கடைசி அங்கத்தில்- கடிதங்கள்

சென்ற வாரத்தில ஒரு எஸ்.எம்.எஸ் மும்பையில் இருந்து வந்திருந்தது. மும்பையில், எனக்காகக் காரோட்டும் நண்பர் கணேஷ் அனுப்பியிருந்தார். தன் மகனின் பள்ளியிறுதி மதிப்பெண்களை அனுப்பியிருந்தார்.

அழைத்து, அவனின் மேற்படிப்பைப் பற்றிப் பேசினேன். வணிகம் படிக்கப் போவதாகச் சொன்னார். மும்பையின் போக்குவரத்து நெரிசல்களில் பல மணிநேரம் மாட்டிக் கொண்டு, நானும் அவரும் மட்டுமே பேசிக் கொண்டிருப்போம். தன் மகனின் படிப்பின் மீது மிகவும் கவனம் உண்டு அவருக்கு. விரார் என்னும் புற நகரில் அவருக்கு இருந்த வீட்டை விற்று, மகனை டேராடூனுக்கு 2 வருடம் படிக்க அனுப்பி விடலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தார். வேண்டாம் என்று நான் சொன்னாலும், செய்து விடுவார் என்றே பயந்து கொண்டிருந்தேன். நல்ல வேளையாக, அவர் பையன் போக மறுத்துவிட்டான். நானும் அவரும் மட்டும் இருந்தால், ஒன்றாகச் சாப்பிடச் செல்வோம். இல்லையெனில் அதற்கு மாற்று எற்பாடுகள் செய்து விடுவேன்.

இன்றும் மும்பை செல்லும் தினங்களில், மும்பை இறங்கியதும், வரும் முதல் போன் அவருடையதுதான். முகம் பார்த்ததும், “நமஸ்கார் சார்” என்று மலரும் அவர் முகத்தில் தெரியும் அன்புக்கு விலையேயில்லை.

அதே போல் கல்லிடைக்குறிச்சி நெசவாளர் காலனியில் இருந்து எங்கள் வீட்டில் பணிபுரிய வந்த கல்யாணி அம்மாள். கல்லிடைக் குறிச்சி விட்டு வந்து மூன்றாண்டுகள் கழித்து கடிதம் எழுதியிருந்தார்கள். பதில் போட்ட நாங்கள் எங்களுக்கு மகன் பிறந்த செய்தியைப் பகிர்ந்து கொண்டிருந்தோம். சில நாட்களில் அவர் பஸ் பிடித்து சென்னை வந்து விட்டார். மகனுக்காக அவர் வாங்கி வந்தது அரை பவுன் தங்கம். அதிர்ந்து போய் விட்டோம். நாங்கள் அவருக்கு அளித்த ஆறு மாத ஊதியம் அது.

நகரத்தில் காசும், அறிவும் தேடிக் கொள்ளலாம் ஜெ. அன்பு செய்வதை இதைப் போன்ற எளிய மனிதர்களிடம்தான் கற்றுக் கொள்ள முடியும்.

பாலா

அன்புள்ள பாலா,

நீங்கள் என் கட்டுரையை எப்படி வாசித்தீர்கள் என்று எனக்குப்புரியவில்லை. நான் நீங்கள் சொல்வதற்கு நேர் எதிராகவே கட்டுரை எழுதியிருக்கிறேன். நான் சொல்வதை ஆமோதித்து எழுதியிருக்கிறீர்களா இல்லை மறுத்தா என்பது உங்கள் கடிதத்தில் தெளிவாக இல்லை

நான் என் கட்டுரையில் ‘எளிய’ உலகியல் அன்பு எப்போதுமே முடிவில் ஒரு வெறுமைக்குத்தான் கொண்டுசெல்லும் என்றுதான் எழுதியிருக்கிறேன். அதை ‘உயிரியல் அன்பு’ என்று சொல்லலாம். அது உயிர்கள் இயல்பாகவே தங்கள் வாரிசுகள் மீது காட்டும் அர்ப்பணிப்பு

நீங்கள் சொல்லும் அந்த ‘எளிய அன்பு’ கொண்ட தந்தை கொஞ்ச காலம் கழித்து ‘உசிரக்கொடுத்து படிக்கவச்சேன் சார், ஒரு சிங்கிள் டீ கூட குடிக்கமாட்டேன். இப்ப அந்த நன்றி அவன்கிட்ட இல்ல. நான் சொன்னபேச்ச கேக்கமாட்டேங்கிறான்’ என்று புலம்புவார். நான் சொன்னது அதையே

ஜெ

அன்புள்ள ஜெ

எனக்கு உங்களோட பதிலில் கொஞ்சம் ஏமாற்றம்.ஜான் டயஸ், தம்பதிகளைப் பற்றிக் கேட்டுள்ளார். டீக் கடைக்காரருடனும் ஆட்டோ ஓட்டுனருடனும் ஆன உறவு வேற, தம்பதிகளுடனான உறவு வேற இல்லையா?

கல்யாணம் பெரியோர்களால் குல வழக்கம், பொருளாதாரத்தைச் சார்ந்து நிச்சயிக்கப்படுகிறது என்ற கருத்து சரி. மனப் பொருத்தம் பார்க்க வாய்ப்பே இல்லை. அப்பறம் எப்படி இணக்கமும் அன்பும் வரும்?முக்கால் வாசி திருமணங்கள் Power Politics தான் என்பது என் கருத்து. விலக்குகள் இருக்கலாம்.

திருமணமான புதிதில் இருபது இருபத்தைந்து வருடங்கள் குழந்தை வளர்ப்பிலும் பொருளாதார நிலையை மேம்படுத்துக் கொள்வதிலுமேயே போய் விடுகிறது. அன்பிற்கும் பண்பிற்கும் இடம் இல்லை. அன்பு என்பது Take it for granted. நிறைய பேருக்கு அன்பின் முக்கியதுவம் தெரியுமா என்பதே என் சந்தேகம்.

நாம் முன்பே பேசியபடி அன்பை வெளிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். விட்டாயிற்று. வயதாகி மக்கள் நம்மை விட்டுச் சென்ற பிறகு நேரம் இருப்பதால் பழயதையெல்லாம் பேசி கொத்திக்கொள்வதனால் தம்பதிக்குள் ஒரே ரணம். அன்பு பழகி இருந்தால் முதுமை இன்பமாக இருந்திருக்கும். இதை எப்படி மாற்றுவது எப்படி என்பதே ஜான் டயஸின் கேள்வி?

இது இப்படி இருக்க இப்பதிய தலை முறை நாம் வளர்த்து விட்டவர்களைப் பற்றியது?நாம் அவர்களுக்கு ஏட்டுச் சுரைக்காயைக் கொடுத்திருக்கிறோம். ஒடி ஒடி நிறைய சம்பாதிக்கத் தெரியும். அந்த தலைமுறைக்குத் தெரியுமா அன்பும் அனுசரணையும்?
கவலையாகத் தான் இருக்கு எனக்கு!!

காலப் போக்கில் நாம் பணத்திற்கும் பகட்டிற்கும் அடிமையாகி உண்மையான இன்பம் என்ன என்பது கூட தெரியாத அளவிற்கு எங்கேயோ போய் மாட்டிக் கொண்டு விட்டோம்.ஓரே மாதிரியான ரசனைகள் இல்லாவிட்டாலும் கணவரும் மனைவியும் மதிப்பும் மரியாதையும் ஒருவருக்கொருவர் கொண்டிருந்தால் பயணம் இனிமையாகும். இருவருமே செய்ய வேண்டிய வேலை இது. இருவருமே துடுப்பை ஒன்றாகப் போட்டால்தான் படகு ஒரே திசையில் சீராக ஓடும்.

ஏதாவது கலைகள் தெரிந்திருந்தாலோ அல்லது புதிய மொழிகள் கற்க ஆர்வம் கொண்டாலோ நல்லதுதான்.ஆர்வம் இல்லாதவர்கள் ஒன்றாக சேர்ந்து காலை மாலை நடைப் பயிற்சி செய்தாலே போதும். மனம் ஒன்ற முயற்சியும், ஆர்வம் இருந்தாலே போதும். இதற்கு முக்கியத் தேவை கணவரும் மனைவியும் ஒருவரை ஒருவர் நேசிக்கவும் ம்திக்கவும் பழகிக் கொள்ள வேண்டும். இதன் முக்கியத்துவத்தை இளமையிலேயே அறிந்து பழகி வந்தால் முதுமை இனிக்கும்.

வாழ்க்கை சுகமானது, பல பாடங்கள் இருக்கின்றன. அனுபவித்து புரிந்து இனிமையாக்கிக் கொள்ள முடியும் முயன்றால்.
என்ன கொஞ்சம் முன்னே யோசிக்க வேண்டும்.

வாழ்க வளமுடன்.

அன்புடன்

மாலா.

அன்புள்ள மாலா

எனக்கும் உங்கள் கடிதம் கண்டு கொஞ்சம் ஏமாற்றம்

நான் நீங்கள் சொல்லியிருக்கும் அதேவிஷயத்தைத்தான் சொல்லியிருக்கிறேன். இன்னும் குறிப்பாகவும் சுய அனுபவம் சார்ந்தும். நீங்கள் கொஞ்சம் வழக்கமான உவமைகளுடன் [துடுப்பு] அதைச் சொல்கிறீர்கள்

ஒரு சின்ன நகைச்சுவை. தவறாக எடுத்துக்கொள்ளமாட்டீர்கள் என நினைக்கிறேன். ஒரு மாம்பழம் ஒரு ரூபா, மூணு மாம்பழம் என்ன விலை என்று எல்கேஜி பையனிடம் கேள்விகேட்டபோது தெரியாது ,எங்க மிஸ் ஆப்பிள் கணக்குதான் சொல்லிக்குடுத்தாங்க என்றானாம்.

ஜெ

முந்தைய கட்டுரைஅசோகமித்திரன்
அடுத்த கட்டுரைபிள்ளையின் பெயரும் தந்தையின் கொள்கையும்