கடிதங்கள்

அன்புள்ள சார்,

இப்போதுதான் ‘மன்மதன்’ படித்தேன். முடித்ததுமே.. அந்த ஆனந்தத்தை அவசரமாக
உங்களுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது.

தாமதித்தால்.. என்னுள் அந்தப் பரவசம் குறைந்து விடுமோ என்ற எண்ணம்.
கதையை முடித்தவிதம் அற்புதம். கிளாசிக்.

யார் மன்மதன் என்று சொல்லாமல் சொல்லி இருப்பீர்கள்.கதை கொடுத்த பரவசம் ஒரு பக்கம் இருக்க.. அதை நான் உள்வாங்க முடிந்தது என்கிற எண்ணம் எனக்கு மிகவும் ஆனந்தத்தைத் தருகிறது.

மெல்ல… மிக மெல்ல… உங்கள் புனைவு உலகிற்குள்.. தடுமாற்றங்களுடன்.. நுழைகிற உவகை இது.
உங்கள் புனைவுகளில் இருக்கும்… ஒரு கிளாசிக் ‘சட்லிட்டி’ யை ரசிக்க பழகிக்கொள்ளும் இன்பம்!
உள்ளுக்குள் பொதிந்திருக்கும் உன்னத கலை அம்சத்தை சற்றேனும் ருசிக்க முடிகிறதே.. என்ற ஆனந்தம்.

அன்புடன,
ராஜு

அன்புள்ள ராஜு

மன்மதனும் ரதியும் ஒருவரை ஒருவர் உருவாக்கிக்கொள்பவர்கள் இல்லையா?

மன்மதனுக்கு அனங்கன் என்றும் ஒரு பெயர் உண்டு. உடலற்றவன். கண் மட்டும் அல்ல

ஜெ

அன்புள்ள

ஜெயமோகன் நலம்தானே,

கொற்றவை அதன் “குலக்கதை மற்றும் நீலிகதை ” மூலமாக தன்னை நிறுவுகிறது , இந்தக் கதைகளில் எல்லாம் மையச் சரடாக ஓடுவது அப்பகுதி பெண் ஒருவள் தெய்வமாக மாறும் சித்திரம் தான் ,அது அறம் சார்ந்தும் ,நம்பகத் தன்மை கொண்டிருபதாலும் ,கண்ணகி மதுரையை எரிக்கும் பொழுது அவள் கடந்து வந்த நிலங்களின் அத்தனை பெண் தெய்வங்களும் அவள் பின் வருவது புனைவும் ,காவியமும் (காவியம் கூறியது ) எது என்று பிரிக்க முடியாமல் போகிறது.

கழுத்து அறுபட்டு சாகும் (சுயபலி ) இளமறவன் கண்கள் மூடும் பொழுது ,ஆழ்கடலில் முழ்கி இருக்கும் சிற்பம் ஒன்றின் இதழில் விரிந்த சிறு புன்னகை வாளை மீன் ஒன்றினை அசைவின்றி நின்று பார்க்க செய்தது என்ற வரி ” இருத்தல் ” பற்றி சொல்லும் அற்புதமான படிமம்.

மருத நிலத்தில் உரிமை வணிகம் நடக்கும் சந்தைக்கு வெளியே கோவலனும் ,கண்ணகியும் உரையாடும் பொழுது ” அவர்களின் மனைவிகள் தனியாக வாழக் கற்றவர்கள் ” என்று கண்ணகி கூறும் வரி கோவலனின் இயலாமை என்பதைக் கடந்து ,பெண்களும் தனித்து பொருள் ஈட்டும் வழக்கம் இருந்தது என்பது தெரிகிறது .

ஒவ்வொரு நிலத்திலும் நீலி கண்ணகிக்கு அந்த நிலத்தின் இயல்பைக் காண “தவளை ,ஓநாய் ,குரங்கு ” என்று அதன் கண்களுக்குள் பயணம் செய்வது ,ஒரு எழுத்தாளன் என்பவன் வெறும் மனிதர்களின் தன்மையை மட்டும் எழுதுபவன் அல்ல ,அது எழுத்தின் பூரணமும் இல்லை ,அவன் வாழும் நிலத்தின் தன்மையையும் எழுதில் கொண்டுவருபவன் தான் .

மகதியிடம் கண்ணகி “ஏன் உன் கணவன் திரும்பி வந்த பொழுது பேசவில்லை ” என்று கேட்கும் பொழுது “துறவு செல்ல வீட்டை விட்டு செல்ல தேவை இல்லை ” என்று செல்வது ,துறப்பது என்பது விலகி ஓடுவதில் இல்லை , கொண்டதில் முழுமையைத் தேடுவது என்பதைக் கூறுவதே .

காமத்தைப் பற்றிப் பல இடங்களில் இந்தக் காப்பியத்தில் கூறினாலும் என்னளவில் கவர்த்த வரிகள் “சிறைப்பட்டவனின் காமம் ,நோயுற்றவனின் உணவு போல” விடுதலை உணர்வு தான் காமம் என்பதைத் தெளிவுபடுத்தும் வரி.

தெய்வங்கள் மனிதர்களிடம் விளையாடுகின்றன ,மனிதர்களுக்கு தெய்வம் தேவை இல்லை ,ஆனால் அவைகளுக்கு மனிதன் தேவை ,என்பது போன்ற இடங்களைக் கடந்து போன பிறகு ,கண்ணகி தெய்வமாகிறாள் , ஆமாம் தெய்வங்கள் மனிதர்களிடம் விளையாடுகின்ற்ன ,விளையாட்டின் இறுதியில் அவைகளே வெல்கின்றன.

மிக பெரிய நூல்கள் எல்லாம் ஒரு “சொல்லை ” மட்டுமே தேடிச் செல்கின்றன ,மற்ற சொல்கள் எல்லாம் அச்சொல்லை “பொய்யாக “முயல்பவையே என்று சித்தார்த்தன் கூறுவதும் ,தான் தேடிய சொல் “அச்சம் ” என்றும் அதன் விடை ” விளைவு ” என்பதும் பொருத்தம்.

அந்த ஒரு சொல் பல இடங்களில் கோவலன் கண்ணகி கண்களை பார்க்கும் பொழுதும் ,சாத்தன்னார் இடிந்த பழைய மதுரையில் குருதி வழியும் கொற்றவை கண்களை நோக்கும் பொழுதும், சேரன் செங்குட்டுவன் நடு இரவில் கண்ணகி தவம் இருந்த மலை உச்சியை பார்க்கும் பொழுது ,இளங்கோ அன்னையின் குகைக்குள் இரவில் நுழைந்து ஓவிய பாவையை காணும் பொழுது என்று ,கொற்றவை முழுவதும் ஆண்களின் மனதில் புகுந்து அந்த ஒரு விவரிக்க இயலா சொல் அவர்களை அலைகளிகிறது ,அது வாசகனையும் விடவில்லை …எடைஇழந்து வெறுமையை நோக்கிய தருனம் அது ..

கொற்றவையை முழுவதும் உள்வாங்குவது என்பது அதன் முழு நில அமைப்பையும் ,வாசகன் கற்பனைக்குள் கொண்டுவந்து அதில் மனிதர்களை நடமாட விட்டுப் பார்க்கும் பொழுது ஒவ்வொவொரு நிலத்தின் தன்மையும் அந்த நிலத்தில் வாழும் மனிதர்களின் தன்மையில் எவ்வாறு புகுந்துள்ளது என்பது தெளிவடையும் என்னளவில் அந்த மனிதர்களின் தனித்த அடையாளம் அவர்களின் மண்ணோடு கொண்டுள்ள பற்றுதான் ,பாலை நிலத்தின் கடுமையான வெம்மையும் ,குறிஞ்சி நிலத்தின் விஷம் கொண்ட பூச்சிகளும் ,எந்த விதத்திலும் அவர்கள் தங்கள் விருந்தினராக போகும் கோவலன் ,கண்ணகி ,நீலி இவர்களை உபசரிப்பதில் தவறுவதில்லை .

கொற்றவை விஷ்ணுபுரத்தை விட உள்வாங்க எளிய படைப்பு ,ஆனால் அதன் அழகியல் தன்மையும் , கற்பனையும் பல மடங்கு மேலே நிற்கிறது.மானுடத்தின் எளிய தருணங்களைக் கண் முன் நிறுத்துகிறது ,உதாரணம் கோவலன் பொற்கொல்லர் வீதியில் காத்திருக்கும் பொழுது ஒரு ஏழைப் பெண்ணும் அவளுடைய குழந்தைகளும் வரும் காட்சி.பாலை நிலத்தில் ஒரு தேவி கோவிலில் கண்ணகி தன் கைகளால் ஒரு ஓநாய்க் குட்டியினைத் தூக்கும் பொழுது ,அந்த சிறிய உள்ளங்கை அளவுள்ள குட்டி கூடப் பெரும் எடையுள்ளது போல அவளின் கைகள் நடுங்கும் ,அதன் பிறகு கண்ணகி அவ்விடத்தை விட்டு செல்லும் பொழுது அந்த ஓநாயின் கண்களைப் பார்த்து ஒரு சிறு புன்னகை புரிந்து செல்வாள் அவ்வளவு தான் .. மேற்கொண்டு ஆசிரியன் எதுவும் சொல்லத் தேவையில்லை ..அது கண்ணகியின் தாய்மை உணர்வைக் காட்டுகிறது என்றாலும்
எந்த ஒரு உயிரினத்தின் குட்டியும் முழுமைத் தன்மை கொண்டது ,அந்த முழுமையை நாம் அள்ளி எடுத்துக் கைக் கொள்ள முயலும் பொழுது நம் கைகள் தானாகவே நடுக்கம் கொள்கின்றன.

நன்றி

முரளி

அன்புள்ள

ஜெயமோகன்

உங்களின் படைப்புகளில் வரும் பெண்கள் முற்றிலும் நுண்ணுணர்வு கொண்டு நகர்கிறார்கள் ,என்னளவில் அவர்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இல்லை .அவர்களிடம் பாசாங்கு இல்லை ,அவர்கள் தங்களின் மீது எப்பொழுதும் பரிதாபம் கொள்வதில்லை,அதே போல மற்றவர் கருத்தை நிரகரிப்பதும் இல்லை. கொற்றவையில் நாளங்காடி பூதம் தனக்கு வைக்கப்படும் படையல்களை வெறுப்பதும் இல்லை ,விரும்புவதும் இல்லை தன்னுடைய கண்களை உட்புறமாகத் திருப்பிக் கடலில் முழ்கிய தேவியின் கண்களைப் பார்த்தன என்று ஒரு காட்சி வரும் அது போல இவர்களும் தங்களின் நுண்ணுர்வைப் பார்த்துகொண்டு இருப்பதாக உணர்கிறேன் .இவர்களின் எளிமையும் ,அறியாமைக்கும் , முற்றும் அறிந்தமைக்கும் நடுவில் நடந்து கொள்ளும் போக்கும் அற்புதமாக உங்களின் படைப்புகளில் வெளிப்பட்டுள்ளது.

இந்த எண்ணம் உங்களின் விஷ்ணுபுரம் மற்றும் கொற்றவை படிக்கும் பொழுது எழுந்தது ,ஆனால் என்னுடைய முந்திய கடிதத்தில் எழுத மறந்தேன்.

நன்றி

முரளி

அன்புள்ள முரளி

நான் கதாபாத்திரங்களை முழுக்கமுழுக்கக் கற்பனையில் இருந்து உருவாக்குவதில்லை. அவர்களுக்குள் எங்கோ நான் இருப்பேன். நான் கண்ட எவரோ இருப்பார்கள். நீங்கள் சொல்லும் அடையாளங்களை அப்படித்தான் நான் பார்க்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைநமது அறிவியல்-அர்விந்த் குப்தா
அடுத்த கட்டுரைகண்களில் மின்னுவது