அன்புள்ள ஜெ,
தங்களிடம் இதுபற்றி கேட்க வேண்டும் என்று வெகு நாட்களாக குழப்பிக் கொண்டிருக்கிறேன். காடு, அனல்காற்று, இரவு, கன்யாகுமரி, உலோகம், ஏழாம் உலகம் எல்லாம் படித்துவிட்டேன். விஷ்ணுபுரமும் எப்பொழுதோ வாங்கி விட்டேன். ஆனால் தொடவில்லை. இது போன்ற பெரும் படைப்பை எல்லாம் எளிதாகப் படித்து விடக்கூடாது, முடியாது. அதற்கு இன்னும் நிறைய நிறைய படிக்க வேண்டும். வாழ்வை மிக ஆழமாகக் கற்க வேண்டும். அப்பொழுதுதான் இது போன்ற பெரும் படைப்பை நாம் செரித்து உள்வாங்கிக் கொள்ள முடியும் என்று நான் நினைத்ததே காரணம். ஆனால் சமீபமாய் என்ன தோன்றுகிறது என்றால் இப்படைப்பைப் படிக்காமல் இருப்பதால் ஒரு பெரிய முக்தி அனுபவத்தை நானே ஒத்திப் போடுகிறேனோ என்று. படித்து விடவேண்டும் என்று பெரும் ஆசையாக உள்ளது.
இதை யாரெல்லாம் படிக்க வேண்டும்/ கூடாது ஜெ? இதை படிக்க, செறிவாய் உள்வாங்க வரலாறு, தத்துவம், ஆன்மீகம் போன்று எதில் எல்லாம் ஆழமாய் தெரிந்திருக்க வேண்டும்? ஒரு prerequisites outline கொடுக்க இயலுமா? தினம் இரண்டு மணி நேரம் நான் படிப்பேன். அப்படி ஒரு தொடர்ச்சி இல்லாமல் எல்லாம் படிப்பது இதற்கு ஏதுவானதா? இதையெல்லாம் தங்களிடமே கேட்க எனக்கே மிக மிக சங்கடமாகவும், முட்டாள்தனமாகவும், சிறுபிள்ளைத்தனமாகவும் இருக்கிறது ஜெ. அதனால்தான் இப்படி கேட்பதை ஒத்திப்போட்டுக்கொண்டே வந்தேன். ஆனால் நேற்று ஒரு வாசகரின் “விஷ்ணுபுரம் கடிதம்” கண்டவுடன் கடவுள் இதை தங்களிடம் கேட்க எனக்குக் கொடுத்த அனுமதியாகவே புரிந்து கொண்டேன்.
நன்றி
ஜெயா
அன்புள்ள ஜெயா,
ஒரு நாவலை எவரெல்லாம் வாசிக்கலாமென ஆசிரியர் சொல்ல முடியுமா என்ன? அது விற்பனைக்கு வந்தாலே எல்லாரும் வாசிக்கலாம்தானே?
பொதுவாக எந்த ஒரு கலைப்படைப்பும் ‘தன்விளக்கத்தன்மை’ கொண்டிருக்கவேண்டும் என்பது ஒரு சம்ஸ்கிருதக் கோட்பாடு. [சுயம்பிரகாசத்தன்மை] அதாவது அதை வாசிக்க வேறெதையும் தெரிந்திருக்க வேண்டியதில்லை. அதுவே எல்லாவற்றையும் சொல்லக்கூடியதாக இருக்கவேண்டும். குறைந்தபட்சம் செவ்வியல் ஆக்கங்களாவது அப்படி இருந்தாகவேண்டும்.
நான் விஷ்ணுபுரத்தில் முயன்றது ஒரு செவ்வியல் ஆக்கத்தை உருவாக்குவதற்காகத்தான். ஆகவே அதில் செவ்வியல் கூறுகள் உள்ளன. குறிப்பாக தன்விளக்கத்தன்மை.
அந்நாவல் எதைப்பற்றிப் பேசுகிறதோ அது அந்நாவலின் பக்கங்களில் முழுமையாகவே உள்ளது. தத்துவங்கள், வாழ்க்கைக்கூறுகள், கலைகளைப்பற்றிய செய்திகள் எல்லாமே. ஏன் கலைச்சொற்கள் கூட முதலில் சம்ஸ்கிருதத்தில் வந்தாலும் அடுத்த சில பத்திகளுக்குள் தமிழிலும் சொல்லப்பட்டுவிடும். அதை வாசிக்க பிற நூல்களின் உதவி தேவை இல்லை.
அப்படியென்றால் எல்லோரும் வாசிக்கலாமா? இல்லை, அதை வாசிக்க சில தகுதிப்படுத்தல்கள் வாசகர் தரப்பில் இருந்து தேவை.
ஒன்று, சிரத்தை. நீளமான பெரிய நாவல்களை வாசிக்க பொறுமையும் அக்கறையும் கொண்ட வாசிப்பு தேவை. நாவலின் எல்லாக் கூறுகளையும் கருத்தில்கொண்டு எல்லா வரிகளையும் முழுமையாக வாசித்து நினைவில் தொகுத்துக்கொள்ளும் கவனம் வாசகர் தரப்பில் இருந்து தேவை.
அதாவது வணிகக் கேளிக்கை நூல்களை வாசிக்கும் மனநிலையுடன் கதைப்போக்கை மட்டுமே ‘தெரிந்து’கொண்டு வாசித்துச் செல்லக்கூடாது. விஷ்ணுபுரத்திற்கு கதை முக்கியமே இல்லை. சொல்லப்போனால் அது கதைகளின் ஒரு பெருந்தொகையே ஒழிய ஒரு கதை அல்ல.
அதேபோல கதைநாயகர்கள் என சிலரை உருவகித்து அவர்கள் வழியாக நாவலை வாசிக்கக்கூடாது. விஷ்ணுபுரத்தில் அப்படி மையக்கதாபாத்திரமேதும் இல்லை. ஒற்றைவரியில் வந்துபோகும் கதாபாத்திரம் கூட வலுவாக மேலெழுந்து வரக்கூடும்.
வர்ணனைகள், தர்க்கங்கள், தகவல்களைத் தாண்டிச்சென்று வாசிக்கக்கூடாது. அவையெல்லாமே புனைவின் பகுதிகள். விஷ்ணுபுரத்தின் தர்க்கங்கள் தத்துவங்கள் அல்ல, அவை புனைவுகளாக மறுஆக்கம் செய்யப்பட்டவை.
இரண்டாவதாக கற்பனை. விஷ்ணுபுரம் வாசகனின் கற்பனையில் உருவாகவேண்டும். நாவலின் நிலம், கோயில்,கதாபாத்திரங்கள் எல்லாமே கொஞ்சம்தான் சொல்லப்படுகின்றன. மிச்சம் வாசகனால் கற்பனைசெய்யப்படவேண்டும். கதைகேட்கும் குழந்தைகள் போல, கற்பனையில் நாவலைக் காணமுடியவேண்டும்.
அதற்கு முக்கியமாக வர்ணனைகளை கூர்ந்து கவனிக்கவேண்டும். செக்கச்சிவப்பாக ஒளிவிடும் சோனாவின் கரையில் நிற்கும் மரங்களின் இலைகளின் அடிப்பகுதி செவ்வொளி பெற்றிருந்தது என ஒரு வரி வரும். அதை கற்பனையில் கண்டால் நீங்கள் சோனாவின் கரைக்குச் செல்ல முடியும். வர்ணனைகளை விட்டுவிட்டால் நாவல் வெளியே நின்றுவிடும்.
மூன்றாவதாக நினைவுறுத்தல். நாவல் பெரியதோர் வலைப்பின்னலை உருவாக்குகிறது. சின்னச்சின்ன விஷயங்களை நீங்கள் நினைவில் கொண்டிருந்தால்தான் அது உருவாக்கும் பின்னலை உணர முடியும். முதல்பகுதியில் வரும் ஒரு சிற்பம் இரண்டாம் பகுதியில் ஒரு கதாபாத்திரமாக விரியலாம். முதலில் சொல்லப்படும் ஒரு செய்தி பின்னர் பெரிய கதையாக ஆகலாம்.
கடைசியாக, கோர்த்துக்கொள்ளுதல். நாவல் புள்ளிகளை வைத்துக்கொண்டே செல்கிறது.கோலம் வாசகன் போடவேண்டியது. நல்ல வாசகன் அதிலுள்ள தத்துவங்களையும் கதைச்சரடுகளையும் தன் கற்பனையில் கோர்த்து பின்னிக்கொண்டே செல்லவேண்டும்.
அதற்கு விஷ்ணுபுரம் பற்றி இதுவரை எழுதப்பட்ட கட்டுரைகள் உதவும். என் தளத்தில் விஷ்ணுபுரம் என அடித்துத் தேடினால் நிறைய கட்டுரைகள் கிடைக்கும். www.vishnupuram.com என்ற தளத்தில் நிறைய கட்டுரைகள் உள்ளன.
ஜெ