நம் அறிவுமொண்ணைத்தனம்- கடிதங்கள்

ஐயா வணக்கம்.

நான் சமீபத்தில் தங்கள் “இப்படி இருக்கிறார்கள்” கட்டுரையைப் படித்தேன். மிக யதார்த்தமான கோபம் தங்களது. அப்படி ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். இனியும் இருப்பார்கள். தன்னுடைய அறியாமையை அறியாதவன், அறிந்த ஒரு சில விஷயங்களிலேயே தன்னை ஒரு மேதையாக நினைத்துக் கொண்டு விடுவதால் வரும் பிரச்சினை இது. அவனுக்குத் தெரிந்ததைத் தவிர தெரிந்து கொள்ள வேறு உபயோகமான விஷயங்கள் இருப்பதாகவே அவனுக்குத் தெரியாது. அதனால் ’கற்றிலனாயினும் கேட்க’ என்ற நல்ல வழி அவனுக்குப் புலப்படாது.

சிலர் நீங்கள் எழுதிய விஷயங்களில் சந்தேகம் கேட்க மாட்டார்கள். அவர்கள் கேள்வி நீங்கள் ஏன் அதைப் பற்றி எழுதவில்லை, இதைப் பற்றி எழுதவில்லை என்கிற விதமாக இருக்கும். அது பற்றிக் கேட்டு நீங்கள் எழுதாததை உங்களுக்கு விளக்கவும் ஆரம்பித்து விடுவார்கள்.

சிலர் தாங்கள் சொல்வதை எழுதச் சொல்வார்கள். எனக்கு எழுத வராது வந்தால் நானே எழுதி விடுவேன் என்று காரணம் சொல்வதுண்டு. இப்படி அவர்கள் கூட்டணியில் எழுத்தாளனை எழுத அழைக்கும் அறியாமையும் உண்டு.

நிறைய படித்தவனுக்குத் தான் கற்றது கைம்மண் அளவு என்பது புரியும். அறிந்தவன் பார்க்கக் கிடைக்கையில் அவன் அறிந்ததில் சிறிதாவது வாங்கிக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். மிகக் குறைவாய் படித்தவனுக்கும், மிகக் குறைவாய் அறிந்தவனுக்கும் தான் அறிந்த சில்லறை விஷயங்களைச் சந்திக்கிற ஒவ்வொருவரிடமும் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ள மட்டுமே முடியும்.

அவர்கள் மீது ஏற்படும் நம் கோபம் ஒரு விதத்தில் நியாயமாகவே தோன்றினாலும், ஆழமாக சிந்தித்தால் அவர்கள் இரக்கப்பட வேண்டியவர்கள் தான். வாழ்க்கையில் சிறிதளவாவது உருப்படியாக ஏதாவது கற்றிருந்தால் இப்படி இருந்திருக்க மாட்டார்கள்.

அன்புடன்,
N.Ganeshan
http://enganeshan.blogspot.com/
http://n-ganeshan.blogspot.com/
அன்புள்ள கணேசன்

சில வருடங்களுக்கு முன்பு வேதசகாயகுமார் அவர்களின் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். அங்கே அவருடன் பணியாற்றிய ஒரு ஆசிரியர் என்னிடம் சொன்னார் ‘ நான் படிக்கிறதே இல்லீங்க. அறிவில்லாதவன் தான் படிக்கணும்’

இதுதான் நம் பொதுமனநிலை இன்று. காசு வராத எதன் மேலும் ஈடுபாடில்லை .அறிவார்ந்த எதன் மீதும் மதிப்பில்லை. நீங்கள் கொஞ்சம் வாசிப்பவராக இருந்தால் தெரியும், உங்கள் சகமனிதர்களிடமிருந்து வரும் எள்ளல், அவமதிப்பு என்னவென்று.

அது தனிப்பட்ட முறையில் புறக்கணிக்கத்தக்க ஒன்று. நானும் அதையே செய்வேன். என் அலுவலகத்தில் கடைசி வரைக்கும் என்னை எவருக்கும் எழுத்தாளன் என்று அறிமுகம் செய்து கொள்ளவில்லை. என்னுடைய அலுவலத்தில் சக இருக்கையில் இருபது வருடம் வேலைபார்த்தவர் கடல் படம் பார்த்துத்தான் நான் எழுத்தாளன் என்று தெரிந்து கொண்டார்! என் ஊரில் என்னை எழுத்தாளன் என்று எவருக்குமே தெரியாது.

ஆனால் ஒரு சமூக மனநிலை என்ற வகையில் இது மிக மிக ஆபத்தானது. அறிவார்ந்த மொண்ணைத்தனம் இது. ஒரு சமூகம் எதை முக்கியமென நினைக்கிறதோ அதை நோக்கிக்தான் செல்லும். ஒரு நாளில் குறைந்தது ஆயிரம்பேர் சினிமாவில் சேர்வதற்காக சென்னை வந்திறங்குகிறார்கள். ஏனென்றால் சினிமா மீது மட்டுமே தமிழ்ச்சமூகம் மதிப்பு கொண்டிருக்கிறது.

அந்த மரியாதையை அறிவியல், வரலாற்றாய்வு, இலக்கியம் என அறிவுத்துறைகள் மீது கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு அந்த துறைகளில் சாதித்தவர்கள் மீது மதிப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.அதுவே ஒரு சமூகம் அறிவார்ந்து முன்னேறுவதற்கான ஊக்கம். அதுதான் உலகமெங்கும் நிகழ்கிறது.

நாம் அறிவுத்தளத்தில் உள்ளவர்களை கிள்ளுக்கீரைகளாக நினைக்கிறோம். ஆகவேதான் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவும் உபதேசம் செய்யவும் முற்படுகிறோம். நான் சுட்டிக்காட்டியது இந்த அவல நிலையை. அதற்கு வந்த எதிர்வினைகளை மட்டும் பாருங்கள். ‘அறிவுத்துறை என்ன பெரிய பருப்பா? படித்தவனும் படிக்காதவனும் எல்லாரும் சமம்தான்’ என்ற ரீதியில் வந்த எதிர்வினைகளில் இருந்தே நான் ஏதும் பொதுப்படுத்திச் சொல்லவில்லை, நான் சொல்வது எவ்வளவு பெரிய சமூக உண்மை என்பதை நீங்கள் காணலாம்.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சமீபத்தில் உங்களுடைய “இப்படி இருக்கிறார்கள்…” படித்தேன். உண்மையாகவே அது போன்ற behavior வருத்தப்பட வேண்டிய விஷயமாக தான் உள்ளது.

தனக்கு தெரிந்த கொஞ்ச நஞ்ச விஷயத்தை காட்டிக்கொள்ள ஆசை படுபவர்கள் நம்மூரில் ஏராளம். அதுவும் அந்த துறையை சேர்ந்த ஒருவர் வந்துவிட்டால் போதும், இருக்கிற கொஞ்ச நஞ்ச மரை கூட கழண்டுவிடும். பேச கிடைக்கும் கொஞ்ச gap ல் அந்த நிபுணரிடம் நானும் அறிவாளி என்று காண்பித்துக்கொண்டு, அவர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களுடன் அறிவு சார்ந்த விஷயத்தை பேச ஆசை இருக்கும்.

இந்த மாதிரி behavior ஐ நான் attribute செய்வது cinema வுடன் மட்டுமே. நீங்கள் உட்பட சில experts ஐ தவிர்த்து சொல்கிறேன். Cinema வில் சேரத்தான் எந்த ஒரு துறையும் முழுவதுமாக தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கிடைக்கிற gap ல் நமக்கு அத்ரிஷ்டம் அடிக்காதா என்று ஒரு நப்பாசை நம் மக்களிடம் உண்டு. அதனால் தான் இந்த மாதிரி அறிவு சார்ந்த விஷயங்களை கொஞ்சம் கற்று வைத்துக்கொண்டு தன்னை தானேயும் மற்ற அப்பாவிகளையும் ஏமாற்றுகிறார்கள். காலப்போக்கில் நாம் கற்றுத்தேர்ந்த அறிஞர் போல் தன்னையே பாவித்து, அந்தந்த துறை சேர்ந்த நிபுணர் வரும்போது அடக்கிக்கொள்ள முடியாமல் scene போட்டு அசிங்கப் படுகிரார்கள்.

சினிமாவில் director கள் சான்ஸ் கொடுப்பது போல தான் எல்லாத்தையும் நினைத்துக் கொள்கிறார்கள். இது நம்மோட அடிப்படை problem என்பது உங்களுக்கே தெரியும்.

நான் என் ஆசைக்காக மேற்கத்திய violin இசை கற்றுக்கொள்கிறேன். கர்நாடக சங்கீதத்திலும் ஒரு அளவுக்கு பயிற்சி உண்டு. நான் ஒரு முறை violin எடுத்துக்கொண்டு classக்காக சென்று கொண்டிருந்த போது, ஒரு தாத்தா என்னிடம் “Violin சொல்லிக்கரியா ” என்று கேட்டார். நான் ஆமாம் என்றேன். “இப்போ என்ன பாடம் ஆயின்றுக்கு ” என்றார்.அதில் scales, bowing and exercises தான் பால பாடம், அதை எப்படி சொல்வதென்று தெரியாமல் “நான் Western படிக்கறேன்” என்றேன். “அப்போ ரொம்ப சுலபம், மொத்தம் ரெண்டே ராகம் தான், ஒன்னு மோகனம், இன்னொன்னு சங்கராபரணம் ” என்றார். எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை அப்படியே அவரை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போ Jasha Heifetz, Itzhak Perlman போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் கஷ்டப்பட்டு 18-20 மணி நேரம் ராக்ஷச சாதகம் செய்தது இவருக்கு எப்படி புரியும்? நான் எப்படி இவருக்கு அதில் உள்ள இனிமையையும், difficulty யையும் புரிய வைப்பது? பேசாமல் இருப்பதே மேல் என்று தோன்றியது.

நான் கூட என்னுடைய காலேஜ் பருவத்தில் உங்களின் நிபுணத்வம் தெரியாமல் உங்களிடம் என் அறிவுக்கு அப்பாற்பட்ட கேள்வியை கேட்டதுண்டு, அதற்கு நீங்கள் அருமையாக பதிலும் சொல்லி இருந்தீர்கள். ஆனால் நான் கேட்டது மிகவும் அசட்டுத்தனமான கேள்வி, அதற்காக மிகவும் வருந்துகிறேன்.

Am really very sorry.

நன்றி,
ஷங்கர்

அன்புள்ள சங்கர்

தெரியாமல் கேள்வி கேட்பது ஒன்றும் பிழையல்ல. நானும் அப்படி எவரிடமெல்லாமோ ஏதேதோ கேள்விகள் கேட்டிருக்கிறேன். பிரச்சினை தெரிந்துகொள்ள ஆர்வமே இல்லாமலிருப்பதுதான்.

நான் ஓரிரு மாதம் முன்னால் கலசலிங்கல் கல்லூரியில் உயிரியல் ஆய்வு செய்யும் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் கணிணித்துறையில் பணியாற்றியவர். அந்த வேலையை உதறிவிட்டு அறிவியல் ஆய்வுக்கு வந்தார். வீட்டில் சூழலில் எங்கும் அவர் சந்திக்கும் அவமதிப்பினைப்பற்றிச் சொன்னார். அவர் ஒரு பிழைக்கத் தெரியாத முட்டாள் என்பதுதான் மொத்தபேரும் சொல்வது. ஒவ்வொரு இடத்திலிருந்தும் அறிவுரைக் கொத்துக்கள்

தன்னிடம் ஒருவர் கூட நீ என்ன ஆய்வுசெய்கிறாய் என்று கேட்டதில்லை என்று நண்பர் சொன்னார் நம்மவர்களுக்கு அறிவார்ந்த விஷயமென்றால் மிகமிக சல்லிசாகத் தெரிகிறது. என்ன குடுப்பான் என்ற வினாவுடன் அதை கடந்து சென்று விடுகிறார்கள். நான் சொல்லியிருப்பது அந்த அறிவுமொண்ணைத்தனத்தை. அதைக் காண ஆர்வமிருந்தால் கொஞ்சம் இணைய எதிர்வினைகளை பாருங்கள்

ஜெ

முந்தைய கட்டுரைசாங்கியமும் வேதங்களும்
அடுத்த கட்டுரைசுஜாதாவை காப்பாற்ற வேண்டுமா?