மொண்ணைத்தனம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் “இப்படி இருக்கிறார்கள்” படித்த பொழுதே நினைத்தேன். ஐயோ வெறும் வாய் மெல்பவர்களுக்கு இவர் வலிய சென்று சீவிங்கம் தருகிறாரே என்று. ஜெ. நம் நாட்டில் இப்படி பட்ட அரைகுறைகள் அறிவுரைகளை வாரி வழங்குவது , ஞானம் கொடுப்பது எழுத்தாளர்களுக்கு மட்டும் தான் என்று நினைக்கிறீர்களா? அப்படி இல்லை என்றுதான் தோன்றுகிறது. இயக்குனர் மணிரத்தினம் ராகுல் டிராவிட் தன்னிடம் சொன்னதாக சொன்னது “கிரிக்கெட்டில் இந்தியாவில் ஒரே பிரச்சனைதான். நான் சந்திக்கும் அனைவரிடமும் என் ஆட்டத்தைப் பற்றி ரெடிமேட் விமர்சனம் இருப்பது”. மணிரத்தினம் ட்ராவிடிடம் தனக்கும் அதே பிரச்சனைதான் என்று கூறியதாக ஞாபகம். உங்களுக்குப் பாடம் நடத்திய அந்தப் பெரியவருக்கு எழுத்தாளர்களின் மேதைமை மேன்மை பற்றி எல்லாம் ஒன்றுமே தெரியாது. உங்களிடம் ஏதோ உளறி இருக்கிறார். ஆனால் டிராவிட் போன்றவர்களின் திறமை இவர்களுக்கு நன்கு தெரியும். வக்கணையாய் வீட்டில் மேட்ச் பார்த்து சிப்ஸ் கொறித்துக் கொண்டே மொக்கையாய் உளரும் விமர்சனங்களை, அரைகுறை அறிவுடனும், தெருவில் மேட்ச் ஆடிய தகுதியுடனும், அவரை நேரில் பார்க்கும்பொழுது அவரிடமே சொல்கிறார்கள் என்றால் எப்பேர்பட்ட “தில்லு துரைகள்” நம் ஆட்கள். ட்ராவிடிற்கு பேட்டிங் டிப்ஸ் எல்லாம் கொடுக்கும் ஓரே தகுதி இந்தியாவில் சச்சினிற்கு மட்டும்தான் உள்ளது. எதைப் பற்றியாவது தகவல் கொஞ்சம் எங்கேயாவது படித்தோ, யார் சொல்லியாவது கேட்டோ தெரிந்து கொண்டால் ஆயிற்று. அந்தத் துறை நிபுணர்களிடமே சென்று அவர்களுக்கு அறிவுரை வழங்கி “நீ பெரிய ஆள்தான்பா, விட்ரு” என்று நிபுணரே சான்றிதழ்(??) வழங்கும் வரை அவரை செம்மையாய் கலாய்த்து காய்ச்சி எடுக்க அனைவரும் ரெடியாகவே இருக்கிறார்கள். மற்ற துறை நிபுணர்கள் அவ்வளவு சுலபத்தில் இவர்களிடம் மாட்டுவது இல்லை. எழுத்தாளர்கள் நேர் உரையாடல்களுக்கு பெரும்பாலும் தயாராகவே இருப்பதுகூட பிரச்சனை ஆக இருக்கலாம். நீங்கள் சொன்னது போல “டாக்டர் ஏப்பம் விட்டு கொண்டே இவர் வேற ராமசாமியா?, இவரும் நல்ல ரைட்டர் தான்” என்றார். ஹா ஹா ஹா அதுதான். ஏதோ ஒரு ராமசாமியின் ஏதோ ஒரு கதையை எங்கோ படித்தால் ஆயிற்று. ஜெயமோகன், ஜெயகாந்தன் என யாரிடமும் சென்று செம்மையாய் கலாய்த்து விடலாம். நல்லவேளை!!! மிரட்சியுடன் நினைத்துப் பார்க்கிறேன். இசை சம்பந்தப்பட்ட நுட்பங்கள் எல்லாம் சுலபத்தில் புரிவதில்லை , பிடிபடுவதில்லை. சற்று புரிந்தால் கூட இசைஞாநிக்கே போதிக்க ஆரம்பித்து விடுவார்கள் “நீங்க இந்த பாட்ல இன்னும் கொஞ்சம் டெம்போ ஏத்திருக்கலாம், ஸ்ருதி கொஞ்சம் கம்மி பண்ணிருக்கலாம், இசை எங்க இருந்து வருது தெரியுமா? சொல்லுங்க பாக்கலாம் “!!!! பில்கேட்ஸ் கிட்ட போய் பிசினஸ் பிலிம் காட்ட தயாராகத்தான் இருக்கிறார்கள் நம் ஆட்கள். அவர்கள் தான் மாட்டுவது இல்லை. எழுத்தாளர்களுக்கு சமூக அங்கீகாரமின்மை, ஏளனப் பார்வை இது எல்லாம் உண்மை. ஆனால் அரைகுறை அறிவை வைத்துக் கொண்டு போதிப்பது எழுத்தாளர்களுக்கு மட்டும் அல்ல, வாய்ப்பு கிடைத்தால் யாரை வேண்டுமானாலும் எந்தத் துறை நிபுணர்களை வேண்டுமானாலும் பின்னி பெடல் எடுக்க அனைவரும் எப்பொழுதும் ரெடி. இது ஒரு சமூக உளவியியல் சிக்கல் என்றே தோன்றுகிறது. என்ன செய்வது ஜெ?  எப்போதும் எல்லாரிடமும் இப்படித்தான் இருக்கிறார்கள்.

ஜெயா

அன்புள்ள ஜெயா,

உண்மைதான். நம் இணைய சினிமா விமர்சனங்களைப் பார்த்தாலே தெரியுமே. இந்த விஷயத்தை நான் இளையராஜாவை சந்திப்பவர்களிடம் கண்டிருக்கிறேன். அவரைச் சந்தித்ததுமே ‘இந்தப்பாட்டு மோகனம்தானே?’ என்று ஏதாவது கேட்பார்கள். அந்தப்பாட்டின் முதல் வரிக்கு மோகனத்தின் சாயல் இருக்கலாம். அல்லது யாராவது அப்படி சொல்லி கேள்விப் பட்டிருக்கலாம். ‘நீ என்ன பெரிசா சங்கீதம் போட்டுட்டே? எல்லாம் முன்னாடியே இருக்கிற ராகம் தானே? எனக்கும்தான் ராகம் தெரியும்’ என்பது பாவனை. ராஜா பெரும்பாலும் கிழித்து தோரணம் கட்டிவிடுவார். அவ்வகையில் அவர் ஒரு ஜெயகாந்தன். உண்மையில் இப்படி அரைவேக்காடுகளைக் கண்டு கண்டு அவர் எவரும் தன்னிடம் இசை நுணுக்கம் பற்றி பேசுவதை விரும்புவதில்லை. அவரிடம் இசை சம்பந்தமான எந்த விஷயம் பேச ஆரம்பித்தாலும் கொதிப்படைவதை கண்டிருக்கிறேன். ஆனால் இசையறிந்தவன் என அவர் புரிந்துகொண்ட ஒருவரிடம் மணிக்கணக்காக இசை நுணுக்கங்களை பேசிக்கொண்டிருப்பார். சுகாவிடம் அப்படி பேசி பாடிக்காட்டி விவாதித்துக் கொண்டே இருப்பார். அவருக்கு அதில் பெரிய போதையே உண்டு. ஒருமுறை அப்படி பேசும் இளையராஜாவை பார்த்தபோது பாவம் எத்தனை பேர் இவரை புண்படுத்தி எரிச்சல்படுத்தி வதைத்திருப்பார்கள் என நினைத்துக் கொண்டேன்.

ஜெ

ஜெ.

மொண்ணைத்தனம் பற்றிய கட்டுரை வாசித்தேன். நான் ஒரு கணிப்பொறி ஊழியன். கொஞ்சம் வாசிப்பேன். என் அலுவலகத்தில் அதை நான் வெளிக்காட்டுவதே இல்லை. ஆனால் நான் ஒவ்வொருநாளும் சந்திக்கும் உபதேசங்களும் கிண்டல்களும் அளவேயில்லை. நான் உங்களைப்போல பேசத்தெரிந்தவன் அல்ல. எனக்கு திட்டவும் தெரியாது. ஆகவே மனம் வருந்திக்கொண்டிருப்பேன். உங்கள் கட்டுரையில் உள்ள வேகம் எனக்கு மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

ராஜ் மகாலிங்கம்

அன்புள்ள ராஜ்,

நான் கவனப்படுத்த விரும்பியது இந்த மொண்ணைத்தனத்தை. மொண்ணையர்களுக்கு வலுவாகத் தைக்கவேண்டும் என்றுதான் என் கட்டுரை எழுதப்பட்டது. லபோதிபோவென்று சத்தம்போட்டு என் கட்டுரையை லட்சக்கணக்கானவர்களுக்குக் கொண்டு சென்று சேர்த்து விடுவார்கள். இந்த எதிர்வினையாளர்கள் அதிகம் போனால் முந்நூறுபேர். ஆனால் மௌன வாசகர்கள் பல்லாயிரம் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சதவீதத்துக்கு இதைப்பற்றிய ஒரு சிந்தனை மனதில் ஓடினாலே போதும். கட்டுரையின் நோக்கமே அதுதான்.

ஜெ

முந்தைய கட்டுரைபுழுக்களின் ரீங்காரம்
அடுத்த கட்டுரைகாமம் என்னும் யட்சி