளில் சலிப்புக்கு மாற்றாக இடம்பிடிக்கும் உளவியல் அலசல் போன்றதே யுவன் கதைகளில் உள்ள ‘மாற்றுமெய்மை’ என்று சொல்லலாம். இது இந்த உலகம் அப்படியொன்றும் சலிப்பூட்டும் நிகழ்வல்ல, இதற்கு அப்பால் நம் அன்றாடப்பிரக்ஞையைத் திகைக்கச் செய்யும் இன்னொரு யதார்த்தம் உள்ளது என்று நம்மை நம்பவைக்க முயன்றபடியே உள்ளன. வாழ்க்கை அப்படியொன்றும் சாதாரண நிகழ்ச்சிகளின் தொடர் அல்ல, வாழ்க்கைத்தருணங்கள் சாதாரணமாகத் தெரிந்தாலும் கூட அவை அசாதாரணத்தின் துளிகளே என்று சித்தரிப்பதற்காகவே யுவனின் எல்லாக் கதைகளும் எழுதப்பட்டுள்ளன.
யுவன் சந்திரசேகரின் புதிய சிறுகதைத் தொகுதியான ’ஏமாறும் கலை’ யின் மிகச்சிறந்த கதையான ‘ஒரு கொத்து கிராம்பு’வை வாசிக்கும்போது இந்த எண்ணங்கள் எழுந்தன. மிகச்சாதாரணமான வாழ்க்கையோட்டத்தில் சிக்கிக்கொண்ட இரு பெண்களின் வாழ்க்கையைச் சொல்கிறது அக்கதை. சாதாரணமாக ஒரு வீட்டுத்திண்ணையில் பார்த்தால் அவர்கள் எந்தத் தனித்தன்மையும் இல்லாத எளிய ஆன்மாக்கள்தான். ஆனால் அவர்கள் தவறவிட்ட வாய்ப்புகள் அல்லது செய்திருக்கக்கூடிய விஷயங்கள் வழியாக அவர்களைப்பார்க்கையில் பிரமிப்பூட்டும் பிரம்மாண்டமாக அவர்களின் வாழ்க்கை தெரிகிறது. ராஜம் அத்தை தவறவிட்ட வாய்ப்புகளாலானவள் என்றால் அகிலாண்டம் அத்தை செய்யாது போனவற்றால் ஆனவள்.
திரும்பத்திரும்ப யுவன் ஒரே விஷயத்தில் முட்டிக்கொள்கிறார். சலிக்காமல் அதைத் திறந்து பார்க்கமுயல்கிறார். தனித்தனியாகப்பார்த்தால் அர்த்தமில்லாதவை என்று தோன்றும் இந்த மானுடவாழ்க்கைகளை அனைத்தையும் ஒட்டுமொத்தமாகத் தொகுத்து ஒரே வலைப்பின்னலாகப் பார்த்தால் அர்த்தமும் முழுமையும் தோன்றுமா என்ன? ஆனால் அவரது கதைகள் அந்த முழுமையை அல்லது அர்த்தத்தைக் கண்டடைவதேயில்லை, அந்த நுனியில் சென்று திகைத்து நின்றுவிடுகின்றன.
இத்தொகுப்பிலும் எல்லாக் கதைகளும் வாழ்க்கை என்பது வாய்ப்புகளின் வலை என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றன. குருகுலம்,மறுவிசாரணை, மூன்றாவது முத்தம் போன்ற கதைகளை எல்லாம் விதவிதமான வாழ்க்கைச்சாத்தியக்கூறுகளின் கதைகள் என்று சொல்லமுடியும்.மறுவிசாரணையின் ரேஷ்மா ஒரு மாபெரும் தாயக்களத்தில் புரண்டு புரண்டு பன்னிரண்டும் பூஜ்யமுமாக காட்டிக்கொண்டே இருக்கும் தாயக்கட்டை என்ற எண்ணம் உருவாகிறது.
அதிசுவாரசியமாக வாழ்க்கைத்துணுக்குகளைச் சொல்லத்தெரிந்த அவற்றை மூன்றுசீட்டு வித்தைக்காரனின் கரத்திறனுடன் மாற்றிமாற்றிப் போட்டுக்காட்டத்தெரிந்த கதைசொல்லியாக யுவன் இக்கதைகளில் தென்படுகிறார். மூன்றுசீட்டுக்காரன் நம் கண்களைப்பார்த்துக்கொண்டிருக்கிறான். நம் ஊகங்களுடன் அவன் விளையாடுகிறான்.யுவன் இருக்குமிடத்தில் இவ்வாழ்க்கையை நிகழ்த்தும் சக்தியொன்றைக் கற்பனைசெய்தபடி இக்கதைகளை வாசிக்கையில் அர்த்தமுழுமையும் அர்த்தமின்மையும் ஒரேசமயம் வெளிப்படும் வாழ்க்கைவெளியாக இக்கதைகள் உருவம் கொள்கின்றன
[ஏமாறும் கலை. யுவன் சந்திரசேகர். காலச்சுவடு பதிப்பகம்]