ஒளியுலகம்

இருட்டு என்பது குறைந்த ஒளி என்று பாரதி சொன்னதை நான் நினைத்துக்கொண்ட தருணம் என்பது சமீபத்தில் ஏழாம் உலகத்தை என் மேஜைமேல் பார்த்தபோதுதான். இருட்டைத்தான் எழுத எண்ணினேன். ஆனால் சூழிருட்டில் ஒளிரும் வெளிச்சத்தையே எழுதியிருக்கிறேன்.

ஏழாம்உலகம் நான் எழுத எண்ணிய உலகம் அல்ல. மறக்க எண்ணீய உலகம். ஏன் மறக்க எண்ணினேன் என இன்று நினைக்கையில் வெட்கப்படுகிறேன். நான் அந்த மனிதர்களிடமிருந்து என்னை பிரித்துக்கொள்ள பலவருடங்கள் முயன்றிருக்கிறேன். காரணம் நான் அவர்களின் அந்நிலைக்குப் பொறுப்பானவன். நான் அனுபவிக்கும் ஒவ்வொன்றிலும் அவர்களிடம் பெற்ற கடன் உள்ளது. அதை மறுக்கவே முனைந்தேன்

முடியவில்லை என ஓர் இரவில் ஒரு கணத்தில் எண்ணியபோது எழுந்து எழுதிமுடித்தேன். நாவலை முதற்பதிப்பாக வசந்தகுமார் [தமிழினி] வெளியிட்டார். இன்று யுகன் ஐந்தாம் பதிப்பாக வெளியிடுகிறார்

அன்றுமுதல் இன்றுவரை இந்நாவல் தமிழ் வாசகர் நடுவே ஆழமான பாதிப்பைச் செலுத்திக்கொண்டிருக்கிறது. அவர்கள் பார்க்கவும் எண்ணவும் மறுக்கும் ஓர் உலகை அவர்களின் விரலிடுக்குகள் வழியாகக் காட்டிக்கொண்டிருக்கிறது

அந்தக் கணத்துக்கு வணக்கம்

ஜெ

[நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் ஏழாம் உலகம் நாவலின் ஐந்தாம் பதிப்புக்கான முன்னுரை]

முந்தைய கட்டுரைநூறுநிலங்களின் மலை – 2
அடுத்த கட்டுரைநூறுநிலங்களின் மலை – 3