என்னைக் கொண்டுசெல்லும்போதே அடித்தார்கள். நான் கால்தடுமாறிச் சுவரில் முட்டி விழுந்தபிறகு எழவே அனுமதிக்கவில்லை. அடித்தபடி செத்த உடல்போல இழுத்துக் கொண்டுசென்று அறைக்குள் தள்ளி பூட்டினார்கள்.
நான் கதவையே உற்று பார்த்தேன். அது ஒரு சருமம் போல அதிர்ந்தது.
கதவு திறந்து கான் உள்ளே வந்து என்னருகே வந்தான்
”தண்ணிகுடுக்கச் சொன்னாஹ”என்றான் ரகசியக்க்குரலில் ”இன்னும் வச்சிருக்காஹ போல. கொடுமைக்காரத் தாயோளிஹ” தட்டை வைத்தான். ” பேயாம என்னாமாம் சொல்லணுமானா சொல்லிபோடுங்க பிள்ளைவாள் ”என்றான்.நான் அவனையே உற்று பார்த்தேன். மூடிய டம்ளருக்குள் எரிந்தபடி இருந்த கஞ்சாபீடியை நீட்டி ” இளுங்க… அப்டியே சல்ல்லுண்ணு இளுத்துப்போடுங்க ” பிடிச்சா நம்ம தலையாக்கும் போறது. ஊரில எட்டு பிள்ளைய அனாதயாயிரும் கேட்டீஹளா?”
நான் அதை தாகத்துடன் இழுத்தேன்
”நாகூருக்கு ஒரு நேர்ச்சை நேந்திருக்கேன்…. நாகூரான் கனிஞ்சு எல்லாம் சரியாப்போகும் கேட்டீஹளா?”என்றபடி தண்ணீர் கொடுத்தான்.நான் குடித்ததும் சென்றான்
மீண்டும் கதவு திறந்தது. அந்த சித்திரவதை ஆள் வந்தான். அவன் ஒரு கார்ப்பொரல். இம்முறை யூனி·பாம் மாட்டியிருந்தான்.
” அரே ·பாயி… மஜா கரோ? ” என்றான். யூனி·பாமை கழற்றியபடி ” உனக்கு சிறகுகள் இருக்கிறது என்று சொன்னதாகக் கேள்விப்பட்டேன்… அப்படியா ” என்னருகே வந்து குனிந்து ”இன்றைக்கு உன்னை பறக்க வைக்கலாம். என்ன?”என்றான்
நான் அவன் கண்களையே பார்த்தேன். அவற்றில் ஒரு ஒளி இருந்தது. எதிர்மறையான விஷயங்களில் இன்பம் காண்பவர்களுக்கான ஒளி. அல்லது மெல்லிய பைத்தியத்தின் ஒளி. இவன் ஒருநாள் பைத்தியமாவான். நான் புன்னகை செய்தேன்.
”’என்ன சிரிப்பு?” என்றான் அவன் கைவிலங்கை அவிழ்த்தபடி.
நான் என் கையை உடனே மூக்குக்கு கொண்டுபோய் முகர்ந்தேன். மெல்லிய சருகுத் துகள் கைகளில் இருந்தது.
”என்ன அது… நாயக் ஹோல்ட் இட் ”
நாயக் என் கையை மூர்க்கமாகப் பற்றினான்.நான் வெறி கொண்டு கூவி திமிறி துள்ளினேன். அவன் என் கையைப் பிடித்து மடக்கி அந்த துகள்களை தன் கர்சீ·பால் துடைத்து எடுத்தான்.
”கஞ்சாவா?” முகர்ந்தபின் இல்லை என்பதுபோல தலையசைத்தான். ”நாயக் கிளீன் ஹிஸ் ஹேண்ட்ஸ்”
நாயக் என் கைகளை குடிநீரில் ஈரமாக்கிய கர்சீ·பால் துடைத்தான். நான் ” நோ ! நோ! பாஸ்டர்ட்ஸ்! பாஸ்டர்ட்ஸ்! ”என்று மிரூகத்தனமாக கூவினேன். கையை அவன் விட்டதும் அந்த கார்பொரலை ஓங்கி அறைந்தேன். அவன் புன்னகையுடன் கன்னத்தை தடவியபடி எழுந்தான்.
நான் மனம் உடைந்து விம்மி அழுதேன்
கண்ணீரை துடைக்க என் கையை மூக்கருகே கொண்டுசென்றேன். மதூக மணத்தை உணர்ந்தேன். மனதை மூழ்கடிக்கும் மணம். அழியாத நறுமணம். இது என் கையில் என்றுமிருக்கும். அழியவே அழியாது…அழியவே அழியாது..
நான் கண்ணீருடன் புன்னகைசெய்தேன்.
கார்ப்பொரல் என்னைப் பார்த்தான். ” சிரி… நீ வாய்விட்டு சிரிப்பதையும் நான் பார்க்கத்தான் போகிறேன்”என்றான்
ஒரு ஜவான் நீண்ட தாம்புக்கயிற்றைக் கொண்டுவந்தான். அதை உத்தரம் வழியாக போட்டு மறுநுனியை எடுத்தான். என்னை பிடித்து தூக்கி கைவிலங்கை அவிழ்த்து என்னை இருவர் சேர்ந்து தூக்க வேறு ஒருவன் என் வலதுகாலை ஒரு நுனியிலும் இடது கையை மறு நுனியிலும் கட்டினான். அவர்கள் என்னை விட்டதும் நான் விசித்திரமான கோணலாக தொங்கினேன். என் வலதுகையும் இடது காலும் தொங்கி இழுபட்டன. அப்போது எழுந்த வலியை தவிர்க்க அவற்றை நான் தூக்க வேண்டியிருந்தது. அவ்வசைவில் கயிறு மாறிமாறி இழுபட பறக்க முனைவது போன்ற விசித்திரமான விளைவு ஏற்பட்டது.
”ஜாலி ஹெ?”என்றான் கார்ப்பொரல் ” என்ஜாய்…”
கதவை மூடி அவர்கள் சென்றார்கள். சில கணங்களில் நான் களைத்தேன். பறப்பதை நிறுத்தி என் கால்கள் தொங்கின. மறுகணம் என் தொடை இடுக்கில் தேள்கள் மாறிமாறிக் கொட்டின. கை இடுக்கிலும் தேள்கள்.
வலியில் என் பற்கள் கிட்டித்துக் கொண்டன. குரலே எழவில்லை. என் மீண்டும் பறந்தேன். இப்போது பறப்பதே வலி மிக்கதாக இருந்தது. மீண்டும் கால்கள் தொங்கியபோது உடலே இரண்டாகப் பிய்ந்துவிடுவது போல வலித்தது.
அந்த வலி என் முன் ஒரு பருப்பொருள் போல நிற்பதாக உணர்ந்தேன். நானும் அதுவும் அன்றி யாருமே இல்லை. சுவர்கள் இல்லை. கூரை இல்லை. அறை இல்ல. நானும் வலியும் மட்டுமடங்கிய ஓர் உலகம். என்ன ஆயிற்று கஞ்சா? கஞ்சாவா? இந்த வலி எல்லா திரைகளையும் கிழிப்பது. புகைத்திரையல்ல இரும்புத்திரைகளைக்கூட இது கிழிக்கும்…
பின் வலி நரம்புகளுக்கு பரவியது. என் உடலின் நாடித்துடிப்புகள் அனைத்தும் தேள் கொடுக்குகளாக மாறி என்னைக் கொட்டின. என் கண்ணீர் பொலபொலவென தரையில் கொட்டுவதை உணர்ந்தேன். அழக்கூடாது. அழக்கூடாது. ஆனால் நான் அழுதுகொண்டிருந்தேன். யாருடைய குரல் இது? என் குரல். மிருகம் போல கூவி கேவி அலறும் குரல். அந்தக்குரல் என்னைச் சூழ்ந்திருந்தது
பின் என் குரல் கம்மியது. கேவல்கள் விசித்திர உறுமல்களாக மாறின. பிறகு ஒலி இல்லை. என் உடலுக்குள் ஒலி திமிறி தசைகள் புடைத்து அடங்கியதை உணர்ந்தேன். என் உடலை நான் அறைக்கு வெளியே எங்கோ இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
கதவு திறந்து கான் எட்டிப் பார்த்தபோது நான் வீரிட்டேன் ”கான்…. ! கான் ..! .என்னை கொன்னிரு..ப்ளிஸ் என்னை கொன்னிரு.. .உன் காலைப்பிடிச்சு கேக்கேன்..என்னை கொன்னிரு..ப்ளீஸ்…” கான் அச்சத்துடன் பதறி விலக கதவு மூடியது ”கான் !கான்! ப்ளீஸ்.. கான் கில் மீ ப்ளீஸ்!”
கதவு திறந்தது. நான் எழுந்து அமர்ந்து ஒளியை கண்களால் மறைத்தபடி ” ஆ!!”என்று வீரிட்டேன். தவழ்ந்தபடியே சுவரோரமாகச் சென்றேன். கைகளால் என் உடலை நன்றாக மறைத்து ஒரு பந்தாக மாறி ஒடுங்கி அமர்ந்து நடுங்கியபடி ” ஷிராய் லில்லீ ஷிராய் லில்லீ….”என்று கூவினேன்.
என் மீது ஓர் உதை விழுந்தது .”லுக் ஹியர் யூ ·பூல்!”
நான் ஏறிட்டுப்பார்த்தேன். அந்த கார்ப்பொரல். என்னை பிடித்து இழுத்துக் கொண்டுசென்றான். இது எந்த இடம்?நான் எப்படி இங்கே வந்தேன்? தியாகராஜன் எங்கே? அவனிடம்தான் அன்றைய ஆங்கிலச்செய்தித்தாளை எடுத்து வரச்சொன்னேன். குளிர்ந்த தரை . குளிர்ந்த சுவர்கள். நான் ஒரு ஜவானிடம் ‘ ஐ வாண்ட் ஹிண்டு. யூ நோ. நாட் அம்ருதபஸார் பத்ரிகா”என்றேன்
என் முன் நாற்காலியில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவளருகே இரு ஜவான்கள். இருவரும் கார்ப்பொரல்கள். அந்தப்பெண் என்னை பார்த்ததும் குதித்து எழுந்து ஆ என்று திறந்த வாயுடன் மின் அதிர்ச்சி அடைந்தவள் போல நின்றாள். பிறகு அவள் உடலே இரண்டாக கிழிபடுவதுபோல ஓர் அலறல். ”நெல்! நெல்!நெல்!…” தலையிலும் மார்பிலும் அறைந்தபடி ”நோ! நோ! நான் சொல்லிவிடுகிறேன் எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறேன்…அவரை விட்டுவிடுங்கள் சொல்கிறேன் ! சொல்கிறேன் !”என்றாள். அவளை கார்ப்பொரல்கள் இறுகப்பிடிக்க அவள் துள்ளி திமிறி தொண்டை நரம்புகள் நீலமாகபுடைக்க எம்பி முறுக்கிக் கொண்டாள். நான் அவளை விசித்திரமாகப் பார்த்தேன்.
என்னை இழுத்து மீண்டும் பக்கத்து அறைக்குக் கொண்டுசென்றார்கள். அவளது குரல் ”நெல்!நெல்!” கார்ப்பொரல்களின் உறுமல் பேச்சு ”வேண்டாம் வேண்டாம் சொல்லிவிடுகிறேன் சொல்லிவிடுகிறேன்”
என்னை மீண்டும் என் அறைக்குள் கொண்டுவந்தார்கள். என் அறையைக் கண்டதும் நானே ஓடிச்சென்று அதற்குள் ஏறிக் கொண்டேன். பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் உணர்ந்தேன். என்னை கூட்டிவந்த ஹவல்தாரிடம் ”பூட்டு ! கதவைப் பூட்டு !”என்று பதறினேன்.
கதவு மூடியதும் நான் சென்று என்னுடைய மூலையை அடைந்து சுவரோரமாக முடங்கிக் கொண்டேன். பதற்றமெல்லாம் வடிய மானம் அமைதி கொண்டது. என் கைகளை எடுத்து முகர்ந்தேன். மதூக மலரின் மணம். மதூகச் சமவெளியில் நான் ஓடிக்கொண்டிருந்தேன். குளிர்ந்த இளஞ்சிவப்பு மலர்களின் ஊடாக. நீலவான் நிறைந்த மேகங்களுக்கு கீழே அமைதியே வடிவான மலைகளுக்கு கீழே.
வழியில் ஒரு பாறையில் ஜ்வாலா நிற்பதைப்பார்த்தேன். பாவாடைத் தாவணி அணிந்து இரட்டைப்பின்னல் போட்டிருந்தாள். அது திருநெல்வேலி ஹிந்து ஹைஸ்கூலின் சீருடை. சிரித்தபடி என்னை நோக்கி வந்தாள். ” இன்னைக்கு ஸ்கூல் இல்லியா?”என்றேன். சிரித்தாள். அவள் கையில் ஒரு புத்தகம் இருந்தது. ஒன்பதாம் வகுப்பு வரலாறு. அதை விரித்து பார்த்தேன். ‘நெப்போலியன் எந்த போர்க்களத்தில் தோற்றார்?”என்று வாசித்து அவளிடம் கேட்டேன். அவள் சிரித்தபடி தெரியாதே என்று தலையாட்டினாள். நான் புத்தகத்தை சுழற்றி எறிந்தேன். அது வானில் சுழன்றது. வானில் பறவைகள்…நான் சிரித்தபடி துள்ளி துள்ளி குதித்தேன். அவளும் புத்தகங்களை சுழற்றி வானில் எறிந்தபடி குதித்தாள். சிரிப்பும் துள்ளலுமாக குதூகலித்தோம்
கதவு திறந்தது. கான் உள்ளே வந்தான். எனக்கு உணவு தந்தான்.” ஒண்ணும் பயபப்டாதீஹ. இது சித்திர. சித்திர மாசமுல்லா.. மேஷ ராசிக்கு மோசமாக்கும். வைகாசியிலே வெளங்கிரும்…” பீடியை அளித்தான்”குடியுங்க…” நான் ஆவலுடன் புகையை இழுத்தேன்
கான் என்னிடம் ” லெ·ப்டினெண்ட்”
நான் அவனை கூர்ந்துபார்த்தேன். அவன் ”பிள்ளைவாள்”என்றான்
”யாரு?”
“பிள்ளைவாள் நான்தான்… ”என் தாடையைப் பிடித்து ஆட்டினான். ”நான்தான் நாயர்”
நாயர்தான். யூனி·பாமில் என் அருகே அமர்ந்திருந்தான். ”பிள்ளைவாள்…”
”நெப்போலியன்!”என்று நான் சொன்னேன் ” வாட்டர்லூ….”
”பிள்ளைவாள் குடியுங்கள்…”எனக்கு அவன் குளிர்ந்த தண்ணீரைக் கொடுத்தான். நான் ஆவலுடன் குடித்து முடித்து அவனிடம் ”நெப்போலியன் செண்ட் ஹெலனா தீவில் இறந்தான்….” என்றேன்
”பிள்ளைவாள் வாங்க”என்று நாயர் என்னை தூக்கினான்.
அவனுடன் கைத்தாங்கலாக நான் குளிர்ந்த காரிடாரில் நடந்தேன். திறந்த வெளியை அடைந்தேன். செடார் மரத்தின் அடியில் ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது. நாவிதன் காத்து நின்றிருந்தான்
நான் நாற்காலியில் அமர்ந்தது, நாவிதன் என்னிடம் கண்ணாடியை நீட்டினான். நான் அதை வாங்கி என் முகத்தைப் பார்த்ததும் ”ஆ!” என்று அலறியபடி எழுந்தேன். அதை எதிர்பாராத நாவிதனின் கத்தில் என் முழங்கையை கிழித்தது.
”·பூல்!”என்று அவனை சீறியபடி நாயர் என்னைப்பற்றி அமரச்செய்தான்.
”மாப் கரோ சாப் மாப் கரோ”
”நான் போறேன்..நான்..” என் முகமாகவே அது இல்லை. தாடிமீசை மண்டிய ஒரு பயங்கர முகம். நானா அது?
”எங்க?”
”ரூமுக்கு”
”லெ·ண்டினெண்ட்… கொஞ்சம் நிதானமா நினைச்சுப்பாருங்க எல்லாத்தையும்… ப்ளீஸ்….அமைதியா இருங்க” நாவிதனிடம் ” ம்”என்றான் நாயர்
ஷேவ் செய்தபின் என் முகத்தை நான் கண்ணாடியில் பார்த்தேன். நான் நெல்லையப்பன். லெ·ப்டினெண்ட் . இண்டியன் ஆர்மி… அந்த பிம்பத்தை நோக்கி புன்னகை செய்தேன்.
குளிர்ந்த நீரில் குளித்து என் சீருடைகளை அணிந்து கொண்டேன். மீண்டும் கண்ணாடியில் பார்த்தேன். அந்த அறை அதன் இருள் எல்லாம் சில மணி நேரத்திலேயே எங்கோ மறைந்தன.
என்னை நாயர் கூட்டிச்சென்று தன் கூடார அறைக்குள் கொண்டுசென்றான். காம்ப் கட்டிலில் அமரச்செய்தான்.
”பாஸ்ட் இஸ் பாஸ்ட் லெ·ப்டினெண்ட் சார்”என்றான் நாயர். ”இனி ஆகப்போவதைப்பத்தி பேசுவோம்….நாம சில விஷயங்களை மனம் திறந்து பேசணும். அதுக்காக என்னை அனுப்பியிருக்காங்க”
நான் என் கையை எடுத்து முகர்ந்தேன். மதூகம். துடிப்புடன் நிமிர்ந்து ” ஜ்வாலா? ஜ்வாலா எங்கே?”என்றேன்
”அமைதியா இருங்க…அவளுக்கு ஒண்ணும் ஆகல்லை. நல்லா இருக்கா”
அவள் அலறித்துடிக்கும் காட்சியை என் கண்ணுக்குள் கண்டேன்
எழுந்து வெறியுடன் நாயரின் தோள்களை பிடித்து ” ஜ்வாலா ஜ்வாலா எங்கே?” என்று கூவினேன்
”உட்காருங்க பிள்ளைவாள்….அவ ஒரு தலைவரோட மகள்…அவளை யாரும் ஒண்ணும் பண்ணிட முடியாது…உக்காருங்க”
நான் கண்ணிருடன் அமர்ந்தேன். தலையை கைகளால் பற்றிக் கோண்டேன்
”அண்ணைக்கு அவ உங்களப் பாத்து அலறினப்பவே லெ·ப்டினெண்ட் கர்னல் புரிஞ்சுகிட்டார். அவர் பக்கத்து ரூமிலதான் இருந்தார்… ”
”ம்”
”மேஜர்தான் கொஞ்சம் குழப்பினார் .ஆனா லெ·ப்டினெண்ட் கர்னல் ரொம்ப தெளிவா இருந்தார். உங்களோடது ஒரு இமோஷனலான உறவு…நீங்க கொஞ்சம் ஜாஸ்தியா ரொமாண்டிஸைஸ் பண்ணி¢ட்டீங்க அவ்வளவுதான்னு சொன்னார்”
” நாம இப்ப எதைப்பத்திப் பேசப்போறம்?”
”உங்கலைப்பத்தி. உங்க எதிர்காலத்தைப்பத்தி…”
நான் லேசாகச் சிரித்தேன்
”இப்ப ஒண்ணும் குடிமுழுகிபோகலை பிள்ளைவாள். எல்லாத்தையும் விரிவா பேசிடலாம்…”
”சொல்லு”
”ஜ்வாலாவை நாளைக்கு கூட்டிட்டுப்போறாங்க”
நான் எழ முனறு மீண்டும் அமர்ந்தேன்
”யாரு?”
“அவ அப்பாவோட ஆளுங்க.”
”எப்டி?..”
“பேச்சுவார்த்தை. அவளை வைச்சு பேரம் பேசினோம்…” நாயர் சொன்னான் ”அவங்க பிடிச்சு வைச்சிருந்த எட்டு பேரை விடுவிச்சாங்க. அதில ஒருத்தர் மேஜர். ரெண்டுபேர் காப்டன் ரேங்கில உள்ள ஆ·பீசர்ஸ். மூணுபேர் பிளாண்டேஷன் ஓனர்ஸ். சமீபகாலத்தில இதுமாதிரி ஒரு அறுவடைய நாம பண்ணினதில்லை. எல்லாருக்கும் கல்கத்தா ஈஸ்டர்ன் கமாண்டிலேருந்து ஐரிகார்ட்ஸ் வந்திருக்கு. எனக்கு ஒரு பிரமோஷன் கிடைக்கும்”
”கன்கிராஜுலேஷன்ஸ்”
‘தாங்க்ஸ். கர்னல் இந்த விஷயத்தை இப்டியே முடிக்க விரும்பறார். ”
”ம்”
”அது உங்க கையிலதான் இருக்கு பிள்ளைவாள்.”
”ம்?”
” நீங்க அவளை மறந்திரணும்…. அவ நம்மளைச் சேந்தவ இல்லை. அவ மியான்மார் சிட்டிஸன் .அவள மறந்திருங்க.எல்லாம் ஒரு கனவு மாதிரி. அவ்ளவுதான் கனவு கலைஞ்சிருச்சி… உங்கள சதர்ன் கமாண்டுக்கு மாத்துவாங்க. ஒரு சின்ன பனிஷ்மெண்ட் வரும் பாட்ஜ் தொலைஞ்சதுக்கு….”
”அவளை மறந்திரணும்?”
“கமான்… டிராமாட்டிக்கா ஒண்ணும் வேணாம்… ஈஸி. மறந்திருங்க. எல்லாம் சரியாயிரும். நீங்க ஹைதராபாத் போலாம். சில வருஷங்களில திருவனந்தபுரத்துக்குக்கூட போலாம். அப்பா அம்மாவுக்கு நீங்க ஒரே பையன். வயசான காலத்தில நீங்க அவங்க கூட இருக்கலாம். அங்கேயே ஒரு குடும்பம். பிள்ளைங்க அங்கேயே தமிழ் பேசி படிக்கலாம்….லுக் ஒரு ஆர்மி ஆ·பீசருக்கு இதைவிடப்பெரிய வாய்ப்பு ஒண்ணும் இல்லை…”
”அதுக்கு நான் அவள மறந்திரணும்….. மறந்திரணும் இல்லியா?”
” ப்ளீஸ்… இப்ப வேண்டாம். இப்ப ஒண்ணும் சொல்ல வேண்டாம். யோசியுங்க ..யோசிச்சு முடிவெடுங்க”
”நாயர்..பாத்தியா?”என்று என் கையை நீட்டினேன்…”இதில இப்பவும் மனம் வருது”
”என்ன மணம்?”
“மதூகம். ஷிராய் லில்லி”
“ப்ளிஸ்…” என்றான் நாயர் கசப்புடன் ‘ப்ளீஸ் பிள்ளைவாள்.சோதிக்காதீங்க..”
“கண்டிப்பா வருது நாயர்…உங்களுக்கெல்லாம் இது பைத்தியக்காரத்தனமாத்தான் படும்.ஆனா எனக்கு அந்த மணம் வருது… நான் எப்டி அவள மறக்க முடியும்?”
நாயர் பொறுமை இழப்பது தெரிந்தது ”லெ·ப்டினெண்ட் நீங்க முட்டாள் இல்லை. உண்மையாவே சொல்லுங்க என்ன இதெல்லாம்? விளையாடுறீங்களா?”
”நான் அவள மறக்க முடியாது நாயர். மறக்க மாட்டேன்னு சொல்லலை. மறக்க என்னால முடியாது அவ்வளவுதான்….”
”ஏன்? எதுக்காக உங்களைப்போல ஒரு ஆர்மிமேன் இந்த அளவுக்கு இமோஷனல் ஆகணும்?”
”நாயர், நமக்கு கிடைக்கிற சாதாரண அனுபவங்களைவிட மேலான பெரிய அனுபவங்கள் இந்த உலகத்தில உண்டுன்னு நீங்க நம்பறீங்களா?”
”வெல்…” நாயர் தயங்கினான்.
”நீங்க அடைஞ்சிருக்கீங்க …ஒரு துளி…அன்னிக்கு அந்த மலையாளப்பாட்டை பாடினப்ப நீங்க ஏன் கண்கலங்கினீங்க? ஒரு ஆர்மி மேன் அடையற உணர்வா அது? அதை லாஜிக்கலா எக்ஸ்ப்லெய்ன் செய்ய உங்களால முடியுமா?”
நாயர் ‘பட்- ”என்று ஆரம்பித்தான்
”அதேபோல மகத்தான அனுபவங்கள் பூமியில நிறைய இருக்கு நாயர். மனுஷனை எறும்பு மாதிரி கொசு மாதிரி அற்பமா ஆக்கற மகத்தான அனுபவங்கள். அந்த அனுபவங்களுக்கு எந்த எல்லையும் இல்லை. நாம நம்ம அன்றாட வாழ்க்கையில ஏராளமான எல்லைகளைப்போட்டுட்டு வாழறோம். என் வீடு என் ஊரு என் நாடு என் இனம்…. மகத்தான அனுபவங்களுக்கு எல்லையே இல்லை. தே ஆர் எஸென்ஷியலி பவுண்ட்லெஸ்…. வானம் மாதிரி திறந்துக்கற அனுபவங்கள். நம்ம மனசே பிரபஞ்சமா ஆகிற அனுபவங்கள்…”
”இந்த அங்கமி பொண்ண லவ் பண்றது அதில ஒண்ணா?”
” அந்த மாதிரி அனுபவங்களை அடைஞ்சவங்களை நாம சித்தர்கள் ஞானிகள்னு சொல்றோம். கவிஞர்கள் அந்த அனுபவங்களை பத்தி ஓயாம பாடியிருக்காங்க… சினிமாபாட்டுகூட….”நான் நெகிழ்ச்சியுடன் ” எத்தனை வாட்டி கேட்ட பாட்டு… …இந்தக்காற்றினில் நான் கலந்தேன். உன் ஆடையில் ஆடுகின்றேன். நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன்” என்று பாடினேன் ”கண்ணதாசன் வரி. அவன் அந்த பரவசத்தை ஒரு நிமிஷமாவது அடைஞ்சிருக்கான். யோசிச்சுப்பாரு. காதல்னா எவ்ளவு சின்ன விஷயம்? ஒரு ஆணும் பெண்ணும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறாங்க. சேந்து வாழ நினைக்கிறாங்க. அவ்ளவுதானே? எதுக்குய்யா அதைப்போய் உலகம் முழுக்க ஞானிகளும் கவிஞர்களும் மாறிமாறிப்பாடியிருக்காங்க? காவியங்களா எழுதிக் குவிச்சிருக்காங்க… நம்மாழ்வார் பாடினார். குணங்குடி மஸ்தான் சாயபு பாடினார். பாரதி பாடினார்…ஏன்யா? அவன்லாம் முட்டாளா? ஒண்ணும்தெரியாத பைத்தியக்காரனா? இல்ல. காதலும் அந்த உச்சத்துக்குப் போகும். அப்டிப் போனா அதுவும் பவுண்ட்லெஸ் எக்பீரியன்ஸ்தான்… அதுவும் ஆன்மீகம்தான் … பாரதி அதை யோகம்னு சொன்னான்… மண்ணில ஆன்மீகத்தோட ஒப்பிடக்கூடிய ஒரே அனுபவம் அது தான்… கடவுளைப்பத்தி சொல்லவந்தவன்லாம் காதலைப்பத்தி சொன்னது அதனாலதான்……” என் குரலை நானே உணர்ச்சிகரமாக கேட்டுக் கொண்டிருந்தேன் ” கடவுளை மாதிரியே காதலும் பவுண்ட்லெஸ் எக்ஸ்பீரியன்ஸ்தான்….ஐ நோ தட்… ஆண்ட் அயம் ஷ்யூர் எபவுட் தட்”
‘ ரிடிகுலஸ்” நாயர் பற்களை கிட்டித்தபடி பொறுமை இழந்து சொன்னான்.
”நீதான் ரிடிகுலஸா பேசறே…. வயலார் பாட்டு தெரிஞ்சவன்தானே…. அவர் பாடாததா? டேய் முட்டாள் உலகம் முழுக்க அத்தனை பேரும் மாறி மாறி அதைத்தான் பாடிட்டிருக்காங்க…. முட்டாள் முட்டாள்!” நான் கூவினேன்’
”ஓக்கே. நீங்க அந்த அனுபவத்தை அடைஞ்சீங்க…. அதுக்கு இப்ப என்ன? அவ அவளோட அப்பாகூட போறா… அவ்ளவுதான். எல்லாம் முடிஞ்சாச்சு. அந்த அனுபவத்தை உங்க ஆத்மாவில பொத்தி வைச்சுக்குங்க. அங்கே அது உங்களுக்கு மட்டும் தெரிஞ்ச ஒரு இனிமையான ரகசியமா இருக்கட்டும்… இப்ப இந்த எபிஸோட இதை முடிப்போம்”
”இல்ல.நீ சொன்னே நான் அவள மறக்கணும்னு. மாட்டேன்.செத்தாலும் மாட்டேன்…. நான் அவளை தேடிப்போவேன். அவ எங்க இருந்தாலும் அவளைத் தேடிப்போவேன்.தவ இல்லாம நான் இல்ல. அவகூட வேண்டாம்….அவ நடந்த மண்ணைப் பாத்தாலும் போதும் எனக்கு.அவளை தொட்ட காத்து கூட எனக்கு போதும். ஆனா அவளை விட்டிட்டு நான் இருக்க மாட்டேன்….”
”அவ உங்களை விட்டாச்சு…மறந்தாச்சு. அவ நாளைக்கு போறா. அப்றம் நீங்க ரெண்டுபேரும் பாக்கவே மாட்டீங்க”
”அவளால முடியாது” நான் அமர்ந்துகொண்டேன். என் கைகளை குறுக்காக கட்டினேன்
”முடியும். மறந்திட்டா. நாளைக்கு நீங்களே பாருங்க”
”நாயர். எனக்கு நீங்க ஒரு உதவி பண்னணும்… என் மேல பிரியம் இருந்தா…. என்னை நீங்க ஒரு மனுஷ ஜென்மமா மதிச்சா…ப்ளிஸ்…”
”என்ன?” நாயர் ஐயத்துடன் கேட்டான்.
“நான் அவள பாக்கணும். அவகூட பேசணும்”
“லெ·ப்டினெண்ட் சார் , நான் உங்கள மாதிரி இல்லை. எனக்கு எல்லா இமோஷன்ஸ¤ம் உண்டு. ஆனா எல்லாத்தையும் விட எனக்கு என் நாடுதான் பெரிசு. நான் ஒரு சோல்ஜர். டியூட்டிதான் எனக்கு முக்கியம். ஸாரி… நோ” அவன் எழுந்தான்.
இரு ஜவான்கள் எட்டிப்பார்த்தனர். கையில் எம். 16 கார்பைன்கள். அவர்களிடம் தலையாட்டியபின் நாயர் வெளியே போனான். அவர்கள் என்னை எழுப்பி மீண்டும் அறைக்குக் கொண்டுசென்றார்கள்.
[more]