கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நினைவின் நதியில் நூலில் டி.ஆர்.நாகராஜின் எரியும் பாதம் என்ற புத்தகத்தை பற்றி எழுதியிருந்ததை வாசித்திருந்தேன்.நீண்ட வருடங்களாக அது நினைவில் இருந்தது.இங்கே பெங்களூரில் அந்த புத்தகத்தை வாங்கினேன்.மிக அற்புதமான புத்தகம். என் நிறைய கேள்விகளுக்கான பதில் போல இருந்த புத்தகம்.கிராமம், பெருநகரம், தொழில்மயம் போன்ற எல்லா பிரச்சனைகளையும் மிக தெளிவாக ஆராய்திருக்கிறார்.சிறந்த சிந்தனையாளர்.நினைவின் நதியில் நூல் மூலமே இந்த புத்தகம் பற்றி அறிய முடிந்தது.நன்றி.

நன்றி,
சர்வோத்தமன்.

வணக்கம் ஜெயமோகன்,

உங்களது கருத்துகளுக்கு நன்றி. “நான் சொன்னேன், இக்கவிதையில் ‘தவளைக் கவிதை’ என்ற சொல்லாட்சி எனக்கு அதிகமாகப் படுகிறது. கவிதையை நீங்கள் இப்படி அர்த்தம்கொள்ளவேண்டும் என்று சொல்வதுபோல் உள்ளது. வெறுமே ’தவளை’ என்று மட்டும் சொன்னாலே போதுமே” என்று நீங்கள் கூறியிருப்பது மிகவும் சரி. ‘தவளைக் கவிதை’ என்று பிரமிள் குறிப்பிட்டிருப்பதன் மூலம் அக்கவிதையின் வாசிப்புக்கு இடையூறு செய்கின்றாரென்றே கூறலாம். வாசகர் ஒருவர் சுதந்திரமாக அக்கவிதையின் அர்த்தத்தை விரிவு படுத்திப் புரிந்து கொள்ளும் சாத்தியத்தை இவ்விதமான கவிஞரே தன் கவிதைக்கு அர்த்தம்தனைக் கூறுவது தடுத்துவிடுகிறது. பிரமிள் இவ்விதமாகப் பல சந்தர்ப்பங்களில் அவரது கவிதைகள் பற்றிய விவாதங்களில் தனது கவிதைகளுக்கு விளக்கம் கூறுவதற்கு முற்படுவதைக் கண்டிருக்கின்றேன். உதாரணமாகக் ‘காலவெளி’ பற்றிய அவரது விளக்கக் கட்டுரைகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
மீண்டுமொருமுறை உங்களது பதிலுக்கும், அதில் குறிப்பிட்டுள்ள கருத்துகளுக்கும் நன்றி.

அன்புடன்,
வ.ந.கிரிதரன்

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஇன்று ஏற்காட்டில்..