1. பிரிவு
நான் வந்தேன்
தானியக் குதிர்களின் கிராமம் வரையிலும்
இரவின் வாயில் வரையிலும்
உன்னோடு வந்தேன்.
உனது
பொன்னான
புதிர் போன்ற புன்னகையின் முன்னால்
என்னிடம் வார்த்தைகள் இல்லை.
சிறிது அந்தி வெளிச்சம்
உன் முகத்தில் விழுந்தது.
தெய்வீகக் களை மிளிர்ந்தது
வெளிச்சம் அடைக்கலம் புகும்
மலையின் உச்சியிலிருந்து நான் பார்த்தேன்
உனது துணியின் பளிச்சென்ற தன்மை மறைவதை.
நெல் வயல்களின் நிழலில்
வீழ்ந்திடும் சூரியனைப் போல
உன் தலை மறைவதை பார்த்தேன்.
பதற்றங்கள் எனக்கு எதிராக எழுந்தபோது
சிறுத்தைகளைக் காட்டிலும்
பயங்கரமான பரம்பரை பயங்கள்
என் முன்னால் வந்தபோது
அவற்றை
அந்நாளின் அடிவானத்திற்கு அப்பால்
தள்ளிவிட மனதால் முடியவில்லை.
இனிமேல் எப்போதுமே இரவுதானா?
மீண்டும் சந்திக்க
முடியாத பிரிவா இது?
தனிமையான பூமியின்
இருளில் நான் அழுவேன்
எனது கண்ணீரின் மெளனத்தில் உறங்குவேன்.
உனது வாயின் பால் போன்ற விடியலினால்
என் நெற்றி தொடப்படும் வரையிலும்.
– லியோபோல்டு செங்கோர் (ஆப்பிரிக்கா)
2. யாராய் இருந்தால் என்ன?
என் பெயர், என் நாடு
இவையெல்லாம் உனக்கெதற்கு?
என் வம்சம் கெளரவமானதா, இழிந்ததா
எதுவானால் உனக்கென்ன?
ஒருவேளை மனிதரில் உயர்ந்து திரிந்தவனோ
ஒருவேளை அனைவரிலும் தாழ்ந்து அலைந்தவனோ
இருந்தால் என்ன?
அந்நியனே இதுபோதும்,
கல்லறை ஒன்றை நீ பார்க்கிறாய்!
அதன் பயன் எதுவென அறிவாய் நீ.
மூடும் அஃது,
யார் எவரென்று எதுவும் பொருட்டில்லை.
– பவுலுஷ் சைலன்ஷ்யாரியஸ் (கிரேக்கம்)
3. அஸ்திவாரங்கள்
நான் மண்ணின் மீது கட்டினேன்
அது இடிந்துவிழுந்தது.
நான் பாறைமீது கட்டினேன்
அது உருண்டுவிழுந்தது.
இனி நான்
புகைபோக்கியின் புகையிலிருந்து
என் பணியை தொடங்குவேன்.
– செஸ்லாவ் மிலோஸ் (போலீஷ்)
4.
லெளகீகமான ஆறுதலுக்கு
என் மனமே இரையாகிவிடாதே.
இல்லத்தோடும், இனியாளோடும் உன்னை
பிணித்துகொண்டு விடாதே.
உன் குழந்தையின் வாயிலிருக்கும்
ரொட்டித்துண்டை எடுத்து,
அயலார் ஒருவருக்குக் கொடுத்துவிடு.
உன் கொடூரமான எதிரிக்கு
மிகப்பணிவான சேவகனாகிப் போ.
காட்டு ஓநாயை
உன் சகோதரனின் பெயரிட்டு கொஞ்சு.
கடவு கோராதே எதற்காகவும்.
– அன்னா அக்மதோவா (ருஷ்யா)
[ஏற்காடு இலக்கியமுகாமில் வாசிக்கப்பட்ட கவிதைகள்]