அன்புள்ள ஜெயமோகன்,
எழுத்தை வாசிக்க ஆரம்பிக்கும்போது எனக்கு எழுத்தாளர்கள் மேல் ஒரு பிரமிப்பு இருந்தது. அவர்களை ஒருவகையான ஆதர்ச புருஷர்களாக எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் புத்தகக் கண்காட்சிகளிலும் பிற சந்திப்புகளிலும் எழுத்தாளர்களைச் சந்தித்தபோது என் மனதில் அந்த பிம்பம் கலைந்தது. பலர் மிகச்சாதாரணமானவர்களாக இருக்கிறர்கள். அதைவிட மேலாக அவர்கள் தங்களை அபூர்வமான பிறவிகளாகா எண்ணிக்கொண்டு வாசகர்களை ஒரு பொருட்டாக எண்ணாமல் இருக்கிறார்கள். இந்த தலைப்பாத்தனத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
மதி. சென்னை
அன்புள்ள மதி
நீங்கள் என்னை சந்தித்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன் ))).
பொதுவாக இந்த மனக்குறையை பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள், என்னிடம் பழகியபின் பிற எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லும்போது. அந்த மனநிலையை நான் புரிந்துகொள்கிறேன்.
பொதுவாக நாம் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். எழுத்தாளர்கள் அபூர்வமான மனிதர்களோ இலட்சியபுருஷர்களோ அல்ல. அவர்கள் மிகச் சாதாரண மனிதர்கள். அவர்களுக்கு தங்கள் உணர்ச்சிகள் மேல் கட்டுப்பாடு இருக்காது. ஆகையால் அவர்கள் கொஞ்சம் கீழானவர்களும் கூட. சமீபத்தில் ஒரு சந்திப்பில் நான் சொன்னேன். எழுத்தாளர்களில் இரு வகைதான் உண்டு. நிலையற்ற உணர்ச்சி கொண்டவர்கள், நிலையற்றா உணர்ச்சிக்கொந்தளிப்பை கட்டுப்படுத்திக் கொள்ள தெரிந்தவர்கள். பிரமிள் முதல் வகை. சுந்தர ராமசாமி இரண்டாம் வகை.
எழுத்தாளர்களைச் சந்திக்கும்போது பெரும்பாலான சமயங்களில் குளறுபடிகள் நிகழலாம். ஒன்று நாம் அவர்களைச் சந்திக்கும் தருணம் நமக்கு மிக முக்கியமானது. அவர்களுக்கு அது மிகச் சாதாரணமானது. அவர்களின் கவனம் வேறு சிலவற்றில் இருக்கலாம். அவர்களின் ஆர்வம் தூண்டப்படாமல் இருக்கலாம். நாம் அடையும் ஏமாற்றாத்தை அவர்கள் புரிந்ந்துகொள்ளாமல் இருக்கலாம்
இங்கே, அமெரிக்காவில் ஒரு நண்பர் சொன்னார். அவார் பிரபஞ்சனின் நல்ல நண்பர். பிரபஞ்சனை அவர் சந்தித்தபோது தன்னை அறிமுகம் செய்துகொண்டாராம். பிரபஞ்சன் ”நான் பிரபஞ்சன்” என்று சொல்லிக்கொண்டு திரும்பிக்கொண்டு பிறரிடம் பேச ஆரம்பித்தாராம். இவர் புண்பட்டுவிட்டார். இந்த மனப்புண் இன்றுவரை நீடிக்கிறது அவரிடம்
ஆனால் நான் அறிந்த பிரபஞ்சன் அப்படிப்பட்டவரால்ல. மிக நேரடியான, உற்சாகமே உருவான, மனிதர். அவரது உற்சாகத்துக்குப் பின்னால் உள்ள கஷ்டங்களைக் கூட நாம் அறியவே மாட்டோம். என்ன நடந்திருக்கும்? பிரபஞ்சன் பலரை தொடர்ச்சியாக பார்த்து அந்த சகஜ மனநிலையில் இருந்திருக்கலாம். அல்லது அவர் ஏதாவது ஒன்றை ஆர்வமாகப் பேசிக்கொண்டிருந்திருக்கலாம். அந்தப்பேச்சின் நடுவே அறிமுகமான ஒருவரிடம் தன் பெயரைச் சொல்லிவிட்டு தன் பேச்சை தொடர்ந்திருக்கலாம். பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு பேச்சில் சட்டென்று புது எண்ணங்கள் உதிக்கும். குறிப்பாக பிரபஞ்சன் பேச்சின் போது சட்டென்று தீவிரமான கருத்துக்களை நோக்கிச் செல்வார். அவரது மேடைப்பேச்சுக்களை விட உரையாடல்கள் ஆழமானவை.
பல எழுத்தாளர்கள் உள்வயமானவர்கள். பிரபஞ்சனைப்போல நல்ல உரையாடல்காரர்கள் அல்ல. பலரை முதல் சந்திப்பில் நெருங்கவே இயலாது. உதாரணமாக அசோகமித்திரன். அவர் முதல் சந்திப்பில் இறுக்கமாகா சற்றே பதற்றத்துடன் இருப்பதைப்போல் இருக்கும். மனுஷ்யபுத்திரனும் அப்படித்தான். கொஞ்சம் பதற்றத்துடன் சம்பிரதாயமாக சில சொற்கள் பேசுவார். ஆனால் இருவருமே அந்த எல்லைக்கு அப்பால் மிக நட்பானவர்கள் என்பது என் அனுபவம் மட்டுமல்ல, பல நண்பர்களின் அனுபவமும் கூட.
எஸ்.ராமகிருஷ்ணானின் முகம் அவரது தனிப்பட்ட ஆளுமைக்குச் சம்பந்தமே இல்லாதது. மிகுந்த நகைச்சுவை உணார்ச்சி கொன்டவர். சிரித்துக்கொண்டே இருப்பவர். ஆனால் புகைப்படங்களிலும் சரி நேரில் முதலில் பார்க்கும்போதும் சரி ஒரு உயரதிகாரி போல முகம் கம்மென்று இருக்கும். அதற்கு ஒன்றும் செய்யமுடியாது
மிக அதிகமான மனிதர்களைச் சந்திக்கும் எழுத்தாளர்கள் ஒருவகையான தற்காப்பு கவசம் ஒன்றை வைத்திருப்பார்கள். உதாரணமாக சுஜாதா. சிடுசிடுவென்று இருப்பதைப்போல் இருப்பார். ஜெயகாந்தன் அமைதியாகவே இருப்பார். அதன்மூலம் அவர்கள் உண்மையான ஆர்வமும் தீவிரமும் இல்லாதவர்களை தடுத்துவிடமுடியும்.
இவற்றை எல்லாம் மீறித்தான் நாம் எழுத்தாளர்களிடம் நெருங்கமுடியும். நான் வாசகனாக பலரிடம் அப்படித்தான் நெருங்கியிருக்கிறேன். அது வாழ்நாள் முழ்ழுக்க நீடித்த நல்ல நட்பாக, மாணவத்தன்மையாக எனக்கு ஆகியிருக்கிறது.
நம் குரு மரபிலேயே ஒரு விஷயம் உள்ளது. நூற்றுக்கணக்கான சென் கதைகளில் நீங்கள் இதைக் காணாலாம். குருவை சீடன் எளிதில் நெருங்கி விட முடிவதில்லை. சீடன் தன் தகுதியின் மூலம் தன்னை குரு நிராகரித்துவிட முடியாத நிலையை அடைந்தாக வேண்டும். புறக்கணிப்பு என்பது குரு சீடனுக்கு வைக்கும் ஒரு தேர்வுமுறை. மூத்த அறிஞர்கள் நமக்கு ஆசிரியர்கள். அவர்களுடன் உள்ள உறவில் இந்த அம்சம் உண்டு.நம்மை நிரூபிக்துக் கொள்ளவேண்டியவர்கள் நாமே
உதாரணமாக ஆற்றூர் ரவிவர்மா. கேரளத்தில் அவர் ஒரு பெரிய இலக்கிய மையம்–கநாசு போல. பெரும்பாலும் புதியவர்களை புறக்கணிப்பது அவரது வழக்கம். புதியவர்களால் அவர் சலித்துப் போயிருந்தார். நான் அவரை சுந்தர ராமசாமி வீட்டில் சந்தித்தேன். சுரா எனக்கு அவரை அறிமுகம் செய்தார். சிறுகதை ஆசிரியர் என என்னை அறிமுகம் செய்தார். ஓ என்றார் ஆற்றூ. அத்துடன் சரி
ஒருமுழுநாள் நான் ஆற்றூரிடம்பேசினேன். மிகச்சில சொற்கள் பேசுவதுடன் சரி. அவர் என்னை பொருட்படுத்தவில்லை. அன்றுமாலை அவர் என்னிடம் ஒரு ரேசர் வாங்க வேண்டும் என்றார். நான் கிளம்பியபோது அவரும் கூட வந்தார். நடைபோகும்போதும் ஏதும் பேசவில்லை. வழியில் சக்கடை விளிம்பில் ஒரு பன்றியின் இரு காதுகள் தெரிவதை நான் கண்டேன். ”சார் நில்லுங்கள். ஒரு பன்றிப்படை சாலையை கடக்கப்போகிறது ”என்றேன்
ஆச்சரியத்துடன் ஆற்றூர் ”எப்படி தெரியும்?” என்றார். ”தலைவி வழியை கவனிக்கிறது” என்றேன். ஆற்றூர் நின்று கவனித்தார். சட்டென்று பெரிய தாய்ப்பன்றி சாலையில் ஓட முப்பது பன்றிகள் பின்னால் ஓடின. அதில் குட்டிகளும் உண்டு. ஆற்றூர் வியப்புடன் பார்த்தபின் என்னிடம் திரும்பி ”நீ என்னென்ன கதை எழுதியிருக்கிறாய்?” என்றார். அதுதான் இன்றுவரை நீடிக்கும் நட்பின் தொடக்கம்– இருபத்து மூன்று வருடங்கள் ஆகின்றன
அது ஒரு சாவி. அந்தச் சாவியால் நாம் பெரும்பாலும் மூத்த எழுத்தாளர்களை திறக்க வேண்டியிருக்கிறது. ஜெயகாந்தனிடம் அல்லது ஞானக்கூத்தனிடம் அல்லது நாஞ்சில்நாடனிடம் அல்லது பிரபஞ்சனிடம் நிகழும் நட்பு என்பது ஒருவருக்கு ஒரு அனுபவச்செல்வமாகவே இருக்கும் என நினைக்கிறேன்
சிலர் இதற்கு விதிவிலக்கு. குறிப்பாக சுந்தர ராமசாமி. அவர் நம்மை நெருங்கி வரும் ஆளுமை. அதற்காக அவர் சிரத்தை எடுத்துக் கொள்வார். நம் உணர்வுகள் புண்படாமல் பார்த்துக் கொள்வார்.நாம் பேசுவதை முழுக் கவனத்துடன் கூர்ந்து கேட்பார். நம்மை ஊக்கப்படுத்துவார். நாம் போலித்தனமாக இருந்தால் மட்டுமே நம்மை விட்டு விலகிப்போய் தன்னை முழுக்க மூடிக்கொள்வார். அப்போது அவர் நம்மை முழுக்க அங்கீகரிப்பதுபோன்ற பிரமை நமாக்கு ஏற்படும்.
நான் சுந்தர ராமசாமியிடம் இருந்து கற்றது என இதைச் சொல்வேன். எப்போதுமே நண்பர்களிடம் ஒரு சமநிலையான பழக்கத்தைப்பேண முயல்வேன். எப்போதுமே எல்லாரையும் கணக்கில் கொண்டு பேசுவேன். எவரையும் புறக்கணித்த உணர்ச்சி வராமல் இருக்க தனிக் கவனம் எடுத்துக் கொள்வேன். சில சமயம் புத்தகச் சந்தைகளில் சந்திப்புகளில் சிலரிடம் சரியாகப் பேசமுடியாமல் போனால்கூட அதை உடனே சரிசெய்துவிடுவேன். இதே கவனத்தை யுவன் சந்திரசேகரும் எடுத்துக் கொள்வதை கண்டிருக்கிறேன்.
வாச்கர் தரப்பிலும் பிரச்சினைகள் இருக்கலாம். இப்போது உயிரோசையில் எழுதிவரும் இளம் எழுத்தாளர் ஆர்.அபிலாஷ் பத்மநாபபுரத்தைச் சேர்ந்தவர். நான் அங்கே இரு வருடம் தங்கியிருந்ந்தபோது எனக்கு அண்டைவீடு. அவரை நான் தக்கலையில் ஒரு புத்தகக் கடையில் சந்தித்தேன். அப்போது அவர் பி ஏ ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருக்கும்மாணவர் . அவருக்கும் எனக்கும் தற்செயலாக ஒரு பேச்சு ஆரம்பித்தது. அப்போது அவர் கலை இலக்க்கியப் பெருமன்றத்தின் அன்புப்பிடியில் இருந்தார். புளிய மரத்தின் கதை நாவலை பற்றி மிக மேலோட்டமான புரிதல்களைச் சொன்னார்– அது சாதியை வலியுறுத்தும் நாவல் என்று
நான் அதை மறுத்து அந்நாவலின் சாத்தியங்களைப் பற்றிச் சொன்னேன். அவர் அதை நிராகரித்து கோபமாக வாதாடினார். அத்துடன் அச்சந்திப்பு முடிந்தது. அவரது கல்லூரிக்கு நான் சென்றிருந்தேன். அந்நிகழ்ச்சிக்கு அவர் வரவில்லை. பூர்ஷுவா நிகழ்ச்சி என நினைத்தார். அப்படியே ஒரு வருடம் சென்ற பின்னர் தற்செயலாக என் சில கதைகளை வாசித்தபின்னர் அவரே என்னை தேடி வந்தார். வீட்டுக்கு வந்து பேசியபின்னர்தான் நாங்கள் நெருங்கினோம். அவரது முதல் கதையை நான் சொல் புதிதில் பிரசுரித்தேன்.
வாசல்கள் இருதரப்பிலும் உள்ளன. இரண்டுமே திறந்திருக்க வேண்டும். நம் வாசல்களை நாம் திறந்து வைத்திருக்க வேண்டும். நான் எப்போதுமே திரந்திருக்கிறேன் என்றே சொல்வேன். ஏராளமான கசப்பான அனுபவங்களுக்குப் பின்னரும்கூட…
ஆனாலும் சிலசமயம் தவறுகள் நிகழும். ஒருமுறை கரூரில் இருந்து இரு வாசகர்கள் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். இருவரும் கம்பள நெசவு செய்பவர்கள். எனக்கு ஒரு கம்பளம் பரிசாகக் கொன்டு வந்திருந்தார்கள். எனக்கு அத்தகைய தீவிரமான வாசகர்கள்மேல் அபாரமான பற்று எப்போதும் உண்டு. ஆனால் அலுவலகத்தில் வந்த அவர்களிடம் பேசிவிட்டு வீட்டுக்கு அழைத்து வந்த போது சைதன்யாவுக்கு உடல்நிலை சரியில்லை ஆஸ்பத்திரி போகவேண்டும் என்றாள் அருண்மொழி. நான் அவசரமாக கிளம்பியதும் அவர்களும் ”நாங்கள் கிளம்புகிறோம்” என்றார்கள். நான் சரி என்றேன். அவர்கள் சென்றார்கள்
பின்னர் அவர்களின் கண்களை நினைவில் கொண்டபோது எனக்கு உறைத்தது. அவர்கள் என்னைப்பார்க்கத்தான் கரூரில் இருந்து வந்திருக்கிறார்கள். என்னுடன் தங்க விரும்பியிருந்திருக்கிறார்கள். நான் தங்குங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். அந்த மனநிலையில் சொல்லத்தோன்றவில்லை. அவர்களின் விலாசம் என்னிடம் இல்லை. அவர்கள் பின்னர் எழுதவும் இல்லை. அந்த மனக்குறை இந்த ஐந்தாறு வருடங்களாகவே என்னிடம் நீடிக்கிறது.
அதேபோல ஒன்று எந்த எழுத்தாளருக்கும் நிகழலாம். வாசகன் எப்படி எழுத்தாளனைச் சந்திக்க ஆர்வமாக இருக்கிறானோ அபப்டித்தான் எழுத்தாளன் வாசகனைச் சந்திக்கவும் ஆர்வமாக இருக்கிறான். அந்தச் சந்திப்பு பலநூறு தற்செயல்களின் வழியாக நிகழ்கிறது. அந்த தற்செயல்களின் வகைகளும் வாய்ப்புகளும் எண்ணற்றவை