அற்பத்தனமும் அகங்காரமும்

a

மதிப்பிற்குரிய ஜெயமோகன்,

 
நீங்கள் அற்பத்தனத்தை கோபத்தால் எதிர்கொண்டதை (“இப்படி இருக்கிறார்கள்“) எழுதியிருந்தீர்கள் . என் நெடுநாள் சந்தேகம் , அற்பத்தனத்தை கோபத்தால் எதிர்கொள்வது சரியானதா என்று….
ஏனெனில், சில சமயம் சக மனிதர்களின் அற்பத்தனத்தை கண்டு பொங்கிருக்கிறேன் . கடுமையாக திட்டியிருக்கிறேன் . ஆனால் அதன் பின் வருத்தபட்டிருக்கிறேன். நான் இன்னமும் பண்படவில்லையோ என்று….
நல்ல தந்தை அல்லது ஆசிரியர் , தங்கள் மக்களின் அறியாமையை கண்டு கோபத்தில் தண்டிப்பது சரியானதா?

 

அன்புடன்,

அருண் .

 

அன்புள்ள அருண்

 

குமாரசம்பவத்தில் காளிதாசன் சொல்லும் புகழ்பெற்ற உவமை ஒன்றுண்டு. யானைமத்தகத்தை அறைந்து பிளந்து உண்டு, உகிர்களிலிருந்து உதிர்ந்த குருதித்துளிகள் பனிப்பரப்பில் செம்மணிகள் என உதிர்ந்து மாலையென்றாக, நடந்துசென்ற சிம்மத்தின் பாதை. என்னை எப்போதும் உளமெழச்செய்யும் படிமம் அது. அந்தத் தடமும் அழியும். ஆனால் எளிய காலடித்தடங்களைவிட மதிப்புமிக்கது அது.

*

உங்கள் கேள்விக்கான விடை – ஒரு விஷயத்தை நாம் எந்த பின்னணியில் பொருத்தி புரிந்து கொள்கிறோம் என்பதை பொறுத்து பதில் உள்ளது என்பதே.

ஒருவர் தனிப்பட்ட முறையில் தன் மீது வந்துமோதும் அற்பத்தனங்களை மோதி உடைக்க முயன்றாரென்றால் அதற்கே நேரம் சரியாக இருக்கும். அது அவரது சுமுக மனநிலையை முழுமையாகவே அழிக்கும். அவரால் இனிய எளிய வாழ்க்கையை ஒருபோதும் வாழ முடியாது.

ஆகவே அற்பத்தனங்களை மானுட வாழ்க்கையின் இன்றியமையாத கூறுகள் என புரிந்துகொள்வதே முதிர்ச்சியான வழியாகும். அதையே நான் என் சுயவாழ்க்கையில் எப்போதும் மேற்கொள்கிறேன். அதை நீங்கள் கண்டிருக்கலாம். என்னைச் சீண்டும் முயற்சிகளுக்கு நான் எதிர்வினையாற்றுவதில்லை. அவற்றை வாசிப்பதில்லை. எதிர்கொள்வதில்லை. அதுவே நான் பிறருக்கும் சொல்லும் வழியாகும்.

ஒரு குறிப்பிட்ட காலம் கழிந்த பின்னால் எது சாதிக்கப்பட்டதோ அதுவே எஞ்சும். எது பேசப்பட்டது என்பதல்ல. அதை இதற்குள்ளாகவே நான் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். விஷ்ணுபுரம் இன்று முழுமையான ஆகிருதியுடன் உள்ளது. அதன் மீது வீசப்பட்ட புழுதிகளை நானே சொன்னால்தான் உண்டு.

ஆனால் இலக்கியவாதி, அறிஞன், அறிவியலாளன் என்ற நிலையில் ஓர் ஆளுமை எதிர்கொள்ளும் அவமதிப்பு அல்லது புறக்கணிப்பு என்னும் விஷயத்தில் இதுவல்ல விடை. அவற்றில் உள்ளது தனிமனித அறியாமை அல்லது அசட்டுத்தனம் அல்ல.

அதில் உள்ளது ஒரு சமூகத்தின் மொண்ணைத்தனம். அந்த மொண்ணைத்தனம் ஒரு சமூக நோய். அச்சமூகத்தை அது அழிக்கும். அதன் வளர்ச்சியை சூம்பிப்போகச் செய்யும். அதை மறைப்பதும் புறக்கணிப்பதும் நோயை வளர்க்கவே உதவும். அப்படி ஒரு நோய்க்கூறான மொண்ணைத்தனம் நம்மிடமிருப்பதை நாம் திறந்து வெளிப்படுத்தியாக வேண்டும். அப்படி ஒரு சுயநோக்கை ஈவிரக்கமில்லாமல் நிகழ்த்திக்கொள்ள ஒரு கடுமையான வழிமுறை மட்டுமே உதவும். அறுவை சிகிழ்ச்சைக் கத்தியின் கூர்மையுடன் செய்ய வேண்டிய வேலை அது.

அவ்வாறு அதை பார்த்தபின் அது ஏன் என்று ஆராயலாம். என்ன வழி என்று ஆராயலாம். அதுவே உலகமெங்கும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் செய்வது. உலக அளவில் எழுத்தாளர்களை, கலைஞர்களை எடுத்துப் பார்த்தால் அவர்கள் தங்கள் சமகாலம் நோக்கி, தங்கள் சமூகச் சூழல் நோக்கி எவ்வளவு மூர்க்கமாகவும் கடுமையாகவும் எதிர்வினையாற்றியிருக்கிறார்கள் என்று காணலாம். ஒரு சமூகம் மொண்ணைத்தனம் மிக்கதாக இருக்கும் தோறும் அந்த மூர்க்கத்தின் வேகம் அதிகரிக்கிறது. மந்தக்க்காதுகள் நோக்கி கூச்சலிடுவதுபோல.

உலகம் முழுக்க இலக்கியவாதிகள் சமூகம் நோக்கி எப்படி எதிர்வினையாற்றியிருக்கிறார்கள் என்பதெல்லாம் நம்மவர்களுக்குத் தெரியாது. ஏனென்றால் எதையுமே வாசித்திருக்க மாட்டார்கள். நம்மவர் அறிந்ததெல்லாம் அவர்களை குஷிப்படுத்த எழுதப்படும் வணிக எழுத்துக்களை மட்டும்தான். அவர்களுடைய நினைப்பில் நம்மை சந்தோஷப்படுத்த வேண்டியவன் ஏன் திட்டுகிறான் என்று தோன்றுகிறது. ஆகவேதான் இந்த எதிர்வினைகள் எழுகின்றன.

நாம் இன்னமும் பழைய நிலப்பிரபுத்துவ காலகட்ட மனநிலைகளில் வாழ்கிறோம். நிலப்பிரபுத்துவ காலகட்டம் கலைஞர்களை இழிவுபடுத்திய பல மனநிலைகள் கொண்டது. பிரபுக்கள் முன் கூழைக்கும்பிடு போட்டு பணிந்து நிற்கும் கலைஞர்களை நாம் அங்கே காண்கிறோம். தமிழ்நாட்டில் ஜமீந்தார்களுக்கு வெற்றிலை மடித்துக்கொடுக்கும் அடைப்பக்காரன் வேலை கவிஞர்கள் பெறும் உயரிய பதவியாகக் கருதப்பட்டது. பிரிட்டனில் மன்னருக்கு படுக்கை விரித்துக் கொடுக்கும் பணி கலைஞனின் உச்சகட்ட கௌரவமாக சொல்லப்பட்டது.

ஜனநாயக யுகம் கலைஞனின் இடத்தை மாற்றியமைத்தது. ஜனநாயகம் கருத்துக்களின் அதிகாரம். மக்கள் மீது கருத்துக்கள் செலுத்தும் செல்வாக்கே அரசுகளை தீர்மனிக்கிறது. ஆகவே கருத்துக்களை உருவாக்கும் கலைஞர்களும், எழுத்தாளர்க்ளும் பெரும் முக்கியத்துவத்தை அடைந்தனர். அவர்கள் மக்களை வழிநடத்தும் உள்ளுணர்வின் வெளிப்பாட்டுமுனைகளாகக் கருதப்பட்டனர்.

உலக இலக்கியத்தில் ஷெல்லி அந்த அடையாளத்துடன் நிமிர்ந்து நின்ற பெரும் கவிஞன். ஒரு முன்னோடி, வழிகாட்டி. அவனை அவனுடைய சமகால நிலப்பிரபுத்துவம் புரிந்து கொள்ளாமல் பழிவாங்கியது. ஷெல்லியையே உலகமெங்கும் உருவாகி வந்த நவயுக கவிஞர்கள் ஆதர்சமாகக் கொண்டார்கள். பாரதி உட்பட. பாரதி தன்னை ஷெல்லிதாசன் என்றே அறிமுகம் செய்து கொண்டவர்.

அடைப்பக்காரன் பதவியை உதறி வந்த பாரதியை அச்சமூகம் இழிவு படுத்தியிருக்கும். பிரபுக்களுக்கு சந்தனம் பூச மறுத்து தலைப்பாகையுடன் வாசிப்பேன் என்று சொன்ன திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை வசைபாடப் பட்டிருக்கிறார். இன்றுகூட நம் பொதுமனநிலையில் கலைஞர்கள் படைப்பாளிகள் பற்றி நிலவும் இழிவு நோக்குக்கான அடிப்படை அந்த நிலப்பிரபுத்துவ மனநிலையில்தான் உள்ளது

அந்த மனநிலையை எதிர்கொள்ளும் சமகாலக் கலைஞன் நிமிர்ந்தே நின்றாக வேண்டும். பணிவு நம்மவர்களால் நிலப்பிரபுத்துவ கால அடைப்பாகாரத்தனமாகவே கொள்ளப்படும். ஓர் அரசியல்வாதியின் திமிரை, ஏன் ஒரு போலீஸ்காரரின் நிமிர்வை அங்கீகரிக்கும் நம்மவர் எழுத்தாளன் அடக்கமாக இருக்கவேன்டும் என ஆலோசனை சொல்ல பாய்ந்து வருவதை கவனியுங்கள். காரணம் இந்த முன் மனப்பதிவே. நம்மவர் கல்லூரிக்கல்வியும் தொழில் பயிற்சியும் பெற்றிருக்கலாம், பண்பாட்டுக்கல்வி அறவே கிடையாது. ஆகவே அதே நிலப்பிரபுத்துவகால மனநிலைகளை அப்படியே வாந்தி எடுக்கிறார்கள்

இந்த மொண்ணைகள் நடுவே நிமிர்ந்து தருக்கி நிற்கும் வல்லமை கொண்ட கலைஞனே தன் ஆளுமையை தக்கவைத்துக் கொள்ள முடியும். தன் சுயமரியாதையைப் பேண முடியும். அதன் வழியாகவே அவன் தன் கலையையும், இலக்கியத்தையும் முன்னெடுக்க முடியும்.

இலக்கிய வாசகர்களுக்கும் அதையே சொல்வேன். உங்களைச் சூழ்ந்து வெளிப்படும் மொண்ணைத்தனம் என்பது நம் நிலப்பிரபுத்துவம் உருவாக்கிய நோய். வாசிப்பதும் பல்லிடுக்கை குத்துவதும் சமம் என்று அது வாதிடும். பாரதியும் ஆட்டோ ஓட்டுபவரும் ஒன்றே என்று அது சொல்லும். அந்த மொண்ணைத்தனத்தைக் கண்டு கூசிச் சுருங்காதீர்கள். தயங்கி விலகிச் செல்லாதீகள். மோதி உடையுங்கள். அதுவே நம் காலகட்டத்தின் பணி. ‘மோதி மிதித்துவிடவும் முகத்தில் உமிழ்ந்துவிடவும் ‘ நம் முன்னோடி சொல்லி வைத்திருக்கிறான்.

ஜெ

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம்  Jun 5, 2013 

முந்தைய கட்டுரைஈரோடு சந்திப்பு -நவீன்
அடுத்த கட்டுரைஓர் இடைவெளி