குருவாயூரில் சமீபத்தில் ஒரு பெரும் ஆண்யானையைப் பார்த்தேன். கனிந்த முதுமை. தந்தத்தின் கனம் தாளாமல் தலையை தாழ்த்தி துதிக்கையை ஊன்றி நின்று கொண்டிருந்தது. நான் ஒரு பெரியநாவலின் மிகப்பெரிய கதாபாத்திரமாக ‘மண்’ குறு நாவலின் கொம்பனை நினைவு கூர்ந்தேன். அன்று மாலைதான் அது நாவல் அல்ல குறுநாவல் என்று நினைப்பு வந்தது.
குறுநாவல் என்ற வடிவின் அழகே அதுதான். அது தன் விரிவால் ஒரு முழுவாழ்க்கையைச் சொல்லக்கூடியது, தன் குறுக்கத்தால் கூர்மையாகத் தைக்கவும் கூடியது. அது கைப்பிடியளவு விதை, காட்டின் ஆகச்சிறிய வடிவம்
நான் குறுநாவல் வடிவங்களில் நிறையவே எழுதியிருக்கிறேன். விதியின் சுழற்பாதையைச் சொன்ன பத்மவியூகமும் ஆழத்திலிருந்து நெளியும் இச்சையின் விஷப்பரப்பைச் சொன்ன இறுதிவிஷமும் என் நினைவில் மீண்டும் மீண்டும் வரும் ஆக்கங்கள்
என்னுடைய குறுநாவல்களின் தொகுதியை மூன்றாம் பதிப்பாகக் கொண்டுவரும் யுகன் அவர்களுக்கு நன்றி.
ஜெ
[நற்றிணை வெளியீடாகவரவிருக்கும் ஜெயமோகன் குறுநாவல்கள் நூலின் மூன்றாம் பதிப்புக்கான முன்னுரை]