அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
காடு நாவலைத் தொடர்ந்து தங்களின் ரப்பர், கன்னியாகுமரி மற்றும் ஏழாம் உலகம் நாவல்களைப் படித்தேன்.
ஏழாம் உலகம், நாவல் என்பதை விட உலகின் இருட்டுப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கைப்பதிவு (டாகுமெண்டரி) என்றே நம்புகிறேன்.
ஊனமுற்ற பிச்சைக்காரர்களின் மீதான எனது பார்வையை இந்த நாவல் மாற்றியிருக்கிறது. ஐந்து வருடங்களாக தினமும் நான் பயன்படுத்தும் ரயில் நிலையத்தில், படிகளின் ஓரங்களில் உறைந்து கிடக்கும் மனிதர்கள் திடீரென்று என் கண்களில் தென்படுகிறார்கள். பாதங்கள் இல்லாத கால்களுடனும், விரல்கள் இல்லாத கைகளுடனும் வாழும் மனிதர்கள். முன்பெல்லாம் அவர்களைக் காண நேர்ந்தால் சட்டென்று என் பார்வையைத் திருப்பிக்கொள்வேன். ஆனால் இன்று அவர்களைக் கூர்ந்து நோக்குகிறேன். அவர்களின் ரணங்களைத் தாண்டி மனிதம் தென்படுகிறது.
இந்தப் படைப்பை உருவாக்கப் பெரும் உழைப்பு தேவை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அந்த உழைப்பு எவ்வாறு சாத்தியம் என்று இன்றும் வியக்கிறேன். நாவலின் கதை முழுக்க உரையாடலில் பயணிக்கிறது. அது கதாபாத்திரங்களின் இயல்புகளைத் துல்லியமாக எடுத்துரைக்கிறது.
சமீபத்தில் கீழ்வரும் இணைப்பில் உள்ள செய்தியைப் பார்த்தேன்.
http://www.bbc.co.uk/news/magazine-22729351
இது போன்று ஊடகங்கள் இருட்டுலகில் வாழும் மனிதர்களின் நிலையை விவாதப்படுத்த வேண்டும். அரசு அவர்களின் வாழ்வாதாரங்களை உருவாக்க வேண்டும்.
நன்றி,
பாலா
அன்புள்ள பாலா
ஏழாம் உலகம் வெளிவந்தபோது அப்படி ஓர் உலகம் உண்மையில் உண்டா என்ற வினா பலராலும் கேட்கப்பட்டது. ஒரேசமயம் அது ஒரு கற்பனை என்றும் வெறும் ஆவணம் என்றும் இருசாரார் சொன்னார்கள். இருவரும் பேசி முடிவுக்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டேன். ஆனால் சிலநாட்களிலேயே தினமணியில் ஒரு செய்தி வந்தது. அதில் குழந்தைகளைப் பிடித்து விற்கும் ஒரு கும்பலைப்பற்றிய தகவல் இருந்தது. அவர்களின் தொழிலே ‘உருப்படி’ வணிகம்தான். ஆனால் அது எட்டாவது உலகம். அந்த வணிகத்தைச்செய்தவர்கள் பெண்கள்
ஜெ