சுரேஷ்குமார இந்திரஜித்தின் ஒரு கதை இப்படி ஆரம்பிக்கிறது ’நான் உறையிட்ட கத்தியை இடுப்பில் செருகிவைத்திருக்கிறேன். மருமகள் வீட்டிலிருந்து சாப்பாடு வருகிறது. எங்கள் குடும்பம் உருக்குலைந்து போய்விட்டது’ கதையின் முதல் பத்தி இதுதான். இது கதையின் மொத்தத்தையும் சொல்லிவிடுகிறதென்பதை மீதிக்கதையை வாசிக்கையில் அறியலாம். அடுத்த பத்தி இப்படி ஆரம்பிக்கிறது ‘நான் முதலிலேயே மேகலாவிடம் கூறினேன். அந்தப்பையன் சரியில்லை. அவன் அப்பா ஒச்சாத்தேவர் வம்புதும்புக்கு போகிற ஆள்…’
சுரேஷ்குமார இந்திரஜித் எழுதும் எல்லா கதைகளும் இந்தவகை நடையில் இதே சித்தரிப்புமுறையில்தான் உள்ளன. அவர் எதையுமே விவரிப்பதில்லை. எதையும் வர்ணிப்பதுமில்லை. உணர்ச்சிகள் நேரடியாக வெளிப்படுவதுமில்லை. நான் அவரது கதைகளை இப்படித்தான் வகுத்துக்கொண்டிருக்கிறேன். அடுத்த பேருந்து நிறுத்ததில் இறங்குவதற்கு முன்னர் ஒரு யதார்த்தவாதியான மூத்தவிவசாயி தன் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நம்மிடம் சொல்வது போன்றவை அவை.
சுருக்கவாதம் [minimalism] என்பது கலையின் அழகியல்கூறுகளில் ஒன்று. எவ்வளவு குறைத்துச்சொல்லமுடியுமோ அந்த அளவுக்கு மட்டுமே சொல்லி அனைத்தையும் உணர்த்த முயலும் அழகியல் உத்தி என அதை வரையறைசெய்யலாம். இலக்கியத்தில் இருவகை சுருக்கவாதங்களைக் காணமுடியும். ஒன்று செவ்வியலில் இரண்டு நவீனத்துவத்தில்.
செவ்விலக்கியத்தின் வேர் பழங்குடி வாய்மொழி இலக்கியங்களில் உள்ளது. அவர்கள் தங்கள் நேரடியான இயல்பாலேயே குறைவாகச் சொல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள். பழங்குடி-நாட்டார் இலக்கியங்களின் அழகியல் சிறப்பாகவே இதைச் சுட்டிக்காட்டலாம். அவை நேரடி அனுபவத்திலிருந்து அப்படியே பதிவானவையாக இருக்கும். கவித்துவக் கற்பனையால் வளர்த்தெடுக்கப்பட்டவையாக இருக்காது. அவற்றை வாழ்க்கையில் இருந்து தொட்டெடுக்குமிடத்தில்தான் கவிஞனின் கற்பனை செயல்பட்டிருக்கும்.
சங்க இலக்கியங்களில் இந்தக் சுருக்கவாத நோக்கை தொடர்ந்து காணலாம். வர்ணனைகளில் மிகயதார்த்தமான நேரடி மனப்பதிவு இருக்கும். ‘மயில்கால் அன்ன மாக்குரல் நொச்சி’ என ஒரு கவிஞன் சொல்லும்போது எந்த மிகையும் இல்லை. நொச்சியின் இலைகள் மயிலின் கால்விரல்கள் போல மூன்றாகப்பிரிந்துதான் இருக்கும். சுருக்கவாதத்தின் மிகச்சரியான உதாரணம் பாரிமகளிர் எழுதிய ‘அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்..’ என்ற கவிதைதான்.
பிற்பாடு கவிதையின் வளர்ச்சி சுருக்குவதற்குப்பதிலாக வளர்த்தெடுப்பதை நோக்கித் திரும்பியது. அதை மானுடப்பண்பாட்டின் வளர்ச்சியின் விளைவு என்றே சொல்லலாம்.விழுமியங்கள், நெறிகள், அழகியல்கூறுகள், உணர்ச்சிநிலைகள் எல்லாமே சாத்தியமான உச்சநிலைகளை நோக்கிக் கொண்டுசெல்லப்பட்டன. ஒட்டுமொத்தமாக இதை கற்பனாவாதம் என்கிறார்கள். தமிழில் கற்பனாவாதப்பேரிலக்கியம் என்றால் அது கம்பராமாயணம்தான்
அதன்பின் நவீன இலக்கியக் காலகட்டத்தில் மீண்டும் சுருக்கவாதம் உருவானது. இம்முறை அது இயல்பாக உருவாகவில்லை. மிகுந்த பிரக்ஞையுடன் செவ்வியலிலும் நாட்டாரியலிலும் இருந்து கண்டெடுக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டது. தனக்கு முந்தைய கற்பனாவாதமரபு அனைத்தையும் மிகையாக்கி நிறுவனமாக்கி விட்டிருக்கிறது என உணர்ந்த நவீனக் கலைஞன் அந்த மிகைகளைக் களைந்து ’இருப்பதை இருப்பதுபோல’ காட்டவேண்டுமென விரும்பினான். அதற்காக அவன் சுருக்கவாதத்தை கண்டடைந்தான்.
சுருக்கவாதம் என்பது நவீன இலக்கியத்தின் முக்கியமான அழகியல்மரபான இயல்புவாதத்தின் [Naturalism] அடிப்படையாகும். புறவயமான யதார்த்தமே உண்மையானது, பொதுவானது, மாறாதது என அது நம்புகிறது. உணர்ச்சிகள், சிந்தனைகள், கற்பனைப்பெருக்கு எல்லாமே அதன் மீது அகவயமாக ஏற்றப்படுவன மட்டுமே.அவற்றைச் செயற்கையாகவே எழுதமுடியும். எது நடந்தது என்பது மட்டுமே எல்லாருக்குரியது, எழுதப்படவேண்டியது. ஆகவே இயல்புவாதம் புறவய யதார்த்தத்தை மிகக்கூர்மையாகவும் கறாராகவும் சொல்லமுயல்கிறது. புறப்பொருட்கள், புறநிகழ்ச்சிகள் ஆகியவற்றை மட்டுமே சார்ந்து தன் புனைவை உருவாக்குகிறது.
தமிழில் நவீன இலக்கியம் உருவான ஆரம்ப காலகட்டத்திலேயே சுருக்கவாதநோக்குள்ள புனைவுகள் வர ஆரம்பித்துவிட்டன. அனைத்துக்கும் முதல்முன்னோடி வடிவை எழுதிய புதுமைப்பித்தன்தான் சில கதைகளை அவ்வகையில் எழுதியிருக்கிறார்.அதன்பின்னர் முற்போக்கு இலக்கியம் வலுப்பெற்றபோது இயல்புவாதம் தமிழின் முக்கியமான ஓர் அழமியல்வடிவமாக வளர்ந்து வந்தது.பூமணி தமிழில் இயல்புவாத எழுத்தின் ஒரு உச்சம் என்று சொல்லலாம்.
தமிழில் நவீனத்துவத்தின் முக்கியமான கலைஞர்களுக்கு சுருக்கவாத நோக்கில் ஆர்வமிருந்திருக்கிறது. ஜி.நாகராஜன் அவரது கட்டுரை ஒன்றில் சுருக்கவாதமே உண்மையான கலைவடிவ என வாதிட்டிருக்கிறார். அசோகமித்திரன் சில கதைகளை எழுதியிருக்கிறார். மிக்ச்சிறந்த உதாரணம் அவரது பார்வை என்னும் கதை. சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களின் வரிசையில் வரக்கூடியவர் என்று சொல்லலாம்.
சுரேஷ்குமார இந்திரஜித் வழக்கமாக இயல்புவாத எழுத்தாளர்களிடமிருக்கும் சில அடிப்படைகளையும் தவிர்த்துவிடுகிறார். இயல்புவாதம் புறவயமான பொருள்மய உலகை துல்லியமாகச் சித்தரிக்க முயற்சி எடுத்துக்கொள்ளும். ஒருவகையான புகைப்படத்தன்மையுடன் அவர்கள் கதைக்களனை காட்டுவார்கள். சுரேஷ்குமார இந்திரஜித் அந்த வகை சித்தரிப்பையும் முழுமையாக தவிர்த்துவிடுகிறார். இடங்கள் பொருட்கள் வர்ணிக்கப்படுவதே இல்லை. வெறும் நிகழ்ச்சிகள் மட்டுமே கதைகளில் உள்ளன.
இவ்வாறு ரத்தினச்சுருக்கமாக ஆக்கப்பட்ட கதையுலகம் வெவ்வேறு மனிதர்களின் வெவ்வேறு வகையான வாழ்க்கைகளை எளிமையாகச் சொல்லிச் செல்வதுபோல தோன்றும். வெறும் வாழ்க்கைத்துணுக்குகள், வேறென்ன என்ற எண்ணத்தையும் வாசகனுக்கு உருவாக்கலாம். ஆனால் இந்தவாழ்க்கைகளை அவர் தொகுத்துவைக்கும் விதத்தில், நிகழ்ச்சிகளை தொடுக்கும் விதத்தி, நடுவே அவர் விடும் சிறிய இடைவெளிகள் வழியாக அவரது வாழக்கைநோக்கு வெளிப்படுகிறது. அவரது விமர்சனமும் தரிசனமும் வாசகனை வந்தடைகின்றன. ஆகவேதான் இவை முக்கியமான படைப்புகளாக ஆகின்றன
சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளை வாசிக்கும் வாசகன் அந்தப்பேருந்துப் பயணியிடம் பேசிவிட்டு நீண்ட சொந்தப்பயணத்தில் முழுக்க அவனைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் இன்னொரு பயணியைப்போன்றவன். .உறையிட்ட கத்தி கதையையே எடுத்துக்கொள்ளலாம் . தன் ஒட்டுமொத்தவாழ்க்கையும் விதவிதமான நிகழ்ச்சிகள் வழியாகச் செல்வதைச் சொல்லும் ஒரு முதியவரின் குரல் இது. அவரது மகளின் வாழ்க்கை அழிகிறது. பழிக்குப்பழி வாங்குவதற்காக அவர் குமுறிக்கொண்டே இருக்கிறார். ஆனால் ஒன்றும் செய்வதில்லை. உறையிடப்பட்ட கத்தியை பாதுகாப்புக்காக வைத்துக்கொண்டு திண்ணைகளில் சும்மாதான் இருக்கிறார்.
கதைநிகழ்ச்சிகளில் சில ஆவேசமானவை. சில சாதாரணமானவை. எல்லாவற்றையும் சமமான தோரணையில்தான் சுரேஷ்குமார இந்திரஜித் சொல்கிறார். நிகழ்ச்சிகளின் இடைவெளிகளில் உள்ளது கதையின் சாரம். சந்திரனும் பிறரும் சகோதரி அநியாயமாக சாகவிடப்பட்டமைக்குப் பழிவாங்கச் செல்கிறார்கள். சென்ற இடத்தில் அவர்கள்தான் கொலைசெய்யப்படுகிறார்கள். ஒரே ஓரிடத்தில் கதைசொல்லியின் குடும்பம் தெலுங்கு பேசுவது வந்து செல்கிறது. மேகலாவை கட்டிய குடும்பம் தேவர்கள். அந்த விஷயம் இக்கதையில் கதைசொல்லியின் செயலின்மையின் கொந்தளிப்பை புரிந்துகொள்ள வைக்கிறது. சட்டென்று நம் கவனம் தலைபபி நோக்கிச் செல்கிறது. உறையிடப்பட்ட கத்தி
சுரேஷ்குமார இந்திரஜித் ன் முந்தைய தொகுதியில் உள்ள கதைகளில் இருந்து இக்கதைகள் துல்லியமான வழிப்பிரிவைக் கொண்டிருக்கின்றன என்பதை கவனித்தேன். சுரேஷ்குமார இந்திரஜித் காஃப்காவால் தீவிரமாகப்பாதிக்கப்பட்டு எழுதவந்தவர், அவரது ஆரம்பகாலக் கதைகளில் எல்லாம் காஃப்காத்தனத்தை தெளிவாகவே காணமுடியும். சுருக்கவாதநோக்குகூட அவர் காஃப்காவிடமிருந்தும் காஃப்காவால் பாதிக்கப்பட்ட தமிழ் எழுத்தாளர்களிடமிருந்தும் பெற்றுக்கொண்டதாக இருக்கலாம். கதைகளை இறுக்கமான உருவகங்களாக ஆக்கும் தன்மையை சுரேஷ்குமார இந்திரஜித் அவரது காஃகாவிடமிருந்து பெற்றார் என்று சொல்லலாம்
சுரேஷ்குமார இந்திரஜித் ரின் ஆரம்பகாலக் கதையான விரித்தகூந்தல் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். கதை சுருக்கமான விவரணைகள் வழியாகச் செல்கிறது. குற்றாலத்தில் குளித்து முடித்து நிற்கும் பெண்களின் விரித்த கூந்தல் கதைசொல்லியை ஏதோ ஒருவகையில் தொந்தரவுசெய்வதுதான் கதை. அது கண்ணகியை நினைவூட்டுகிறது கொற்றவையாக ஆகிறது. ஆனால் அக்கதை காய்ந்தவிதை போல உயிரற்ற உயிர்ச்சாத்தியத்துடன் எழுதப்பட்டிருக்கும்
இக்கதைகளில் சுரேஷ்குமார இந்திரஜித் வடிவ நெகிழ்ச்சியை அடைந்திருக்கிறார். மொழியில்,கட்டமைப்பில் சகஜத்தன்மை கைகூடியிருக்கிறது. ஏற்கனவே இருந்த அந்த இறுக்கத்தை இல்லாமலாக்கியது எது என்று பார்க்கும்போது இப்போது வந்து சேர்ந்திருக்கும் மெல்லிய அங்கதம்தான் என்று படுகிறது. ’வெற்றிச்செல்வி அலுவலகத்துக்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்தாள். மருத்துவக்கல்லூரியும் பொறியியல்கல்லூரியும் அவள் நிர்வாகத்தின்கீழ் இயங்கி வருகின்றன. வேலை என பெரிதாக ஏதும் இல்லை. அலுவலத்துக்குச் சென்று அமர்ந்தால்தான் அனைத்து நிறுவனங்களும் கட்டுக்கோப்புடன் நடக்கும் என்று நினைப்பதால் தினமும் செல்கிறாள். கணவர் கோயிலுக்குச் செல்ல தயாராகிவிட்டாரா என்று அறைக்குள் எட்டிப்பார்த்தாள். அவர் அப்போது பிரா அணிந்துகொண்டிருந்தார்’
இந்த மெல்லிய சீண்டல் முன்பு சுரேஷ்குமார இந்திரஜித் திடம் இருந்ததில்லை. இந்த புன்னகை இன்று அவரை நவீனத்துவக்கதைகளின் இறுக்கமான வடிவத்தில் இருந்து வெளிக்கொண்டுவந்திருக்கிறது என்று தோன்றுகிறது.. ஆனால் அவரது அன்றைய வாழ்க்கைப்பார்வை இன்னும் தீவிரமடைந்திருப்பதாகவே தோன்றுகிறது. மனிதம் மீதான ஆழமான அவநம்பிக்கை என அதைச் சொல்லமுடியும். கூடவே அந்த அவநம்பிக்கைக்கு எதிரான ஏக்கமும் என்று சேர்த்துக்கொள்ளவேண்டும். இந்தத் தொகுப்பின் மிகச்சிறந்த கதையான மின்னும் கண்கள் அதைத்தான் அழுத்தமாக முன்வைக்கிறது
[ நானும் ஒருவன். சுரேஷ்குமார இந்திரஜித் . காலச்சுவடு பதிப்பகம்]