கம்பனும் காமமும் 3: அருளும் மருளும் அது

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் முன்பக்கம் உள்ள குறத்தி சிலையை நானும் நண்பரும் ஒரு மதியம் முழுக்க அமர்ந்து பார்த்து ரசித்தோம். பல இடங்களில் அமர்ந்து, பல கோணங்களில் கண்ணோட்டி. ஒரு விதமான பரவச மயக்க நிலை.  திரண்ட பணைத்தோள்களும் நீண்ட கைகளும் கொண்டு ,இடை நெளித்து ,தொடை முன்னெடுத்து நின்று; அகன்ற மான்விழிகளால் விழித்து நோக்கி ஏதோ சொல்லவரும் பாவனை கொண்ட பன்னிரண்டடி உயரச்சிலை. அதன் உச்சகட்டப்பேரழகே ஒன்று ஒசிந்து பிறிது எழுந்து, விம்மிப்பருத்து நிற்கும் இணைமுலைக் கனிகள்தான்.

பார்க்கும் தோறும் அவற்றில் உயிர் நிறைந்துகொண்டே இருந்தது. மெல்லிய சருமப்பளபளப்பை, நிறையும் கனத்தை, ததும்பும் அசைவை, குவியும் மொட்டுக்கூர்மையை, குழைவை, தாய்மையை, காமத்தை, பேருருக் கொண்ட தேவிவடிவைக் காண முடிந்தது.

நண்பர் புகைப்பட நிபுணரும்கூட. ”ஜெயன் எந்தக் கொம்பன் எப்டி எடுத்தாலும் இந்த நுட்பம் வந்திராது. ஃபோட்டோ எண்ணைக்குமே தட்டையாத்தான் இருக்கும். ஒரு தோற்றத்தை மட்டும்தான் குடுக்கும். இது அப்டியே கண்ணை நிறைச்சு வழியிற மாதிரி இருக்கு”என்றார்.

நான் ”இது கல்லு. இதுவே உயிருள்ள உடல்னா? யோசிச்சுப்பாருங்க. ஃபோட்டோ இதை எப்டி அள்ள முடியாதோ அப்டித்தான் மனுஷ உடம்பை சிலையும் காட்டிர முடியாது” என்றேன்.

நண்பர் பதில் சொல்லாமல் பார்த்துக் கோண்டே இருந்தார். யாராவது கடந்துசெல்லும்போது சற்றே விலகி வேறு பேச்சு சில பேசி, மீண்டும் அதில் கண்பதித்தோம். ”இப்படி ஒரு பெண் தெருவில் எதிரே வந்தால் என்ன செய்வீர்கள் ஜெயன்?” என்றார்.

புன்னகையுடன் திரும்பிப் பார்த்தபோது ஒருகணம் நெஞ்சு சிலிர்த்தது. அப்படி ஒரு பெண் எதிரே வந்தால் அக்கணமே பிரமித்து உயிர் அகன்றுவிடக்கூடும். அந்த உடல் மானுட சாத்தியமே அல்ல. அப்படிப் பார்த்தால் அது மனித உடலே அல்ல. ”இது மனுஷ உடலே இல்லை”என்றேன்”மனுஷ உடலிலே இருந்து கற்பனையாலே மேலே போய் கலைஞன் உருவாக்கிக்கிட்ட தரிசனம் இது. நான் சொன்னது தப்பு. எந்த மனுஷ உடலும் இதுக்கு நிகரா ஆக முடியாது… இது ஒரு பெரிய கனவு. மண்ணிலே இதுவரைக்கும் மனுஷ இனம் வாழ்ந்த வாழ்க்கை ரொம்ப சாதாரணம். அவன் கண்ட கனவுகள்தான் மகத்தானவை”

அன்று திரும்பும்போது அம்முலைகள் கண்ணிலும் கருத்திலும் வாழ்ந்தன. அன்றிரவின் கனவுகளில் பொலிந்தன. அம்மனஎழுச்சியில் காமம் எந்த அளவு என்று எண்ணக்கூடவில்லை. காமமேயற்ற கனவுப்பெருநிலை அவற்றைப் பார்த்ததும்,நினைத்ததும், நினைவுகூர்ந்ததும்.

பின்னர் அதைப்பற்றியே எண்ணிக் கொண்டேன். என்று நமக்குக் கவிதை கிடைக்கிறதோ அன்றுமுதல் முலைகளை கவிஞர்கள் பாடிவந்திருக்கிறார்கள். பெண்ணை அவள் முலையைச் சொல்லியே அடையாளம் காட்டும் வழக்கம் குறுந்தொகை முதல் தொடர்ந்து வந்திருக்கிறது. கற்பின்செல்வியின் முலைகளை இளங்கோ பாடுகிறான். மண்ணின் மகளின் முலையை கம்பனும் பாடுகின்றான். பெண்ணாகிய ஒருவளின் முலைகளைப் பாடாத சைவக்குரவர்கள் இல்லை.

என்று முதற்கலை நமக்குக் கிடைக்கிறதோ அன்று முதல் மண்ணில், கல்லில், மரத்தில், சுதையில், வெண்கலத்தில், செம்பில், கலைஞன் முலைகளை வனையத் தொடங்கியிருக்கிறான். செம்புமுலைகள் சங்கக்கவிஞன் பாடிய மாமைநிற மாமுலைகள். மாந்தளிரின் மென்மை கொண்டவை. வெண்கலமுலைகள் பொன்னொளிர் இளமேனியர். ஆனாலும் முலையழகு என்பது ஐம்பொன்னிலேயே. வெண்கலத்தின் பொன்னிறம் கொண்டு, வெண்கலம் போன்று உலோகப்பளபளப்பு இல்லாமலிருக்கவே ஐம்பொன் கண்டுபிடிக்கப்பட்டது போலும். இவையனைத்துமே பகலில் என்றால் கல்முலை என்பது இரவு. பகலில் தெரிவனவெல்லாம் இரவில் கனவாகிப் பேருருவம் கொள்கின்றன.

முலைகள் மீது ஏன் மானுடம் அத்தனை பெருங்காதல் கொண்டுள்ளது? காமமும் தாய்மையும் ஒன்றாகும் ஒரு தளத்தை ஒரு பருப்பொருளில் காணமுடியும் என்பதனாலா? சமூக ஆய்வாளர் முலைகள் வளத்தின், செழிப்பின், குறியீடுகள் என்று சொல்லக்கூடும். வழிபாடுகள் எல்லாமே வளத்துக்கான வேண்டுதல்களாகவே தொடங்கியுள்ளன என்று சொல்பவரும் உண்டு.

உளவியலாளர் அரவணைப்பை ,அடைக்கலத்தை நாடும் முதிராக்குழவி ஒன்று ஆழ்மனத்தில் உறைவதன் வெளிப்பாடு அது என்று சொல்லக்கூடும். அன்னை இடைவிட்டிறங்கிய பின் மானுடன் தேடுவது மீண்டுமொரு அன்னையையே என்று. இயற்கையில் பெண்மையில் விசும்பின் விரிவில் அவன் தேடுவது அவள் பேரருளையே என்று.

கம்பராமாயணத்தைப் பாடமாக வைக்கும்போது கல்லூரிகளில் இந்தச் சிக்கல் எழுவதாகப் பேராசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள். சீதையின் முலைகளைப் பற்றிச் சொல்லாமல் கம்பன் முன்னகர்வதில்லை. கம்பனில் ஊறிய பேராசிரியர் ஒருவர் சொன்னார், ‘கனல் போல் கற்பினாளை’ மாணவர்கள் வேறு நோக்கில் எண்ணாமல் தடுக்க அவருக்கு வழிதெரியவில்லை, அப்பாடல்களை தாண்டிச்செல்வதைத் தவிர. மாணவர்கள் அவற்றைப் படிப்பார்கள்தான், குறைந்தது அவர் கண்முன் படிக்காமலிருப்பார்களல்லவா?

சென்றகாலத்தின் ஒரு விசித்திர வழக்கம் மட்டும்தானா கம்பனின் வருணனைகள்? கம்பரஸம் எழுதிய சி.என்.அண்ணாத்துரை கருதியதுபோல தீவைத்துக் கொளுத்தப்பட வேண்டியதுதானா? ஸ்ரீவில்லிபுத்தூர் குறத்தியையும் மோகினியையும் உடைத்து வீசிவிடவேண்டுமா? அப்படிச் சொல்பவர்களும் இருக்கக் கூடும். ஆனால் மனத்தடைகளில்லாமல் இயற்கையின் அற்புதம் ஒன்றின் முன், கனிவும் அழகும் ஒன்றேயாகும் ஒன்றின் முன், தன்னை நிறுத்திக் கொண்ட கலைஞனின் தரிசனமே நான் கம்பனின் வரிகளில் காண்பது.

‘அருப்பு ஏந்திய கலசத்துணை
அமுது ஏந்திய மதமா
மருப்பு ஏந்திய’  எனல் ஆம் முலை,
மழை ஏந்திய குழலாள்
கருப்பு ஏந்திரம் முதலாயின
கண்டாள் இடர்காணாள்
பொருப்பு ஏந்திய தோளனோடு
பொருந்தினள் போனாள். [ அயோத்தியா காண்டம். 1931]

[அரும்பு ஏந்திய அமுது நிறைந்த இணைக் கலசங்கள் போலவும் மதயானை தந்தங்கள் போலவும்  முலைகளும் மேகம்போன்ற கூந்தலும் கொண்டவள் கரும்பு இயந்திரம் முதலியவற்றைக் கண்டபடி துயரங்களை அறியாமல் மலைகள் பொருந்திய தோள்கொண்டவனுடன் இணைந்து சென்றாள்]

ராமனோடு காடு ஏகும் சீதையின் சித்தரிப்பு இது. கணவனோடு செல்வதனால் காடுசெல்லுதலும் அவளுக்கு ஓர் உலாவாகவே இருக்கிறது. கரும்பு இயந்திரம் முதலியவை கண்டும் இடர்களைக் காணாமலும் அவனுடன் இணைந்து சென்றாள். அவ்வரியில் சீதையை வெறுமெ குறிப்பதற்காக அவள் முலைகளுக்கு இரு உவமைகளை அளிக்கிறான். அரும்புகளை உச்சியில் ஏந்திய அமுது விளைந்த இணைக்கலசங்கள்!  மூத்தமதயானை தன் முகத்தில் ஏந்திய இரு தந்தங்கள்! ராமனைக் குறிக்க மலை பொருந்தியவை போன்ற தோள்களைக் கொண்டவன் என்று வரும் வரியைப்போலவே இயல்பாக இவ்வருணனையும் வருகிறது.

எவ்வித தனியழுத்தமும் இன்றி ஓடிச்செல்லும் ஒரு சித்தரிப்பின் துளிதான் இது. ஆனால் இதில் கம்பன் ஒருமுலையிணைக்கு இரு உவமைகளைச் சொல்லிச் செல்கிறான். ஒருகாம்பில் ஒன்பது பூக்களைப் பூக்கவைப்பதே செவ்வியல்கலை என்பவர்கள் உண்டு. அணியலங்காரங்கள் அதன் அடிப்படை அலகுகள் என்பது உண்மையே. ஆனால் கம்பனைப்போன்றதோர் கரையிலா கவிப்பெருக்கில் வீண்சொல் என்பதுஒருபோதும் நிகழ்வதில்லை. அந்த பிரக்ஞையுடன் மீண்டும் மீண்டும் இவ்வரிகளை வாசிக்கும்போது அவ்விரு உவகைகள் இருகைகளாக நின்று அள்ளியளிக்கும் சித்திரம் பெரும் மனக்கிளர்ச்சியை ஊட்டுகிறது.

மலர்மொட்டை மேலே வைத்த இரு அமுதகலசங்கள் என்ற உவமை அவள் முலைகளின் நேர்க்காட்சியை காட்டுகின்றது. இரு பொற்குவைகள். ஆனால் மதயானையின் தந்தங்கள் என்ற உவமை அவற்றைப் பக்கவாட்டில் காட்டுகிறது. அவற்றின் நெகிழ்வை, வளைவை, நுனி மேலெழுந்த கூர்மையை, நடக்கும்போது உந்தி முன்செல்லும் அசைவை. கம்பனும் இடம் மாறிச் சென்று நோக்கிச் சொல்கிறான்போலும்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் குறத்தியைச் சொல்ல சொல்தேடியலைந்த மனம் இவ்விரு உவமைகளையும் கண்டுகொண்டது. அமுதப்பெருங்கருணை நிறைந்த கலங்கள். கொலைமத யானையின் தந்தங்களும்கூட!

கம்பனும் காமமும் 1,2
http://jeyamohan.in/?p=312
http://jeyamohan.in/?p=308

முந்தைய கட்டுரைஇயற்கை உணவு : என் அனுபவம்
அடுத்த கட்டுரைசுஜாதா, இருவம்புகள்