நமது தொழில்நுட்பம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ.,

நான் ஒரு கல்லூரியில் விரிவுளையாரக சில மாதம் பணியாற்றினேன். ஒரு வகுப்பில் ‘உங்களுக்கும் இந்த சுவருக்கும் இடையே ஒரு ஈர்ப்பு விசை உள்ளது. அதன் பெயர் என்ன’ என்று கேட்டேன்.. ஒருவருக்கும் பதில் தெரியவில்லை… சிறிது மாற்றி, ‘உங்களுக்கும் பூமிக்கும் இடையே உள்ள விசை’ பற்றிக் கேட்டேன். உடனே பதில் வந்தது. ஏனென்றால், பாடப்புத்தகத்தில் உள்ளது அதுதான். கணக்கு, அறிவியல் பாடங்களில் கூட உருத்தட்டியே 100% எடுக்க முடியும் என்பது சோக நகைச்சுவை. (என் ME வகுப்பு கணிதத்தேர்விலும் உருத்தட்டி ஒருவன் 100% எடுத்தான் என்பது விசித்திரம்.)

ஆனால். வெளிநாட்டினரை விடக் கணிநிரல் வடிவமைப்பை மிகச் சிறப்பாகச் செய்யும் நபர்கள் ஏராளம். காரணம், கணினிக் கல்வியில், வாத்தியார் சொல் வேதம் என்று மாணவர்கள் நம்புவதில்லை; அவர்கள் பெரும்பாலும் தன் சொந்தத் திறன் மூலம் வகுப்பறைக்கு வெளியிலேயே அதைக் கற்கிறார்கள்; அப்படிக் கற்பவர்கள் மட்டுமே சொந்தமாக யோசிக்கிறார்கள்.

நன்றி
ரத்தன்

ஜெ,

இந்தியாவில் சுமார் 3500 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் நல்ல கல்லூரிகள் என்றால் ஒரு 100 தேறும். மற்ற கல்லூரிகள் எல்லாம் degree கொடுக்க்கும் centers, அவ்வளவுதான். இவற்றில் இருந்து வெளிவரும் பொறியியல் பட்டதாரிகளைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் சொல்லிக் கொள்ள முடியாது.இந்தியாவிலேயே இருக்கும் பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்கள் அவர்களின் R&D வேலைக்கு ஆளெடுக்க பொதுவாக இந்த 100 கல்லூரிகளுக்கு வெளியே செல்வதில்லை. மற்ற கல்லூரி மாணவர்களின் விண்ணப்பங்களை நேர்முகத் தேர்வு இல்லாமலே நிராகரித்து விடுவார்கள்.

இந்த நூறு கல்லூரிகள் எவை? IIT, NIT மற்றும் இதர சில அரசு மற்றும் தனியார் கல்லூரிகள். இவற்றின் தோராயமான லிஸ்ட் இங்கு உள்ளது http://en.wikipedia.org/wiki/List_of_Indian_engineering_college_rankings. பொதுவாக இதில் இருந்து மிகச் சிறந்த பொறியியல் பட்டதாரிகள் வெளி வரத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் இந்தியாவில் இருப்பதே இல்லை. BE முடித்த கையோடு MS படிக்க வெளிநாடுகளுக்குச் சென்று அங்கேயே தங்கி விடுகிறார்கள். அல்லது Work Permit எடுத்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று விடுகிறார்கள்.

ஆக, இதில் உண்மை நிலை என்னவென்றால், பல ஆயிரம் கோடி செலவு செய்து மிகச் சிறந்த engineerகளைத் தயார்ப்படுத்தி வருஷா வருஷம் அமெரிக்காவுக்கும் லண்டனுக்கும் கட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். இவர்களில் பலர் அங்கே கொடி கட்டிப் பறந்து பிறந்த வீடு பெயரை நிலை நாட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் இங்கே யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை என்று புலம்பி கொண்டே இருக்கிறோம். இந்த நிலை மாறும் வரை , அதாவது “the best minds in the country” இங்கேயே இருந்து பிழைக்கும் நிலை வராத வரை, நாம் புலம்பி கொண்டே இருக்க வேண்டியதுதான்.

-சிவா

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு,

தங்களின் நமது தொழில்நுட்பம் என்ற கட்டுரையை வாசித்தேன். அதுபற்றி என் மனதில் தோன்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவே இந்த மின்மடல். நான் தங்களுக்கு இதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் “எழுத்தாளர் ஜெயமோகனுக்கு” என்று மரியாதையாக எழுதாமல் பதட்டத்தில் மொட்டைக் கடுதாசி போல் எழுதி விட்டேன். மன்னிக்கவும். இந்தக் கடிதத்தில் நான் என் கருத்துக்களை என் வசதிக்கேற்ப வகைப்படுத்திஎழுதியுள்ளேன்.

1. பாடத்திட்டம்:- வெளிநாடுகளில் குழந்தைகளுக்கு விஞ்ஞானப் பாடங்கள் சிறு சிறு experiments ஆக போதிக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். எனவே குழந்தைகளால் விஞ்ஞான விதிகளை நடைமுறை விஷயங்களோடு தொடர்புபடுத்தி எந்த மனத்தடையும் இன்றிக் கற்பனை செய்ய முடிகிறது. நம்மூரில் குழந்தைகளுக்கு இந்தக் கற்பனை கைவருவதில்லை. இங்கேயே மிகப்பெரிய மனத்தடை உருவாக்கப்பட்டுவிடுகிறது. ஒரு கல்லூரி மாணவனை நியூட்டனின் மூன்றாம் விதி என்ன என்று கேட்டால் ஒப்புவிப்பான். ராக்கெட் எவ்வாறு மேலே செல்கிறது என்று கேட்டால் நியூட்டனின் மூன்றாம் விதிப்படி என்று கூறுவான். ஏனென்றால் இவை எல்லாம் புத்தகத்தில் வருகின்றன. இவற்றைத் தவிர வேறு உதாரணங்கள் தெரியாது. நடைமுறை வாழ்க்கையில் உள்ள வேறு உதாரணங்களுக்குப் பொருத்திப் பார்த்து சிந்திக்கத் தெரியாது.
2. புத்தகங்கள்:-நம்மூர் விஞ்ஞானப் பாடப் புத்தகங்கள் மிகவும் தட்டையாக உள்ளன. உதாரணமாக ஒரு பால் பூ என்றால் என்ன? என்ற கேள்விக்குப் புத்தகத்தில் உள்ள பதில் “ஒரு பாலை மட்டும் கொண்டுள்ள பூ ஒரு பால் பூ” அதேபோல் இரு பால் பூ என்றால் என்ன? என்ற கேள்விக்கு “இரு பால்களைக் கொண்டுள்ள பூ இரு பால் பூ”. —— நான் ஒன்றும் இட்டுக்கட்டி எழுதவில்லை. B.Sc., Botany notes இல் உள்ள வரிகள் தான் இவை. ஆனால் ருஷ்யாவின் “மீர் பதிப்பகத்தின்” எந்த விஞ்ஞானப் புத்தகத்தை எடுத்துக்கொண்டாலும் மிக அடிப்படையில் இருந்து ஒரு சுவாரஸ்யமான நாவல் போல் எழுதப்பட்டிருக்கும். யாரும் அதைப் படித்துப் புரிந்து கொள்ளலாம். அதைப் புரியவைக்க ஆசிரியர் தேவையில்லை. இங்குள்ள புத்தகங்கள் தகவல்களை மட்டுமே தருகின்றன.
3. ஆசிரியர்கள் — பேராசிரியர்கள்:- பழைய ஆசிரியர் பேராசிரியருக்கு கலாச்சாரத்தை பாதுகாத்தல், தன் பிள்ளையை B.E, M.B.B.S, படிக்க வைக்க டியூஷன் எடுத்து சொத்து சேர்த்தல் – போன்றவை இன்றியமையாத வேலைகளாக உள்ளன. இப்போது புதிதாகப் பணிக்கு சேர்த்துள்ள ஆசிரியர் பேராசிரியர்களுக்கு அரசு வேலையில் சேர்ந்ததே மிகப்பெரிய சாதனையாகத் தெரிகிறது. அந்த மயக்கம் பெருமிதத்திலேயே ஓய்வு பெறும்வரை காலத்தை ஒட்டி விடுவர்.
இப்போதுள்ள +2 ஆசிரியர்கள் செய்வது என்னவென்றால் புத்தகத்தை முதல் பக்கத்தில் இருந்து கடைசிப் பக்கம் வரை மனப்பாடம் செய்யவைத்து மாணவனை வாராவாரம் எழுத செய்வது மட்டும் தான். அதனால்தான் மார்க் மட்டும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இனிவரும் காலங்களில் 1200/1200 மார்க் சுமார் 5000 பேர் எடுப்பார்கள். தமிழ் நாட்டில் இருப்பதே 1800 மருத்துவ சீட்கள் தான்.
நல்ல ஆசிரியரின் வேலை என்னவென்றால் ஒரு பாடத்தின் Broad Structure யை மாணவனுக்கு தருவதுதான். அப்போதுதான் மாணவனுக்கு எந்த விஞ்ஞான விதியை எங்கு apply செய்வது என்று தெரியும். அதனால்தான் வெளிநாடுகளில் 18 வயதிலேயே மிகப்பெரிய விஞ்ஞான சிக்கல்களுக்கு தீர்வு கண்டுபிடிக்கின்றனர். இங்கு அதற்கான ஆசிரியர்களும் இல்லை. புத்தகங்களும் இல்லை. (அதாவது தாய்மொழியில் புத்தகங்கள் இல்லை.)
4. பொறாமை & Teamwork :-
தமிழன் என்றொரு இனமுண்டு. தனியே அவனுக்கொரு குணமுண்டு. அந்த குணம் பொறாமை குணம். அண்ணன், தம்பி, உறவினர், அக்கம்பக்கத்தில் இருப்பவர், தெரிந்தவர், தெரியாதவர் அனைவரிடையேயும் இது நீக்கமற நிறைந்துள்ளது. மற்ற மாநிலத்தவர்கள் நம் மக்களை விட இந்த விஷயத்தில் பரவாயில்லை என்று நினைக்கிறேன். நம்மவர்கள் தனக்கு தெரிந்த தகவல்களை, தங்களுடைய புரிந்துகொள்ளலை பெரும்பாலும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை. இரண்டு தமிழ்நாட்டை சேர்ந்த Java Professionals ஒரே அறையில் தங்கிருந்தாலும் java வைப்பற்றி 10 வருடமானாலும் ஆழமாக தங்களுக்குள் விவாதித்து தங்கள் புரிதல்களைப் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். சினிமா, பெண்கள், அலுவலக அரசியல் இவற்றை மட்டும்தான் பேசுவார்கள். இந்த குணம் படித்தவர்களிடம் மட்டுமல்ல கடைநிலை மக்கள் வரை உள்ளது. கடைநிலை மக்களிடம் பெருமை பேசும் குணமும். தன்னைவிட வசதியானவர்களை எந்தக் காரணமும் இன்றி வெறுக்கும் குணமும் மிகுந்துள்ளது.
மேலும் ஒரு துறையில் ஆழ்ந்த அறிவுள்ளவன் ஒருவனை கண்டுவிட்டால் அவன் அறிவோடு நேரடியாக மோதாமல் முதுகுக்குப் பின்னால் குழிபறிக்கும் வேலை செய்து அவன் துன்பப்படுவதை உள்ளூர ரசிக்கும் மனோபாவம் நம்மவர்க்கு உண்டு. இது அறிவாளிகளுக்கு மட்டும்தான் நடக்கும். சாதாரண அறிவுடைய ஆனால் மிகவும் கெட்டவனை இந்த சமுதாயம் அந்தளவு வெறுப்பதில்லை.
நான் இதை எதற்கு சொல்கிறேன் என்றால் ஒரு விஞ்ஞானக் கருவியைப் புரிந்துகொள்வது என்பது ஒரு கூட்டு செயல்பாடு. கம்ப்யூட்டரை எடுத்துக்கொண்டால் Hard disc இல் ஒருவர் expert ஆக இருப்பார். Operating System இல் மற்றொருவர் expert ஆக இருப்பார். எல்லாவற்றிலும் ஒருவரே மாஸ்டர் ஆக முடியாது. தன்னுடைய எல்லை எதுவரை என்ற புரிதல் இருவருக்குமே இருக்கவேண்டும். ஒருவர் expertஆக இருந்தால் கண்டிப்பாக அந்த எல்லை தெரியும். அந்த கருவியில் பிரச்சனை என்று வரும்போது தான் ஒருவனாலேயே முடியும் என்றால் தீர்க்கலாம். இல்லையெனில் மற்ற expert உடன் இணைந்து பணியாற்றி தீர்க்கலாம். இந்த Teamwork, Sharing நம் மக்களிடம் இருப்பதில்லை. ஏன் இருப்பதில்லை என்றால் எல்லாருமே அரைகுறைகளாக இருப்பதால் தனக்கு எவ்வளவு தெரியும் என்று குட்டு வெளிப்பட்டுவிடுமே என்ற பயம்தான் காரணம். Expert களின் வண்டி பொய்யில்தான் இங்கு ஓடிக்கொண்டு இருக்கிறது. எனவேதான் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை தராமல் தற்காலிகமாக ஒப்பேற்றிவிட்டு செல்கின்றனர்.
5. குடும்ப-சமூக அழுத்தம்:-சிறுவயதில் இருந்தே எனக்கு விஞ்ஞானத்தின் மீது ஆர்வம் உண்டு. 9ம் வகுப்பிலிருந்தே சிறு சிறு சூத்திரங்களை விளையாட்டாக நானே உருவாக்கி பார்ப்பது வழக்கம். எதையும் அதன் அடியாழம் வரை சென்று புரிந்துகொள்ள முயற்சித்து பார்ப்பேன். இதில் உள்ள சங்கடம் என்னவென்றால் Mark எடுப்பதில் பின்தங்கி விடுவதுதான். அதிலும் நான் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவன். என்னை அதிக மார்க் எடுக்க வைக்க என் பெற்றோர்கள், ஆசிரியர்கள் தீவிரமாக எப்போதும் அழுத்தம் கொடுத்தபடியே இருப்பர். பாடத்தை புரிந்து கொள்ள போதுமான ஓய்வு நேரம் எனக்கு கிடைக்கவில்லை. (இங்கு புரிந்து கொள்ளல் என்று நான் குறிப்பிடுவது ஒரு படைப்பாளிக்குரிய தனித்துவமான புரிந்து கொள்ளல். ஆசிரியர்களை புரியவைக்க கேட்டால் அவர்கள் அதை அப்படியே படித்து காட்டிவிட்டு புரிகிறதா என்று கேட்பார்கள்.) எப்போதும் டியூஷன், டெஸ்ட் என்று ஓடிக்கொண்டே இருப்பேன். மனதில் எப்போதும் இது புரியவில்லையே என்ற ஏக்கம் இருக்கும். தேர்வுக்காக புரியாமல் பாடத்தை உருப்போடுவது எனக்கு பிடிக்காது. இந்த போராட்டத்தில் மார்க் குறைந்தது. என்னால் 894 தான் எடுக்க முடிந்தது. Dharmapuri Arts College ல் இயற்பியலில் சேர்ந்தேன். கல்லூரியில் சுதந்திரமாக இருக்க முடிந்ததால் பாடத்தை என் விருப்பப்படி படிக்க முடிந்தது. பிடித்த பாடங்களை படித்தேன் பிடிக்காத பாடங்களை படிக்கவில்லை. கல்லூரியில் அரியர்ஸ் வைத்துதான் முடித்தேன். அதற்கு மேல் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பவில்லை. அதன்பின்பு நானே புத்தகங்களை வாங்கி Computer Hardware, Software, Networking போன்றவற்றை தன்முயற்சியில் கற்று தேறி அது சம்பந்தப்பட்ட தொழிலை நடத்தி வருகிறேன். மார்க்குக்காக ஓடியிருந்தால் பெரிய வேலை நிறைய பணம் என்று இருந்திருக்கலாம். ஆனால் இப்போது இருப்பதுபோல் Subject யை பற்றிய ஓரளவு புரிதல் கூட இருந்திருக்காது. இதுபோன்று மார்க் எடுக்க வேண்டிய அழுத்தம் மிகவும் அதிகமாக இருப்பதால் technology இல் தீவிர ஆர்வம் கொண்டவர்களும் வேறு வழியின்றி மேலோட்டமாக கற்று வாழ்க்கையை நிலைப்படுத்திக்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.
6. என்னுடைய கேள்விகள்:ஒரு படைப்பாளிக்குரிய தன்மையோடு பாடங்களை புரிந்துகொள்ளவும், அவற்றை ஆழ்ந்து கற்பனை செய்யவும் நிறைய நேரத்தை செலவு செய்ய வேண்டியுள்ளது. இது போல் படைப்புதன்மையுடன் படிக்க நினைப்பவர்களுக்கு மார்க்குக்காக ஓடும் மற்ற மாணவர்களைப்போல் புத்தகங்களில் உள்ளதை அப்படியே மாறாமல் மனப்பாடம் செய்ய வருவதில்லை. அல்லது அதுபோல் படிக்க பிடிப்பதில்லை. எனவே மார்க் எடுப்பதில் பின்தங்கி விடுகின்றனர். எனவே நல்ல கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. இது போன்ற மனநிலை கொண்டவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன? முற்றிலும் மார்க் பின்னாடியே ஓடுவதா? மார்க்கைப்பற்றி கவலைப்படாமல் தன்போக்கில் படிப்பதா?
நல்ல கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு சிறந்த ஆசிரியர்களின் வழிநடத்தல், Lab வசதி, நூலக வசதி போன்றவை கிடைக்கும். என்னைப்போல் நல்ல கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு இன்டர்நெட் கற்றுக்கொள்ள பெரிய வாய்ப்பாக உள்ளது. சிறந்த புத்தகங்கள், சிறந்த விரிவுரைகளுக்கான வீடியோக்கள் போன்றவற்றை download செய்து படிக்கலாம். ஆனால் அவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு விஞ்ஞான பாடங்களை மிகச்சரியாக புரிந்து கொள்ளமுடியாது. என்னைப்போன்றவனுக்கு பாடங்களை சரியாக புரிந்துகொள்ள இருக்கும் ஒரே ஆயுதம் கற்பனை சக்தி மட்டும்தான். புரிந்துகொள்ளலை சரியான திசையில் செலுத்த கற்பனை எந்தளவு உதவி செய்யும்? நீங்கள் ஒரு படைப்பாளியாக இருப்பதால் இதற்கு பதிலை உங்களால் நிச்சயம் கூற முடியும். விஞ்ஞானம், இலக்கியம் இரண்டுமே உண்மையைத்தானே தேடுகின்றன.

இப்படிக்கு,
பிரேம் ஆனந்த்.தருமபுரி.

அன்புள்ள ஜெ,

நமது தொழில்நுட்பம் கட்டுரை படித்தேன். சிக்கல் நமது கல்வி முறையில் தான் உள்ளது.
நான் கண்டவரை, ஒரு தொழில்நுட்பம் பற்றி முழுமையான அறிவு கிட்டுவது, அந்த தொழில்நுட்பம் இங்கேயே உருவாக்கப்படும் போது தான். அதற்கு ஆராய்ச்சி நிறுவனங்கள் தேவை. நமது நாட்டில் எந்த பல்கலைக்கழகத்திலும் சொல்லிக்கொள்ளும் படியான எந்த ஆய்வும் நடப்பதாக தெரியவில்லை(கணினித் துறையில்). எல்லாம் இறக்குமதி சரக்கு தான்.
ஆராய்ச்சி நடக்கும் போதுதான் மாணவர்களுக்கு அதில் நேரடியாக பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். இள வயதிலேயே அந்த வாய்ப்பு கிடைப்பது அவர்களின் பார்வையை விலாசமாக்கும். புகழ் பெற்ற IIT யிலேயே இளங்கலை மாணவர்களுக்கு தான் மதிப்பு. அந்த மாணவர்கள் எவரும் முடித்தபின் அதே IIT யில் ஆய்வு செய்வது இல்லை, வெளி நாடுகளுக்கு தான் செல்கிறார்கள். எல்லா இடங்களிலும் ஒரு பல்கலைக்கழகத்தின் மதிப்பு அது செய்யும் ஆய்வையும், ஓரளவிற்கு அங்கிருந்து முளைத்த நிறுவனங்களையும் பொறுத்து தான் உள்ளது. நம் ஊரில் தான் இப்பிடி. இந்த அளவுகோலின்படி, IIT க்கும் டயுஷியன் சென்டர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

எனக்கு தெரிந்து கற்பதற்கு நல்ல வழி ஆய்வு செய்வது தான்.
உதாரணத்திற்கு சுடோகு புதிரை எடுத்துக் கொண்டால், முதலில் புதிரை தீர்க்க முயலாம். பின்னர் ஒரு சுடோகு புதிரை (ஒரே ஒரு விடை கொண்ட )எப்பிடி உருவாக்குவது என அறியலாம். பின்னர் புதிரை தீர்க்க ஒரூ நிரலி எழுதலாம். இங்கிருந்து அப்பிடியே இயந்திர அறிதல் வரை சென்றுவிடலாம். ஆழக்கற்கும் போது அகலமாகவும் கற்றுவிடுகிறோம். மிக அடியில் பல துறைகள் ஒன்றுடன் ஒன்று முயங்கிக்கிடக்கின்றன. இனைய தேடிகள் கூட இதை ஒட்டிய வழிமுறையில் தான் அனைத்து வலைப்பக்கங்களையும் கண்டு கொள்கின்றன. நன்றி.

கார்த்தி

முந்தைய கட்டுரைஉயர்தர நகைச்சுவை
அடுத்த கட்டுரைஒரு விண்ணப்பம்