நான் பைத்தியக்காரனா?-மாப்பசான்

நான் பைத்தியக்காரனா? அல்லது பொறாமை பிடித்தவனா? எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் கொடும் துன்பத்திலிருக்கிறேன். நான் செய்தது குற்றம்தான். ஆனால், நான் அனுபவிக்கும் கிறுக்குத்தனமான பொறாமை, காதலில் ஏமாற்றம், தாங்க முடியாத வலி இதெல்லாம் யாரையும் குற்றம் செய்யத் தூண்டாதா?

இந்தப் பெண்ணை நான் கிறுக்கன் போல் காதலித்தேன். அப்படித்தானா? உண்மையில் அவளை நான் விரும்பினேனா? இல்லவே இல்லை. என் உள்ளமும் உடலும் அவள் வசமிருந்தன. அவளுக்கு நான் ஒரு பொம்மை. தன் புன்னகையால், தன் புனித வடிவான உடலால் என்னை தன் அடிமையாக வைத்திருந்தாள் அவள். அவைதான் நான் அவளை விரும்பக் காரணமாயிருந்தன. ஆனால் அந்த உடலில் இருந்த பெண்ணை நான் வெறுக்கிறேன். அவள் தூய்மையற்றவள்; நன்றிகெட்ட ஜென்மம். ஆன்மா என்ற ஒன்றே இல்லாத மிருகம். சிறுமை குடிகொண்ட வெறும் சதைப்பிண்டம்!

நாங்கள் இணைந்த பின் முதல் சில மாதங்கள் ஏதோ மாயம் போல் கழிந்தன. அவளது கண்களில் மூன்று நிறங்கள் உண்டு. நான் உளறவில்லை. உண்மையிலேயே அப்படித்தான். பகலில் வெளிர் நீலம், மாலையில் பச்சை, சூரியோதயத்தில் நீலம் என மாறும் நிறங்கள். காதல் கணங்களில் அவை நீலமாய், பாவை நீர்த்து பரபரப்புடன் இருக்கும். அவளது உதடுகள் துடிக்கும். அவ்வப்போது அவள் நுனி நாக்கு, சீறத் தயாராகும் பாம்பு போல் தோன்றும். கனமான இமைகளை அவள் உயர்த்தும்போது, பேராவல் ததும்பும் அந்தப் பார்வையைக் கண்டு நான் நடுங்குவேன். அவளை ஆட்கொள்ளத் துடிக்கும் ஆவலால் அல்ல, அந்த மிருகத்தைக் கொன்றுவிட வேண்டும் என்ற துடிப்பில்.

அறைக்குள் அவள் நடக்கும்போதெல்லாம் ஒவ்வொரு அடியும் என் மார்பை அதிரவைக்கும். தன் மேலங்கியைக் கழற்றி வெள்ளை வலையாடையில் வெளிப்படும்போது நான் பலமிழந்து கால்கள் நடுங்க மயக்கமடைவேன். என்ன மாதிரியான ஒரு கோழை நான்!

ஒவ்வொரு நாளும் காலையில் அவள் விழிக்கும்போது, என்னை தன் அடிமையாக்கி வைத்திருந்த அம்மிருகத்தின் மீது எரிச்சலும் வெறுப்பும் நிரம்பிய இதயத்துடன், அந்த முதல் பார்வைக்காகக் காத்திருப்பேன். ஆனால் தெளிந்த நீல விழிகளில் சலிப்புடன் என்னை அவள் பார்க்கும்போது தணிக்க முடியாத நெருப்பொன்று என்னுள் கனன்றெழுந்து என்னை கிளர்ந்தெழச் செய்யும்.

அன்று அவள் கண்களைத் திறந்தபோது விருப்பென்பதே துளியும் இல்லாத அலட்சியத்தை அதில் கண்டேன். அக்கணமே, அவள் என்னில் சலிப்படைந்துவிட்டாள் என்பதை உணர்ந்தேன். எல்லாம் முடிந்துவிட்டதென்பது தெளிவாய் புரிந்தது. ஒவ்வொரு நொடியும் என் எண்ணம் சரியானதே என்பது நிச்சயமானது. என் கைகளாலும் உதடுகளாலும் அவளை நாடியபோது என்னிடமிருந்து விலகிச் சென்றாள்.

“என்னை விட்டுவிடு. உன்னைப் பார்க்கவே பயமாயிருக்கிறது” என்றாள்.

என்னுள் சந்தேகம் தலைகாட்டியது; கிறுக்குத்தனமான பொறாமை. ஆனால் நான் நிச்சயமாய் பைத்தியமல்ல. தந்திரமாய் அவளை கண்காணித்தேன். அவள் என்னை ஏமாற்றிவிட்டாள் என்பதல்ல. ஆனால் விரைவில் என்னிடத்தை வேறொருவன் எடுத்துக்கொள்வான் என்பதை அவளது நடத்தை எனக்குணர்த்தியது.

சில சமயங்களில் அவள், “ஆண்களைக் கண்டாலே அருவருப்பாக இருக்கிறது” என்பாள். அதென்னவோ உண்மைதான்.

அவளது அலட்சியமும், தூய்மையற்ற அவள் எண்ணங்களும் என்னை பொறாமை அடையச் செய்தன. வேண்டா வெறுப்பாக அவள் பார்த்த பார்வை என்னை கோபத்தில் மூச்சடைக்கச் செய்தது. அவள் கழுத்தை நெரித்து, அவள் மனதிலிருந்த மானங்கெட்ட ரகசியங்களை அவளாக ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டும் என்ற அடக்கமுடியாத ஆவல் என்னை ஆட்கொண்டது.

நான் பைத்தியமா? இல்லை.

ஓரிரவில் அவள் மகிழ்ச்சியாய் இருப்பதைக் கண்டேன். புதியதாய் ஒரு விழைவு அவளை அடிமைப்படுத்தியிருப்பதை நான் நிச்சயமாய் உணர்ந்தேன். எப்போதும் போல் அவள் விழிகள் ஒளிர்ந்தன சுரம் கொண்டவள் போல அவள் உடல் முழுவதும் காதலால் அதிர்ந்தது.

நான் அறியாதது போல் பாசாங்கு செய்தேன். ஆனால் அவளை கூர்ந்து கவனிக்கலானேன். எதுவும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வாரம், ஒரு மாதம் எனக் காத்திருந்தேன். கிட்டத்தட்ட் ஒரு வருடமானது. அவள், ஒரு வருடலால் மகிழ்விக்கப்பட்டவள் போல், மினுங்கும் மகிழ்ச்சியிலாழ்ந்திருந்தாள்.

ஒரு வழியாக ஊகித்தேன். இல்லை, நான் பைத்தியக்காரனில்லை. உறுதியாக இல்லை. புரிந்துகொள்ள முடியாத இந்தக் கொடுமையை நான் எப்படி விவரிப்பேன்? என்னை எப்படி புரியவைப்பேன்? நான் ஊகித்தது இப்படித்தான்.

ஓரிரவில் நீண்ட குதிரைச் சவாரிக்குப் பின் களைத்துப்போய் என்னெதிரே இருந்த இருக்கையில் சரிந்தாள். இயல்பில்லாத ஒரு செம்மை அவள் கன்னங்களிலும் கண்களிலும் படர்ந்திருந்தது. நான் நன்றாக அறிந்த அந்தக் கண்களில் அந்தப் பார்வை இருந்தது. என் ஊகம் தவறில்லை, அவளின் அந்தப் பார்வையை நானறிவேன். அவள் காதலிக்கிறாள். ஆனால் யாரை? என்ன இது? என் தலை சுற்றியது. அவளைப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காக ஜன்னல் பக்கமாகத் திரும்பிக் கொண்டேன். ஒரு உதவியாளன் அவளது குதிரையை லாயத்திற்கு நடத்திக் கொண்டிருந்தான். அவன் மறையும் வரை பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தவள், உடனடியாக தூங்கிப் போனாள். இரவு முழுவதும் விடாமல் யோசித்துக் கொண்டே இருந்தேன். புரிந்துகொள்ள முடியா ரகசிய ஆழங்களுக்குச் சென்றது என் எண்ணம். காமத்தில் வீழ்ந்த பெண்ணின் விபரீதமான, ஏறுமாறான போக்கை யாரால் அறிந்துகொள்ள முடியும்.

ஒவ்வொரு நாளும் காலையில் மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் பித்துப்பிடித்தவள் போல் சவாரி செய்தாள். திரும்பும்போது தளர்ந்துபோய் சோர்வடைந்திருப்பாள். ஒரு வழியாக எனக்குப் புரிந்தது. எனது பொறாமை அந்தக் குதிரையின் மேல், அவள் முகத்தை வருடிய காற்றின் மேல், கவிழ்ந்திருந்த இலைகளின் மேல், பனித்துளிகளின் மேல், அவளைத் தாங்கிச் சென்ற சேணத்தின் மேல்! பழி தீர்த்துக்கொள்வது எனத் தீர்மானித்தேன். என் கவனத்தை கூராக்கிக் கொண்டேன். அவள் சவாரி முடித்து வரும்போதெல்லாம் அவள் இறங்குவதற்கு உதவினேன். அப்போதெல்லாம் குதிரை என்ன முட்ட வரும். அவள் அதன் முதுகில் தட்டிக்கொடுத்து, துடிக்கும் அதன் நாசியில் முத்தமிடுவாள். முத்தமிட்டபின் தன் உதடுகளை துடைத்துக்கொள்வதும் கிடையாது. எனது வாய்ப்பை எதிர்நோக்கியிருந்தேன்.

ஒரு நாள் அதிகாலையில் விடியும் முன் எழுந்து, ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு அவள் மிகவும் விரும்பிய காட்டு வழிக்குச் சென்றேன். சண்டைக்குச் செல்பவன் போல், என் துப்பாக்கியை மார்பில் மறைத்து வைத்துக்கொண்டு சென்றேன். பாதையின் குறுக்காக இருபுறமும் இருந்த மரங்களில் அந்தக் கயிற்றைக் கட்டிவிட்டு புற்களின் பின்னே ஒளிந்துகொண்டேன். அவளது குதிரையின் குளம்பொலி கேட்டது. அதிவேகமாய் அவள் வருவதைக் கண்டேன். அவளது கன்னங்கள் சிவந்திருந்தன. பார்வையில் பித்து. மெய்மறந்தவளாய், வேறொரு உலகில் உலவுபவள் போல் இருந்தாள்.

கயிற்றை நோக்கி வந்த மிருகம் முன்னங்கால்களில் இடறி விழுந்தது. தரையில் விழும் முன்னம் அவளை என் கைகளில் ஏந்தி, அவள் எழுந்து நிற்க உதவினேன். பின்னர் குதிரையிடம் சென்று, என் துப்பாக்கியை அதன் காதருகே அழுத்தி, ஒரு மனிதனை சுடுவதைப் போல சுட்டேன்.

என் பக்கம் திரும்பி குதிரை சவுக்கால் என் முகத்தில் இரண்டு முறை கடுமையாக விளாசினாள். அடிபட்டுக் கீழே விழுந்த என்னை தாக்க வந்தவளை சுட்டேன்!

சொல்லுங்கள், நான் பைத்தியக்காரனா?

[ஏற்காடு இலக்கியமுகாமில் வாசித்த கதை]

முந்தைய கட்டுரைஏற்காடு – வேழவனம் சுரேஷ்
அடுத்த கட்டுரைஇலக்கியத்தோட்டம் விருதுகள்