உள்ளே வைத்து உடைப்பவர்கள்
தலைக்கு மேலே தண்ணீர்த் தொட்டிகள்
முளைவிடத் துவங்கிய பின்புதான்
நமது நிலத்தில்
கூரைகளின் கீழ் வசிப்பவர்கள்
தமது அடிவயிற்றில்
ஒரு சோடிக் கூழாங்கற்களைச் சுமக்கும்படியாயிற்று
கூரையின் ஆகாசகங்கையிலிருந்து இறங்கும்
உப்படைத்த பி.வி.சி சர்ப்பங்களின்
தீண்டலுக்கு
நமது நீர்பாதையின் போக்குவரத்து
சிக்கலாகிறது.
வலிதாளாது
குப்புறப்படுத்துக் கொண்டவர்களை
அவர்கள்தான் மலர்த்தி ஆறுதல் சொன்னார்கள்
அவர்கள் வார்த்தைகளுக்கு
கண்கள் செருகிய கணத்தில்தான்
சகலமும் நிகழ்ந்திருக்க வேண்டும்.
முற்பகல் செய்த ஹார்லிக்ஸ்கள்
திரும்பி வந்து மேசையில் புன்னகைக்க
முடிச்சிட்ட பாலிதீன் புழுக்கத்திற்கு
இழுப்பறையில் பழங்கள் திணற
ஒரு பகலில்
ஒருக்களித்துப் படுக்கும் நமக்கு
தூக்கிவாரிப் போடுகிறது..
அம்மருத்துவமனை அறையின் சன்னலூடே
விரல்களை நீட்டி
அத்திசையில் இருந்த மலைகளைப்பற்றி விசாரிக்கிறோம்
வெள்ளுடை தரித்த அவர்களோ
உள்ளே வைத்து உடைத்த நமது கற்களை
ஓரு கிண்ணியில் காட்டிச் சிரிக்கிறார்கள்
– லிபி ஆரண்யா
(‘உபரி வடைகளின் நகரம்’ தொகுப்பிலிருந்து)
முன்னொரு காலத்தில் குணசேகரன் என்றொருவன் வாழ்ந்து வந்தான்
உங்களுக்கு குணசேகரனைத் தெரியுமா?
ஆத்மாநாம் கோபிகிருஷ்ணன்
ஆகியோர் வாழ்ந்துவந்த மகாகவி
பாரதியார் வீதியின் கடைசிக் குடியிருப்பு
அவனுடையது
எங்கும் தூசிகள் விரிக்கப்பட்டிருக்கும்
சின்னஞ்சிறு அறை
பூச்சுகள் திறந்து செவ்வண்ணம் காட்டும்
மண் சுவர்கள்
புகைத்தொழித்த பீடித்துண்டுகள்
குடித்தொழித்த மதுக்குப்பிகள்
தேவைகளின் பொழுது அலசிக்கொள்கிற
ஐந்தாறு பிளாஸ்டிக் டம்ளர்கள்
{பிளாஸ்டிக் பொருட்கள் மனித குலத்திற்கு
இழைக்கும் தீங்குகள் குறித்து அவனுக்கு
நீங்கள் அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை}
குணசேகரனுக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர்
நண்பர்களுக்கு மனைவிகளும் காதலிகளும்
செல்லக்குட்டிகளும் புச்சுப் பையன்களும்
இருந்தனர்
ஓரு விடுமுறை ஞாயிறு
குதூகலத்தின் வெள்ளம் பெருக்கெடுக்கத் துவங்கியது
இரண்டு பெரிய புட்டியில்
அடைத்துவைக்கப்பட்டிருந்த
சொற்கள் முழுவதையும் காலி செய்தனர்
பேச்சுக்கள் பேச்சுக்கள் பேச்சுக்கள்
நிலா உதிக்கத் துவங்கிய பொழுதில்
நண்பர்கள் ஒவ்வொருவராக வற்றத்தொடங்கினர்
அருகிருக்கிற நீலகண்டேஸ்வரர் திருக்கோவில் மணி
தனியனின் செவிகளில் ஓலித்தது
பல்லாண்டுகள் கழித்து கடவுளுக்கு
காட்சியளிப்பது குறித்து அவன் யோசித்தான்
வழியில் ஆளில்லா லெவல் கிராஸிங் ஓன்று
குறுக்கிட்டது
ரயில் கடக்கட்டும் என்று காத்திருந்தவன்
கடைசிப் பெட்டிக்கும் முந்தைய
பெட்டிக்குமிடையே ரயிலைக் கடந்தான்
– இசை
(‘உறுமீன்கள்றற நதி’ தொகுப்பிலிருந்து)