இயற்கை உணவு : என் அனுபவம்

பதினைந்து வருடம் முன்பு ஆற்றூர் ரவிவர்மாவின் நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு தமிழ் நூலை மலையாளத்திற்கு மாற்றித்தர முடியுமா என்று கேட்டார்.அது ராமகிருஷ்ணன் என்பவர் எழுதிய ‘நோயின்றி வாழ முடியாதா?’ என்ற சிறுநூல். இயற்கை மருத்துவம் பற்றிய நூல் அது. மருத்துவமல்ல இயற்கை உணவு முறை. உணவுமுறை மட்டுமல்ல வாழ்க்கை முறை.

அதைப்படித்துப் பார்த்தபோது ஒருவகை சுய ஏமாற்று என்றுதான் அதைப்பற்றி எண்ணினேன். அதேசமயம் அந்த விஷயத்தில் உள்ள பிடிவாதமும் என்னைக் கவர்ந்தது. அத்தகைய பிடிவாதங்கள் மேல் எப்போதுமே எனக்கு மதிப்பும் கவற்ச்சியும் உண்டு. ஆகவே நான் ஒருநாள் திடீரென்று கிளம்பி கொல்லம் வழியாக திருநெல்வேலி போய் அங்கிருந்து அம்பாசமுத்திரம் போய் அங்கிருந்து சிவசைலம் என்ற ஊருக்குப்போய் ‘நல்வாழ்வு ஆசிரமத்தை கண்டுபிடித்தேன்.அங்கே தாடியுடன் மெலிந்த கோலத்தில் இருந்த வெள்ளைவேட்டி மனிதரை அறிமுகம்செய்துகொண்டேன். அம்பாசமுத்திரத்தில் தமிழாசிரியராக வேலைபார்த்தவர் அப்போது வேலையை விட்டுவிட்டிருந்தார். அவரை அப்பகுதியில் தேங்காப்பழச் சாமியார் என்றார்கள்.

ஆனால் அவர் தன் மனைவியுடன் அங்கே வாழ்ந்து வந்தார். மலையடிவாரத்தில் அவரே கடுமையாக வேலைபார்த்து ஒரு காய்கறி பழத்தோட்டத்தை உருவாக்கியிருந்தார். அங்கே அவரும் மனைவியும் ஒரு மகனும் வாழ்ந்துவந்தனர். அம்மூவரும் இயற்கை உணவுமட்டுமே அருந்துபவர்கள். அதிலும் அவரது மகன் பிறந்தது முதல் இயற்கை உணவு மட்டும் உண்டு வாழ்பவர். அங்கே தங்கும்போது இயற்கை உணவு மட்டுமே உண்னவேண்டும். அங்கேயே பறித்து உண்ணலாம். பணமேதும் அளிக்கவேண்டியதில்லை. அங்கேபல வட இந்தியர்களும் சில வெள்ளையரும் தங்கியிருந்தார்கள்.

ராமகிருஷ்ணன் சென்னையில் வாழ்ந்த தமிழறிஞரான பாண்டுரங்கனார் அவர்களிடமிருந்து இயற்கை உணவு முறையின் அடிப்படைகளைக் கற்றுக் கொண்டார். அதில் அவரே பலவிதமான சோதனைகளைச் செய்து முன்னோடியாக விளங்கினார். அப்போது அவருக்கு உலகமெங்கும் மாணவர்கள் உருவாகியிருந்தார்கள். அவரை சாமியார் என்று எல்லாரும் அழைத்தாலும் அவருக்கு மதநம்பிக்கையோ இறை நம்பிக்கையோ இல்லை. தனித்தமிழ் ஆர்வம் இருந்தது. அத்துடன் அவர் ஈ.வே.ரா அவர்களின் மீது பெருமதிப்பு கொண்டிருந்தார். திருக்குறள், மணிமேகலை ஆகிய நூல்களை அதிகம் மேற்கோள்காட்டினார்.

நான் அவரிடம் என் வருகை அவருடைய முறையை சோதனை செய்து பார்ப்பதுதான் என்றேன். அது அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவநம்பிக்கை மிக முக்கியமான அறிவடிப்படை என்ரு சொல்லி தமிழ்நாட்டில் ‘அவநம்பிக்கை’யை உருவாக்கியதே ஈ.வே.ரா அவர்களின் முதன்மைப் பங்களிப்பு என்றார். என் உடலையே நான் சோதனைக்களமாக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

நான் பல வடஇந்தியப் பயணங்களில் கண்டபடி நீர் அருந்தி கடுமையான அமீபியாஸிஸ் நோயால் அவதிப்பட்டுவந்த காலம் அது. அலோபதி மருந்துகள் சாப்பிடுவேன். உடனே குணமாகும். நாலாவது நாளே மீண்டும் ஆரம்பிக்கும். திரிச்சூரில் ஒரு வயிறுநோய் நிபுணரிடம் மனம் விட்டு கேட்டேன், இதை குணமாக்க முடியுமா முடியாதா என்று. ‘உண்மையைச் சொல்லப்போனால் முடியாது’ என்றார் அவர். அமீபா குடலுக்கு மருந்து போகும்போது வெளியேறிவிடும். அதன் முட்டைகள் மீண்டும் முளைக்கும். ‘தொடர்ந்து மருந்து சாப்பிட்டால் காலப்போக்கில் குணம் தெரியும்’ என்றார். ‘அப்படி மருந்து உண்பதனால் சிக்கல் உண்டா?’ என்றேன். ‘அமீபாவுக்கு அளிக்கபப்டும் மருந்துகக்ள் பொதுவாக சிறுநீரகத்துக்கு கடுமையான பாதிப்பை அளிப்பவை’ என்றார். ‘நீங்கள் வேண்டுமென்றால் ஆயுர்வேதம் பரிசீலித்துப் பார்க்கலாமே’ என்றார்

அதை நான் ராமகிருஷ்ணன் அவர்களிடம் சொன்னேன். ‘என் சிக்கல் இயற்கை உணவால் தீருமா?’ என்றேன். ‘இந்த சாதாரண சிக்கலுக்கெல்லாம் முழுமையான இயற்கை உணவு கூட தேவையில்லை. சிறிய அளவிலான பயிற்சியே போதும்’ என்றார். என் நோய் குணமானால் நூலை நான் மொழிபெயர்க்கிறேன் என்று எண்ணிக் கொண்டேன்.

இயற்கை உணவுமுறைக்கு உடனடியாக முழுமையாக மாறக்கூடாது என்பது விதி. முதலில் நான் இரவில் மட்டுமே ப்ழங்கள் உண்ண ஆரம்பித்தேன். பகலில் எளிமையான சைவ உணவு. பின்னர் காலையிலும் இயற்கை உணவுக்கு மாறினேன். மதியம் மட்டுமே சாதாரணமான சமைத்த உணவு. என்னை ஆச்சரியப்படுத்தியபடி ஆறே மாதத்தில் என் நோய் முற்றாக நீங்கியது. அத்துடன் என்னை அவ்வப்போது கடுமையாக படுத்திவந்த மூச்சுத்திணறலும் முழுமையாக் அகன்றது, இன்றுவரை மீளவரவுமில்லை.மூச்சுத்திணறல் அமீபாவின் விளைவாக இருக்கலாம். நான் உடனே ராமகிருஷ்ணன் அவர்களின் அந்நூலை மலையாளத்துக்கு மொழிபெயர்த்தேன். சில வருடங்கள் கழித்து திருமணம்செய்துகொண்டபோது மிஈண்டும் சாதாரண உணவுப்பழக்கத்துக்கு வந்தேன். அருண்மொழி நான் ‘விரதங்கள் பிடிப்பதை’ விரும்பாமல் அடம்பிடித்தாள். என்னால் அதிகநாள் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை. ஆனாலும் நீங்கிய நோய் மீண்டும் வரவில்லை

பல வருடங்கள் கழித்து என் நாற்பத்து மூன்றாம் வயதில் மீண்டும் இயற்கை உணவை தொடரத் தீர்மானித்தேன். தொடர்ச்சியான எழுத்து வாசிப்பு காரணமாக எனக்கு பல வித உபாதைகள். தூக்கமின்மை, செரிமானச் சிக்கல்கள், மலச்சிக்கல். எடையும் அதிகரித்தது. என் குடும்பத்தில் எல்லாருமே தொப்பையர்கள். ஆகவே இரவுக்கு மட்டும் பழ உணவு உண்ண ஆரம்பித்தேன். எதிர்பார்த்தது போலவே எல்லா சிக்கல்களும் இல்லாமலாயின. சோதனைகளில் எனக்கு எந்தவிதமான நோய்களும் இதுவரை குறிப்பிடப்படவில்லை. இன்றுவரை அதுவே தொடர்கிறது.

இயற்கை உணவின் அடிபப்டைக் கோட்பாடுகளை ராமகிருஷ்ணன் இவ்வாறு சொல்கிறார். மனிதன் ஒருவகை குரங்கு. பரிணாமத்தில் மூளையையும் இன்னும் பல உடல்சிறப்புகளையும் வளர்த்துக் கொண்டாலும் அவனது வயிறும் குடலும் இன்னமும் குரங்குக்கு உரியனவாகவே உள்ளன. குரங்குகள் மிக அபூர்வமாக , உணவுத்தட்டுப்பாடு வரும்போது மட்டுமே மாமிசம் உண்பவை. அவற்றின் இயல்பான உணவு சமைக்கப்படாத காய்களும் கொட்டைகளும் கிழங்குகளும் கனிகளுமேயாகும். அவற்றைச் செரிப்பதற்கான திறனே மனிதக் குடலுக்கு உள்ளது. மனிதக்குடலில் மாமிசத்தைச் செரிப்பதற்கான அமிலத்தன்மை இல்லை. மாமிசத்தைச் சமைத்து செரிமானப் பொருட்கள் பல சேர்த்துத்தான் சாப்பிடமுடிகிறது.

மனிதக் குடலின் நீளம் அதிகம். ஆகவே உணவானது பலநிலைகளில் அதிகநேரம் குடலில் நிற்க நேர்கிறது. ஆகவே நார்ச்சத்து கொண்டவையும் எளிதில் குடலில்நகரும் வழவழப்புத்தன்மை கொண்டவையுமான உணவே மனிதக்குடலுக்கு ஏற்றது. அது சமைக்காத தாவர உணவே. அசைவ உணவு உண்பதனால் செரிக்காத எச்சம் குடலில் நெடுநேரம் தங்கி இறுகி மலச்சிக்கலை உருவாக்குகிறது. இன்றைய மனிதனின் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் மலச்சிக்கலே.

மனிதக்குடல் அதற்குள் சென்று சேரும் சாதாரணமான நுண்ணுயிர்களையும் பிற ஒவ்வாப்பொருட்களையும் அழிக்கும் திறனையும் சேர்த்தே செரிமான சக்தியாகக் கொண்டுள்ளது. எளிதில் செரிக்காத உணவை அதிகமாக உண்பதனால் மனிதக்குடலுக்கு அதிகச்சுமை ஏற்படுகிறது. நுண்ணுயிர்களும் ஒவ்வாப்பொருட்களும் உடலுக்குள் சென்று நோயை உருவாக்குகின்றன.

உணவைச் சமைக்கும்போது அதில் உள்ள உயிர்த்தன்மை அழிகிறது. அன்னம் அன்னத்தையே உண்ண வேண்டும் என்பது தொன்மையான ஞானம். ஆகவே உயிருள்ள உடலானது உயிருள்ள உணவையே உண்ண வேண்டும். வேகவைக்கப்பட்ட உணவு செத்துப்போன ஒன்று. அதை உண்பது சாவை உண்பதுதான். அதில் நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் உள்ள பல்வேறு நுண்கூறுகள் இல்லாமலாகிவிடுகின்றன. வேகவைக்கபப்ட்ட உணவு உணவுக்கு இன்றியமையாததான வழுவழுப்புத்தன்மையை இழக்கிறது. மாவுபோல ஆகி குடலை அடைக்கிறது. அதன் செரிமானத்தன்மை மிகக்குறைகிறது.’சமைத்து உண்பது சாவை அழைப்பது’ என்பது ராமகிருஷ்னன் அவர்களின் கோட்பாடு.

இயற்கை உணவுக் கோட்பாட்டாளர்கள் பொதுவாக உணவை மூன்று கூறுகளாகப் பிரிக்கிறார்கள். மாவுணவு[ஸ்டார்ச்] ஊன் உணவு[புரோட்டீன்] கனியுணவு [வைட்டமின்கள்,மினரல்கள்].நமது உணவு இவற்றின் சரிவிகிதமாக இருக்கவேண்டும். கிழங்குகள், முளைவிட்ட பச்சைத்தானியங்கள் கொட்டைகள் ஆகியவற்றில் மாவும் ஓரளவு ஊனும் உண்டு. தேங்காய் ஊனுணவுக்கு மிக மிக ஏற்றது. காய்கள் கனிகள் கனியுணவு மிக்கவை. கனிகளிலும் காய்களிலும் பொதுவாக எவையுமே விலக்கு இல்லை. நோயுற்ரால் அதற்கு ஏற்ப சில காய்கனிகளை விலக்கலாம். இவற்றை ஒவ்வொருநாளும் கலந்து உண்ண வேண்டும். ராமகிருஷ்ணன் அவர்களைப் பொறுத்தவரை தேங்காயும் வாழைப்பழமும் கலந்தால் மூன்றுசத்துக்களும் ஏறத்தாழக் கலந்த இருந் அல்ல உனவாகிவிடுகிறது. இதனால்தான் அவருக்கு தேங்காப்பழச் சாமி என்று பெயர் வந்தது.

நோய் என்பதும் உடலின் ஓர் இயல்பான நிலை என்பதனால் பொறுமையுடன் நோயை அனுபவித்து அதைக் குணப்படுத்திக்கொள்ள உடலுக்கு அவகாசம் அளிப்பதே சிறந்தது என்பது இயற்கை உணவுக் கோட்பாடு. மருந்து உண்ணலாம். ஆனால் அம்மருந்தும் உணவாகவே இருக்க வேண்டும். உணவல்லாத எதையுமே உண்ணலாகாது.

உணவே பெரும்பாலும் மனநிலைகளை உருவாக்குகிறது என்பது இயற்கை உணவுக் கோட்பாட்டின் கொள்கை. நல்ல உணவு அமைதியை அளிக்கும். நல்ல சிந்தனைகளை அளிக்கும். மிதமிஞ்சிய புலன்நாட்டத்தை அளிக்காது. ஆகவே பதற்றமும் வேகமும் உற்சாகமும் சோர்வும் மாறிமாறி வரும் நிலை இருககது. இதனால் நரம்புநோய்கள் ஏற்படுவதில்லை. நல்ல தூக்கமும் நல்ல பசியும் கழிவகற்றமும் நல்ல சிந்தனைகளும் இருந்தால் இயல்பாகவே நல் வாழ்வு அமையும்.

அப்படிப்பார்த்தால் ராமகிருஷ்ணன் தீவிரமான பொருள்முதல்வாதி. மனிதவாழ்க்கையின் துயரங்களுக்கு வாழ்க்கையின் யதார்த்தத்திலேயே விடை தேடியவர். மனிதனை மீறிய எதையுமே நம்பாதவர். அவருக்கு அற்புதங்களிலும் அபூர்வ சக்திகளிலும் எந்த நம்பிக்கையும் இல்லை. தன் ஐம்பதிரண்டாவது வயதில் வாழ்ந்த வாழ்க்கை போதும் என்ற நிறைவை அடைந்து வடக்கிருந்து உயிர்துறந்தார்.

நான் இப்போதும் இரவு பழங்கள் மட்டுமே உண்கிறேன்.வயிற்றை ஏதாவது ஒன்றுக்குப் பழக்கப்படுத்த பத்துநாள்வரை ஆகும். அதுவரை இரவில் பழம் மட்டும் உண்டால் நள்ளிரவில் வயிறு பேய்ப்பசியாக பசிக்கும். கடாமுடா என்று இருக்கும். ஆனால் பழகியபின்னர் அதைப்போல நல்ல தூக்கத்துக்கு உறுதியளிப்பது வேறு இல்லை. வயிறு எந்தச் சிக்கலும் இருப்பதில்லை என்பதுடன் எப்போதாவது இரண்டு தோசை சாப்பிட்டால்கூட அது கனமாகவே தோன்றும்.

பழ உணவு காலையில் அசாதாரணமான புத்துணர்ச்சியை அளிக்கிறது. பகலில் உண்ட உணவில் உள்ள செய்ற்கைப்பொருட்களின் பாதிப்பைகூட அது இல்லாமலாக்குகிறது. வயிற்றில் சரிவர செரிமானமாகாத உணவு இருப்பது காலையில் ஒருவித கனத்தையும் சோர்வையும் அளிக்கும். அது இப்போது இருப்பதில்லை. அனைத்தையும் விட மலச்சிக்கல் முழுமையாக இல்லாமலிருப்பது சாதாரணமாக நம் முகத்திலேயே தெரியும்.

பழங்களில் நல்ல பழம் மோசமான பழம் என ஏதுமில்லை என்பதே என் அனுபவம். பழகாத பழம் சில சமயம் சற்றே ஒவ்வாமை அளிக்கலாம். இரவில் கடும்புளிப்பு உள்ள அன்னாசி போன்ற பழங்களை அதிகமாகச் சாப்பிடாமலிருக்கலாம். சிலசமயம் இரவில் உணவுக்குழாய் எரிச்சல் ஏற்படக்கூடும். பழங்களை சூடு குளிர்ச்சி என்று பிரிக்கும் ஒரு போக்கு நாட்டுப்புறமருத்துவத்தில் உண்டு. அதுபெரும்பாலும் அடிப்படை அற்றது. கார அம்சம் உள்ள பழம் அமில அம்சம் அதிகமுள்ள பழம் என்று மட்டும் பிரிக்கலாம். இரண்டையும் சரிசமமாக சாப்பிடுதல் நல்லது.

நான் தனிப்பட்ட முறையில் இம்மாதிரி மாற்றுப் பண்பாட்டு ஆய்வுகளைப் பற்றி கூர்ந்த அவதானிப்பு கொண்டவன். நம் சமூக அமைப்பில் உள்ள பல பிழைகள் நம்மை நோயாளிகளாகவும் மனம்பிறழ்ந்தவர்களாகவும் ஆக்குகின்றன என்று நம்புகிறவன். இம்மாதிரி முயற்சிகள் நம் பிழைகளைக் கண்டுபிடித்து களைவதற்கான பல கோணங்களிலான முயற்சிகள். இவற்றினூடாகவே மனித இனம் தன்னை முன்னகர்த்துகிறது.

இயற்கைமருத்துவத்தின் கோட்பாடுகளைச் சார்ந்து நான் வாதாட விரும்பவில்லை. ஆனால் என் உடல்நலப் பிரச்சினைகளுக்கு இன்றுவரை அதுவே நிலையான தீர்வை அளித்துள்ளது என்பதை மட்டும் சொல்ல விரும்புகிறேன். என்னுடைய சலியா ஊக்கத்திற்கான காரணங்களில் ஒன்றாகவும் அதைக் காண்கிறேன். அதை என்னால் முழுமையாக கடைப்பிடிக்க முடியவில்லை. பயணங்கள் நிறைந்த வாழ்க்கை. அதைவிட நாக்கின் ஈர்ப்பு. ஆனால் கடைப்பிடித்தவரை அது பயனளித்திருக்கிறது. அதை எப்போதும் நண்பர்களுக்கும் பரிந்துரைப்பேன்.யாருமே கடைப்பிடித்தது இல்லை. வாழ்க்கைமுறையை மாற்றுவது எளிய செயல் அல்ல.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்,யூதமரபு,தியானம்:ஒருகடிதம்
அடுத்த கட்டுரைகம்பனும் காமமும் 3: அருளும் மருளும் அது