சமகாலத் தமிழ்க் கவிதைகள்-கிருஷ்ணன்

தாண்டவம்

ஒன்றையொன்று தொடாதவாறு
அருகருகே நடப்பட்டிருக்கின்றன
இரண்டு வேல்கள்.
ஒன்று சக்தி
மற்றொன்று சிவம்.

இரண்டின் நிழல்களும்
ஒன்றன்
மீது
ஒன்றாகக்
கிடக்கின்றன தரையில்.
சக்தி குவிந்த தாமரையாக
சிவம் இதழ் பிரியும் மலராக.

வெயிலில்
புரண்டு
புரண்டு
பின்னிக்கிடக்கிறார்கள்.

சூரியன்
சரிய
சரிய.
திடீரென
நீண்டுகொண்டே போகிறாள் சக்தி
துரத்திக்கொண்டே போய் சிவம்
மூச்சிரைத்துக்கொண்டிருக்க
அந்தி வருகிறது
இருளில் மறைகிறார்கள் இருவரும்.

– இளங்கோ கிருஷ்ணன்


லட்சுமி டாக்கீஸ்

ஐம்பது வருட பழமையுடைய
திரையரங்கை இடித்து ஒரு தொழிற்கூடம் கட்டினார்கள்
ஆலைசங்கு கூவுவதற்கு பதிலாக பாட்டொன்றைப் பாடியது

யாரோ ஒரு காதலன்
யாரோ ஒரு காதலியை
கூடம் முழுக்கத் துரத்திக்கொண்டிருக்கிறான்
யாரோ ஒருத்தி ஓயாது விசும்பிக்கொண்டிருக்கிறாள்
யாரோ இருவர் அனல் பறக்கச் சண்டையிட்டனர்
சில சமயங்களில் பெரும் போர் மூண்டது.
இயந்திரங்களில் இருந்து அவ்வப்போது
விரக முனகல்கள் கேட்டன
சில நேர்மையான போலீஸ்காரர்கள்
விடிய விடிய ரோந்து வந்தனர்
அர்த்த ராத்திரியில் வெள்ளுருவொன்று
நறுங்குழல் விரித்து கொலுசதிர நடந்தது
(அப்போது அதன் பின்னணியில் ஓநாய்கள் ஊளையிட்டன.)

ஒரு சிம்மக்குரல் அடிக்கடி அடிக்கடி
“பாஸ்டார்ட் ” “பாஸ்டார்ட் ” என்று கத்துகிறது
அதன் உரிமையாளர் கொஞ்சம்

கண்ணயரும்போதெல்லாம்
“இந்த மண்டபமே இடிந்து தூள்தூளாகட்டும்” என்று
பத்தினி ஒருத்தி இடிகுரலால் ஆணையிடுகிறாள்
பாவம்,
இத்தனை இத்தனை
பேய்களை எப்படி விரட்டுவார் அவர்.

– இசை

[ஏற்காடு முகாமில் வாசிக்கப்பட்டவை]

முந்தைய கட்டுரைபாட்டாளி மக்கள் கட்சி பற்றி…
அடுத்த கட்டுரைவீட்டின் அருகே மிகப்பெரும் நீர்ப்பரப்பு-ரேமண்ட் கார்வெர்